மதத்திற்கு அப்பாற்பட்ட நன்னெறிகள்

இரண்டாம் நிலை வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் குறைபாடுகள்

அன்புள்ள சகோதர சகோதரிகளே, உங்கள் மத்தியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நான் எப்போது மக்களுடன் உரையாடினாலும், தயவு செய்து என்னை மனிதனாகப் பாருங்கள் என்று சொல்வேன். அதாவது உதாரணத்திற்கு, “நான் ஒரு ஸ்விஸ்காரன்”, நான் ஒரு “இத்தாலியன்” அல்லது “நான் ஒரு பிரெஞ்சுக்காரன்” என்று நினைக்காதீர்கள்.  என்னுடைய மொழிபெயர்ப்பாளர் அப்படி யோசிக்க மாட்டார் ஏனெனில் அவர் பிரஞ்சுக்காரர்! நானும் கூட நான் திபெத்தியன் என்று நினைப்பதில்லை. மேலும், என்னை நான் பௌத்தனாகவும் நினைப்பதில்லை, ஏனெனில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழி, மனிதனாக வாழும் போது வாழ்வில் பெரிய சலசலப்புகளின்றி வாழ்தல் பற்றியே என்னுடைய சொற்பொழிவுகளில் எப்போதும் பேசுகிறேன்.

எழுநூறு கோடி மனிதர்களில் ஒவ்வொருவருமே மகிழ்ச்சியான வாழ்க்கையையே விரும்புகிறார்கள், ஒவ்வொருவருக்கும் அந்த இலக்கை அடைவதற்கான உரிமை இருக்கிறது. இரண்டாம் நிலை வேறுபாடுகளான “நான் திபெத்தியன்” என்பதை வலியுறுத்தினால், நான் திபெத்திற்காக மட்டுமே அதிக அக்கறைப்படுவதாக அர்த்தமாகிவிடும். “நான் பௌத்தன்” என்பது மற்ற பௌத்தர்களிடம் ஒருவித நெருக்கத்தைத் தருகிறது, ஆனால் தானாகவே மற்ற நம்பிக்கைகளில் இருந்து சிறிது தூரத்தையும் உருவாக்குகிறது.

இந்தப் பார்வைதான் உண்மையில் எல்லா பிரச்னைகளுக்கும் மூலம், மனிதர்கள் கடந்த காலங்களில் சந்தித்த அளவற்ற வன்முறைகளும், பலவித பிரச்னைகளும் இதில் அடக்கம், 21ம் நூற்றாண்டிலும் தொடர்ந்து அதனை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மைப் போலவே மற்றவர்களும் மனிதர்களே என்று கருதினால் வன்முறை என்பதே நடக்காது. மற்றவர்களைக் கொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை; ஆனால் நாம் மனித குலத்தின் ஒற்றுமையை மறந்துவிட்டு, இரண்டாம் நிலை வேறுபாடுகளான “என் தேசம்”, “அவர்கள் தேசம்”, “என் மதம்”, “அவர்கள் மதம்” என்பதில் கவனம் செலுத்துகிறோம், நாம் பிரிவினையை ஏற்படுத்துகிறோம், நம்முடைய மக்கள் மற்றும் நம் மதத்தை பின்பற்றுபவர்கள் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறோம். இதனால் மற்றவர்களின் உரிமைகளை மறுக்கிறோம் அதே போன்று மற்றவர்களின் வாழ்க்கைக்கு உண்டான மரியாதையைவும் தருவதில்லை. இரண்டாம் நிலை வேறுபாடுகளுக்கு அதிக முக்கியத்துவமும் அழுத்தமும் தருகிறோம், நாம் இன்று சந்திக்கும் பல்வேறு பிரச்னைக்கான அடிப்படைக் காரணமே இது தான்.

இதற்கு ஒரே ஒரு தீர்வு மனிதன் என்ற அளவில் நமக்குள்ளாகவே தர்க்க ரீதியாக எல்லைகள் அல்லது தடைகளின்றி சிந்திக்க வேண்டும். உதாரணத்திற்கு நான் சொற்பொழிவுகள் தரும் போது, நான் என்னை திபெத்திய பௌத்தனாக கருதிக்கொண்டாலோ, இன்னும் அதிகமாக என்னை நான் ”புனிதர் தலாய் லாமா” என்று கருதிக்கொண்டாலோ, இந்த நினைப்பு எனக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தும், அது முட்டாள்தனமானது. உண்மையாகவே நான் உங்களது நலனில் அக்கறை கொண்டிருந்தால். நான் உங்களிடம் சகோதர, சகோதரிகள் என்ற அளவில், உங்களைப் போலவே நானும் மனிதன் என்று எண்ணிப் பேச வேண்டும். உண்மையில் நாம் அனைவரும் மனதளவில், உடலளவில், உணர்வுகள் ரீதியாக சமமானவர்களே. மிக முக்கியமாக, ஒவ்வொருவருமே கவலைகளின்றி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவே விரும்புகிறார்கள், நானும் அவர்களைப் போலத்தான், எனவே நாம் அந்த அளவில் பேசுவோம். 

