இங்குகூடி இருக்கும் பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மதச்சார்பின்மை முறையில் மனமகிழ்ச்சியை எப்படி அடைய முடியும் என்பதை நான் இன்று உங்களுக்கு எடுத்துரைக்கப்போகிறேன். அமெரிக்க விஞ்ஞானியான டேவிட் லிவிங்ஸ்டன், எனது நெருங்கிய நண்பர், துரதிஷ்டசவமாக அவர் இப்போது நம்முடன் இல்லை. டேவிட் அடிக்கடி சொல்வார் நல்ல உள்ளம் கொண்டவர்கள் பிறரை பார்க்கும் போது அவர்கள் கண்கள் அகல விரிந்து கண்பாவையே எல்லாவற்றையும் உணர்த்தும் என்று. அவருக்கு இதே மாதிரியான நிலை இரண்டு நபர்களை சந்திக்கும் போது ஏற்படும் என்று குறிப்பிடுவார், ஒன்று நான் மற்றொன்று அவருடைய மனைவி. இப்போது நான் எங்கு சென்றாலும் அந்த ஊர் மக்கள் ஒரே மாதிரியாக அணுகுகின்றனர், உண்மையான சகோதரத்துவத்தை என் மீது காட்டுகின்றனர். அவர்களை நான் பாராட்டுகிறேன், இந்த அன்பிற்காக உங்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
“மதச்சார்பின்மை” என்பதன் அர்த்தம் என்ன? இந்தியப் பாரம்பரியத்தில் இதன் பயன்பாட்டை பொருத்தே நான் இந்த வார்த்தையை பிரயோகிக்கிறேன். என்னுடைய சில இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ நண்பர்கள் “மதச்சார்பின்மை” என்ற வார்த்தையானது கொஞ்சம் மதத்திற்கு எதிரானது எனக்கருதுகிறார்கள், எனவே இந்த வார்த்தையை நான் பயன்படுத்துவதை அவர்கள் விருப்புவதில்லை. மேலும், “நன்னெறிகள்” என்பது மதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைய வேண்டும் என்றும் நினைக்கிறார்கள், ஆனால் இந்திய அரசமைப்பு மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது; அது எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. இந்தியாவில் மக்கள் மதத்தை மிகவும் மதிப்பவர்கள். காந்தியும், இந்திய அரசியமைப்பை வடிவமைத்தவர்களும் தீவிர மதநம்பிக்கை கொண்டவர்களே. ஒரு மதம் மற்ற மதத்தை விட சிறந்தது என்று கருதாமல் எல்லா மதத்திற்கும் மதிப்பளிப்பதே “மதச்சார்பின்மை” என்பதற்கான அர்த்தம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள மத நம்பிக்கையற்றவர்களின் உரிமைகளுக்கும் இந்த மதச்சார்பின்மை உரிய மதிப்பளித்துவருகிறது. எனவே நான் “மதச்சார்பின்மை” என்ற வார்த்தையை இந்த அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறேன். (இதையும் பார்க்க: நன்னெறிகள் என்றால் என்ன?)
மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பூச்சிகளும் கூட அமைதி மற்றும் சமாதானத்தையே விரும்புகின்றன. சச்சரவுடன் இருக்க யாருக்கும் விருப்பமில்லை; சச்சரவுகள், பிரச்னைகள், கவலைகளை வென்று மகிழ்ச்சியை அடைவதற்கான உரிமை எல்லோருக்குமே இருக்கிறது. அதை தர்க்கரீதியாகவோ அல்லது செய்முறை மூலமாகவோ நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. இயற்கை வழியில் அதற்கு எளிதில் தீர்வு கிடைக்கும்; பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரினங்களும் இலக்கை அடைய முயற்சிக்கின்றன. நாம் எந்த முறையைப் பயன்படுத்தி, அந்த இலக்கை அடையப்போகிறோம் என்பதே மிகவும் முக்கியமானது. அது நடைமுறையில் சாத்தியமானதாக இருக்க வேண்டும், யதார்த்தமற்ற வழிமுறையை பின்பற்றினால், இலக்கை அடைவதில் தோல்வியே மிஞ்சும். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், மிரண்டு போன விலங்குகள் தவறான திசையில் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறோம்; பதற்றத்தில் தீங்கில் இருந்து தப்பிப்பதற்கு பதிலாக, அதனை நோக்கியே அவை ஓடும். ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படியல்ல, நமக்கு அற்புதமான அறிவுத்திறன் இருப்பதால், யதார்த்தத்திற்கு ஏற்ப, பகுத்தறிவுடன் யோசித்து செயல்படும் திறன் காரணமாக அதிக வெற்றிகளை அடைகிறோம். நீண்டகால விழிப்புணர்வு நமக்கு இருப்பதால், எதிர்கால நன்மைக்காக, உடனடியாக கிடைக்கும் பலன்களைக் கூட சில நேரங்களில் நாம் தெரிந்தே தியாகம் செய்கிறோம். இதுதான் அறிவுத்திறனில், விலங்குகளைவிட மனிதர்கள் மேல் என்பதை காட்டும் குறியீடு. இந்த திறன் காரணமாக, நீண்ட கால பலனை அடைய நாம் முயற்சிக்கிறோம்.
