எஸ்இஇ கற்றல்: சமூகத் திறன்களை வளர்த்தல்

சமூக, உணர்ச்சி மற்றும் நன்னெறி கற்றல், எமோரி பல்கலைக்கழகம், சுருக்கப்பட்ட வடிவம்

சமூக, உணர்ச்சி மற்றும் நன்னெறி (எஸ்இஇ) கற்றல் திட்டமானது எமோரி பல்கலைக்கழகத்தின் கருத்தியல் அறிவியல் மற்றும் இரக்க அடிப்படையிலான நெறிமுறைகளுக்கான மையத்தால் மேம்படுத்தப்பட்டது. அதன் நோக்கமே உணர்ச்சி ரீதியில் ஆரோக்கியமான, நன்னெறி ரீதியில் பொறுப்பான தனிநபர்கள், சமூக குழுக்கள் மற்றும் பரந்த மக்கள் சமூகங்களை வளர்ப்பதாகும். எஸ்இஇ கற்றலின் இரண்டாம் பகுதியான சமூகத் திறன்களை வளர்த்தலில், மற்றவர்களுடனான நமது உறவுகளில் நல்வாழ்வையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் பல சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்ள கற்றுக்கொள்கிறோம்.

தனிப்பட்ட தளத்தில் உணர்ச்சி கல்வியறிவு மற்றும் சுய-கட்டுப்பாட்டுத் திறன்கள் பற்றி நாம் கற்றவை நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகுந்த பலனளிக்கக் கூடியவை என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், மனிதர்கள் இயல்பிலேயே சகஜமானவர்கள், அதனால் மற்றவர்களுடன் சிறந்த முறையில் உறவைப் பேணுவதும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சமூகப் பண்புகள் பிறவியிலேயே வரக்கூடியவை மேலும் அவற்றை மாற்ற முடியாது என்று முன்னர் கருதப்பட்டது, ஆனால் சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகள் கற்றல், பிரதிபலிப்பு மற்றும் தேவைக்காகவே நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூகப் பண்புகளை வளர்க்கலாம் என்று கூறுகின்றன. "சமூகம்" என்பது நமது உடனடி நபர்களுக்கு இடையேயான தொடர்புகளையும், பள்ளி, அலுவலகம், குடும்பம் அல்லது சுற்றுப்புறம் போன்ற சிறிய அளவிலான சமூகத்தில் உள்ள தொடர்புகளையும் குறிக்கிறது. ஒரு நகரம், சமூகம் அல்லது ஒட்டுமொத்த உலகம் போன்ற பெரிய அளவிலான சமூகங்கள்,உலகமயம் என்ற மூன்றாவது மற்றும் இறுதிக் களத்தில் உள்ளன.

சமூகச் சூழலில் விழிப்புணர்வு, இரக்கம் மற்றும் ஈடுபாடு

சமூக களம் என்பது பல வழிகளில் தனிப்பட்ட களத்தைப் போலவே உள்ளது, விதிவிலக்காக இப்போது நம்மை விட மற்றவர்கள் மீது கவனம் செலுத்துகிறோம். விழிப்புணர்வு, இரக்கம் மற்றும் ஈடுபாடு ஆகிய மூன்று பரிமாணங்களின் வழியாக நாம் மீண்டும் செல்வோம். இங்கு விழிப்புணர்வு என்பது மற்றவர்களைப் பற்றிய அடிப்படை விழிப்புணர்வைக் குறிக்கிறது, அதே போல் சமூக மனிதர்களாக நம்மைப் பற்றிய விழிப்புணர்வு - அதாவது, மற்றவர்களுடன் நாம் இருக்கிறோம், நமக்கு மற்றவர்கள் தேவை, நமது செயல்கள் மற்றவர்களைப் பாதிக்கின்றன. இந்த விழிப்புணர்வில் மனிதர்களாகிய நமக்கு பொதுவானது என்ன மற்றும் ஒருவரை ஒருவர் வேறுபடுத்துவது என்ன என்பதைப் பற்றிய புரிதலையும் உள்ளடக்கியது. இரக்கம் என்பது தனிப்பட்ட களத்தில் பெற்ற அறிவைப் பயன்படுத்தி இப்போது மற்றவர்களையும் அவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்வதை உள்ளடக்குகிறது, இதனால் நாம் எதிர்வினையாற்றுவது மற்றும் ஒரு முடிவுக்கு வருவதை குறைத்துக் கொள்கிறோம். நன்றியுணர்வு, மன்னிப்பு, தாராள மனப்பான்மை மற்றும் பணிவு போன்ற பிற சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கும் இந்த நுண்ணறிவைப் பயன்படுத்துகிறோம். கடைசியாக, ஈடுபாடு பரிமாணமானது, மற்றவர்களுடன் எவ்வாறு நேர்மறையாகவும் ஆக்கபூர்வமாகவும் தொடர்புகொள்வது என்பதை அறிய, இந்த விழிப்புணர்வையும் நுண்ணறிவையும் ஒன்றாக இணைப்பதை உள்ளடக்குகிறது. எனவே, சமூக தளத்தில் மூன்று கூறுகளை பின்வருமாறு கருதலாம்:

 • தனிப்பட்ட விழிப்புணர்வு
 • பிறர் மீதான இரக்கம்
 • உறவுமுறை பேணும் திறன்கள்

தனிப்பட்ட விழிப்புணர்வு

நாம் அனைவரும் நமது சொந்த குறுகிய சுயநலத்தில் கவனம் செலுத்துவதற்கான இயல்பான போக்கைக் கொண்டிருந்தாலும், மற்றவர்களின் சிறந்த நலன்களை மனதில் வைத்து மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கான பயிற்சி என்பது காலப்போக்கில் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திறமையாகும். இது மற்றவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் பெரும் நன்மையைத் தருகிறது. உதாரணமாக, மற்றவர்களுக்கான பாராட்டு உணர்வை உருவாக்குவது நல்வாழ்வு உணர்வுகளை மேம்படுத்துகிறது, அதே போல் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் உணர்வுகளையும் மேம்படுத்துகிறது. தனிப்பட்ட விழிப்புணர்வு மூன்று முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது:

 • நமது சமூக யதார்த்தத்தை கவனித்தல்.
 • மற்றவர்களுடன் நாம் பகிர்ந்து கொண்ட யதார்த்தத்தை கவனித்தல்
 • பன்முகத்தன்மை மற்றும் வேறுபாட்டை பாராட்டுதல்

நமது சமூக யதார்த்தத்தை கவனிப்பது என்பது நமது உள்ளார்ந்த சமூக இயல்பையும் மற்றவர்களின் முக்கியத்துவத்தையும் நம் வாழ்வில் அவர்கள் வகிக்கும் பாத்திரங்களையும் அங்கீகரிக்கும் திறனைக் குறிக்கிறது. மற்றவர்களுடன் நாம் பகிந்து கொண்ட யதார்த்தத்தை கவனித்தல் என்பது, மகிழ்ச்சியை விரும்புவது துன்பத்தைத் தவிர்ப்பது போன்ற அடிப்படை மட்டத்தில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைப் பாராட்டுவதை உள்ளடக்குகிறது. இறுதியாக, பன்முகத்தன்மை மற்றும் வேறுபாட்டைப் பாராட்டுவது என்பது தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பன்முகத்தன்மை, தனித்துவம் மற்றும் வேறுபாடுகளை மதிப்பது மற்றும் அவை எவ்வாறு நமது ஒருமித்த வாழ்வில் சேர்க்கின்றன என்பதைப் பார்ப்பதாகும்.

நம்முடைய சமூக யதார்த்தத்தை கவனித்தல்

“எந்த மனிதனும் தனித்திருக்கவில்லை” என்று சொல்வதைப் போல, மனிதர்களாகிய நாம் சமூகத்தில் இருக்கிறோம் நாம் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் எண்ணிலடங்காதவர்கள் நம்முடைய வாழ்வில் முக்கியப் பாங்காற்றுகிறார்கள். நம்மைப் போலவே மற்றவர்களும் உலகைப் பாடங்களாக அனுபவிக்கிறார்கள் என்ற அடிப்படை உண்மை சில சமயங்களில் நம்மைத் தவிர்க்கலாம். நமக்கு மட்டுமே தேவைகள் மற்றும் விருப்பங்கள் இருக்கிறது, நாம் மட்டுமே கவனித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சிந்திக்கும் வலையில் விழுவதை இது மிகவும் எளிதாக்குகிறது.

முதலில், நாம் யார் என்பதை வடிவமைத்தவர்கள், நம் இருப்பை தொடர்ந்து பாதிக்கும் மற்றும் எதிர்காலத்தில் நம்மைப் பாதிக்கும் நபர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கலாம். உதாரணமாக, நம் பெற்றோர் அல்லது நமக்கு அடிப்படைத் தேவைகள் மற்றும் பாதுகாப்பை வழங்கிய வழங்கிய மற்றவர்களைப் பற்றி நாம் சிந்திக்கலாம். மற்றவர்கள் நமக்கு தோழமையைத் தருகிறார்கள். பரந்த அளவில் பார்த்தால், எண்ணற்ற மக்கள் நாம் உண்ணும் உணவை விளைவிக்கிறார்கள், நாம் உடுத்தும் ஆடைகளை உருவாக்குகிறார்கள். இந்த உண்மைகளைப் பிரதிபலிப்பது மற்றவர்களிடம் பாராட்டு, பச்சாதாபம் மற்றும் இரக்கத்தை வளர்ப்பதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.

மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட யதார்த்தத்தை கவனித்தல்

மற்றவர்கள் இருக்கிறார்கள், நமக்காக கொடுக்கிறார்கள் என்பதைத் தாண்டி, அவர்களுக்கும் உணர்வுபூர்வமான வாழ்க்கை இருக்கிறது என்று அங்கீகாரம் அளிக்கும் உணர்வு நமக்கு வர வேண்டும். நமது அடிப்படை ஒற்றுமைகளை அங்கீகரிப்பதன் மூலம் மற்றவர்களின் அடிப்படை பாராட்டு இங்கு மேம்படுத்தப்படுகிறது, மேலும் எந்த வேறுபாடுகளும் அவர்களைப் பாராட்டுவதைத் தடுக்காது. நாம் கவனம் செலுத்தும் ஒற்றுமைகள் நமது அடிப்படை மனித அனுபவங்கள். இவை எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை. மற்றவர்கள், நம்மைப் போலவே, நல்வாழ்வைப் பெற விரும்புகிறார்கள், கஷ்டங்களையும் துன்பங்களையும் விரும்பவில்லை. ஆசைகள், தேவைகள், அச்சங்கள், நம்பிக்கைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உணர்ச்சிகரமான வாழ்க்கை அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள், வரம்புகளைக் கொண்டுள்ளனர், தடைகளுக்குள் ஓடுகிறார்கள், மகிழ்ச்சியையும் பின்னடைவையும் அனுபவிக்கிறார்கள். இந்த பொதுவான தன்மைகளை அங்கீகரிப்பது ஒரு திறமையாகும், அதை வளர்த்து பழக்கப்படுத்தலாம்.

மன ஓட்டத்தின் வரைபடம் மற்றும் உணர்ச்சி விழிப்புணர்வு உட்பட, ஒரு குறிப்பிட்ட அளவிலான உணர்வுச்சார் கல்வியறிவை நாம் வளர்த்துக் கொண்டவுடன், மற்றவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ளும் ஒற்றுமைகளைக் கவனிப்பது எளிது. அதே சமயம், மற்றவர்கள் நம்மைப் போல் இல்லை என்பதை ஆராய வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஆசைகள், தேவைகள், அச்சங்கள் மற்றும் நம்பிக்கைகள் இருந்தாலும், நாம் செய்யும் அதே செயல்களை அவர்கள் விரும்புவதில்லை, தேவைப்படுவதில்லை அல்லது பயப்படுவதில்லை. இந்த உண்மை அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும். மேலும், மற்றவர்களுக்கு வெவ்வேறு வாழ்க்கை அனுபவங்கள், பார்வைகள் மற்றும் அறிவு உள்ளது, இவை அனைத்தையும் பாராட்டலாம். நம்முடைய ஒற்றுமைகளைப் பாராட்டும்போது, நம் வேறுபாடுகளை அங்கீகரிப்பது நம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் ஒரு புரிதலை உருவாக்குகிறது, இது உறவுமுறை திறன்களின் முக்கிய அம்சமாக செயல்படுகிறது.

பன்முகத்தன்மை மற்றும் வேறுபாட்டை பாராட்டுதல்

மற்றவர்களுடன் பகிரப்பட்ட யதார்த்தத்தின் ஒரு பகுதி என்னவென்றால், நாம் அனைவரும் தனித்துவமானவர்கள், வேறுபட்டவர்கள். மேலும் நாம் சமூகக் குழுக்களின் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் பிற குழுக்களிடமிருந்து வேறுபடுகிறோம். நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் வெவ்வேறு வளர்ப்பு, வித்தியாசமான குடும்பச் சூழல் மற்றும் தனித்துவமான அனுபவங்கள் நம் முன்னோக்குகள், அணுகுமுறைகள் மற்றும் இலக்குகளை வடிவமைக்கின்றன.

எனவே பன்முகத்தன்மை என்பது நமது பகிரப்பட்ட யதார்த்தத்தின் ஒரு பகுதியாகும், மேலும் அதைப் பாராட்டலாம் - நம்மைத் தள்ளிவிடாமல், நம்மை ஒன்றிணைக்கக்கூடிய ஒன்று. வேறுபாடுகளை மதிப்பது மற்றும் பன்முகத்தன்மை நமது கூட்டு வாழ்க்கைக்கு பங்களிக்கும் விதம் என்பது நமது பெருகிவரும் பன்மைத்துவ மற்றும் உலகமயமாக்கப்பட்ட உலகில் குறிப்பாக முக்கியமான வகை விழிப்புணர்வு ஆகும். இது உண்மையான பச்சாதாபம் மற்றும் இரக்கத்திற்கான அடித்தளத்தை வழங்குகிறது.