மதச்சார்பற்ற நன்னெறிகள்

மதச்சார்பற்ற நன்னெறிகள் உயிரியல் காரணிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை, ஆனால் மத நம்பிக்கை என்பது மனிதர்கள் மட்டுமே கொண்டவை. மனிதகுலத்தில், நம்பிக்கை வளர்ந்தது, ஆனால் அது கண்டிப்பாக உயிரியல் காரணியல்ல. மதச்சார்பற்ற நன்னெறிகளென்பது ஒட்டு மொத்த மக்கள் தொகையான எழுநூறு கோடி மனிதர்களுக்கும் பொருந்தும். நான் நேற்றே குறிப்பிட்டது போல, எழுநூறு கோடி மக்களில், நூறு கோடி பேர் நம்பிக்கையில்லாதவர்கள் என்று அறிவித்துக் கொண்டார்கள் எஞ்சி இருக்கும் ஆறு நூறு கோடி பேர் நம்பிக்கையுடையவர்கள், அவர்களில் பல ஊழல்வாதிகளும் இருப்பார்கள். மோசடிகள், சுரண்டல்கள், ஊழல், ஏமாற்றுதல், பொய் கூறுதல் மற்றும் கொடுமைப்படுத்துதலும் இதில் இருக்கும். தார்மீக கொள்கையில் உண்மைத்தன்மை இல்லாததே இதற்குக் காரணம் என்று நான் நம்புகிறேன். எனவே மதங்களும் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. நான் இதை நேற்று குறிப்பிட்டேனோ இல்லையோ, சில சமயங்களில் நான் உண்மையாகவே நினைப்பதுண்டு மதங்கள் நமக்கு எப்படி பாசாங்குத்தனமாக நடிப்பது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறது. நல்ல விஷயங்களை நாம் “அன்பு” மற்றும் “இரக்கம்” என்று சொல்கிறோம், ஆனால் யதார்த்தத்தில் நாம் அப்படி செய்வதில்லை, ஏராளமான அநீதிகளைச் செய்கின்றோம்.

மதம் இந்த நல்ல விஷயங்களை பாரம்பரிய வழியில் பேசுகிறது, ஆனால் உண்மையில் உங்கள் இதயத்தோடு தொடர்புபடுத்துவதில்லை. மக்களுக்கு தார்மீக கொள்கைகள் இல்லாததே இதற்குக் காரணம். நம்பிக்கையுடையவரோ அல்லது நம்பிக்கையில்லாதவரோ மக்களுக்கு தார்மீகக் கொள்கைகளை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். அதற்கு சிகரமாக மதத்தை வைத்துக் கொள்ளுங்கள், அப்போது தான் அது உண்மையான மதமாக இருக்கும். நான் நேற்றே குறிப்பிட்டது போல எல்லா மதங்களும் இந்த மதிப்புகள் பற்றி பேச வேண்டும்.

ஒருவரின் சொந்த புலத்துடன் இணைக்கப்படாததை உருவாக்குதல்

முந்தைய நூற்றாண்டுகளில் மக்கள் ஒருவரையொருவர் கொன்றார்கள், இரண்டு தரப்புமே கடவுளை வணங்குபவர்கள். கொடுமை! இன்றும் கூட மதத்தின் பெயரால் மோதல்கள் நடப்பதை சில சமயங்களில் உங்களால் பார்க்க முடியும், இரண்டு தரப்புமே கடவுளை பிரார்த்திப்பவர்கள் என்று நான் நினைக்கிறேன். கடவுளே யாருக்கு உதவுவது என்று குழம்பிப் போய்விடுவார் என்று நான் கேலியாக சொல்லி இருக்கிறேன்! இரண்டு தரப்பினருமே கடவுளை வணங்கி வரம் கேட்டால் அவர் என்ன முடிவு எடுப்பார்? அது மிகவும் கடினம். ஒரு முறை அர்ஜென்டினாவில் விஞ்ஞானிகள் மற்றும் சில மதத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது? அது மத நம்பிக்கை கூட்டமில்லை, அப்போது நான் ஒரு இயற்பியலாளரை சந்தித்தேன் அவருடைய பெயர் மாதுரனா. மறைந்த வரேலாவின் ஆசிரியர், அவர் அதற்கு முன் அவரை ஸ்விட்சர்லாந்தில் சந்தித்திருக்கிறேன். அவருடன் உரையாடும் போது அவர் குறிப்பிட்டு சொன்ன விஷயம், இயற்பியலாளரான தாம், தன்னுடைய சொந்த விஞ்ஞானத் துறையிலேயே இணைப்பை மேம்படுத்திக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டார். நான் அவரிடம் கற்றுக்கொண்ட அற்புதமான மற்றும் புத்திசாலித்தனமான கூற்று இதுவாகும். 