இப்போது எழும் கேள்வியே, எந்த வகையிலான அனுபவம் நமக்கு அதிக பலனைத் தரும்? உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட அனுபவம் தற்காலிகமானது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு படத்தை பார்க்கிறீர்கள் அல்லது ஒரு விளையாட்டை ரசிக்கிறீர்கள், அல்லது ஒரு சுற்றுலாவாசி பல்வேறு இடங்களுக்குச் சென்று இயற்கைக் காட்சிகள், மக்களை கண்டு மகிழ்தல். டெல்லியில் இருந்த என்னுடைய ஓட்டுநர் ஒரு இந்தியவர், கிரிக்கெட் என்றால் அவருக்கு அலாதி பிரியம். கிரிக்கெட் போட்டியைக் காண இரவு எவ்வளவு நேரம் கண்விழித்திருந்தீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன், அதற்கு அவர் 4 மணி நேரம் தூங்கவில்லை என்று கூறினார். அவர் சொன்னதைக் கேட்டு அவருக்கு நான் அறிவுரை கூறினேன், தூக்கத்தை கெடுத்து கிரிக்கெட் பார்ப்பதை விட ஆழ்ந்த உறக்கம் நல்லது என்றேன். மனதிற்கும் அது மிகச்சிறந்தது. இசை, நறுமணம், உணவு மற்றும் அற்புதமான தொடு உணர்வுகள் சூழ் உலகில் நாம் இருக்கிறோம். இந்த அற்புதங்கள் அனைத்துமே உணர்வுகள் ரீதியில் தற்காலிகமானவையே. அவை முற்றுபெற்ற பிறகு, எஞ்சி இருப்பது அதன் நினைவுகள் மட்டுமே. மற்றொருபுறம் சில அனுபவங்கள் மன ரீதியில் நிகழும், உணர்வுகளை சார்ந்த அந்த அனுபவமாக அது இருக்காது; அப்படி நடக்கும் அற்புதமானது நீடித்து இருக்கும். ஆதலால் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையை உணர இரண்டு மட்டங்களிலான அனுபவங்கள் இருக்கின்றன என்பதை உணர வேண்டியது மிக முக்கியம். ஒன்று உணர்வு ரீதியிலானது, அது தற்காலிகம். மற்றொன்று மன ரீதியிலானது அது ஆழமானதாக இருக்கும்.