மற்றவர்களுக்காக இரக்கப்படுதல்

அனைத்து சமூக குணாதிசயங்களும் பிறருக்கான இரக்கத்தில் இருந்து தோன்றி, பங்களிக்கின்றன. தனிப்பட்ட விழிப்புணர்வு பரந்த அளவிலான சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு வழி வகுக்கும் அதே வேளையில், இரக்கம் அவர்களை ஒரு நன்னெறி சூழலில் வைக்க உதவுகிறது. மற்றவர்களிடம் இரக்கத்தை வளர்க்க மூன்று வழிகள் உள்ளன:

 • சூழலில் மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுதல்
 • கருணை மற்றும் இரக்கத்தைப் பாராட்டுதல் மற்றும் வளர்த்தல்
 • இதர நன்னெறிகளை பாராட்டுதல் மற்றும் வளர்த்தல்

சூழ்நிலைகளுக்கு ஏற்ப மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளுதல்

நம்முடைய சொந்த உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாதது சுய-தீர்மானத்திற்கு வழிவகுக்கிறது; இதேபோல், நாம் புரிந்து கொள்ளாத அல்லது அங்கீகரிக்காத வழிகளில் மற்றவர்கள் செயல்படுவதைப் பார்க்கும்போது, நாம் இயல்பாகவே ஒரு தீர்மானத்துடன் செயல்படுகிறோம். தேவைகள் மற்றும் விருப்பங்களில் இருந்து நமது தேவைகள் எவ்வாறு எழுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது சுய-ஏற்பு மற்றும் சுய இரக்கத்திற்கு வழிவகுக்கிறது, மற்றவர்களைப் பார்க்கும் போது இந்த முறை செயல்படுகிறது.

மற்றவர்களின் செயல்கள் உணர்ச்சிகளால் தூண்டப்படுகின்றன என்பதையும், இந்த உணர்ச்சிகள் ஒரு சூழலில் மற்றும் அடிப்படைத் தேவையிலிருந்து எழுகின்றன என்பதையும் நாம் புரிந்து கொண்டால், அது கோபம் மற்றும் தீர்மானிப்பதை விட பச்சாதாபம் மற்றும் இரக்கத்திற்கு வழிவகுக்கும். இங்கே நோக்கமானது பொருத்தமற்ற நடத்தையை மன்னிப்பதல்ல, மாறாக மற்றவர்களையும் அவர்களின் உணர்ச்சிகளையும் மனிதன் என்கிற அடிப்படையில் புரிந்துகொள்வதாகும்.

கருணை மற்றும் இரக்கத்தைப் பாராட்டி வளர்த்தல்

கொடூரத்தை விட இரக்கத்தை நாம் மதிக்க வேண்டும் என்பது வெளிப்படையாகத் தோன்றலாம், ஆனால் இந்த அடிப்படை உண்மையிலிருந்து விலகி இருப்பது எளிது. நம்முடைய சொந்த அனுபவத்திலிருந்தும், வரலாற்று உதாரணங்களிலிருந்தும் நாம் எப்படி இரக்கத்தை எப்போதும் பொருட்படுத்தவில்லை என்பதை பார்க்கலாம். மனிதர்கள் மற்றவர்களின் கொடுமைகளை ஏற்றுக்கொண்டதற்கும் அல்லது தங்களது சொந்த கொடூரமான செயல்களை வெறுமனே நிராகரித்ததற்கும் வரலாறு முழுவதும் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.