நான் பௌத்தன், ஆனால் நான் பௌத்தத்திலேயே இணைப்பை அதிகரித்துக்கொள்ளக் கூடாது, ஏனெனில் இணைப்பு என்பது எதிர்மறை உணர்வு. ஒரு வேளை அப்படி இணைப்பை ஏற்படுத்திக்கொண்டால், அதன் பிறகு உங்களின் பார்வை சார்புடையதாகிவிடும். ஒரு முறை உங்களது மனம் சார்புடையதாகிவிட்டால், எல்லாவற்றையும் நடுநிலையோடு பார்க்க முடியாது.

எனவே தான் நான் சொல்கிறேன், மதத்தின் பெயரால் வன்முறைகள் அரங்கேறுகின்றன, பெரும்பாலான சம்பவங்களில் உண்மையான ரணம் மத நம்பிக்கையல்ல, பொருளாதார அல்லது அரசியல் ஆதாரம் அதில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

ஆனால் சில நிகழ்வுகளில், தங்கள் மதத்தோடு அதிக இணைப்போடு இருக்கும் அடிப்படைவாதிகள், மற்ற பாரம்பரியத்தின் மதிப்புகளைப் பற்றி சிந்தித்து பார்க்க மாட்டார்கள்.

மாதுரனா வலியுறுத்திக் கூறியதே எனக்கு மிகப்பெரிய அறிவுரையாகும். பல மனிதர்களை சந்தித்ததன் விளைவாக நான் பல பாரம்பரியங்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன், அதே போன்று நான் அடிப்படைவாதியோ அல்லது வெறியரோ இல்லை. ஒரு முறை நான் தெற்கு பிரான்சின் லூர்டெசில் இருந்தேன். நான் ஒரு யாத்ரிகனாக சென்றிருந்தேன், இயேசு கிறிஸ்துவின் சிலை முன்பு, சிறிதளவு தண்ணீரைப் பருகினேன். அந்தச் சிலையின் முன்பு நின் நின்று கொண்டிருந்த போது என் மனதில் பல பிரதிபலிப்புகள் தோன்றின, பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான மக்கள் தங்களின் சுகத்தை நாடியும், உடல் நலம் குன்றியவர்களோடும், இந்த இடத்திற்கு வந்திருப்பார்கள். சில ஆசிர்வாதங்கள் அவர்களை குணப்படுத்துவதாக அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று நான் கேள்விபட்டிருக்கிறேன்.  எனவே நான் அவற்றை பிரதிபலித்தேன், கிறிஸ்தவ மதத்திற்கு ஆழ்ந்து உண்மையாக மதிக்கும் தன்மை இருக்கிறது, கிட்டதட்ட எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.  மற்றொரு முறை போர்சுகலின் பதிமாவில் ஒரு அற்புதமான சம்பவம் நடந்தது. கதோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சூழ, சில நிமிடங்கள் மேரி மாதா சிலை முன்பு அமைதியான தியானம் செய்தோம். நானும் மற்றவர்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து கொண்டு இருந்தோம், யதேச்சையாக நான் திரும்பி பார்த்த போது மேரி மாதா சிலை என்னை பார்த்து சிரித்தது. நான் திரும்பத் திரும்ப பார்த்தேன், ஆம் மேரியன்னை என்னை பார்த்து சிரித்தார். என்னுடைய குறுங்குழுவாத வழிக்கு மேரி மாதா ஒரு அங்கீகாரம் தருவதாகவே நான் உணர்ந்தேன்! தத்துவத்தைப் பற்றி மேரியுடன் அதிக நேரம் செலவிட்டு விவாதித்திருந்தால், இன்னும் சிக்கலான ஏதேனும் கூட நிகழ்ந்திருக்கக் கூடும். 

எந்த வழியாக இருந்தாலும், நம்முடைய சொந்த நம்பிக்கை மீது அதீத இணைப்புடன் இருப்பது நல்லதல்ல. சில சமயங்களில் மதங்கள் வன்முறை மற்றம் பிரிவினைவாதத்திற்கு காரணமாகிவிடும், இது உண்மையிலேயே தீவிரமான விஷயம். மதம் என்பது இரக்கம் மற்றும் மன்னிப்பை அதிகப்படுத்துவதற்கான வழி, கோபம் மற்றும் வெறுப்புக்கான தீர்வு. எனவே ஒரு மதம் மற்ற மத நம்பிக்கைகள் மீது அதிக கோபத்தை ஏற்படுத்துமானால், மேலும் வலியை ஏற்படுத்தாமல் நோயைத் தீர்க்கும் மருந்து போன்றது இது. என்ன செய்ய வேண்டும்? இந்த எல்லா துயர சம்பவங்களும் நடப்பதற்கான முக்கிய காரணம் தர்க்க ரீதியிலான கொள்கையில் நம்பிக்கையின்மையே, எனவே மதசார்பற்ற நன்னெறிகளைப் பற்றி பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் உண்மையான முழுமுயற்சிக் காரணிகளை உருவாக்க வேண்டும்.

