எனது கதை

பௌத்தம் பற்றிய அறிவார்ந்த ஆய்வுகளைப் படிப்பதும், அன்றாட வாழ்வில் பௌத்த போதனைகளை செயல்படுத்துவதும் இரண்டும் வெவ்வேறு உலகங்கள். பௌத்தம் பற்றி அறிவார்ந்தவற்றை படிப்பது மட்டுமே அன்றாட வாழ்வில் பலனை ஏற்படுத்தி விடாது என்று எப்போதும் சொல்லப்படுகிறது. முனைவர். அறிஞர் மற்றும் பயிற்றுநரான அலெக்சாண்டர் பெர்சின், கல்வியறிவு மற்றும் ஆன்மிக உலகு என இரண்டிலும் கால்தடம் பதித்து பெற்ற அனுபவம் பற்றி மனம் திறக்கிறார்.

ஸ்புட்டினிக் தலைமுறை

நான் 1944ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். எங்கள் குடும்பம் வசதியானதல்ல, அவர்கள் பணி செய்பவர்கள், அவர்களுக்கு போதுமான கல்வியறிவும் இல்லை. சிறு வயது முதலே எனக்கு ஆசிய பழக்க வழக்கங்கள் மீது அதீத ஆர்வம் இருந்தது. என் குடும்பத்தினர் அதனை ஊக்கப்படுத்தவும் இல்லை ஊக்கத்தை கெடுக்கவும் இல்லை, எனினும் அந்த நாட்களில் ஆசியா பற்றி அதிக அளவில் தகவல்கள் கிடைக்கவில்லை. எனக்கு 13 வயது இருக்கும் போது, என் நண்பருடன் இணைந்து யோகா செய்யத் தொடங்கினேன், அதன் பின்னர் பௌத்தம் தொடர்பாக கிடைத்தனவை அனைத்தையும் படித்தேன்.

அமெரிக்காவின் “ஃஸ்புட்னிக் தலைமுறை”யை சேர்ந்தவன் நான். சோவியத் ஒன்றியத்தின் (ரஷ்யா) ஸ்புட்னிக் செயற்கைக்கோள் விண்வெளிக்கு சென்ற போது, அமெரிக்கா மிகவும் வருத்தத்தில் இருந்தது ஏனெனில் நாங்கள் ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருப்பதாக நினைத்தோம். நான் உள்பட அனைத்து பள்ளிக்குழந்தைகளும் அறிவியல் பற்றி படிக்க ஊக்கப்படுத்தப்பட்டோம், அப்போது தான் நாங்கள் ரஷ்யாவை முந்த முடியும். எனவே 16 வயதில், நான் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பயின்றேன். ரட்கர்ஸ் பல்கலைக்கழகம் நியூ ஜெர்சியில் இருக்கிறது, அங்கு தான் நான் வளர்ந்தேன். கெஷ் வேங்யல் என்னும் கல்மைக் மங்கோல் பௌத்த மத குரு நான் வசித்த இடத்திற்கு 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்தார், அவர் அங்கு இருப்பது பற்றி எனக்கு அப்போது தெரியவில்லை.

என்னுடைய படிப்பின் ஒரு பகுதியாக, ஆசியப் படிப்புகளை நான் கூடுதல் பாடமாக எடுத்தேன். பௌத்தம் எவ்வாறு ஒரு நாகரிகத்தில் இருந்து மற்ற நாகரிகத்திற்கு சென்றிருக்கிறது, ஒவ்வொரு நாகரிகமும் எப்படி வெவ்வேறு விதமாக அவற்றை புரிந்து வைத்திருக்கின்றன என்பதை பற்றி அதில் பேசப்பட்டிருந்தது. 17 வயது இருக்கும் போது எனக்கு உறுதியான ஒரு எண்ணம் தோன்றியது, “நான் என்னை ஈடுபடுத்திக்கொள்ள நினைப்பது இதில் தான், மொத்த பௌத்த மதமும் ஒரு நாகரிகத்தில் இருந்து மற்றொன்றிற்கு செல்லும் முழு பணிகள்” அது என்று சொல்லிக்கொண்டேன். என்னுடைய நிலையில் இருந்து விலகாமலும் மாறாமலும் எஞ்சிய வாழ்க்கை முழுவதும் அதையே பின்பற்றத்தொடங்கினேன்.

ப்ரின்ஸ்டன்: வேதியியலில் இருந்து சீன மொழி வரையிலான, சிந்தனை மற்றும் சித்தாந்தம்

ஆசிய படிப்புகள் துறையில் அதிகமான மாணவர்களை ஈர்க்க ஒரு புதிய திட்டம் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. அது வியட்நாம் போர் நடந்த சமயம் என்பதால், அங்கு சில மாணவர்கள் மட்டுமே இருந்தனர்; மேலும் மிகக் குறைந்த அளவிலான அமெரிக்கர்கள் மட்டுமே ஆசிய மொழிகள் தெரிந்து வைத்திருந்தனர். எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது, ஏனெனில் சீன மொழி கற்கும் வாய்ப்பு கிடைத்தது, எனவே நான் விண்ணப்பித்தேன், என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 18 வயதில், நான் பிரின்ஸ்டனில் சீன மொழி படிக்கத் தொடங்கினேன், என்னுடைய இரண்டு ஆண்டு இளங்கலைப் படிப்பை படித்து முடித்தேன். 

சீன சித்தாந்தத்தை பௌத்தம் எவ்வாறு ஆக்கிரமித்திருக்கிறது என்ற விதம் எனக்கு எப்போதும் ஆர்வத்தைத் தந்தது, அதே போன்று பௌத்தம் எவ்வாறு சீன தத்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தை தந்திருக்கிறது என்பதும் எனக்குப் பிடித்திருந்தது. எனவே நான் சீன சிந்தனை, தத்துவம், வரலாறு, பௌத்தம் உள்ளிட்டவற்றைப் பயின்றேன். கோடை காலத்தில் நான் மொழிகள் பற்றிய கலந்தாய்வுகள், பள்ளியின் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டேன்: ஓராண்டு ஹார்வேர்டில், பண்டைகால சீன மொழியை கற்க ஸ்டான்போர்டில் ஓராண்டு, பட்டம் பெற்ற பிறகு, கோடைகாலம் தைவனில் எனச் சென்றது. முதுகலைப் பட்டத்திற்கு நான் மீண்டும் ஹார்வேர்டு சென்றேன். சீன பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஏற்கனவே ஜப்பானிய மொழியும் படிக்கத் தொடங்கி இருந்தேன். அந்த சமயத்தில் தூர கிழக்கத்திய மொழிகளில் முதுகலைப்பட்டம் பெற்றேன், ஏற்கனவே நான் சீன மொழிகள் பற்றியும் விரிவாக பயின்றிருந்தேன்.