நவீன உலகில் மக்கள் உணர்வு ரீதியிலான விஷயங்களிலேயே அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர், வாழ்க்கைக்கு அதுவே பிரதானம் என்றும் கருதுகின்றனர். எனவே எப்போதுமே அவர்கள் தங்கள் ஆழ் மனதில் ஒழிந்திருக்கும் அமைதி, மகிழ்ச்சியை புறந்தள்ளி வெளியில் இருந்து எந்த வகையில் மகிழ்ச்சியை அடைய முடியும் என்றே தேடி அலைகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை நான் ஜெர்மனி நாட்டின், பெர்லின் நகருக்குச் சென்றிருந்தேன். நான் தங்கியிருந்த விடுதிக்கு எதிரே இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றும் இருந்தது. இரவு 7.30 அல்லது 8 மணி இருக்கும் போது நான் உறங்கச் சென்றேன், அப்போது அந்த இரவு விடுதியில் பல வண்ண விளக்குகள், சிவப்பு, நீல நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது, கூடவே விண்ணை பிளக்கும் ஒலிக்கலவை வேறு. நான் தூங்கச் சென்று விட்டு நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போதும், பின்னர் 4 மணியளவில் எழுந்து பார்த்த போதும் கேளிக்கை விருந்து முடிந்தபாடில்லை. உணர்ச்சிகளுக்கு அடிமையான மக்களின் எல்லா சக்தியும் உரிஞ்சப்பட்டிருந்தது. அடுத்த நாள் அவர்களைப் பற்றி நான் யோசித்து கொண்டிருந்தேன். இரவு முழுவதும் விழித்திருந்த அவர்களின் முழு சக்தியும் வீணாகி இருக்கும் என்று தோன்றியது.
அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பெற்றோருடன் குழந்தைகளும் இருந்தனர், அவர்களுடன் யதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தேன். அவர்களிடம் நான் குறிப்பிட்டுச் சொன்னேன் கடந்த இரண்டு – மூன்று ஆண்டுகளாகவே தொலைக்காட்சி பார்ப்பதில்லை; பிபிசி ரேடியோவில் செய்திகளை மட்டும் கேட்டுக்கொள்வேன் என்றேன். அந்தக் குடும்பத்தில் இருந்த இளம் வயதினர் “டிவி பார்க்கவில்லை என்றால் உங்களுக்கு சலித்துப் போய்விடும்!” என்றார்கள் அப்படியானால் அவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பார்கள் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் குழந்தைகள் அதிகம் தொலைக்காட்சி பார்க்கின்றனர். இது அவர்களுக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்காது ஏனெனில் அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தும், ஆராய்ந்து பார்க்கும் கூர்மையான அறிவுத்திறமை மங்கிப்போகும். உணர்வு ரீதியாக மகிழ்ச்சியைத் தேடுவதைத் தாண்டி மன ரீதியில் பலமாறுதல்களை உருவாக்கும்.
மற்றொரு முக்கியமான விஷயம் உணர்வுகளில் ஏற்படும் உண்மையான தொந்தரவு என்பது மன ரீதியில் வருவது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அமைதியான மனநிலை தேவை. சச்சரவுகள் ஏற்பட மனநிலை மூலக்காரணமாக இருக்கிறது, மனதை பக்குவப்படுத்தினால் வெற்றி கிடைக்கும். இதற்கு முதலில் நாம் நமக்குள் இருக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நம் அக உலகிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். சிறிய அளவிலான மூளையில் இருக்கும் வெற்றிடத்தில் அமைதிக்கான பெரிய இடத்தை ஏற்படுத்தலாம், நமக்குள் இருக்கும் இந்த இடம் பற்றி நாம் அவ்வளவாக அறிந்து வைத்திருக்கவில்லை. எனவே நாம் உணர்ச்சிகளை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். உணர்வுகள் மேலெழும்பும் போது, நம் மனதைக் கொண்டு அதனை ஆராய்ந்தாலே அதற்கான தீர்வை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். கோபம் ஆட்டிபடைக்கும் போது மனதால் அதனை கண்காணிக்கும் திறமை நமக்கு இருக்கிறது; எவ்வளவு சீக்கிரம் அதை ஆராய்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் அது மறைந்து போகும். ஆழ்மனதில் இருப்பவற்றை உற்றுநோக்குவது மிக மிக சுவாரஸ்யமானது.
நாம் இப்போது இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கிறோம். மனித வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு மிக முக்கியமானது. ஏனெனில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளோம். எனவே நமது அறிவு, வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. அதே சமயம் ரத்த சரித்திரத்திற்கும் இந்த நூற்றாண்டு சிறப்பானது. உங்களது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் மிகபெரிய சச்சரவுகளையும், பாதிப்புகளையும் அனுபவித்திருப்பார்கள். சுமார் 20 கோடி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர், சிலர் அணு ஆயுதங்களால் உயிரிழந்திருக்கின்றனர். அந்த வன்முறை சில புதிய விதிகளை உருவாக்கி இருக்கிறது என்று நாம் நியாயப்படுத்தலாம், ஆனால் அது உண்மையல்ல. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் ஈரான் – ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் பரவிக்கிடக்கிறது. இவையாவும் கடந்த கால தவறுகள் மற்றும் புறக்கணிப்புகளின் அறிகுறிகள். புறத்தில் நடக்கும் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். புறச்சூழல்களை மறந்து நாம் நமக்குள் இருக்கும் அக மதிப்புகளை பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது.