மதச்சார்பின்மையும் பிறருக்கான மரியாதையும்

மதச்சார்பின்மை நன்னெறிகளைப் பற்றி சொல்லும் போது, எனக்கு முன்னாள் இந்திய துணைப் பிரதமர் அத்வானியை நன்றாகத் தெரியும். கன்னட தொலைக்காட்சி குழுவினர் அவரிடம் நேர்காணல் கண்ட போது இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் ஜனநாயக வெற்றிக்கான அடிப்படை என்ன என்று கேட்டதாக அத்வானி என்னிடம் குறிப்பிட்டுச் சொன்னார். அந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா,விவாதங்கள் அல்லது வேறுபட்ட பார்வைகள் இருப்பினும் இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாகவே மற்றவர்களுக்கு எப்போதும் மரியாதை அளிக்கும் பாரம்பரியம் இருக்கிறது என்று சொன்னாராம். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சார்வாகம் அல்லது “நாத்திக” தத்துவப் பார்வை இந்தியாவில் வளர்ச்சியடைந்ததாக அவர் என்னிடம் கூறினார். மற்ற இந்திய தத்துவப் பார்வையாளர்கள் அவர்களை விமர்சித்தார்கள், அவர்களின் பார்வைக்கு கண்டனம் தெரிவித்தனர், ஆனால் சார்வாகம் மீது பிடிமானம் கொண்டவர்களின் பார்வையானது இப்போதும் “ரிஷி” பார்வையோடு ஒப்பிடப்படுகிறது, அதாவது முனிவர்.  கருத்து வேறுபாடுகள் அல்லது அனல் பறக்கும் விவாதங்கள் இருந்தாலும் இன்னும் மற்றவர் மீதான மரியாதை இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். அதாவது நாம் நாத்திகர்களையும் கட்டாயம் மதிக்க வேண்டும்.

நேற்று நான் கூறி இருந்தேன் என்னுடைய சில இஸ்லாமிய மற்றும் கிறிஸ்த்துவ நண்பர்கள், “மதச்சார்பின்மை” என்ற வார்த்தைக்கு சிறிது இடஒதுக்கீடு தந்திருந்தனர். பிரெஞ்சு புரட்சி காலகட்டத்திலோ அல்லது போல்ஷெவிக் புரட்சியின் போதோ மதங்களுக்கு எதிரான அசாதாரண நிலை இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால் நான் ஒன்றை தெளிவுபடுத்த நினைக்கிறேன் மதங்களும், மத நிறுவனங்களும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். விவேகமான எந்த ஒரு நபரும் எப்படி மதத்திற்கு எதிரானவராக இருக்க முடியும்? மதம் என்றால் அன்பு மற்றும் இரக்கம், யாராலும் இவற்றை விமர்சனம் செய்ய முடியாது. மத நிறுவனங்கள் சற்று வேறுபட்டவை. பிரெஞ்சு மற்றும் போல்ஷெவிக் புரட்சியின் சமயத்தில், இரண்டு நிகழ்வுகளிலுமே ஆளும் வர்க்கத்தினர் உண்மையில் பெரும்பாலானவர்களை துஷ்பிரயோகம் செய்தனர். மேலும், ஆளும் வர்க்கத்தினர் மத நிறுவனங்களிடம் முழு ஆதரவைப் பெற்றனர் எனவே தர்க்கரீதியில் ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராக தீர்மானம் எடுத்தால் அது மத நிறுவனங்களையும் எதிர்த்தல் என்பதை உள்ளடக்கியது. ஆதலால், மதத்திற்கோ அல்லது கடவுளுக்கோ எதிரான ஒரு வித போக்கு நிலவியது.

இன்றும் கூட, திபெத்திய பௌத்த சமூகம் உள்பட மத நிறுவனங்களில் ஏதேனும் சீரழிவு நடந்தால் நாங்கள் அதனை எதிர்ப்போம். என்னுடைய சொந்த அனுபவம் என்னவென்றால் இரண்டு ஆண்டுளுக்கு முன்னர் நான் தலாய் லாமாவின் 4 நூற்றாண்டு பழமையான பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தேன், தானாகவே திபெத்தியர்களின் தற்காலிக மற்றும் மதத்தலைவராக மாறினேன். நான் தன்னார்வத்தோடும், மகிழ்ச்சியோடும், பெருமையோடும் அதனை முடிவுக்குக் கொண்டு வந்தேன். அது போன்றவை உண்மையில் மத அல்லது தர்மத்தின் உண்மையான மதிப்பிற்கு அழிவைத் தரும். எனவே நாம் உண்மையான மதப் பழக்கங்கள் மற்றும் தகவல் மற்றும் மத நிறுவனங்களிடையேன வித்தியாசத்தை உருவாக்க வேண்டும்.

