1944 ஆம் ஆண்டு பிறந்த அலெக்சாண்டர் பெர்சின், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வளர்ந்தவர். ரட்கெர்ஸ் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் 1962 ஆம் ஆண்டில் பௌத்தம் பற்றி பயிலத் தொடங்கியவர், 1972ம் ஆண்டில் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத மற்றும் இந்தியப் படிப்புகள் மற்றும் தூர கிழக்கத்திய மொழியில் (சீனம்) முனைவர் பட்டம் பெற்றார். பௌத்தம் எவ்வாறு ஒரு ஆசிய நாகரிகத்தை மற்றொரு விதமாக மாற்றி இருக்கிறது என்ற கருத்தாக்கத்தில் ஈர்க்கப்பட்டு, அது எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டு தழுவப்பட்டிருக்கிறது என்பதில் கவனம் செலுத்தி, பாரம்பரிய பௌத்தத்தையும் நவீன மேற்கத்திய கலாச்சாரங்களையும் இணைக்க பாலமாக இருக்கிறார்.
முனைவர் பெர்சின் 29 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தார், முதலில் முழுஅறிஞராக இருந்தவர் பின்னர் மொழிபெயர்ப்புத் தலைவராக இருந்தார். மொழிபெயர்ப்பாளராக தர்மசாலாவின் திபெத்திய பணிகள் மற்றும் ஆர்கைவ்கள் நூலகத்திற்காக பல உதவிகளைச் செய்திருக்கிறார். இந்தியாவில் இருந்த சமயத்தில் நான்கு திபெத்திய பௌத்த பாரம்பரியங்களைப் பற்றி கற்று பட்டம் பெற்றார்; எனினும் அவருடைய பிரதான ஆசிரியர்கள் புனிதர் தலாய் லாமா, சென்சாப் செர்காங் ரின்போச் மற்றும் கெஷே கவாங் தர்க்யேய். குறிப்பாக அவர்களின் மேற்பார்வையில் பயிற்சி செய்து, அலெக்சாண்டர் கெலுக் பாரம்பரியத்தின் முக்கிய தியான முறையை நிறைவு செய்தார்.
9 ஆண்டுகளாக, சென்சாப் செர்காங் ரின்போச்சிற்கு முதன்மை மொழிபெயர்ப்பாளராக இருந்த அலெக்சாண்டர், செர்காங்குடன் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் சென்று, அவருடைய பயிற்சியின் கீழ் தன்னுடைய தனி முயற்சியில் பௌத்த ஆசிரியராகி இருக்கிறார். புனிதர் தலாய் லாமாவிற்கும் சில நேரங்களில் மொழிபெயர்ப்பாளராக இருந்து, அவருக்கு பல்வேறு வெளிநாட்டு திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார். செர்னோபில் கதிர்வீச்சு பேரழிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு திபெத்திய மருத்துவ உதவி அளித்ததும் இதில் அடங்கும்; மங்கோலியாவில் பௌத்தத்தை புதுப்பிக்க அடிப்படை பௌத்த நூல்களை மங்கோலியாவின் நடைமுறைக்கு ஏற்ப மாற்றியவர்; மேலும் இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் பௌத்த – இஸ்லாமிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்க காரணமாக இருந்தவர்.
1980ம் ஆண்டு முதல் பெர்சின் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்கலைக்கழகங்கள் மற்றும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் பௌத்த மையங்களில் பௌத்தம் பற்றி விரிவுரை கொடுத்திருக்கிறார். லத்தின் அமெரிக்கா மற்றும் ஆஃப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும், அதிக அளவிலான கம்யூனிச நாடுகளிலும் பௌத்தம் கற்பித்த முதல் நபர் இவரே. தன்னுடைய பயணங்களின் போது பௌத்தத்தை பரப்புரை செய்ய போதுமான முயற்சிகளை மேற்கொண்டதோடு, தன்னுடைய போதனைகள் அன்றாட வாழ்க்கையில் பயிற்சிப்பதற்கான வழிகளையும் காட்டியவர்.
ஒரு நிறைவான ஆசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான முனைவர். பெர்சின், 17 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். மத குரு தொடர்பானவை, காலச்சக்கரத்தை தொடங்குதல், சமமான உணர்நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட நூல்களும் இதில் அடங்கும். புனிதர் தலாய் லாமாவுடன் இணைந்து மஹாமுத்திரையில் கெலுக்- கக்யூ பாரம்பரிய நூலை வெளியிட்டிருக்கிறார்.
1998ம் ஆண்டு இறுதியில் முனைவர் பெர்சின், 30,000 பக்கம் பெளியிடப்படாத புத்தக கையெழுத்துப் பிரதிகள், கட்டுரைகள், தான் உருவாக்கிய மொழிபெயர்ப்புகள், பெரிய மதகுருக்களின் போதனைகளில் இருந்து குறிப்பெழுதி மொழிபெயர்க்கப்பட்டவை, மதகுருக்களின் போதனைகளில் அவர் எடுத்த குறிப்புகளுடன் மேற்கு நாட்டிற்குத் திரும்பினார்.
இதன் காரணமாகவே பெர்சின் ஆர்கைவ்ஸ் வலைதளப்பக்கம் டிசம்பர் 2001ல் இணையதளத்தில் வெளியானது. பெர்சனின் தற்போதைய உரைகள் உட்பட அனைத்தையும் உள்ளடக்கி வலைதளப்பக்கம் தற்போது (2015ல்) 21 மொழிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பலதரப்பட்ட மக்களுக்காக குறிப்பாக ஆறு இஸ்லாமிய உலக மொழிகளில் குறிப்புகளைத் தருவது இந்தப் பணியில் முன்னோடியானது. வலைதளப்பக்கத்தின் தற்போதைய பதிப்பானது (2021ல் 32 மொழிகளில் ) முனைவர் பெர்சினின் நீண்டநாள் பொறுப்பு, பாரம்பரிய பௌத்தம் மற்றும் நவீன உலகத்திற்கு இடையே ஒரு பாலத்தை கட்டமைத்துக்கொண்டிருக்கிறார். அந்த பாலத்தின் மூலமாக போதனைகளை வழிநடத்தி, நவீன வாழ்க்கைக்கும் அது பொருந்திப்போவதை சுட்டிக்காட்டுகிறார், உலகத்தில் அனைவருக்கும் உணர்வுகளின் சமநிலையை ஏற்படுத்த அது உதவும் என்பதே அலெக்சாண்டர் பெர்சினின் நோக்கமாகும்.