இரக்கம் என்பது நமக்குப் பெரிதும் பயனளிக்கும் ஒரு சக்திவாய்ந்த கொள்கையாகும், ஆனால் கருணையுடன் இருக்க நம் மனதைக் கட்டளையிடுவது மட்டுமே செயல்முறைக்கு ஒத்துவராது. இரக்கம் என்றால் என்ன? எது இரக்கம் இல்லை? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அதை நாம் வளர்க்க விரும்பும் ஒன்றாக மதிக்க வேண்டும். கருணையுடன் தொடங்குவது பொதுவாக எளிதானது - இரக்கத்திற்குச் செல்வதற்கு முன் மற்றவர்களிடம் அக்கறையுள்ள அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இரக்கம் என்பது மற்றவர்களின் துன்பத்தைப் போக்க விரும்புவதாக வரையறுக்கப்படுகிறது. பலரும் இரக்கத்தை மனித இனம் இருப்பதற்கான மைய அம்சமாக கருதவில்லை என்றாலும், இரக்கத்தின் உயிரியல் வேர்களை ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. அனைத்து பாலூட்டிகள் மற்றும் பறவைகள் உயிர்வாழ்வதற்கு தாய்வழி பராமரிப்பு தேவைப்படுகிறது, ஏனெனில் அவை பிறந்த பிறகு சொந்தமாக வாழ முடியாது. மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்களில் உள்ள நற்பண்பு நடத்தையானது, தனிப்பட்டோ அல்லது ஒரு குழுவாகவோ சேர்ந்திருக்கும் சூழ்நிலைகளில் உயிர்வாழ்வதற்கும் செழிப்பதற்கும் ஆதரவளிக்கும் பரஸ்பர பிணைப்பை உருவாக்குகின்றன. ஆகவே, பல விதங்களில், இரக்கம் என்பது உயிர் வாழ்வதற்கு பிரதானமான விஷயம். சிறு வயதிலிருந்தே மனிதர்கள் கருணை காட்டுவதில் அதிக விருப்பம் கொண்டிருப்பதையும், உடலியல் ரீதியில் கூட இரக்கத்திற்கு நாம் ஏன் மிகவும் சாதகமாக பதிலளிக்கிறோம் என்பதையும் இது விளக்குகிறது.

இதர நன்னெறிகளை பாராட்டி வளர்த்தல்

இரக்கத்தைத் தவிர, நன்றியுணர்வு, மன்னிப்பு, மனநிறைவு, பணிவு, பொறுமை உள்ளிட்டவற்றையும் நாம் வளர்க்கலாம். இந்த நன்னெறிகள் அனைத்திற்கும் பொதுவானது, அவை ஒருவருக்குள் இருக்கும் குணங்களைக் குறிக்கின்றன - பொருள் உடைமைகள் அல்லது சாதனைகளைக் காட்டிலும் - அவை நம் வாழ்வில் நன்மையையும் மகிழ்ச்சியையும் தருகின்றன. மக்களை மதிப்பதில் கவனம் செலுத்துவது மற்றும் அவர்கள் நம் வாழ்க்கையை எவ்வாறு வளப்படுத்துகிறார்கள் என்பதைப் பாராட்டுவது, சுய-விளம்பரம் மற்றும் உடைமைகளைப் பெறுதல் ஆகியவை நீண்டகால திருப்தி மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோலாகும். ஒருவருக்கு உள்ளே இருக்கும் குணங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவிலான பொருள் உடைமைகளால் கிடைக்கும் நல்வாழ்வுக்குப் பிறகு வாழ்க்கையில் திருப்தியின் அளவு குறையும் போது, குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சிக்கு இடையே வலுவான இணைப்புகள் உள்ளன என்று ஆராய்ச்சி காட்டுகிறது. நன்றியுணர்வு சிறந்த வாழ்க்கை திருப்திக்கு வழிவகுக்கவில்லை; ஆனால் சமூக ஊடகங்கள், விளம்பரம் மற்றும் தொலைக்காட்சி மூலம் தெரிவிக்கப்படும் பொருள்முதல்வாத செய்திகளுக்கு ஒரு சக்திவாய்ந்த மாற்று மருந்தாக இருக்கலாம்.

மற்றவர்கள் பல வழிகளில் நமக்கு நன்மை செய்கிறார்கள், மேலும் பலன்களை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அவசியம் கூட இல்லை. மற்றவர்கள் செய்யாததையும் கூட நாம் பாராட்டலாம் - அவர்கள் திருடவோ, தீங்கு செய்யவோ, அல்லது நம்மை அவமதிக்கவோ இல்லை. இன்னும் மேம்பட்ட நிலையில், மற்றவர்கள் தீங்கிழைக்கும் வழிகளில் செயல்படும்போது நாம் பெறும் நன்மையைப் பாராட்டவும் கற்றுக்கொள்ளலாம். கடுமையான கஷ்டங்களை அனுபவித்து உயிர் பிழைத்தவர்களின் உதாரணங்களை நாம் படிக்கலாம், அவர்களின் முன்னோக்குகளை மாற்றியமைத்து மகிழ்ச்சியான, அதிக நிறைவான வாழ்க்கையை நடத்தலாம். மற்றவர்களின் தவறான நடத்தையை நாம் மன்னிக்கக்கூடாது என்றாலும், ஒரு புதிய கண்ணோட்டத்தை எடுக்கும் திறன் கோபம், வெறுப்பு மற்றும் மனக்கசப்பை விடுவிக்க ஒரு சக்திவாய்ந்த வழியாகும். மற்றவர்கள் நமக்குப் பயனளிக்கும் வழிகளை ஆராய்வது உண்மையான மற்றும் நிலையான நன்றியுணர்வை வளர்க்கலாம், இது மற்றவர்களுடன் ஒரு சக்திவாய்ந்த பிணைப்பாகவும் இணைப்பாகவும் செயல்படுகிறது.