மதச்சார்பின்மை பற்றி இந்தியன் புரிந்து வைத்திருப்பதை மட்டில், எல்லா மதங்கள் மீதும் மரியாதை செலுத்துவதைத் தவிர மதத்தின் மீது எந்த ஒரு எதிர்மறையான உணர்வும் இல்லை, நாத்திகர்களையும் அவர்கள் மதிக்கிறார்கள். இது மிகவும் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். நாம் இதை எப்படி முன் எடுப்பது? போதனைகள் மூலமா? இல்லை.  பிறகு பிரார்த்தனைகள் மூலமா?  இல்லை. ஆனால் கல்வி வழியே செய்ய முடியும், ஆம். சுய சுகாதாரம் பற்றி போதுமான கல்வியைப் பெற்றிருக்கிறோம், எனவே உணர்வுகள் மற்றும் மனத் தூய்மை பற்றி படிக்கக் கூடாதா, ஆரோக்கியமான மனதை எப்படி பராமரிப்பது என்பதற்கான எளிய படிப்பினை? கடவுளைப் பற்றியோ அல்லது அடுத்த வாழ்க்கை பற்றியோ அல்லது பௌத்தரைப் பற்றியோ அல்லது நிர்வாணா பற்றியோ பேச வேண்டிய அவசியமில்லை, ஆனால் எளிமையாக மனதளவில் மகிழ்ச்சியான மனிதனை எப்படி மேம்படுத்தலாம் என்று பேசலாம். ஒரு மகிழ்ச்சியான மனிதன் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவக்குகிறார், அதனால் மகிழ்ச்சியான சமூகம் உருவாகிறது. எனவே உணர்வுகள் தூய்மைக்கான பாடங்கள் தேவை என்றே நான் கருதுகிறேன்.

தூய்மையான உணர்வுகள்

தூய்மையான உணர்வுகள் என்றால் என்ன? நமது அமைதியான மனம் அல்லது நமது மன அமைதியை அழிக்கும் காரணிகளில் இருந்து பாதுகாப்பது என்பதே அதன் அர்த்தமாகும்.  இந்தக் காரணிகள் மனதை பிடித்த பிணி, இவை எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்துவதோடு உங்களது ஆரோக்கியமான மனதையும், அமைதியையும் அழித்துவிடும், இதே போன்று உங்களது மனதின் சக்தியையும் அழித்து யதார்த்தை மதிப்பிடும் திறனையும் அழித்துவிடும். இது பல பாதிப்புகளை ஏற்படுத்தும், நீங்கள் கோபமாக இருந்தால் யதார்த்தத்தை பார்க்க மாட்டீர்கள் உங்கள் மனம் சார்புடையதாகிவிடும். இணைப்பு இருந்தாலும் உங்களால் யதார்த்தத்தை சரியாக அளவிட்டு பார்க்க முடியாது.  இது ஒரு மன வியாதி. நமது மனதின் இயற்கைத்தன்மையே விழிப்புணர்வு, எனவே ஏதோ ஒரு காரண இந்த மனதின் விழிப்புணர்வுத் திறனை அழிக்குமானால் அது எதிர்மறையானதேயாகும்.

உணர்வுகளை தூய்மைப்படுத்துவது என்பது இது போன்ற எதிர்மறை உணர்வுகளை குறைப்பதோடு, ஒருவரின் மனதை தெளிவாகவும், அமைதியாகவும் பராமரிப்பது, அதுவே ஆரோக்கியமான மனதாகும். இதை செய்திடுவதற்கான ஆர்வத்தை வளர்த்தெடுக்க வேண்டும். ஆர்வமில்லாதவர்களிடம் இதைச் செய்யுங்கள் என மக்களிடம் திணிக்கமுடியாது. சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மூலம் இதை மக்களை செய்யவைக்க முடியாது. தனிப்பட்ட நபரின் ஆர்வம், செய்வதால் கிட்டும் பலன் அறிந்து செய்தல் மற்றும் கற்றலின் மதிப்பறிய வேண்டும். 

மனம் மற்றும் உணர்வுகள் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள்

நாம் அறிவியல் பூர்வமாக பார்ப்போம். இதற்கு முன்னர், நவீன அறிவியல் என்பது திடப் பொருளை மையப்படுத்தியது, அதனை அளவிட முடியும். 20ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தற்போது, 21ம் நூற்றாண்டு தொடக்கத்தில் அதிக அளவிலான விஞ்ஞானிகள் மனம் மற்றும் அதன் உணர்வுகள் மீது உண்மையான ஆர்வம் காட்டுவதாக நான் நினைக்கிறேன், ஏனெனில் ஆரோக்கியம் விஷயத்தில் மனதிற்கும் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர் “மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம்.” மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் எப்போதும் பயம், கோபம் மற்றும் வெறுப்புடன் இருந்தால் அது நம்முடைய நோய் எதிர்ப்பு திறனை உட்கொண்டுவிடும், ஆனால் மிகவும் இரக்கத்தோடு இருக்கும் மனம் அடிப்படையில் நிலையானதாக இருக்கும், இதனால் உடல் ஆரோக்கியமும் கூட அதிகரிக்கும். நிச்சயமாக நாம் அறிவோம் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பவர்களின் உடலில் எண்ணற்ற நேர்மறை தாக்கங்கள் இருக்கும்.