சீனம், சமஸ்கிருதம் மற்றும் திபெத்தியம் : ஒப்பீட்டுப் படிப்பு

பௌத்த மேம்பாட்டில் என்னென்ன தாக்கங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய, நான் இந்தியா மற்றும் சீனா என இரண்டு பக்கத்தையும் அறிந்த கொள்ள விரும்பினேன், எனவே நான் சமஸ்கிருதம் படிக்கத் தொடங்கினேன். சமஸ்கிருதம் மற்றும் இந்தியப் படிப்புகள் மற்றும் தூர கிழக்கத்திய மொழிகள் துறைகள்: என இரண்டு துறைகளில் இருந்தும் ஒருங்கிணைந்த முனைவர் பட்டத்தைப்பெற்றேன். சமஸ்கிருதம் மற்றும் இந்தியப்படிப்புகள் திபெத்தியத்திய தத்துவத்தின் சொல்வன்மை மற்றும் பௌத்த வரலாற்றிற்கு வித்திட்டது.

எனது அறிவுதாகத்தின் மிகுதி காரணமாக நான் தத்துவம் மற்றும் உளவியலை கூடுதல் பாடங்களாக எடுத்தேன், எல்லா காலங்களிலும் என்னுடைய அறிவியல் ஆர்வமும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்படியாக நான் என்னுடைய படிப்பை முடித்து, மொழிபெயர்ப்புகளில் ஒப்பிடப்பட்டிருக்கும் பொதுவான பௌத்த வழிமுறைகளைக் கற்றுக்கொண்டேன். சமஸ்கிருத நூல்களில் பௌத்தம் குறிப்பிட்டிருப்பதை பார்த்து விட்டு பின்னர் சீனம் மற்றும் திபெத்தியத்தில் அது எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதே போன்று வரலாற்று வளர்ச்சிக்கான எண்ணங்கள் மற்றும் பொது வரலாற்றோடு அது எவ்வாறு உள்ளூர தொடர்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். இந்த வகையான பயிற்சியானது என்னுடைய வாழ்நாள் முழுமைக்கும் மிகவும் உதவியாக இருந்தது.

ஹார்வேர்ட் முதல் வாழ்வியல் பாரம்பரியம் வரை

என்னுடைய இந்தப்பயணத்தில் நான் கற்ற தத்துவங்கள் மற்றும் ஆசியாவில் பரவி இருக்கும் மதங்கள் குறிப்பாக பௌத்தத்தின் பல்வேறு வகைகள், இந்துத்துவம், சீன தத்துவம் மற்றும் கன்பூசஸ் நெறி பற்றி படித்தது தொடர்பாக சிந்தித்து செயல்படவே நான் எப்போதும் விரும்பினேன். ஆனால் வாழ்வியல் பாரம்பரியத்தை தொடர்புபடுத்தும் நிதர்சன வாய்ப்புகள் எதுவும் கிடைக்கப்படவில்லை; தொன்மையான எகிப்திய மதங்கள் பற்றி படிப்பனவாகவையாகவே இருந்தன. ஆனால் என்னுடைய விருப்பம், அதனை விட உச்சம் தொட வேண்டும் என்று இருந்தது.

1967ல் நான் திபெத்தியம் பயிலத் தொடங்கிய போது, ராபர்ட் தர்மன் ஹார்வேர்டு திரும்பினார், நாங்கள் இருவரும் பள்ளித்தோழர்கள். தர்மன் கெஷ்வேங்யல்லின் நெருங்கிய மாணவர், அவருடன் சில காலம் வசித்திருக்கிறார். ஓராண்டு துறவியாக இருந்தவர், இந்தியாவின் தர்மசாலாவிற்கு படிக்கச் சென்றார். தர்மன், கெஷ்வேங்யல் பற்றி எனக்கு அறிமுகம் செய்ததோடு, திபெத்தியர்கள் மற்றும் புனிதர் தலாய் லாமா இருக்கும் தர்மசாலாவில் படிப்பதற்கான வாய்ப்புகள் பற்றியும் எனக்கு தெரிவித்தார். நான் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றபோதெல்லாம் நியூஜெர்சியில் இருந்த மடாலயத்திற்குச் சென்று கெஷ் வேங்யலை சந்திக்கத் தொடங்கினேன், அப்போது முதல் வாழ்வியல் பாரம்பரியத்திற்கு பௌத்தம் என்ன செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். கெஷ்வேங்யலை பல முறை சந்தித்திருந்தாலும், அவருடன் வசிக்கவோ, சேர்ந்து படிக்கவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவரால் ஈர்க்கப்பட்டதால் இந்தியாவிற்கு சென்று படிப்பைத் தொடர விரும்பினேன், எனவே நான் புல்பிரைட் பெல்லோஷிப் மூலம் இந்தியாவில் எனது ஆய்வு படிப்பை மேற்கொண்டேன்.

1969 ஆம் ஆண்டு என்னுடைய 24வது வயதில் இந்தியா வந்தேன், அங்கு புனிதர் தலாய் லாமாவை சந்தித்து திபெத்திய சமூகத்தில் முற்றிலுமாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அது வரையில் வாழ்க்கை என்னை ஒரு கன்வேயர் பெல்ட் போல முன்நடத்திச் சென்று கொண்டிருந்தது – நியூஜெர்சியின் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து ப்ரின்ஸ்டன் மற்றும் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் முழு அறிஞராகி தற்போது தலாய் லாமா மற்றும் மிகப்பெரிய திபெத்திய குருக்களைச் சுற்றி இருக்கிறேன். திபெத்திய பௌத்தம் பற்றி நான் படித்தவை அனைத்து உயிர்ப்புடன் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. அதே போன்று இங்கிருக்கும் மக்களும் பௌத்த போதனைகளின் உண்மையான அர்த்தங்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கின்றனர். இங்கிருப்பது அவர்களிடம் இருந்து கற்று கொள்வதற்கான பொன்னான வாய்ப்பாக அமைந்தது.

