
சுய-இரக்கம் பௌத்த நடைமுறையின் ஒரு முக்கியமான அங்கம், இருப்பினும் பெரும்பாலும் இது நம்முடைய அன்றாட வாழ்வில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது அல்லது கவனிக்கப்படுவதே இல்லை. நம்மில் பலர் மற்றவர்களிடம் அன்பாகவும் இரக்கமாகவும் இருப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டு இருக்கிறோம், ஆனால் அதே இரக்கத்தை முதலில் சுயமாக நமக்குள்ளே செயல்படுத்துவதற்கு போராடுகிறோம். பௌத்தத்தில், சுய-இரக்கம் என்பது அன்பை குறிக்கும் செயல் மட்டுமல்ல, ஆன்மீக வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் தேவையான அடித்தளமாகும்.
[மேற்கோள்] ஆற்றில் இறங்கும் ஒருவர், வேகமாகப் பாயும், நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டால், அவர் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும்? – புத்தர்
சுய-இரக்கம் என்றால் என்ன?
சுய இரக்கம் என்பது ஒரு அன்பான நண்பருக்கு நாம் வழங்கும் அதே அக்கறை மற்றும் புரிதலுடன் நம்மை நடத்துவதை உள்ளடக்கியது. நண்பர்களுக்கும் அவர்களின் பிரச்சினைகளுக்கும் நியாயமற்ற முறையில் செவிசாய்ப்பது பெரும்பாலும் ஒப்பீட்டளவில் எளிதானது, ஆனால் நம்மைப் பொறுத்தவரை, நாம் அதற்கு தகுதியானவர்கள் அல்ல என்று உணர்கிறோம். சுய இரக்கம் என்பது கடுமையான தீர்ப்பு இல்லாமல் நமது குறைபாடுகள், தோல்விகள் மற்றும் போராட்டங்களை ஒப்புக்கொள்வதாகும். நமது குறைபாடுகளுக்காக நம்மை நாமே விமர்சிப்பதற்குப் பதிலாக, நாம் நம்மை ஏற்றுக்கொள்வதையும் புரிந்துகொள்வதையும் வழங்குகிறோம். இந்த இரக்கமுள்ள அணுகுமுறை சுய இன்பம் அல்லது சாக்குப்போக்குகளைப் பற்றியது அல்ல, ஆனால் அனைவரும் - நாம் உட்பட - அனைவரும் எதிர்கொள்ளும் தவிர்க்க முடியாத சவால்களை அங்கீகரிப்பது பற்றியது.
எதற்கு பெளத்தத்தில் சுய-இரக்கத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது?
இரக்கம் நம்மிடத்தில் இருந்து தொடங்குகிறது
பொதுவாக, மற்றவர்களிடம் உண்மையான இரக்கத்தை காட்டுவது என்பது, தன் மீது இரக்கத்துடன் இருப்பதில் இருந்தேதொடங்குகிறது என்று சொல்லலாம். நமக்கு நாமே கடுமையாகவும் குற்றம் காண்பவராகவும் இருந்தால், மற்றவர்களிடம் உண்மையான இரக்கத்தை நீட்டிப்பது எவ்வளவு சவாலானது என்று கற்பனை செய்து பாருங்கள். சுய இரக்கத்தை பயிற்சிப்பதன் மூலம், இயற்கையாகவே ஒரு கனிவான மற்றும் மென்மையான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் பண்பு வெளிப்படும், இது நாம் மற்றவர்களுடன் இன்னும் பச்சாதாபத்துடன் இணைந்திருக்க உதவுகிறது.
உணர்ச்சிகளை சீராக்குவதை ஊக்குவிக்கிறது
ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது வாழ்க்கை, நம்முடைய சுய துன்பங்களை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது நமது வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கடினமான காலங்களில் சுய- இரக்கம் ஒரு இதமான வலி நிவாரணி எனலாம். வலியால் நாம் பாதிக்கப்படாமல் எதையும் ஏற்றுக்கொள்ளும் திறந்த மனதுடன் இருக்க இது நம்மை அனுமதிக்கிறது, மேலும் பின்னடைவுகளில் இருந்து மிக எளிதாகவும் விரைவாகவும் மீண்டு வர அது உதவுகிறது.
எதிர்மறையான சுயவிமர்சனத்தை குறைக்கிறது
நம்மில் பலருக்கும் உள்ளே ஒரு விமர்சகர் இருக்கிறார், அவர் நமது செயல்களை நியாயப்படுத்திக் கொண்டும், குறைத்து மதிப்பிட்டு கொண்டும் இருக்கிறார். சிலருக்கு, இந்த உள் விமர்சகர் எப்போதும் அமைதியாகவே இருப்பதில்லை! பார்ப்பதற்கு இது மிகவும் தீவிரமான பிரச்னையாகத் தெரியாவிட்டாலும், இந்த எதிர்மறையான சுய-பேச்சு நம்பமுடியாத அளவிற்கு தீங்கு விளைவிக்கும், இது குறைபாடு மற்றும் சுயமரியாதை குறைவு போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். சுய இரக்கத்தைக் பயிற்சிப்பதன் மூலம், உதாரணமாக நமது "புத்தர்-இயல்பை" அங்கீகரிப்பதன் மூலம் இதனை வெல்ல முடியும். உண்மையில் நாம் அனைவரும் புத்தர்களாகும் திறனைக் கொண்டுள்ளோம் – இதன் மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உள் விமர்சகரை அமைதிப்படுத்தி கடுமையான முடிவுகளில் இருந்து திசைமாற்றி அனைவருக்கும் ஆதரவான மற்றும் ஊக்கமளிக்கும் எண்ணங்களைக் கொண்டவராக மாறலாம். இந்த மாற்றம் நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நம் மனதில் மேலும் நேர்மறையான சுய-பிம்பத்தை உருவாக்குகிறது.
