பௌத்தரின் பார்வையில் இரக்கத்தை செயல்படுத்துதல்

துன்பங்களிலிருந்தும் அதன் காரணங்களிலிருந்தும் மற்றவர்கள் விடுபட வேண்டும் என்ற விருப்பம் மனிதகுலத்தின் மிக அழகான பண்புகளில் ஒன்றாகும். அதுதான் உண்மையான இரக்கம். இரக்கம் என்பது ஒரு எண்ணமாக மேம்படும் அதே வேளையில், அதை நாம் உண்மையில் செயல்படுத்தும்போது அது நிஜமாகவே சக்தி வாய்ந்ததாகிறது. அப்படியானால், செயலில் இரக்கம் என்பது பௌத்த பயிற்சியாளர்களாகிய நமது ஆழ்ந்த மதிப்புகளின் உருவகமாகும்.  அனைத்து உயிரினங்களும் நல்வாழ்வை பெற வேண்டும் என்கிற நமது உறுதிப்பாட்டின் வெளிப்பாடு இதுவாகும். இரக்கப்படுவதற்கான நமது நோக்கங்களை உண்மையான, அர்த்தமுள்ள செயல்களாக மாற்றும்போது, நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு நம்மால் நிம்மதியைக் கொண்டுவர முடியும். இதைவிட அர்த்தமுள்ள ஏதாவது இருக்க முடியுமா?

இரக்கப்படுதலை ஏன் கட்டாயம் செயல்படுத்த வேண்டும்

துன்பத்தை உதவியாக மாற்றுதல்

வாழ்க்கை பற்றிய 4 மேன்மையான உண்மைகளில், பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையானது துன்பங்கள் மற்றும் அதிருப்தியால் நிரம்பியிருப்பதாக முதல் உண்மை கூறுகிறது. அறிவாற்றலுடன் கூடிய இரக்கம் என்னும் நிவாரணியே இந்த துன்பத்திற்கான மருந்து. இரக்கம் என்பதன் முழு அர்த்தம் புரிந்து கொள்ளுதல் அல்லது பரிதாபப்படுதல் என்பதோடு நின்றுவிடாமல் செயல்படுத்துவதையும் அது வலியுறுத்துகிறது. இரக்கத்தை செயலில் காட்டும் போது, நிச்சயமாக நம்மால் மற்றவர்களின் துன்பத்தை போக்க நேரடியாக உதவ முடியும். தேவைப்படும் நண்பருக்கு உதவுவதன் மூலமோ, ஒரு காரணத்தை ஆதரிப்பதன் மூலமாகவோ அல்லது போராடும் ஒருவருக்காக உறுதுணையாக இருப்பதன் மூலமாகவோ, நம்முடைய இரக்கத்தை வெளிப்படுத்தும் செயல்கள் மற்றவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நாம் பிறருக்கு இரக்கம் காட்டும் செயல் நம்மையும் மாற்றுகிறது. கருணை மிக்க செயல்களில் நாம் ஈடுபடும்போது, தாராள மனதையும் உலகை வெளிப்படையாக பார்க்கும் தன்மையையும் வளர்த்துக் கொள்கிறோம்.

நேர்மறை கர்ம வினையை உருவாக்குதல்

பௌத்தத்தில் நம்முடைய செயல்களின் நோக்கங்கள் மிகவும் முக்கியமானது. உண்மையான இரக்கத்தால் தூண்டப்பட்ட செயல்கள் நேர்மறையான ஆற்றலை உருவாக்குகின்றன, இது எதிர்கால மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று புத்தர் கூறியுள்ளார். நாம் இரக்க உணர்வுடன் செயல்படும்போது, நாம் விதைக்கும் கருணை என்கிற விதை நம்முடைய வாழ்விலும் மற்றவர்களுடைய வாழ்விலும் மரத்தில் இருந்து கிடைக்கும் சுவைமிக்க கனியைப் போன்ற பலனைத் தரும். இரக்கமுள்ள செயல் என்பது அழிவு ஆற்றல்களின் சுழற்சியையும் தகர்க்கிறது. கோபம் அல்லது சுயநலத்தைக் காட்டிலும், கருணை மற்றும் புரிதலுடன் சூழ்நிலைகளை மீண்டும் மீண்டும் எதிர்கொள்வதன் மூலம், நம் மனதையும் இதயத்தையும் ஆக்கபூர்வமான செயல்களுக்கானதாக பழக்கப்படுத்துகிறோம், நாளடைவில் அவை நம்முடைய இரண்டாவது இயல்பாக மாறும் வரை இதை பின்பற்றுகிறோம். இதன் பலன் அதிக உள் அமைதி மற்றும் அறிவொளியை நோக்கிய தெளிவான பாதைக்கு வழிவகுக்கிறது.

