இரக்கத்தை வளர்ப்பதன் நன்மைகள்

111111111111

பௌத்தத்தில், இரக்கம் என்பது உன்னத இலட்சியத்தை விட உயர்ந்தது; இது மிகவும் சக்திவாய்ந்த மாற்று சக்தி, நமது ஆன்மீக பயிற்சியின் துடிப்பாக அது இருக்கிறது. இரக்கத்தை பேணி வளர்ப்பது நமது தனிப்பட்ட வளர்ச்சிக்கு மட்டுமல்ல, மிகவும் அமைதியான இணக்கமான உலகத்தையும் உருவாக்க மிகவும் அவசியமானது – சொல்லப்போனால் நாம் அனைவரும் விரும்பும் ஒன்று.  

கருணை குறித்த பரந்துபட்ட உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்வதன் மூலம், நம்பமுடியாத வழிகளில் மற்றவர்களின் வாழ்க்கையை அணுகலாம், இருள் இருக்கும் இடங்களில் ஒளியைக் கொண்டு வரலாம். துன்பம் இருக்கும் இடங்களில் ஆறுதலைத் தரலாம். இதுதான் இரக்கத்தின் சக்தி.

நாம் ஏன் இரக்கத்தை வளர்த்தல் வேண்டும்?

நம்மில் சிலர், “நான் ஏன் இரக்கத்தை வளர்க்க வேண்டும்?” என்று கேட்கலாம். இரக்கத்தை வளர்ப்பதன் மூலம் நாம் நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சியாகவும் வெற்றியடைந்ததாகவும் உணரலாம், நமக்கு அதிகம் பலன் கொடுக்காத ஒன்றை பிடித்துக் கொண்டு அதனை உருவாக்க வேண்டிய அவசியமில்லை.  ஆனால் நாம் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் உணர்ந்தால், நாம் உண்ணும் உணவை உருவாக்குபவர்கள், நாம் பயன்படுத்தும் சாலைகளைப் பராமரிப்பவர்கள் போன்றோரை நாம் எவ்வளவு சார்ந்து இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்கலாம். மற்றவர்கள் இல்லாவிட்டால், நாம் எங்கே இருப்போம்?

உண்மையில், நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்கு நாம் நிறைய கடன்பட்டிருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, இரக்கத்தை வளர்த்துக்கொள்வது, நமக்கு அருகிலும் தொலைவிலும் உள்ள மற்றவர்களுடன் இன்னும் ஆழமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு திறவுகோலாக  இருப்பதைக் காண்போம். எல்லா உயிரினங்களும் ஒன்றோடொன்று சார்ந்து இருப்பதாக புத்தர் போதித்தார், எனவே மற்றவர்களின் மகிழ்ச்சியும் துன்பமும்  ஏற்படுத்தும் சிக்கல் நம்முடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இரக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ளும்போது, நம்மையும் நமது தனிப்பட்ட தேவைகளையும், விருப்பங்களையும், கவலைகளையும் தாண்டி பார்க்கத் தொடங்கும் ஒரு குறிப்பிட்ட மாற்றம் நடக்கிறது. நம்முடைய சுக, துக்கங்களைப் போல மற்றவர்களின் மகிழ்ச்சியும் நல்வாழ்வும் முக்கியம் என்பதை நாம் உணர ஆரம்பிக்கிறோம். திபெத்திய குருமார்கள் கற்பிக்கும் ஒரு அழகான பயிற்சி என்னவென்றால், ஒரு பக்கம் நம்முடைய தேவைகள் மற்றும் ஆசைகளுடன் நாம் இருக்கிறோம், மறுபுறம், மற்ற அனைத்தும் இருக்கிறது – அனைத்தும் என்றால் ஒவ்வொன்றும் தங்களின் நம்பிக்கை மற்றும் போராட்டங்களுடன் உள்ள எல்லா உயிரினங்களும் உள்ளன என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு நீங்களே ஒரு கேள்வியை எழுப்புங்கள்: யாருடைய விருப்பங்கள் பெரியது, என்னுடையது மட்டுமா, அல்லது எண்ணிலடங்கா தேவைகளுடன் இருக்கும் மற்றவர்களா? இப்படி நாம் ஒரு விஷயத்தை அணுகும் முறை மாறுவது மற்றவர்களுக்கு உதவுவதோடு நின்றுவிடாமல் – நம்மை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் சுய மையப்படுத்துதல் என்ற மாயவலைக்குள் சிக்கிக்கொள்ளாமல் விடுபடவும் மாற்று சிந்தனையானது உதவுகிறது. 

மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், இரக்கத்தை பழக்கமாக்குங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், இரக்கத்தை பழக்கமாக்குங்கள். – புனிதர் 14வது தலாய் லாமா

எல்லாவற்றையும் விட, புத்தரை பொருத்தமட்டில், உண்மையான மகிழ்ச்சியின் ஆதாரம் இரக்கம். பொருட்கள் மீதான ஆசையோ அல்லது நம்முடைய பணியில் உயர்நிலையை அடைய வேண்டும் என்பதோ தற்காலிக திருப்தியை மட்டுமே தரும் – இரக்கம் மட்டுமே நீடித்து இருக்கக் கூடிய மனநிறைவை அளிக்கும். அது ஒவ்வொரு சின்ன வின்ன, அன்றாட விஷயங்களில் மகிழ்ச்சியை தேட நம்மை அனுமதிக்கும் – தெரியாத ஒருவரை பார்த்து புன்னகைப்பது அல்லது பலனை எதிர்பார்க்காமல் எதையாவது கொடுப்பது போன்றவற்றில் கிடைக்கும் சந்தோஷம். வெளிச்சூழல்களைப் பொருத்து இந்த மகிழ்ச்சி இல்லை; மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவதன் மூலம் இயற்கையாகவே இது எழுகிறது மேலும் அவற்றுடன் மனிதர்களைப் போன்ற பிணைப்பை ஏற்படுத்துகிறது. எப்படியெனில் அவையும் நம்மைப் போல மகிழ்ச்சியை விரும்பும் உயிர்கள் என்பதை உணர்த்துகிறது. 

இரக்கத்தை வளர்ப்பதன் நன்மைகள்

பிறரின் துன்பத்தை போக்குவதில் கவனம் செலுத்துவதும், அதனை போக்க முயற்சிப்பதும் தொடக்கத்தில் நம்மை தாழ்வாக உணர வைக்கும். ஆனால், அதிக இரக்கத்தை விதைப்பதன் மூலம், நாம் இன்னும் அதிக உயர்நிலையை அடைவோம், அது நம்முடைய வாழ்வின் நோக்கத்தையும் மிகச்சிறந்த அமைதியையும் அடைய வைக்க உதவும். சுருக்கமாகச் சொன்னால், இரக்கத்தை வளர்ப்பது நமக்கும் நம்மைச் சுற்றி உள்ள உலகிற்கும் எண்ணிலடங்கா நன்மைகளை கொடுக்கும். 

தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது, இரக்கமானது மனஅழுத்தம், மனச்சோர்வு மற்றும் கவலையை குறைப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அது நம்முடைய உணர்ச்சி நிலையை உறுதிபடுத்தவும், வாழ்வின் அனைத்து சவால்களையும் எளிதில் எதிர்கொள்ளவும் வாய்ப்பை வழங்குகிறது. இரக்கம் நம்முடைய உறவுமுறைகளையும் பலப்படுத்துகிறது, நாம் அக்கறை காட்டும் நபரைப் பற்றி கூடுதல் புரிதல், பொறுமை மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் விதத்தில் நம்மை மாற்றுகிறது. 

ஒரு பண்பட்ட பார்வையில் பார்க்கும் போது, இரக்கத்திற்கு சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் சக்தி இருக்கிறது. நாம் இரக்கத்துடன் செயல்படும் போது, நாம் கணிவு மற்றும் அனுதாபம் என்னும் கலாச்சாரத்திற்கு நம்மை அறியாமலே பங்காற்றுகிறோம். இதனால் நேர்மறை சுசூலை உருவாக்கி மக்கள் நன்கு மதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் இருப்பதாகவும் உணர வைக்கிறது, ஒரு சிறந்த சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு இந்த பண்பு வழி வகுக்கிறது. 

எது எப்படி இருந்தாலும் இரக்க குணத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய நன்மை நம்மை இயற்கையுடன் இணைக்கும் ஒரே ஒரு அம்சம் அதற்கு உள்ளது. பிரிவினை என்கிற பிம்பத்திற்கு அப்பால், அனைவரின் வாழ்வும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது என்பதை காணும் தொலைநோக்கு பார்வையை கொடுத்து உதவுகிறது இரக்கம். இப்படி உணர்வதன் மூலம், நோக்கத்தை மட்டுமல்ல நீடித்து நிலைத்திருக்கும் அமைதி மற்றும் மனநிலைவுக்கான பாதையை அது அமைத்துக் கொடுக்கிறது. 