சுயநல மனப்பான்மையின் தீமைகளைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, நம் சொந்த மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு எவ்வாறு மற்றவர்கள் காட்டும் எண்ணற்ற கருணைச் செயல்களைச் சார்ந்தது என்பதைப் பற்றி சிந்திக்கும்போது, நாம் இயல்பாகவே நன்றியுணர்வுடன் இருப்போம்.

நாம் பச்சாதாபத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், இது மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்கள் உட்பட அவர்களின் அனுபவங்களை அடையாளம் கண்டு உணரும் திறன் ஆகும். நம்மில் பெரும்பாலோர் தானாகவே நம் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பச்சாதாபத்தை உணர்கிறோம், ஆனால் அதை பரந்த அளவில் மற்றும் பாரபட்சமற்றதாக விரிவாக்க முடியும். நாம் பச்சாதாபத்தை நமது அடிப்படை பகிரப்பட்ட ஒற்றுமைகள் பற்றிய அறிவோடு இணைக்கும்போது, சார்பில்லாத கட்டுப்படுத்தப்பட்ட ஒரு உண்மையான பச்சாதாபம் வெளிப்படும். மற்றவர்களுடன் அனுதாபத்துடன் தொடர்புகொள்வது அவர்களின் பார்வையையும் சூழ்நிலையையும் புரிந்துகொள்ள முயற்சி செய்வதை உள்ளடக்குகிறது. உதாரணமாக, "இந்த நபர் சுயநலவாதி" என்று கூறுவதற்குப் பதிலாக, "அவரது நடத்தையை சுயநலமாகக் கருதலாம்" என்று கூறலாம். இது அந்த நபரை நிரந்தரமான சுயநலவாதியாகப் பார்க்காமல் இருக்க உதவுகிறது மற்றும் அவர்கள் தன்னலமற்றவர்களாக இருக்கும் சந்தர்ப்பங்களைக் கவனிக்கும் வகையில் நம்மை அணுக அனுமதிக்கிறது.

மற்றவர்களுடனான நமது ஒற்றுமைகளை ஆராய்ந்து, நன்றியுணர்வு மற்றும் பச்சாதாபத்தை வளர்த்துக் கொள்ளும்போது, நாம் இயல்பாகவே மன்னிக்கத் தொடங்குகிறோம். நம்முடைய நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை விடுவித்து, சுய-அங்கீகாரத்தை வளர்த்துக் கொண்டால், மற்றவர்கள் மீது நாம் வைத்திருக்கும் கோபத்தையும் வெறுப்பையும் விடுவிப்பது எளிதாக இருக்கும். இதனால் மன்னிப்பு என்பது நமக்கு நாமே கொடுக்கும் பரிசாக மாறும்.

உறவுமுறை பேணும் திறன்கள்

நட்பில் இருந்து குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள், அதில் இருந்து அலுவலக இயக்கவியல் வரை சிக்கலான சமூக தொடர்புகளுக்கு நாம் வழக்கமாக செல்ல வேண்டும். மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் இருக்க, பரந்த அளவிலான சமூக அமைப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் திறன் அவசியம். நீண்ட கால நல்வாழ்வு என்பது அர்த்தமுள்ள மற்றும் நேர்மறையான உறவுகளை உருவாக்கும் மற்றும் பராமரிக்கும் திறனுடன் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்புடையது, அதே நேரத்தில் தீங்கு விளைவிக்கும் உறவுகளை அடையாளம் கண்டு நிறுத்தவும் முடியும்.