டல்ஹவுசியில் திபெத்தியம் பேசக் கற்றுக்கொண்டது

நான் இந்தியா வந்த போது, எனக்கு திபெத்தியம் பேசத்தெரியாது. ஹார்வேர்டில் இருந்த என்னுடைய பேராசிரியர் நகடோமிக்கு அந்த மொழியில் வார்த்தைகளை எப்படி உச்சரிப்பது என்று கூட தெரியாது. அவர் ஒரு ஜப்பானியர், நாங்கள் இருவரும் சேர்ந்து திபெத்திய மொழியை ஜப்பானிய இலக்கண உதவியோடு கற்றுக்கொண்டோம், ஏனெனில் அந்த காலகட்டத்தில் திபெத்திய இலக்கணம் லத்தின் மொழியோடு ஒப்பிடப்பட்டு விளக்கி எழுதப்பட்ட நூல் மட்டுமே கிடைத்தது! லத்தின் மற்றும் திபெத்தியம் இரண்டிற்கும் பொதுவானது ஒன்று இல்லை, ஆனால் ஜப்பானிய இலக்கணம் திபெத்தியத்திற்கு சற்று நெருக்கமானதாக இருந்தது.  

நான் பேசும் மொழியாக திபெத்தியத்தை கற்க நினைத்தேன், ஆனால் அது தொடர்பான நூல்கள் கிடைக்கவில்லை. பின்னர் கெஷ் வேங்யலின் தொடர்பு மூலம், இரண்டு இளம் துல்குகளுடன் (மறுபிறவி லாமாக்கள்), ஷர்பா மற்றும் கம்லுங் ரின்போச்சின் தொடர்பு கிடைத்தது, அவர்கள் கெஷ்க வேங்யலின் மடத்தில் சில ஆண்டுகள் தங்கி இருந்தவர்கள் மற்றும் நன்கு ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்களும் கூட. திபெத்திய அகதிகள் குடியேறி இருந்த டல்ஹவுசியில் அவர்கள் வசித்தார்கள். மலையில் இருந்த சோனம் நோர்பு என்ற சிறிய வீட்டில் நான் திபெத்திய துறவியுடன் வசிக்க அவர்கள் ஏற்பாடுகளைச் செய்து தந்தனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது, எனக்கு திபெத்தியம் பேசத்தெரியாது ஆனாலும் முடிந்த வரை தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு நாங்கள் இருவரும் ஒன்றாக வசித்தோம். இங்கு தான் என்னுடைய பௌத்த மற்றும் இதர பயிற்சிகள் உள்நுழைந்தன. நான் என்னை போர்னியோ அல்லது ஆப்ரிக்காவில் இருக்கும் மானுடவியலாளர் போல நினைத்துக்கொண்டு, மற்றொரு மொழியை தெரிய விழைந்தேன்.

நான் கற்ற ஆசிய மொழிகள் திபெத்திய மொழியின் ரீங்காரத்தைக் கேட்க மிகவும் உதவியாக இருந்தன. நான் சோனமை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, கீழே எதையாவது எழுதிவைப்பேன் (ஏனெனில் எனக்கு எப்படி திபெத்தியம் எழுத வேண்டும் என்று தெரியும்), அவர் அதனை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என எனக்கு கற்றுத் தருவார். நாங்கள் இருவரும் இப்படித் தான் சேர்ந்து பயணித்தோம், அதே போன்று வேறு சிலருடன் மொழிப்பாடங்களையும் நான் கற்றுக்கொண்டேன்.  இறுதியில் இரண்டு இளம் ரின்போச்கள் அவர்களுடைய ஆசிரியர் கெஷ் கெவேங் தர்க்யேயிடம் படிக்க எனக்கு பரிந்துரைத்தனர்.

மாட்டுக்கொட்டகையில் படித்த லாம் – ரிம்

ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்காகவே நான் இந்தியா வந்தேன், பரந்து விரிந்த தந்திரத்தின் தலைப்பான குஹ்யசமஜா பற்றியும் ஆராயத் திட்டமிட்டிருந்தேன்,புனிதர் தலாய் லாமாவின் ஆசிரியர்களில் ஒருவரான செர்காங் ரின்போச்சிடம் இந்த ஆராய்ச்சி குறித்து ‘அறிவுரை கேட்ட போது, இது அபத்தமானது, நான் இதனை செய்வதற்கு இன்னும் முழுவதும் தயாராகவில்லை என்றும் அவர் தெரிவித்தார். புனிதர் தலாய்லாமாவின் இளநிலை பயிற்சியாளரான த்ரிஜங் ரின்போச், இந்த பாதைக்கான தரப்படுத்தப்பட்ட நிலைகளான லாம் – ரிம்மை முதலில் படிக்கலாம் என்று ஆலோசனைக் கூறினார். அந்த சமயத்தில் அது தொடர்பாக எந்த மொழிபெயர்ப்பு இல்லை, எனவே எனக்கு அது முற்றிலும் புதிதாக இருந்தது. அந்த காலகட்டத்தில் திபெத்திய பௌத்தம் பற்றி கிடைத்த புத்தகங்கள் என்றால் அலெக்சாண்ட்ரா டாவிட்டின் – நீல், ஈவான்ஸ் –வென்ட்ஸ், லாமா கோவிந்தா உள்ளிட்ட சில மட்டுமே இருந்தன. கெஷ் கெவாங்க் தர்க்யேயுடன் சேர்ந்து நான் வாய்மொழியாக லாம் –ரிம் பாரம்பரியத்தை படித்தேன், அதன் பிறகு அதனை அடிப்படையாக வைத்து என்னுடைய ஆய்வை தொடங்கினேன்.

நான் டல்ஹவுசியில் ஒரு பழமையான வாழ்க்கை வாழ்ந்தேன், அந்த வீட்டில் தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி கூட கிடையாது. கெஷ் தர்க்யேய் என்னைவிட மிகவும் பழமையான வாழ்க்கை வாழ்ந்தார், அவர் தங்கி இருந்த இடத்தில் அதற்கு முன்னர் அந்த கொட்டகையில் பசுக்கள் கட்டப்பட்டிருந்தன. அவருடைய படுக்கைக்கு அதுவே போதுமான அறையாக இருந்தது, அந்த படுக்கைக்கு முன்னர் இருந்த சிறிய இடத்தில் அவருடைய மூன்று இளம் ரின்போச் சீடர்களும் நானும் மண்தரையில் அமர்ந்து அவரிடம் படித்தோம். ஜடோ ரின்போச், கம்லங் ரின்போச்சும் நானும் ஷர்பாவும் சேர்ந்தோம்; அதன் பிறகு அவர் புனிதர் தலாய் லாமாவின் நம்க்யல் மடாலயத்தில் மடாதிபதியாகிவிட்டார். பூச்சிகளும், ஈக்களும் நிறைந்திருந்த மாட்டுத்தொழுவத்தில் தான் நாங்கள் படித்தோம்.