சுய முன்னேற்றத்தை வளர்க்கிறது
சுய-இரக்கம் என்பது சுய மகிழ்ச்சி என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நாம் நம்மை மட்டுமே கவனித்துக் கொள்வது, நம்முடைய தவறுகளுக்கான பொறுப்புகளைத் தவிர்ப்பது அல்லது நமது குறைபாடுகளைப் புறக்கணிப்பது என்றே நம்முடைய செயல்கள் இருக்கின்றன. ஆனால் நிதர்சனத்தில் அவை உண்மையில் நம்முடைய தவறுகள் மற்றும் குறைபாடுகளை ஒப்புக்கொள்ள ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது. அப்போதுதான் அவற்றில் இருந்து கற்றுக்கொண்டு நாம் வளர்ச்சி காண முடியும். ஒரு சிலர் கடுமையான சுயவிமர்சனத்தால் பயனடையலாம் என்றாலும், நம்மில் பெரும்பாலோருக்கு அன்பு மற்றும் புரிதல் அணுகுமுறையே சுய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

சுய-இரக்கத்தை எப்படி பயிற்சிப்பது
உங்களுடைய துன்பங்களை ஒப்புகொள்ளுங்கள்
சுய-இரக்கத்தை பயிற்சிக்கும் போது நாம் முதலில் செய்ய வேண்டியது நாம் துன்பப்படுகிறோம் என்பதை ஒப்புகொள்ளுங்கள். உள்ளதை உள்ளபடியே சொல்வதைப் போன்ற அர்த்தத்தை இது கொடுத்தாலும், நாம் துன்பப்படுகிறோம் என்பதை ஏற்றுக் கொள்வது நிச்சயமாக சவாலான விஷயம், குறிப்பாக நாம் உறுதியாக இருக்க வேண்டும் அல்லது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கும் போது அது மிகவும் சவாலாக இருக்கும்.
உங்களை நீங்களே அன்புடன் நடத்துங்கள்
ஒரு கடினமான நேரத்தில் தவிக்கும் உங்கள் நெருங்கிய நண்பருக்கு நீங்கள் என்ன ஆறுதல் கூறுவீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் என்ன வார்த்தைகளை அவருக்கு ஆறுதலாக சொல்வீர்கள்? உங்களுடைய ஆதரவை அவருக்கு எப்படி வழங்குவீர்கள்? இப்போது அதே அன்பையும் புரிதலையும் உங்களுக்குள்ளும் செலுத்த முயற்சி செய்யுங்கள். மென்மையான, ஆறுதலான, ஆதரவான மொழியில் உங்களுக்கு நீங்களே பேசுங்கள் உங்களுக்கு தேவைப்படும் சவுகரியத்தை வழங்குங்கள்.
நீங்கள் பகிர்ந்து கொண்ட மனிதாபிமானத்தை அங்கீகரியுங்கள்
எல்லோருமே துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; தவறே செய்யாதவர்கள் யாரும் இல்லை. தவறு என்பது மனிதனின் ஒரு அங்கம். உங்களுடைய துன்பங்களை தனியாக நீங்கள் மட்டும் அனுபவிக்கவில்லை என்பதை அங்கீகரிப்பதன் மூலம், நீங்கள் மற்றவர்களுடன் இன்னும் அதிக பிணைப்புடன் இருக்க முடியும், இதன் விளைவாக நீங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களில் இருந்து சற்றே தனித்திருக்கிறீர்கள் என்பதை உணர முடியும்.
மனநிறைவுக்கான விழிப்புணர்வை பயிற்சித்தல்
உங்களை மூழ்கடிக்கும் உணர்ச்சிகளால் அடித்துச் செல்லாமல் அந்த உணர்வு நிலையிலேயே இருங்கள். உங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் ஆர்வத்துடனும் திறந்த மனதுடனும் அவதானியுங்கள், அவற்றை மாற்றவோ அல்லது அடக்கவோ முயற்சிக்காமல் இருங்கள். இந்த மனநிறைவான அணுகுமுறை நீங்கள் சாதாரணமாக இருக்கவும் உள்ளார்ந்த அமைதியை வளர்க்கவும் உதவுகிறது.
முடிவுரை
சுய-இரக்கம் என்பது பௌத்த பயிற்சியில் ஆடம்பரமானதோ அல்லது பிற்காலத்தை பற்றிய சிந்தனையோ மட்டுமல்ல; இது கருணையுள்ள வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாகும். சுய-இரக்கத்தை வளர்ப்பதன் மூலம், நம்முடைய நல்வாழ்வுக்கும், மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்கும் திறனுக்கும் ஒரு உறுதியான அடித்தளத்தை உருவாக்குகிறோம். உங்கள் மீதே நீங்களே அன்பு காட்டுவது சுயநலம் அல்ல என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்; இது மிகவும் இரக்கமுள்ள, கவனமுள்ள மற்றும் நிறைவான வாழ்க்கையை நோக்கி ஒரு முக்கிய படியாகும். எனவே, மேலே உள்ளவற்றை மீண்டும் ஒரு முறை படித்து பார்க்க இப்போதே சிறிது நேரம் ஒதுக்குங்கள். தேவைப்படும் நேரத்தில் தகுதியான இரக்கத்தை உங்களுக்கு நீங்களே வழங்குங்கள்.