எதிர்மறை சூழல்களில் நேர்மறையை உணர்தல்

என்னுடைய சொந்த வாழ்வில், 16 வயதில், எனக்கு ஏராளமான பொறுப்புகள் இருந்தன, சூழ்நிலை மிக கடினமாக இருந்தது. 24வது வயதில் நான் என்னுடைய சொந்த நாட்டை இழந்தேன், என்னுடைய பெரும்பாலான வாழ்நாளை அகதியாகவே கழித்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில், திபெத்திற்குள் ஏராளமான வேதனைகள் மற்றும் பிரச்னைகள், மக்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் என்னால் உதவமுடியவில்லை. எனினும், என்னுடைய மன அமைதியானது இவையனைத்தையும் யதார்த்தத்தில் பார்க்க ஒத்துழைத்தது. சாந்திதேவா கூறியது போல, கஷ்டங்களை எதிர்த்து வர முடியுமென்றால், அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. கடினமான சூழல்களில் இருந்து வெளிவருதற்கான வாய்ப்புகள் இல்லையென்றால் பிறகு கவலைப்பட்டு என்ன பயன். இது மிக யதார்த்தமானது, எனவே நான் அதையே கடைபிடிக்கிறேன்.

நிகழ்வுகளை யதார்த்த வழியில் பார்ப்பது என்பது முக்கியமானது, அதே போன்று எல்லா நிகழ்வுகளையும் பொருத்திப் பார்க்க வேண்டும். எது நடந்தாலும், அதில் சில நேர்மறை தாக்கங்கள் இருக்கும். என்னுடைய சொந்த அனுபவத்தில், நான் ஒரு அகதியானேன், ஆனால் இதனாலேயே என்னால் பல மனிதர்களைப் பார்க்க முடிந்தது, வெவ்வேறு பார்வைகளைக் கற்றுக்கொண்டேன். யாசிப்பவர்கள், தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மதத்தை எதிர்ப்பவர்கள் என பலரை நான் சந்தித்திருக்கிறேன். இது மிகவும் உதவிகரமானது, ஏனெனில் நான் திபெத்திற்குள்ளேயே இருந்திருந்தால் என்னுடைய அறிவானது இப்போது இருப்பதை விட பாதியாகவே இருந்திருக்கும். ஒரு விதத்தில், இது ஒரு மிகப்பெரிய சோகமாக இருந்தாலும், மற்றொரு விதத்தில் இதுவே எனக்கு ஏராளமான நல்ல வாய்ப்புகளையும் தந்திருக்கிறது. வேறு கோணங்களில் பார்த்தால், நாம் இது சரி என்று உணர்வோம். கெட்ட விஷயங்கள் நடக்கலாம், ஆனால் அதிலும் சில நல்ல விஷயங்கள் இருக்கும்.

கடந்த காலங்களில் திபெத்திய மக்கள் சிறிது தனிமைபடுத்திக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்களின் சிந்தனை விரிவடைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக திபெத்தியர்கள் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் என்ற நிலையிலேயே தான் வாழ்ந்தார்கள், ஆனால் இப்போது அவர்கள் விழித்துக் கொண்டார்கள். அது நல்லது! வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்த்தால், பலவித நேர்மறையான விஷயங்களை கண்டறிய முடியும். மன அமைதியை பராமரிக்க இது பேருதவியாக இருக்கும். என்னுடைய பழைய நண்பர்கள் பலர் என் முகம் இன்றும் இளமையாக இருப்பதன் ரகசியம் என்ன என்று என்னிடம் கேட்பார்கள். நான் எப்போதும் அவர்களுக்குச் சொல்வேன் எட்டு அல்லது ஒன்பது மணி நேர உறக்கம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும். உண்மையில் இரு ஒரு காரணி, ஆனால் யதார்த்தத்தில் என்ன பலன் என்றால் நமது மனது மற்றும் மனநிலைகள் இரண்டுமே சத்தமின்றியும், அமைதியாகவும் இருக்கும்.

அமைதியான மனம் அறுவை சிகிச்சை போன்றவற்றில் இருந்து குணமடைந்து வரக்கூட சில சமயங்களில் உதவும். எனக்கு பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்த போது உண்மையில் அது மிகவும் தீவிரமாக இருந்தது. பெரும்பாலும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்களில் முடிந்து விடும் இது மாதிரியான அறுவை சிகிச்சையில், எனக்கு மட்டும் மூன்று மணிநேரம் ஆனது என்று அறுவை சிகிச்சையாளர் என்னிடம் கூறினார். ஏனெனில் என்னுடைய பித்தப்பையானது அதன் அளவை விட இரண்டு மடங்கு அதிகரித்திருந்தது, மேலும் அதில் நிறைய சீழ் படிந்திருந்தது. ஆனால் அதன்பிறகு நான் ஐந்தே நாட்களில் குணமடைந்துவிட்டேன். எனவே அமைதியான மனது மற்றும் நேர்மறையான அணுகுமுறை இரண்டும் ஆரோக்கியமான உடலை பேண உண்மையில் உதவியாக இருக்கும், சிலசமயங்களில் ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டாலும் நீங்கள் விரைவாக மீண்டு வருவீர்கள். நல்ல ஆரோக்கியத்திற்கு மன அமைதி உண்மையானது முக்கியமான காரணியாகும். 