உண்மையிலேயே அது மிகவும் ஆச்சரியமான காலகட்டம், ஏனெனில் புதிது புதிதாக பல விஷயங்கள் தொடங்கி இருந்தன. புனிதர் தலாய் லாமா நாங்கள் என்ன செய்கிறோம், எங்களுடைய படிப்பு எப்படி போகிறது என எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டினார், அதன் பிறகு சிறிய சிறிய வார்த்தைகளை அவருக்காக மொழிபெயர்க்குமாறு எங்களிடம் அளித்தார். தர்மசாலாவில் திபெத்திய பணிகள் & ஆர்கைவ்ஸ் நூலகத்தை புனிதர் தலாய் லாமா கட்டிய போது, அவர் மேற்கத்தியர்களுக்காக கெஷ் தர்க்யேயை ஆசிரியராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். சர்பா, கம்லங் ரின்போச்களும் எனக்கு மொழிபெயர்ப்புக்காக உதவி செய்தனர். நானும் கெஷ்க்கு உதவி செய்யலாமா என்று புனிதரிடம் கேட்டேன், “நிச்சயமாக என்று சொன்னவர், முதலில் அமெரிக்காவிற்கு சென்று, ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்துவிட்டு, பட்டம் பெற்று திரும்பி வா” என்று தெரிவித்தார்.  

திபெத்திய சமூகத்தோடு பொருந்திப்போதல் : மொழிபெயர்ப்பாளராக மாறியது

இந்தியாவில் என்னுடைய தொடக்க காலத்தில், திபெத்திய சமூகத்தோடு என்னை பொருத்திக்கொள்ள முயற்சித்தேன், இதற்கு ஒரு பாரம்பரிய முறை இருக்கிறது அதோடு எனக்கு தொடர்பு இருப்பதாகக் கருதினேன்; எனவே தான் மொழிபெயர்ப்பாளரானேன். என்னுடைய சொந்த பௌத்த பயிற்சிகளை தொடங்கவே எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது, எனவே 1970 தொடக்கத்தில், நான் செயல்முறையில் பௌத்தனாக மாறினேன், தியானப்பயிற்சி செய்யத் தொடங்கினேன். அப்போது முதல் நான் தினந்தோறும் தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

மொழிபெயர்ப்பாளர் பணியில், மொழித்திறன் மட்டுமின்றி பௌத்தம் தொடர்பான ஆழமான புரிதலும் இருக்க வேண்டும், அதாவது தியானம் மற்றம் அதனை நிதர்சன வாழ்க்கைக்கு ஏற்ற பயிற்சி போதனைகளாகப் பொருத்துததல். மனதின் வெவ்வேறு நிலைகளை விவரிக்கும் தொழில்நுட்ப அம்சங்களையோ அல்லது தியானத்தின் வெவ்வேறு அனுபவங்களையோ உண்மையில் நீங்களாக உணராமல் அதனை மொழிபெயர்ப்பதென்பது முடியாத காரியம். பயன்பாட்டில் இருக்கும் மொழிபெயர்ப்புகள் அனைத்தும் சமயப்பரப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்டவை, அவர்களின் முதன்மையான ஆர்வமென்பது பைபிளை திபெத்தியத்திற்கு மொழிபெயர்த்தல் மற்றும் பௌத்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் பற்றி சிறிதளவு விளக்கம் என்றளவிலேயே நின்றுவிடும். எனவே தொடக்க காலத்தில், பௌத்த நடைமுறையை என்னுடைய பௌத்தவியல் பயிற்சியோடு நான் இணைத்தேன். 

கடைசியாக 1971ஆம் ஆண்டு நான் ஹார்வேர்டுக்கு திரும்பிச் சென்றேன், சில மாதங்களுக்குப் பிறகு, என்னுடைய ஆய்வை சமர்ப்பித்து, 1972ல் என்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றேன். என்னுடைய பேராசிரியர் மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் எனக்கு சிறந்த ஆசிரியர் பணிக்கு ஏற்பாடு செய்தார், பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக எப்போதுமே இருந்த போதிலும், நான் அந்த வாய்ப்பை மறுத்தேன். என்னுடைய எஞ்சிய காலத்தை பௌத்தத்தின் அர்த்தம் பற்றி ஆரூடங்கள் மட்டுமே சொல்லும் மக்களோடு செலவிட நான் விரும்பவில்லை. அதற்கு பதிலாக, அதன் உண்மையான அர்த்தம் புரிந்தவர்களோடு இருக்க விரும்பினேன், அங்கு படித்து கற்று உண்மையான பாரம்பரியத்தை தெரிந்து கொண்டு, என்னுடைய சிந்தனையையும் பார்வையையும் சொந்த பௌத்தவியல் பயிற்சியோடு சேர்த்துக் கொள்ள விரும்புவதாக அவரிடம் கூறினேன். சொல்லப்போனால் என்னுடைய இந்த முடிவு முட்டாள்தனமானது என்றார் என்னுடைய பேராசிரியர், எனினும் நான் இந்தியா திரும்பினேன். இங்கு வாழ்வதில் செலவு குறைவு என்பதால் அது சாத்தியம்.

எனது புதிய இந்திய வாழ்க்கை

நான் தர்மசாலாவிற்கு சென்று கெஷ் கெவாங் தர்க்யேய், ஷர்பா மற்றும் கம்லங் ரின்போச்களுடன் பணியாற்றத் தொடங்கினேன். டல்ஹவுசியில் இருந்ததைவிட இந்த முறை வசித்த இடம் சிறிய குடில், இங்கும் தண்ணீரோ அல்லது கழிப்பறையோ கிடையாது, ஜன்னலில் கண்ணாடி கூட கிடையாது. சோனம் நோர்பு என்ற திபெத்திய துறவியும் என்னுடன் சேர்ந்து தங்கி இருந்தார். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் நான் வசித்த 29 ஆண்டுகளில் அந்த சிறிய எளிமையான குடில் தான் என்னுடைய வீடு.

 அந்த சமயத்தில் நான் புனிதர் தலாய் லாமாவின் நூலகத்தில் மொழிபெயர்ப்பு பணியகத்தை நிறுவ உதவியதோடு, என்னுடைய படிப்பையும் தொடர்ந்தேன். என்னுடைய பௌத்தவியல் பின்புலம் பௌத்த போதனைகளை மேலும் கற்பதற்கு உண்மையில் உறுதுணையாக இருந்தது. எனக்கு பல்வேறு வரலாறு மற்றும் பலவிதமான நூல்களின் பெயர்கள் தெரியும், மேலும் உண்மையான கருத்தியலை கற்பிப்பவர்களும் என்னுடன் இருந்தனர், எனவே இரண்டையும் சேர்த்து எளிதில் என்னால் செயலாற்ற முடிந்தது. நான்கு திபெத்திய பாரம்பரியத்தையும் நான் கற்க புனிதர் தலாய் லாமா எனக்கு ஊக்கம் தந்தார், எனினும் முதன்மையாக நான் கெலுக்பா படித்திருந்தேன், எனவே திபெத்திய பௌத்தத்தின் மீதான முழு நம்பிக்கை பற்றிய மிகப்பெரிய எண்ணோட்டம் இருந்தது. அது மிகவும் ஆச்சரியமிக்க காலம், ஏனெனில் அந்த நாட்களில், திபெத்திய பௌத்த போதனைகளில் முழு அளவில் என்ன கருத்தாக்கம் இருக்கிறது என்ற தெளிவு மக்கள் யாரிடமும் இல்லை.