ஏழை, பணக்காரர்கள் இடையேயான இடைவெளியும் மிகப்பெரிய பிரச்னை. ஆஸ்ட்ரியாவில் சமநிலை கடைபிடிக்கப்படுவது நல்ல விஷயம், கடந்த ஆண்டு நான் மெக்சிகோ, அர்ஜென்டினா மற்றும் பிரேசிலுக்கு சென்றிருந்தேன், அவர்களிடம் ஏழை பணக்காரர்கள் இடையேயான இடைவெளி பெரியதா சிறியதா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் மிகப்பெரியது என்று கூறினர். ஆஸ்ட்ரியாவைப் பொருத்தமட்டில் அது சிறிய அளவில் தான் இருக்கிறது.
அதே போன்று, “ஊழலின் நிலை பெரியதா சிறியதா?” என்று கேட்டேன். ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை இருந்தும் கூட ஊழல் தலைவிரித்தாடுகிறது. சுய ஒழுக்கமின்மை, தார்மீக கொள்கைகள் இன்மையால் இவை நடக்கிறது. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் இந்தியா மத நம்பிக்கை நிறைந்த நாடு எனினும் ஊழல் அழிக்க முடியாததாக பெருகிக்கிடக்கிறது. இந்தியர்கள் தங்களது வீடுகளில் கடவுளின் சிலைகளை வைத்து மலர் தூவி, ஊதுபத்தி ஏற்றி, ஆரத்தி காட்டி பிரார்த்தனை செய்வார்கள், சில நேரம் அவர்களின் செயலை நான் வேடிக்கையாக சொல்வதுண்டு, தங்களது ஊழல் வெற்றியடைய வேண்டும் என்று இத்தனை பிரார்த்தனைகளோ என்று. இது மிகவும் வருந்தத்தக்கது. அவர்கள் மத நம்பிக்கையுடையவர்கள் எனினும் பலர் ஊழல் பேர்வழிகளாக இருக்கின்றனர். அவர்கள் மத நம்பிக்கையுடையவர்கள், ஆனால் அந்த மதம் சொல்லும் கொள்கைகளை நம்பாமல், கடவுளை பார்த்து பயப்படுபவர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர் ஒருவருடன் பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி நான் விவாதித்துக் கொண்டிருந்தேன். அவர்களின் லாபக் கணக்கு வெளிப்படையாக இருப்பதில்லை என்று உரையாடிக் கொண்டிருந்தோம். இந்த நிறுவனங்களை நடத்துபவர்கள் நிச்சயமாக கடவுளுக்கு பயந்தவர்களாக இருக்க வேண்டும், ஆதலால் அவர்களுக்கென ஒரு ஒழுக்க நெறிமுறை இருக்கும் என்று நான் கூறினேன். அதற்கு அந்த ஆராய்ச்சியாளர், நீங்கள் சொல்வது 18ம் நூற்றாண்டின் சிந்தனை, இவர்கள் இறைவனை வழிபடுவார்கள் ஆனால் தீவிரமாக பின்பற்றுபவர்கள் அல்ல. அப்படி தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தால் கடவுளின் அறிவுரைகளான நேர்மை, அக்கறை, நெறிமுறையை பின்பற்றுவார்கள். அதனால் பிறரைப் பற்றியும் நம் சுற்றுச்சூழல் பற்றியும் அக்கறையாக இருந்தே ஆக வேண்டும் என்றார். எனவே தார்மீக நெறிமுறைகளுக்கும், சுய ஒழுக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் தேவைப்படுகிறது. அது கடமை அல்லது பயத்தின் காரணமாக இல்லாமல், நாம் ஒரு செயலில் ஈடுபடும் போது, இது தார்மீக கொள்கைக்கு எதிரானது என்ற புரிதலின் அடிப்படையில் தன்னார்வத்தோடு வரவேண்டும்.