ஒன்றோடு ஒன்றிற்கு தொடர்பு இருப்பதை புரிந்துகொள்ளுதல்

இரக்கத்தை செயலில் காட்டுவதனால் அனைத்து உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு இருக்கிறது என்பதை அடையாளம் காண உதவுகிறது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒரு உயிரினம் கூட துன்பத்தை விரும்பி ஏற்பதில்லை; அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். இரக்கத்தை செயலில் காட்டும்போது, நாம் அனைவரும் இந்த பேரண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதையும், மற்றவர்களின் மகிழ்ச்சியும் துன்பமும் நம்மோடு நெருங்கிய தொடர்பில் உள்ளது என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். இந்த விழிப்புணர்வு நமக்குள் ஒற்றுமை உணர்வை வளர்க்கிறது. துன்பம் ஏற்படுவதற்கான தொடர் காரணியான பிரிவினை மற்றும் தனிமையின் தடைகளை இது உடைக்கிறது. உலகில் இருப்பவர்கள் பிரிவினைவாதத்தை உணரும் போது, இரக்கம் என்பது ஒரு சக்திவாய்ந்த இயக்கத்திறன், இது நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதையும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதன் மூலம், நாம் மிகவும் இணக்கமான உலகத்தை உருவாக்க முடியும் என்பதையும் நினைவூட்டுகிறது.

இரக்கத்தை செயல்படுத்துவதற்கான வழிகள்

தாராளமனம்

6 எண்ணிக்கையிலான உச்சத்தை அடைதல் அணுகுமுறைகளில் முதலாவதாக இருக்கும் தாராள மனப்பான்மை என்பது இரக்கத்தை செயலில் பயிற்சிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். பல வடிவங்களில் நாம் இதனை செயல்படுத்தலாம், நம்மால் முடிந்தால் தேவைப்படுபவர்களுக்கு பொருள் உதவி வழங்கலாம். நம்முடைய நேரத்தையும் ஆற்றலையும் பல்வேறு வழிகளில் பகிர்ந்து கொள்ளலாம். பௌத்தத்தில், கொடுப்பது என்பது பெறுபவரைப் பற்றியது மட்டுமல்ல; கொடுப்பவரையும் உள்ளடக்கியது. நாம் தூய்மையான மற்றும் மகிழ்ச்சியான மனதுடன் கொடுக்கும்போது, குறிப்பாக ஈடாக எதையாவது பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுக்க முடிந்தால், நாம் நம்முடைய சொந்த ஆசைகளை விட்டுவிட்டு, தன்னலமற்ற மகிழ்ச்சியை ஏற்கும் திறந்த மனதுடன் இருக்கிறோம் என பொருள்.

ஆறுதல் தேடுபவர்களை உணர்வு ரீதியில் ஆதரித்தல்

ஒருவர் கடினமான சூழலை எதிர்கொள்ளும்போது, பெரும்பாலும் அவருக்கு அறிவுரைகள் தேவையில்லை, அவர் பக்கம் ஒருவர் ஆறுதலாக இருக்க வேண்டும் என்று மட்டுமே விரும்புவதை நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா? சில சமயங்களில், நாம் செய்யக்கூடிய மிகவும் இரக்கமுள்ள விஷயம், என்பது அவர்களுக்கு நம்முடைய ஆதரவை அளிப்பது. உடைந்து போயிருக்கிறவர்களுக்கு உணர்வு ரீதியில் நம்பிக்கை அளித்தல் - அன்பான வார்த்தைகள், ஆரத் தழுவுதல் அல்லது ஒரு தீர்மானத்திற்கு வராமல் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்டல் – துன்பத்தில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலையும் நிவாரணத்தையும் அளிக்கும். இந்த வகையில் இரக்கத்தை வெளிக்காட்ட பெரிய மெனக்கெடல்கள் தேவையில்லை; பெரும்பாலும், இரக்கத்தை வெளிக்காட்டும் இந்த சிறிய செயல்களே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மற்றவர்கள் ஆறுதல் தேடும் நேரத்தில் அவர்களுடன் நாம் இருப்பதன் மூலம், நாம் அவர் மீது அக்கறை காட்டுகிறோம் என்பதையும் அவர்கள் தனியாக இல்லை என்பதையும் உணர்த்துகிறோம்.