செர்காங் ரின்போச்சுடன் நினைவுத்திறன் மற்றும் பணிவுக்கான பயிற்சி

1974ஆம் ஆண்டில் புனிதர் தலாய் லாமாவின் ஆசிரியர்களில் ஒருவரான செர்காங் ரின்போச்சுடன் நான் படிக்கத் தொடங்கினேன், நான் 1969லேயே சந்தித்த முதல் நபர் அவர். தர்மசாலாவில் சந்தித்ததில் இருந்தே, எனக்கு அவருடைய மொழிபெயர்ப்பாளராவதற்கான கர்மாவின் தொடர்பு இருப்பதாக அவர் கருதினார், அதே போன்று தான் புனிதர் தலாய் லாமாவிற்கும், எனவே அவர் என்னை இதற்காக பயிற்றுவித்தார். ஏற்கனவே நான் புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன், இந்த முறை பேச்சுகளையும், போதனைகளையும் மொழி பெயர்ப்பதற்கான பயிற்சி. அவர் என்னை அருகில் அமர வைத்துக்கொண்டு பலதரப்பட்ட மக்களை எவ்வாறு கையாள்கிறார் என்பதை கண்காணிக்கப் பணித்தார். எனக்கு நினைவுத்திறன் பயிற்சியும் அளித்தார்: நான் அவர் முன் இருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் திடீரென நிறுத்தி, “நான் இப்போது சொன்ன வார்த்தையை மீண்டும் சொல்” என்று கேட்பார், அல்லது “உனக்குக் கூறியவற்றை வார்த்தைக்கு வார்த்தை திரும்பச்சொல்” என்றும் கேட்பார்.

அடுத்த ஆண்டு முதலே அவர் மற்ற மேற்கத்தியர்களுக்கு அளிக்கும் போதனைகளை நான் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அவர் எப்போதுமே எனக்காக எதையும் கற்றுத்தந்ததில்லை, மற்றவர்களுக்கு மொழிபெயர்ப்பதன் மூலம் கற்றுக்கொண்டதாகவே எப்போதும் அவை இருந்தன – காலச்சக்கரம் தவிர மற்றவற்றை இப்படியே கற்றேன். காலச்சக்கரம் பற்றி அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் கற்பித்தார்; எனக்கு அதனுடன் ஆழ்ந்த தொடர்பு இருப்பதை அவர் கண்டார். எந்த போதனைகளின் போதும் நான் குறிப்பெடுக்க அவர் அனுமதித்தவில்லை, மாறாக அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு அதன் பின்னர் எழுதி வைப்பேன். பாடத்திற்குப் பிறகு குறிப்புகளை எழுதவும் அவர் என்னை அனுமதிக்க மாட்டார். அதற்குப் பதிலாக செய்வதற்கு வேறு பணிகளைத் தருவார், அதன் பின்னர் எல்லாப் பணிகளையும் முடித்து விட்டு இரவு நேரத்தில் தான் நான் அனைத்தையும் எழுதுவேன். 

கெஷ் வேங்யல் உள்ளிட்ட அவருடைய நெருங்கிய மாணவர்களுடன் இருக்கும் போது செர்காங் ரின்போச் எப்போதுமே என்னை திட்டுவார். ஒரு முறை நான் அவருக்கு மொழிபெயர்ப்பு செய்யும் போது, அவர் கூறிய வார்த்தைக்கான அர்த்தம் என்ன அது எனக்கு புரியவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் என்னை திட்டியதோடு, “ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே நான் இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை உனக்கு விவரித்துவிட்டேன், உனக்கு ஏன் நினைவில் இல்லை?” என்று கேட்டது, எனக்கு நினைவில் இருக்கிறது.

எனக்கு அவர் வைத்திருந்த பிடித்தமான பெயர் “முட்டாள்” நான் அவ்வாறு செயல்படும் போது அவர் அந்தப்பெயரை வைத்து சுட்டிக்காட்டத் தவறியதில்லை, குறிப்பாக மற்றவர்கள் முன்னிலையில். அது ஒரு சிறப்பான பயிற்சி. ஒரு முறை நான் புனிதர் தலாய் லாமாவிற்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது, ஏறத்தாழ 10,000 பார்வையாளர்கள் இருந்தனர், புனிதர் என்னை தடுத்து நிறுத்தியதோடு, சிரித்துக்கொண்டே “அவர் ஒரு தவறு செய்து விட்டதாகச் சொன்னது” எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது.  எல்லா நேரத்திலும் முட்டாள் என்று அழைப்படுவதின் பயிற்சியால் ஒரு கம்பளத்தின் கீழ் ஓடி ஒளிந்து கொண்டிருக்காமல் நான் மொழிபெயர்ப்பாளராகத் தொடர முடிந்தது. மொழிபெயர்ப்பு செய்ய வியத்தகு கவனமும், அளவில்லாத நினைவுத்திறனும் தேவை, எனவே பௌத்தவியல் பயிற்சி மட்டுமின்றி பாரம்பரிய திபெத்திய பயிற்சியும் பெறுவதற்கான வாய்ப்பு எனக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்தது. 

செர்காங் ரின்போச்சுடன் நான் 9 ஆண்டுகள் மிகத் தீவிரமாக பயிற்சி எடுத்தேன். நான் அவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தேன், அவருடைய கடிதங்கள், பயணங்களில் உதவி செய்திருக்கிறேன், இந்த ஒட்டு மொத்த பணிகளில் அவர் எனக்கு ஒன்றோ இரண்டு முறையோ தான் “நன்றி” என்று கூறி இருக்கிறார். இதுவும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, அவர் எப்போதும் சொல்வது போல, நான் என்ன எதிர்பார்க்கிறேன்? அவர் என் தலையில் வருடி கொடுக்க வேண்டும் என்றா அதன் பின்னர் அவருக்காக வாலாட்டிக்கொண்டிருக்கும் நாய் போல குழைவதையா? ஒருவரின் மொழிபெயர்ப்பு தேவைக்கான ஊக்கம் என்பது மற்றவர்களுக்கு பலன் தர வேண்டும், “நன்றி” என்ற பாராட்டினைப் பெறுவதாக இருக்கக் கூடாது. ஆம், என்னுடைய எல்லா பௌத்த தியானமும் பயிற்சியும், நிச்சயமாக அத்தியாவசியமானவை. கோபப்படாமலும், கைவிடாமலும் பாரம்பரிய பயிற்சி செயல்முறையைத் தொடர்வதற்கு அவை அவசியம்.