அக அழகு எதிர் புற அழகு

நான் இங்கே இதையும் குறிப்பிடுகிறேன், பாதி கேளி மற்றும் பாதி கிண்டல், சில இளம் பெண்கள் அழகுசாதனப் பொருட்களை வாங்க அதிக பணம் செலவிடுகிறார்கள். சில பெண்கள் தங்களது முகத்தில் நீலம், பச்சை மற்றும் விதவிதமான வண்ணங்களை பூசுகிறார்கள். உண்மையில் அது பார்க்க நன்றாக இல்லை, ஆனால் அவர்கள் அதை அழகென்று நினைத்துக் கொள்கிறார்கள்! மக்கள் புற அழகிற்கு அதிக அக்கறை செலுத்துகின்றனர். ஒரு பொதுக்கூட்டத்தின் அடுத்த 3 நாளில், ஒரு பெண்ணின் முடி நீல நிறத்தில் பார்ப்பதற்கு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. எனவே நான் அவரை கேலி செய்தேன், அவரிடம் கூறினேன் நீல நிறக் கூந்தல் அழகாக இருக்க வேண்டிய அவசியமில்லை! புற அழகு அவசியம் தான், அதை விட அக அழகு மிக மிக முக்கியமாகும். புற அழகிற்கு அதிக பணம் செலவிடும் பெண்கள், தங்களது அக அழகிற்கு அக்கறை காட்டினால், மிகச் சிறந்ததாக இருக்கும்.

கல்விப் பாடமாக மனம் மற்றம் உணர்வுகள்

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையான மன அமைதி என்பது முக்கியமானது. மன அமைதிக்கு அடிப்படை தன்நம்பிக்கை மற்றும் உள்ளார்ந்த உறுதி, அன்பு மற்றும் இரக்கத்தை பழக்கிக் கொள்வதோடு, மற்றவர்களை மதிக்கும் பண்பும், பிறர் நலனில் அக்கறைப்படுதலின் மூலமே அது கிடைக்கும். இதுவே மதச்சார்பற்ற நன்னெறிகள்.

மழலைப் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை, நாம் மனம் பற்றியும் உணர்வுகளை எவ்வாறு கையாள்வது என்று பயிற்றுவிக்க வேண்டும். இந்தப் பாடமானது பரந்தது, நம் மனம் மற்றும் உணர்வுகள், இரண்டிற்கும் இடையிலான தொடர்பு பற்றி ஏராளமான விளக்கங்கள் இருக்கின்றன. எங்கேயோ ஏதோ நடந்தால் நம் மனதில் ஒரு பகுதியில் ஏதோ ஒன்று நடந்ததற்கான காரணம் அல்லது பாதிப்பை நம்மால் பார்க்க முடியும். இதனை கையாள, மனம் மற்றும் மூளை முழுவதும் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

இந்த பரந்த பாடமானது கல்வியில் உண்மையில் மதிப்புமிக்கது. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த தகவலின் அடிப்படையில் சில ஆய்வுகளை மேற்கொண்டு சில நம்பிக்கையான முடிவுகளைப் பெற்றிருக்கின்றனர். இதன் விளைவாக சில கல்வி பாடத்திட்டங்களில் மதச்சார்பற்ற நன்னெறிகள் பற்றி பயிற்றுவிக்கப்படுகிறது. நாமும் தர்க்க ரீதியிலான நன்னெறிகளை அப்படையாகக் கொண்ட மதச்சார்பின்மையை கவனத்தில் கொண்டு வரைவு பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும், மதச்சார்பற்ற கல்வி என்ற துறைக்குள் நம்மை பொருத்திக் கொள்ள வேண்டும்.

இங்கிருக்கும் பார்வையாளர்கள் மற்றும் குறிப்பாக கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், இதைப் பற்றி சிந்திக்க வேண்டும், வாய்ப்பு கிடைக்கும் போது, இந்த தலைப்பில் விவாதிக்க வேண்டும். தற்போதைய கல்வி முறையில் தர்க்கரீதியிலான நன்னெறிகள் குறித்த பாடத்திட்ட குறைபாடு இருக்கிறது, எனவே பலர் மதபோதனைகளை சார்ந்தே இருக்கின்றனர். இது நல்லது தான், ஆனால் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள் மதங்களை ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும். எனவே நாம் மதச்சார்பற்ற வழியை கண்டறிய வேண்டும், அது பின்னர் உலகம் முழுவதாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இத்துடன் என் உரையை முடிக்கிறேன். இப்போது உங்களது கேள்விகளை கேளுங்கள்.

கேள்விகள்

புனிதரே, நான் கேட்கலாம் எனக் கருதிய கேள்வி குறித்து உங்களது கடைசி கருத்தில் குறிப்பிட்டீருந்தீர்கள். நீங்கள் தவறாக கருதவில்லை என்றால் நான் திரும்பக்கேட்கிறேன். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மதசார்ப்பற்ற நன்னெறிகளை போதிக்கு சரியான முறையை உருவாக்கிவருகிறீர்கள? அதற்கு எதாவது கல்வி அல்லது நிதி நிறுவனங்கள் உதவுகின்றனவா?

ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப்போல், இந்தியாவில், டெல்லியில் உள்ள சில பல்கலைக்கழகங்களின் உதவியுடன், மாதிரி பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. மேலும் மைண்ட் அண்ட் லைப் நிறுவனமும் நம்மிடம் இருக்கிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகம், எமோரி பல்கலைக்கழகம், சான்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சில தனிப்பட்ட உறுப்பினர்கள், அவர்களது சொந்த முயற்சியில் மதசார்பற்ற நன்னெறிகளை பாடமாக கற்றுத்தருகின்றனர். இந்த நிறுவனங்கள் ஏற்கனவே ஐரோப்பாவிலும் கால்பதித்துள்ளன. விரைவில், இதற்கான ஒரு அமைப்பை டெல்லி அல்லது அதைச்சுற்றியோ அமைக்கவுள்ளோம். பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டுவிட்டால், சில ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கலாம், அடுத்தகட்டமாக எதாவது செய்யலாம். இது அத்யாவசியமானது, பார்ப்போம்.

புனிதரே, இப்புவியை நான் நேசிக்கிறேன், இப்புவியில் உள்ள தாவரங்கள், விலங்குகளையும் அதேபோல் கண்கவர் மனிதர்களையும் நேசிக்கிறேன். ஆனால், மனிதர்கள் எப்போதும் இப்புவியை அழிக்கிறார்கள், சிறிதாக பிளாஸ்டி பாட்டில் பயன்படுத்துவது தொடங்கி, பெரியளவில் காடு அழிப்பு வரை. அமைதியாக இருக்க வேண்டும் என எனக்குத்தெரியும், ஆனால், இவற்றையெல்லாம் பார்க்கும்போது இதை எதிர்த்து போரிட வேண்டும் என வயிற்றிலிருந்து கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. இது நல்லவகையான கோபமா? அன்பைக்கொண்டு சண்டையிட வேண்டுமே என்பதே என் கேள்வி

கோபம் குறித்து நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அது சுயமுன்னேற்றம் தொடர்பானது. அக்கரையினால் வரும் கோபம் என்பது வேறு, வெறுப்பால் வரும் கோபம் என்பது வேறு.

புனிதரே, உங்கள் பேச்சில், இப்புவியில் ஆறுநூறு கோடிப்பேர் மத நம்பிக்கை உடையவர்கள், நூறு கோடிப்பேர் மதநம்பிக்கையில்லாதவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னீர்கள். இதில், மதத்தை நம்புகிறவர்களுமில்லை, ஆனால், நம்பிக்கையில்லாதவர்களும் இல்லை என்ற மூன்றாவதாக ஒரு பிரிவினர் இருப்பதாக கருதுகிறேன். மதக்கட்டமைப்பை தாண்டி ஆன்மீகத்தேடலைக்கொண்டவர்கள். அவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்டோக்ஹோமில் சிறிய குழுவினரைச் சந்தித்தேன். நடைமுறையில் உள்ள கலாச்சாரம் அல்லது மதத்திற்கு ஆதரவாக இல்லை, ஆனால், எதோருவகை ஆன்மீகத்தேடல் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆமாம், அதுமாதிரியான மக்கள் இருக்கிறார்கள். அங்கிருந்து கொஞ்சம், இங்கிருந்து கொஞ்சம் எடுத்து, பெரிய கலவை செய்யும் “புதுயுகம்”, ஆனால் அது பயனுடையதாக தெரியவில்லை.

ஒருவருடைய புறத்தேவைகளை திருப்திப்படுதுவதால் அவை சரியானதல்ல, ஆனால், ஆழமான மதிப்பீடுகளை கண்டறிதலே நல்லது. வாழ்க்கையை ஆராய்வதுமேல், உணர்ச்சியால் திருப்பதியடைவதிலிருந்து மகிழ்ச்சி கிடைப்பதில்லை. இசை ஒலிக்கும்போது உங்களுக்கு திருப்தி ஏற்படுகிறது, ஆனால் சில இசை நிறுத்தப்பட்டால், திருப்தி இல்லை. மனதளவில், அளவில்லா நம்பிக்கை, கருணை நம்மிடம் இருக்கிறது. இதில் திருப்தி என்பது நீடித்து நிலைக்கக்கூடியதிலிருந்து பிறக்கிறது.

உங்களைப்பொருத்தவரையில், மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது எது?

நான் எப்போது சொல்வதுதான், மகிழ்ச்சியாக இருப்பதுதான் வாழ்வின் அர்த்தம். ஆனால், இப்போது மகிழ்ச்சியான வாழ்வு அல்லது சந்தோசம் ஆகியவற்றிக்காக வெளிப்புற வசதிகள், அனுபவத்தை நம்பக்கூடாது, ஆனால், மனத்திடனை நம்பியிருக்கலாம். அதனால், வழக்கமாக சொல்வது, நாம் உள்ளார்ந்த மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே. நன்றி.

Top