இந்த பகுதியின் முந்தைய இரண்டு கூறுகள் - நமது சமூக இயல்பு பற்றிய விழிப்புணர்வு, மற்றவர்களின் உணர்ச்சிகளை சூழலுக்கு ஏற்ப புரிந்துகொள்வது - ஒரு அடித்தளத்தை உருவாக்குகிறது, அதன் அடிப்படையில் நமது சொந்த மற்றும் மற்றவர்களின் நலனுக்கு மிகவும் உகந்த உண்மையான திறன்கள், நடத்தைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்க முடியும். நமது நடத்தை பச்சாதாபம் மற்றும் இரக்கத்தின் அடிப்படையிலானதாக இருந்தாலும், சில நேரங்களில் நமது செயல்கள் உண்மையில் எதிர்மறையான விளைவைக் காட்டுகின்றன. நமக்கு நல்ல நோக்கங்கள் இருக்கலாம், ஆனால், அவை இறுதியில் நேர்மாறாக நமக்கும் மற்றவர்களுக்கும் சிரமங்களை உண்டாக்கி விடும். அதிக அனுபவத்தைப் பெறுவதன் மூலம் இதை நாம் குறைக்கலாம். கற்றுக்கொண்ட எந்தத் திறன்களையும் அவை உள்ளடக்கியதாகவும் இயற்கையாகவும் மாறும் வரை நாம் தீவிரமாகப் பயிற்சி செய்யலாம். நாம் பயிற்சி செய்யக்கூடிய நான்கு அம்சங்கள் உள்ளன:

 • பச்சாதாபத்துடன் கேட்டல்
 • திறன்மிக்க தொடர்பு
 • மற்றவர்களுக்கு உதவுதல்
 • மோதல் மடைமாற்றுதல்

பச்சாதாபத்துடன் கேட்டல்

பச்சாதாபமாகக் கேட்பது என்பது திறந்த மனதுடன் மற்றவர்கள் நிலையைக் கேட்பதும், உணர்ச்சி வயப்படுதல் காரணமாக எதையும் கேட்காமல் இருப்பவராக மாறாததும் ஆகும். மற்றவர்களின் கருத்துக்கள் நம்முடைய பார்வையிலிருந்து வேறுபட்டாலும் கூட, அது மற்ற நபருக்கான மரியாதை மற்றும் பாராட்டு ஆகியவற்றில் அடித்தளமாக உள்ளது. "ஆழமாகக் கேட்டல்" பயிற்சிகள் மூலம் நாம் பச்சாதாபத்துடன் கேட்பதை பயிற்சி செய்யலாம், அங்கு ஒரு நேரத்தில் சில நிமிடங்களுக்கு நம்முடைய கருத்தையோ அல்லது தீர்மானத்தையோ முன் வைக்காமல் மற்றவர்கள் கூறுவதைக் கேட்க முயற்சிக்கிறோம். அல்லது, நாம் உடன்படாத விஷயங்களைச் சொல்லும் நபர்களின் கருத்துகளைக் கேட்கலாம் அல்லது கவனிக்கலாம், ஆனால் நாம் உணர்ச்சிப்பூர்வமாக எதிர்வினையாற்றுவதற்கு முன்பு அவர்கள் சொல்வதை மறுமொழி கூறாமல் இடைநிறுத்தலாம்.

பச்சாதாபமாக கேட்பது என்பது மேலோட்ட நிலையிலான கருத்துக்கு மட்டும் கவனம் செலுத்துவதாக இல்லாமல், மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கான சூழலை வழங்கக்கூடிய அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிலாஷைகளையும் கவனத்தில் கொள்வதாக இருத்தல் வேண்டும்.

திறன்மிக்க தொடர்பு

கேட்டல் என்பது மிகவும் முக்கியமானது, ஆனால் நாம் என்ன சொல்ல விரும்புகிறோமோ அதை அக்கறையுடனும், பயனுள்ளதாகவும், நமக்கும் மற்றவர்களுக்கும் அதிகாரமளிக்கும் வகையில் தொடர்பு கொள்ள வேண்டும். "தொடர்புகளை மேம்படுத்துதல்" என்ற கருத்து, நமக்காக மட்டுமல்ல, தமக்காகப் பேச முடியாதவர்களுக்காகவும் மரியாதையாகவும் வெளிப்படையாகவும் பேசும் திறனைக் குறிக்கிறது. விவாதம் மிகவும் சக்திவாய்ந்த கருவியாக இருக்கலாம். உதாரணமாக, நண்பர்களுடன் விவாதம் செய்யும் போது பொதுவாக நாம் உடன்படாத பக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். மனிதர்களாகிய நாம், நமது கண்ணோட்டத்தை எதிர்ப்பவர்களை சட்டத்திற்கு புறம்பாக அல்லது மனிதாபிமானமற்றவர்களாக மாற்றும் போக்கைக் கொண்டிருப்பதால், இத்தகைய பயிற்சிகள் பணிவு, அறிவுசார் ஆர்வம் மற்றும் பொதுவான மனிதநேய உணர்வை வளர்க்க உதவும்.