கலாச்சாரங்களுக்கு மத்தியில் பாலம் அமைக்க உதவுதல்

செர்காங் ரின்போச் 1983ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அதன் பிறகு உலக நாடுகளுக்கு பயணித்து விரிவுரை நிகழ்த்த எனக்கு அழைப்புகள் வந்தன, ஏனெனில் இந்த இடங்களுக்கெல்லாம் நான் ஏற்கனவே ரின்போச்சின் மொழிபெய்ர்ப்பாளராக பயணித்திருக்கிறேன். அந்த காலகட்டத்தில் நான் ஏற்கனவே சில சமயங்களில் புனிதர் தலாய் லாமாவிற்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டிருக்கிறேன். ஆனால் மொழிபெயர்ப்பு என்பது வெறும் வார்த்தைகளல்ல, மாறாக எண்ணங்களை மொழிபெயர்த்து விவரித்தலாகும். தொடக்க கூட்டங்களில் புனிதர் மேற்கத்திய உளவியலாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் மதத் தலைவர்களை சந்திப்பார், எனக்கு அப்போது தரப்பட்ட பணியானது அவர்களின் எண்ணங்களை விவரிக்க வேண்டும் வார்த்தைகளையல்ல (ஏனெனில் அவர்களின் பெரும்பாலான வார்த்தைகள் திபெத்திய மொழியில் இல்லை), மேலும் அவர்களுக்கிடையில் கலாச்சார பாலத்தை உருவாக்க வேண்டும். இது தான் நான் சிறு வயது முதலே எப்போதும் ஆர்வமாக இருந்த பணி, பலவிதமான கலாச்சாரங்களுக்கு இடையில் எவ்வாறு பௌத்த போதனைகளைக் கொண்டு பாலம் அமைப்பது என்பதே அது. அந்த வகையிலான பிணைப்பை ஏற்படுத்த, இரண்டு கலாச்சாரங்கள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும், மக்கள் என்ன சிந்திக்கிறார்கள், அவர்களின் வாழ்வில் என்ன தேவை இருக்கிறது என்பது தெரிந்திருக்க வேண்டும். திபெத்தியர்களுடன் இவ்வளவு காலம் வாழ்ந்ததால் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆழம் குறித்த பரிச்சயத்தைப் பெறும் மிகப்பெரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பௌத்த மதத்தைப் பரப்புவதில் இது மிகவும் அத்தியாவசியமானது.  

புனிதர் தலாய் லாமாவிற்காக பல்வேறு சர்வதேச திட்டங்களை முன்னெடுக்க எனக்கு பணிக்கப்பட்டது. அதில் மிக முக்கியமான ஒன்று அவரின் புனிதத்தன்மை மற்றும் திபெத்தியர்களை உலகம் அறிய முயற்சிப்பது. அவர்களுக்கு கடவுச்சீட்டுகள் கிடையாது, அகதிகளுக்கான அடையாளங்கள் மட்டுமே இருந்தது, எனவே அழைப்பு விடுக்காவிட்டால் அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்வதற்கான விசா கிடைக்காது. அவர்களுக்கு சில இடங்களில் மட்டுமே தொடர்பு இருந்தது. அப்போது தான் என்னுடைய ஹார்வேர்டு முனைவர் பட்டம் மிகவும் உதவிசெய்தது, ஏனெனில் நான் அவர்களை உலகம் முழுவதும் அழைத்துச் சென்று பல்கலைக்கழகங்களில் சிறப்பு விருந்தினராக விரிவுரை செய்ய அழைப்பு விடுக்க முடியும். இந்த வகையில் சிந்தித்து வரும்காலங்களில் திபெத்தியர்களை முன்நடத்தும் வகையில் தொடர்புகளை ஏற்படுத்தினேன், அதே போன்று புனிதரும் அயல் நாடுகளுக்கு அழைக்கப்பட்டார், உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் அவரின் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. 1985ஆம் ஆண்டில் முன்னாள் கம்யூனிச நாடுகள் அனைத்திற்கும் நான் செல்லத் தொடங்கினேன், பெரும்பாலான லத்தின் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆஃப்ரிக்காவின் பெருவாரியான பகுதிகளும் இதில் அடக்கம். அதன் பிறகு நான் மத்திய கிழக்குப் பகுதிக்குச் சென்று பௌத்தர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான பயணத்தைத் தொடங்கினேன்.

இந்த எல்லாப் பயணங்களின் போதும் என்னுடைய செயல்பாடுகளை அறிக்கைகளாக எழுதி புனிதருக்கு அனுப்பி வைத்தேன், எனவே நான் சுற்றுப்பயணம் செய்யும் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றி சிறிதேனும் அவர் தெரிந்து கொண்டார். மீண்டும் என்னுடைய ஹார்வேர்டு பின்புலத்தால் பல நாடுகளில் இருக்கும் பலவிதமான மதத்தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மேலும் அவர்களின் மதங்கள் பற்றியும் அதிகம் கற்றுக்கொண்டேன், எனவே புனிதர் அந்த நாடுகளுக்குச் செல்லும் போது, அவர்களின் நம்பிக்கை பற்றிய புரிதல் இருந்தது. எல்லா பௌத்தவியல் மற்றும் விஞ்ஞான பயிற்சியும் எது முக்கியம், அதனை எப்படி தொகுப்பது என்று அறிய எனக்கு உதவியது, அந்த வழியிலேயே அதனை வெளிப்படுத்தவும் மிகவும் உதவியாக இருந்தது.