தார்மீக நெறிமுறைகளை வளர்த்தெடுக்க நாம் அதீத முன்னெடுப்புகளை செய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால் அதிகரித்திருக்கும் மக்கள் தொகையில், குறைவான வளமே இருக்கும் சூழலில் பிரச்னைகள் மட்டுமே மென்மேலும் அதிகரிக்கும். எனவே இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டை இரக்கம் நிறைந்த நூற்றாண்டாக மாற்றுவதற்கு நம்மால் இயன்ற முன்னெடுப்பை செய்வோம். அதுவே தார்மீக நெறிமுறைக்கும், மதச்சார்பற்ற நெறிமுறைகளுக்கும் அடிப்படை கொள்கைகள்.
தார்மீக நெறிமுறைகளுக்கும், நல்ல உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அப்படியானால் இவர்கள் மற்றவர்களைப் பற்றி மிகவும் அக்கறைப்படுவார்கள். அவர்களும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள்; துக்கத்தை அவர்கள் விரும்புவதில்லை, நாம் அனைவரும் ஒன்றோடு ஒன்றாக இணைந்திருப்போம். அவர்களின் மகிழ்ச்சிக்கான ஆதாரம் நமது மகிழ்ச்சி. இதை நாம் புரிந்து கொண்டு அவர்களுக்கு மரியாதை கொடுத்தால், பொய், ஏமாற்றுதல், கொடுமைப்படுத்துதல் அல்லது சீரழித்தலுக்கு இடமே இல்லை. நல்ல உள்ளமே மகிழ்ச்சிக்கான ஆதாரம் என்பதை உணர வேண்டும்; அது நாம் அம்மாவின் கருவறையில் இருந்தது முதலே வர வேண்டும்: நாம் நமது தாயின் வயிற்றில் கருவாகி, அவள் ஊட்டிய அன்புப் பால் குடித்து வளர்ந்தோம். இந்த அனுபவம் நமது ரத்தம் மற்றும் மரபணுவில் ஊறியது. இப்போது எழும் கேள்வியே: குழந்தைகள் பிறரிடம் இருந்து பணம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை விட அதிகம் எதிர்பார்ப்பது அன்பைத் தான். ஆனால் அவர்கள் வளர்ந்த பின்னர், அவர்கள் பரந்து பட்டு யோசிப்பவராக இல்லாவிட்டால், அவர்களின் மதிப்புகள் குறைந்து விடும். ஏனெனில் அவர்கள் சுயநலவாதிகளாக மாறுகின்றனர். பிறருக்கு உதவி செய்தால் “நமக்கு என்ன பிரதிபலன்? கிடைக்கும் என்ற யோசனை இல்லாமல் இருக்காது. ஆதலால் சுயநம் என்பது “நான்” என்ற அகந்தையைத் தருகிறது, இதுவே எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். நாம் ஒட்டு மொத்த மனித இனத்தையும் உள்ளடக்கி “நாம்” என்றோ, ஒட்டு மொத்த உலகின் ஒரு பகுதி என்றோ அல்லது ஐரோப்பிய நாட்டின் ஒரு அங்கம் என்றோ கருத வேண்டும். உலகில் உள்ள 70 கோடி மக்களும் “நாம்” என்று ஒற்றுமையாக இருக்க வேண்டும், “நான்” என்ற ஆணவம் ஒழித்து நாமும் உலக மக்களில் ஒருவர் என்ற சிந்தனை வேண்டும். அதனால் ஏழையோ பணக்காரரோ அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் அனைவருக்கும் சமஉரிமை தேவை. இந்த மரியாதையானது பிறரின் நலனில் வளர்ச்சி காண்பதற்கு அக்கறை காட்டுவதன் மூலம் ஏற்படும்.