மற்றவர்களுக்கு உதவுதல்

கேட்பதும் தொடர்புகொள்வதும் அடிப்படையானது, ஆனால் மற்றவர்களுக்கு உதவ எண்ணற்ற வழிகள் உள்ளன. மற்றவர்களுக்கு உதவுவது எப்போதும் மற்றவர்களின் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும், மேலும் நமது சொந்த திறனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். சமூக சேவை முதல் தன்னார்வத் தொண்டு வரை “சீரற்ற கருணைச் செயல்கள்” வரை, உதவியைப் பெறுவதை விட, உதவியை வழங்குவது நமது சொந்த நலனுக்கு இன்னும் அதிகமாக பங்களிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

மற்றவர்களுக்கு உதவும் செயல்முறையைப் பற்றி சிந்திக்க நாம் நேரம் எடுத்துக் கொள்ளலாம்: அதைச் செய்யும்போது நாம் எப்படி உணர்கிறோம், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம், அதை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் நாம் உதவ முயற்சிப்பவர்களுக்கு அது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இறுதியாக, மேலோட்டமாகத் தோன்றுவதைத் தாண்டி, மற்றவர்களுக்கு அவர்களின் நீண்டகால நல்வாழ்வுக்கு உண்மையிலேயே என்ன வகையான உதவி தேவைப்படலாம் என்பதை நாம் ஆராயலாம்.

மோதல் மடைமாற்றம்

நம் வாழ்நாள் முழுவதும் மோதலை சந்திப்பது தவிர்க்க முடியாதது. மோதலானது தன்னளவில் மோசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; ஆனால் நமக்கும் மற்றவர்களுக்குமான மோதலை வழிநடத்த கற்றுக்கொள்வது ஒரு முக்கிய திறமை. ஒரு மோதலைத் தீர்ப்பது, இரு தரப்புக்கும் நல்வாழ்வை மேம்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் உறவுகளை மாற்றுவதற்கான வழியின் ஒரு பகுதி மட்டுமே. இதற்காக, மோதல்களுக்கு ஆக்கப்பூர்வமாக பதிலளிக்கவும், ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் அமைதியான உறவுகளை எளிதாக்கவும் முடியும்.

அக அமைதியானது வெளிப்புற அமைதிக்கான அடித்தளமாக செயல்படுகிறது. அதேபோல், அக நல்லிணக்கம் வெளிப்புற நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும். நமது அக உலகத்தை கையாள்வது பிரகாசமான மோதல் மாற்றத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பணிவு, பச்சாதாபம், இரக்கம், மன்னிப்பு, பக்கச்சார்பற்ற தன்மை மற்றும் நமது பொதுவான மனிதநேயத்தை அங்கீகரிக்காமல், மோதலை மாற்றுவது மற்றும் தீர்மானிப்பது கடினம், இல்லையெனில் சாத்தியமற்றது. இந்தத் திறன்கள் இருக்கும் இடத்தில், மோதலைத் தீர்க்கும் பணியானது, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஆழமான மற்றும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவமாக மாறும்.

சுருக்கவுரை

இந்தப் பயிற்சியின் முதல் பகுதியில், நம்மை நாமே நன்றாகப் புரிந்து கொள்வதற்காக உணர்ச்சிப்பூர்வமான கல்வியறிவை வளர்த்துக் கொள்கிறோம். இந்த இரண்டாவது பகுதியில், நமது குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் நாம் சந்திக்கும் அந்நியர்கள் என மற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட இந்த புரிதலைப் பயன்படுத்துகிறோம். உறவுமுறையை பேணும் திறன்களை வளர்ப்பது கருணை மற்றும் இரக்கத்தின் கொள்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. நாம் அவற்றைப் போதுமான அளவு பயிற்சி செய்துவிட்டால், சமூகத் திறன்கள் வெறும் நுட்பங்களின் தொகுப்பாக மட்டும் இருக்காது; அவை மற்றவர்களுக்கான நமது பாராட்டு மற்றும் அக்கறையின் இயல்பான விளைவுகளாக மாறுகின்றன. நாம் அனுபவிக்கும் சமூக சூழல்கள் முழுவதிலும் நேர்மறையான உத்திகளைக் கடைப்பிடித்து நடைமுறைப்படுத்தும்போது, நமது உறவுகள் மிகவும் இணக்கமாக இருப்பது மட்டுமல்லாமல், நாம் மகிழ்ச்சியாகவும் மேலும் நிறைவாகவும் மாறுகிறோம்.

நீங்கள் இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள விரும்பினால், எஸ்இஇ கற்றல் கட்டமைப்பின் முழுப் பதிப்பைப் படித்து, சிந்தனை அறிவியல் மற்றும் இரக்க அடிப்படையிலான நன்னெறிகள் மையத்தின் மற்ற திட்டங்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளவும்.

Top