நான் பல வகையான திட்டங்களில் ஈடுபட்டிருந்தேன். அதில் மிக பிடித்தமானது, சோவியத் யூனியனின் சுகாதாரத்துறை அமைச்சம் ஒருங்கிணைத்த செர்னோபைலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திபெத்திய மருத்துகளை வழங்கியது. திபெத்திய மருந்துகள் மிகவும் நிவாரணம் தரக் கூடியவை என்பது நிரூபிக்கப்பட்டதாக இருந்தாலும், சோவியத் யூனியன் பிளவுபட்ட போது, ரஷ்யா, பெலாரஸ் மற்றும் உக்ரேன் இந்தத் திட்டத்தில் ஒத்துழைக்க மறுத்ததோடு உடலளவிலும், பொருளாதார ரீதியாகவும் எங்களால் செய்ய முடியாத மூன்று தனித்தனியான திட்டங்களை செயல்படுத்த வற்புறுத்தினார்கள். அதுவே அந்த திட்டத்தின் சோகமான முடிவானது.

மற்றொரு உணர்ச்சிகரமான திட்டம், பகுலா ரின்போச்சின் பதிப்பக புத்தகங்களை நவீன மங்கோலியர்களுக்காக மொழிபெயர்த்து ஒருங்கிணைத்தல், பௌத்தத்தை அங்கு பரப்புவதற்காக உதவுதல். பகுலா ரின்போச் அந்த சமயத்தில் மங்கோலியாவிற்கான இந்திய தூதராக இருந்தார்.

மேற்கிற்கு திரும்புதல்

உலகம் முழுவதிலும் 70 நாடுகளுக்கு பயணித்து பௌத்தம் கற்பித்திருக்கிறேன். இவையெல்லாவற்றோடும், தினசரி தியான பயிற்சியையும் நான் செய்துவந்தேன், என்னுடைய பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு அவை உதவியாக இருந்தன. காலங்கள் கரைந்தோடின, பல இடங்களுக்கு கற்பிக்கவும், விரிவுரை செய்யவும் நான் அழைக்கப்பட்டேன். விரிவுரை பயணங்கள் நீண்டு கொண்டே இருந்தன: அதில் நீண்ட பயணம் 15 மாதங்கள் நடந்தது – ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு நகரங்களுக்குப் பயணித்தேன். இந்த எல்லா பயணத்திலும், பௌத்த தியான பயிற்சியானது நிலையாக இருப்பதற்கான சக்தியை எனக்குத் தந்தது குறிப்பாக நான் தனிமையில் பயணித்த போது பேருதவியாக இருந்தது.

இத்தனை ஆண்டுகளில் நான் சில புத்தகங்களையும் எழுதினேன், ஒரு குறிப்பிட்ட புள்ளியில், இந்தியாவில் இருந்து கொண்டு என்னுடைய ஸ்னோலைன் பதிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். எனவே நான் இணையதளம் மூலமாக இதனை சாத்தியமாக்க விரும்பினேன், இந்தியாவில் இருந்து கொண்டே இதனை செய்வதும் கடினமாக இருந்தது. எனவே 1998ஆம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்து மேற்கிற்கு சென்றேன். பல இடங்களில் இருந்து எனக்கு அழைப்பு வந்த போதும், நான் ஜெர்மனியின் பெர்லினில் குடியேற முடிவு செய்தேன். எனக்கு ஏற்கனவே ஜெர்மன் தெரியும் என்பதால் அது பெரிய பிரச்னையில்லை, மேலும் அங்கு எனக்கு மேலும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அது தான் எனக்கு மிகவும் முக்கியம்; நான் எந்த ஒரு அமைப்போடு இணைந்திருப்பதை விரும்பவில்லை. பெர்லினும் எனக்கு ஏற்ற இடமாகத் தோன்றியது ஏனெனில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளுக்கு தொடர்ந்து பயணம் செய்யவும் எளிதாக இருக்கும் என்று நினைத்தேன், நான் அடிக்கடி இந்த இடங்களில் போதனைகள் செய்திருக்கிறேன், குறிப்பாக எனக்கு இந்த இடத்தோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாக உணர்ந்தேன்.  

30,000 வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகள், எழுதி முடிக்கப்படாத என்னுடைய சில புத்தகங்கள், அவற்றிற்கான படிப்பு குறிப்புகள், நான் படித்த நூல்களின் மொழிபெயர்ப்புகள், என்னுடைய சொந்த விரிவுரைக்கான சில எழுதப்பட்ட நகல்கள், என்னுடைய ஆசிரியர்களின் விரிவுரை மொழிபெயர்ப்பு உள்ளிட்டவற்றுடன் மேற்கிற்கு வந்தடைந்தேன். மேலும் என்னிடம் புனிதர் தலாய் லாமா, அவருடைய பிரதான ஆசிரியர்கள் மற்றும் கெஷ் தர்க்யேய் உள்ளிட்டோரின் போதனைகளின் குறிப்புகளும் குவிந்திருந்தன. நான் உயிரிழக்கும் போது அவையாவும் குப்பையில் வீசப்படுபவையாக இருக்கக் கூடாது என்பதில் நான் மிகவும் அக்கறையுடன் இருந்தேன்.

தி பெர்சின் ஆர்கைவ்ஸ்

யாருமே நம்ப முடியாத மதிப்புமிக்க நிலையில் நான் இருந்தேன், அதுமட்டுமின்றி கடைசி தலைமுறையைச் சேர்ந்த மிகப்பெரிய லாமாக்களுடன் நீண்ட காலம் படித்தவன் என்ற தனித்துவமும் எனக்கு இருக்கிறது. நான் படித்ததும் பதிவு செய்ததும் விலைமதிப்பில்லாதவை உண்மையில் உலகுடன் பகிர்ந்துகொள்ளக் கூடியவை. புத்தகங்கள் கையில் வைத்திருப்பதற்கும், பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும், நீங்கள் நன்கு விற்பனை செய்யும் நூலை எழுதாவிடில் அதுபெருவாரியான பார்வையாளர்களைச் சென்றடையாது. பொதுவாகவே புத்தகங்கள் உற்பத்தி செய்ய அதிக செலவாகும்; வாங்குவதற்கும் அதிக விலை; அதனை உற்பத்தி செய்ய அதிக நேரம் தேவைப்படும், அடுத்த பதிப்பு வரை உங்களால் அதில் திருத்தங்களைச் செய்ய முடியாது. வரலாற்றை படிக்கம் மிகப்பெரிய ரசிகனாக இருந்தாலும், எதிர்காலத்தை தேடும் மிகப்பெரிய ரசிகனும் கூட, ஆக எதிர்காலம் என்பது இணையதளம். உண்மையில், நிகழ்காலம் இணையத்தில் நன்றாகவே இருக்கிறது. அதனை மனதில் வைத்தே, என்னுடைய எல்லா வேலைகளையும் வலைதளத்தில் பதிவேற்ற முடிவுசெய்தேன், எனவே தான் நவம்பர் 2001ல் பெர்சின்ஆர்கைவ்ஸ்.காம்ஐ தொடங்கினேன்.