சமூகத் தொண்டில் தன்னார்வமாக பங்கெடுத்தல்

தன்னார்வத் தொண்டு என்பது இரக்கத்தை செயல்பாட்டில் வைக்கும் மற்றொரு வழியாகும். தன்னார்வ பணிகளைச் செய்ய பெரும்பாலான இடங்களில், நிறைய வாய்ப்புகள் உள்ளன: உதாரணமாக, உணவு வழங்கும் இடத்தில் உதவுதல் அல்லது சுற்றுச்சூழல் சுத்தம் செய்வதில் பங்கேற்பது. தன்னார்வத் தொண்டு செய்வதனால் நாம் மற்றவர்களின் நல்வாழ்வுக்கு நேரடியாக பங்களிக்க அனுமதிப்பதோடு, நமக்கும் வாழ்க்கையில் ஒரு வலுவான நோக்கத்தை அளிக்கிறது. நமது நேரத்தையும் முயற்சியையும் மற்றவர்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிப்பதன் மூலம், நாம் பொறுமையையும் இரக்கத்தையும் வளர்த்துக் கொள்ளலாம். நாம் பிரபஞ்சத்தின் மையம் அல்ல என்பதையும், அனைவருக்கும் போராட்டங்கள் இருப்பதையும் உணர்ந்து, இரக்கத்தை வளர்த்துக் கொள்கிறோம், இது நமது இரக்க மனதை வலுப்படுத்துகிறது.

சமூக நீதியை காத்தல்

இரக்கத்தை செயல்படுத்துதல் என்பது சமூக நீதியை காத்தல் என்கிற வடிவத்தையும் உள்ளடக்கியது. எல்லா உயிர்களுக்குமான கண்ணியம் மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுத்தல், அநீதியை எதிர்த்தல் மற்றும் வெளிப்படையான ஒரு சிறந்த இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குதல் உள்ளிட்ட அனைத்தையும் இது உள்ளடக்கியுள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கொள்கை மாற்றங்களை ஆதரித்தல் அல்லது அமைதியான முறையில் பங்களித்தல் அல்லது அமைப்புகளுக்கு தானம் செய்வதன் மூலம் இவற்றை நிறைவேற்ற முடியும். சமூகநீதிக்காக வாதிடுவது சற்றே சவாலானது, ஆனால் இரக்கதை செயல்படுத்துவதற்கான சக்திவாய்ந்த வழியும் அதுவே, ஏனெனில் இது பெரும்பாலும் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது. துன்பப்படுபவர்களுக்கு உதவ நம் நேரத்தையும், ஆற்றலைப் பயன்படுத்த தயாராக இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது.

இரக்கப்படுதலை செயல்படுத்துவதால் ஏற்படும் பயன்கள்

நாம் இரக்கத்துடன் செயல்படும் போது, அது மற்றவர்களுக்கு நாம் உதவுவதல் என்று மட்டும் அர்த்தம் கொள்ளக் கூடாது; அது நமக்கு மகிழ்ச்சி மற்றும் அர்த்தத்தின் ஆதாரமாகிறது. ஒருவரின் சுமையை  உண்மையாகவே நீங்கள் குறைத்துள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சியை கற்பனை செய்து பாருங்கள். இந்த மகிழ்ச்சியானது, பொருட்களை வாங்குவதால் கிடைக்கும் திருப்தியைப் போல விரைவானது அல்ல- இது ஒரு ஆழமான, நிலையான நீண்டகால மகிழ்ச்சி. மேலும் அதற்கு எந்தப் பணமும் தேவையில்லை; நாம் அனைவரும் பங்கேற்கலாம். மேலும், ஒவ்வொரு இரக்கச் செயலும் நம் மனதில் இரக்கத்துடன் செயல்படும் பழக்கத்தை வலுப்படுத்துகிறது. விரைவில், நாம் எந்த நபரை அல்லது சூழ்நிலையை சந்தித்தாலும் இரக்கத்துடன் செயல்படுவது இரண்டாவது இயல்பு போல இருக்கும்.

நம்மில் பௌத்தத்தை கடைப்பிடிக்க விரும்புபவர்களுக்கு, இரக்கம் மட்டுமே மிகவும் மதிப்புமிக்க துணை என்பதை நாம் கூறலாம்.  மற்ற உயிரினங்களுடன் தொடர்பு கொள்வதிலிருந்து நம்மைத் தடுக்கும் தடைகளை இரக்கத்தின் மூலம் நாம் அகற்றலாம். மேலும், புனிதர் தலாய் லாமா தொடர்ந்து நமக்கு நினைவூட்டுவது போல, நாம் சமூக விலங்குகள், மற்றவர்களுடனான நமது தொடர்புதான் உண்மையான மகிழ்ச்சியான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை உருவாக்குகிறது.

முடிவுரை

மனிதனுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு இரக்கத்தை செயலில் காட்டுவது பௌத்த பயிற்சியில் பிரதானமானது; உலகிற்கு இப்போது மிகவும் தேவைப்படுகின்ற பண்பு அது. நம் மனதில் நாம் வைத்திருக்கும் அழகான இரக்க நோக்கங்களை துன்பத்தைத் தணிக்கவும் சிறந்த உலகத்தை உருவாக்கவும் உண்மையான, உறுதியான முயற்சிகளாக மாற்றுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் வழிகளில், இரக்கமுள்ள செயல்களில் ஈடுபடுவதன் மூலம்  தேவைப்படுபவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், ஞானமடைவதற்கான பாதையில் நம்மால் முன்னேறவும் முடியும்.

Top