மதத்தில் இது ஒரு பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை; மதம் என்பது தனிப்பட்ட விவகாரம்; இவை மனிதத்தின் மீதான அக்கறை. நாம் பிறருக்கு மரியாதை கொடுத்தால், சுரண்டுதல் என்பதே இருக்காது. அதே போல நல்ல உள்ளம் என்பதும் மனித ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். ஆபத்து மற்றும் பயம் நம்முடைய நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்று விஞ்ஞானிகள் சிலர் கூறுகின்றனர், அதனால் சுயநலவாதிகளாக இருந்தால் நமக்கு அதிக பயமும், பிறர் மீது அக்கறையாக காட்டும் போது அவநம்பிக்கையும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதனால் தனிமை, பயம், விரக்தி மற்றும் கோபத்தின் உச்ச நிக்கே செல்லக் கூடும். ஆனால் ஒரே ஒரு முறை திறந்த மனதோடு, பிறர் மீது அக்கறை காட்டுங்கள், தன்னம்பிக்கை தானாக வளரும். இதன் மூலம் நாம் வெளிப்படையாகவும், திறந்த மனதுடனும் செயல்பட முடியும். நாம் யாரை சந்திக்கிறோம், யாரைப் பார்க்கிறோம், நம்மைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்ற கவலைகள் வேண்டாம், அனைவரையும் நமது சகோதர, சகோதரிகளாக பாவியுங்கள்; நாம் நல்ல உள்ளத்துடனும், பிறர் மீது அக்கறையுடனும் நடந்து கொண்டால், பெரும்பாலான மக்கள் நேர்மறையாகவே பிரதிபலிப்பார்கள். நான் எப்போதும் காரை ஓட்டிக் கொண்டு சென்றாலும் வழியில் நான் சந்திக்கும் மக்களைப் பார்த்து புன்னகைப்பேன். ஒரு முறை ஜெர்மனியில் பாதசாரியில் நின்று கொண்டிருந்த பெண்மணி ஒருவரைப் பார்த்து நான் சிரித்தேன், பதிலுக்கு அவர் என்னை சந்தேகத்துடன் பார்த்தார், என்னுடைய புன்னகை அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்காமல் பயத்தை கொடுத்திருக்கிறது, உடனடியாக நான் என்னுடைய தலையை திருப்பிக் கொண்டேன். சில சமயங்களில் இப்படியும் நடப்பதுண்டு.
நல்ல உள்ளம் என்பது நாம் நம்முடைய தாயிடம் இருந்து கற்பது, எனவே நாம் அதனை நம் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல வேண்டும். அறிவியல் கூட்டத்தில் நாங்கள் ஒரு மந்திரத்தை ஜெபித்தோம்: “ஆரோக்கியமான மனமே, ஆரோக்கியமான உடல்.” இந்த நிலையை உணர யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும், அமைதியான மனநிலை தேவை; நாம் கலக்கத்தில் இருந்தால் இருதலைக் கொல்லியாக இருப்போம், யதார்த்தத்தை பார்க்க முடியாது, இதனால் பல்வேறு பிரச்னைகளையே கொண்டு வரும். எனவே நல்ல உள்ளம் அமைதியான மனதை வளர்த்தெடுக்க உதவும்.
நமக்கு அமைதியான மனநிலை இல்லையென்றால், நமது கல்வியில் அவை பாதகங்களை உருவாக்கும். நமது மனது அமைதியாக மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், பயில்வது மிகவும் கடினம்; அதனால் அமைதியான மனமே எல்லா செயல்களையும், தொழிலையும் ஏன் அரசியலைக் கூட செய்யத் தூண்டுகோலாக இருக்கும். சுருக்கமானச் சொன்னால் மன அமைதி என்பது தன்னம்பிக்கை, அந்த தன்னம்பிக்கையோடு நம்மால் யதார்த்தத்தை தெளிவாக பார்க்க முடியும். அதன் அடிப்படையில் நல்ல உள்ளங்களை வளர்த்தெடுக்கவும் முடியும்.
மதச்சார்பு நெறிமுறைகளுக்கு இவையே அடிப்படை கொள்கைகள் மற்றும் மகிழ்ச்சி எனும் கலைக்கான திறவுகோல். என்னைப்பொருத்தவரை இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்களும் இதனை அர்த்தமுள்ளதாக நினைத்தால் நடைமுறைப்படுத்த முயற்சியுங்கள். அப்படி இல்லாமல் இது அர்த்தமற்றது என்று நினைத்தால் மறந்து விடுங்கள். நன்றி.