நான் கொண்டிருந்த முக்கியமான கொள்கை யாதெனில், வலைதளத்தில் கிடைக்கும் அனைத்தும் விலையில்லாமலும், எந்த விளம்பரமும், விற்பனையுமின்றி இருக்க வேண்டும் என்பதை எப்போதும் கடைபிடிப்பதாகும். வலைப்பக்கத்தில் திபெத்திய பௌத்தம் பற்றிய கிடைக்கக்கூடிய பல்வேறு விதமான படிப்பாய்வுகளும், நான்கு திபெத்திய பாரம்பரியத்தை உள்ளடக்கியது, அதிலும் பிரதானமாக கெலுக் பாரம்பரியம். பல்வேறு ஒப்பீட்டு கட்டுரைகள், திபெத்திய மருத்துவம் பற்றிய கட்டுரைகள், ஜோதிடம், பௌத்த வரலாறு, ஆசிய வரலாறு, திபெத்திய வரலாறு மற்றும் பௌத்தம் இஸ்லாம் இடையேயான உறவு குறித்து ஏராளமான கட்டுரைகளம் இதில் இடம்பெற்றுள்ளன. மற்ற மொழிகளிலும் இவை மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கையும் கொண்டிருக்கிறேன்.

இஸ்லாமியர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது மிக மிக முக்கியமானது என நான் கருதுகிறேன், புனிதர் தலாய் லாமாவும் இதற்கு மிக உறுதியான ஆதரவை தெரிவிக்கிறார். இஸ்லாமிய நாடுகளுக்கு நான் பயணித்து அங்கிருக்கும் பல்கலைக்காகங்களில் விரிவுரை செய்ததில் இருந்து, அவர்களுக்கு உலகம் பற்றி அறிவுத் தாகம் இருக்கிறது என்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது.  அவர்களை விலக்கி வைப்பதென்பது உலகளாவிய நல்லிணக்கத்திற்கு நெருக்கடியானது, ஆனால் திபெத்திய போதனைகளை அவர்களுக்கும் கிடைக்கச் செய்யலாம், எனினும் அவர்களை பௌத்த மதத்திற்கு மாற்றுவதற்கான சிறிய முயற்சி கூட இல்லாமல் இதனைச் செய்யலாம். 

முடிவுரை

2015ல் பெர்சின் ஆர்கைவ்ஸ் வலைதளம் 21 மொழிகளில் கிடைக்கத்தொடங்கியது, மேலும் ஆண்டொன்றிற்கு 20 லட்சம் பார்வையாளர்களை பெற்றது. 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலன். அண்மை ஆண்டுகளில் புனிதர் தலாய் லாமா 21ஆம் நூற்றாண்டில் பௌத்தம் குறித்த தேவை பற்றி திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறார். அதில் ஈர்க்கப்பட்டதால், வலைதளத்தை புதுப்பித்து எதிர்காலத்தில் அதிக பார்வையாளர்களைச் சென்றடைய உதவும் சிலரை பணியமர்த்த முடிவு செய்தேன். அதன் மறுபிறப்பே ஸ்டடிபுத்திசம்.காம்.

புதிய வலைப்பக்கம் அதிகம் பேரை ஈர்க்கும் வடிவமைப்பைக் கொண்டது, எனவே கணினித் திரையுலும், கையடக்க சாதனங்களில் சிறப்பானதாகத் தோன்றும். பயனாளர்கள் பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு அடிப்படையில் வலைப்பக்கமானது பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்களது சமூக ஊடக இருப்பையும் ஒலி மற்றும் ஒளிக் கருத்துகளாகச் சேர்ந்து விரிவாக்கம் செய்திருக்கிறோம். திபெத்திய பௌத்தத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்கு தொடக்கம் முதல் உயர்தரமான அளவு வரை எளிதில் அறிவு பெறும் வகையில் தேவையான வசதிகளை செய்து தந்து அவர்களுக்கு உதவும் ஒரு மையத்தை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். சேர்ந்து படிக்க நினைக்கும் பயனாளர்களை ஒன்று சேர்த்து ஒரு சமூகத்தை உருவாக்கி, அவர்களில் சிறந்த போதனையாளர்களுக்கான திறந்த தளத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன்.  

தற்போதைய நிலையில், சிறிய எண்ணிக்கையிலான மொழிகளில் போதுமான முந்தைய கருத்துகளோடு தொடங்கினோம். பல்வேறு புதிய கட்டுரைகள் தொடக்க நிலையாளர்களுக்கு வழிகாட்டும் விதமாக இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்டுரைகளையும் புதுப்பிக்கும் வரை பழைய வலைதளப்பக்கத்தை புதிய வலைதளப்பக்கத்தின் மூலமாக தொடர்ந்து இருக்கும்.  

நிறைவுச் சுருக்கம்

ஆக, இது தான் என்னுடைய கதையின் சிறு துணுக்கு. எல்லாவற்றையும் நான் செய்வதற்கு மூலதனமாக இருந்தது பௌத்த செயல்முறை. உதாரணத்திற்கு, பல ஆண்டுகளாகவே நான் நாளொன்றிற்கு இரண்டு மணி நேரம் தியானம் செய்து வருகிறேன். பல நீண்ட தியானங்களையும் செய்திருக்கிறேன். சமீப நாட்களாக நான் என்னுடைய தியான நேரத்தை குறைத்திருக்கிறேன், எனினும், ஒரு நாளைக்கு 30 நிமிடங்களாகவும் தியானிப்பேன். இரக்கம், சரியான உந்துசக்தி, அகங்காரத்தை வென்று வருதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் உறுதியான போதனை அது, நான் எப்போது வலியுறுத்தும் முக்கியமான அம்சங்களில் தியானமும் ஒன்று. என்னுடைய ஆசிரியர்களான கெஷ் வேங்யலில் தொடங்கி புனிதர் தலாய் லாமா வரையில் அவர்கள் தந்த உத்வேகத்தால் என்னால் அர்த்தமுள்ள வாழ்க்கையை முன்நடத்த முடிந்தது, அனுபவ ரீதியாகவும் புத்த மதத்தின் புறநிலைப்பக்கங்களும் பௌத்த பயிற்சி மற்றும் பௌத்தவியலை ஒன்றாக சேர்க்கும் போது அவை பயனுள்ளதாக இருப்பதோடு பிறருக்கு ஏதேனும் பலன் தர வேண்டும் என்று எப்போதுமே நான் நம்புகிறவன். என்னுடைய கதை உங்களில் சிலரை ஈர்த்து, நீங்களும் அவ்வாறே செயல்பட உந்துசக்தியாகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

Top