இரக்கத்தை மேம்படுத்தும் வழிகள்

இரக்கத்தை வளர்ப்பதற்கு புத்தர் பல வழிகளை போதித்துள்ளார். எவ்வளவு அதிகமானவர்களிடம் இரக்க குணத்தை வெளிக்காட்ட முடிகிறதோ அந்த அளவிற்கு நமக்கு நாமே பயிற்சி கொடுத்துக் கொள்வதன் மூலம், நம்முடைய இரக்க குணமானது தானாகவே மற்றவர்களின் தேவைகளுக்காக செயல்படத் தொடங்கும், இதுவே நாம் கருணையுடன் செயல்படுவதற்கான பாதைக்கு வழிவகுக்கும். 

மற்றவர்களின் துயரத்தை பிரதிபலித்தல்

இரக்கமில்லாத உலகில் நாம் வாழ்கிறோம் என பெரும்பாலான மக்கள் உணர்கின்றனர். போர், பஞ்சம் மற்றும் பிற பேரழிவுகளின் செய்திகளும் படங்களும் சமூக ஊடகங்களை நிரப்புகின்றன. இவற்றை பார்க்கும் நம்மில் பலர் இவற்றைவிட கூடுதல் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டாம் என்று உணர்கிறோம்.

இருப்பினும், இரக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழி என்னவெனில் மற்றவர்களின் துன்பத்தை ஏற்கத் தயாராக இருப்பது. எனவே, ஒரு சோகமான செய்தியை நாம் பார்த்தால், “ஐயோ எவ்வளவு கொடூரமான விஷயம்” என்று மட்டும் நினைத்து விட்டு அதனை கடந்து செல்லக் கூடாது. அகதிகளின் வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். தான் வாழ்ந்த சொந்த மண்ணை விட்டுவிட்டு தெரியாத ஒரு இடத்தில் எஞ்சிய வாழ்க்கையை செலவிடப் போகிறோம் என்கிற அந்த சூழ்நிலை எவ்வளவு கொடூரமானது. பாதுகாப்பு தேடிச் செல்பவர்கள் அந்த பயணத்தில் அவர்களின் வாழ்வுக்காக பேராபத்தையும் எதிர்கொள்கின்றனர். ஒருவழியாக ஒரு புகலிடத்திற்கு வந்தால், அங்கும் அவர்கள் சந்தேகத்திற்கு உரியவர்களாக நடத்தப்படுகின்றனர், அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. நமக்கு மிகவும் பிடித்தவர்கள் அந்த சூழலில் இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். அடுத்த கனமே “யாருக்குமே இந்த மோசமான நிலை வரக் கூடாது” என்கிற இரக்க குணம் மேலோங்கும். 

இங்கே, துன்பத்தை ஏற்றல் என்பதற்கு பொருள் வலி அல்லது துக்கத்துடனே இருப்பதோ, அல்லது அதில் மூழ்குவதோ அல்ல, மாறாக துன்பம் என்பது உலக அளவில் அனைவரும் அனுபவிக்கும் ஒரு உணர்வு என்பதை அங்கீகரிப்பதைக் காணலாம். மற்றவர்கள் - நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மற்றும் தொலைதூர நாடுகளில் உள்ளவர்கள் - எதிர்கொள்ளும் சவால்களை அங்கீகரிப்பதன் மூலம், அவர்களின் துன்பத்தை போக்கும் உண்மையான விருப்பத்தை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

கருணை கொண்ட செயல்களில் ஈடுபடுதல்

ஏற்கனவே குறிப்பிட்டது போல, இரக்கம் என்பது நாம் உணர வேண்டியது அல்ல, நாம் செய்ய வேண்டிய ஒன்று. உதாரணத்திற்கு தேவை உள்ளவர்களுக்கு உதவுவது, ஒருவர் பேச விரும்பும் போது காது கொடுத்து கேட்பது, அல்லது அறிமுகமே இல்லாத ஒருவரைப் பார்த்து புன்னகைப்பது போன்று நாம் செய்யும் கருணையுள்ள சிறு செயல்கள் கூட இரக்கத்தை நாம் நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதிக்கும். 

கருணை வெளிக்காட்ட இந்தச் செயல்கள் மிகவும் சின்னதாகவும் முக்கியமற்றதாகவும் இருக்கலாம், ஆனால் அவை பெரிய தாக்கத்தை கொண்டுள்ளன, நாம் நினைப்பதைவிட பலரின் வாழ்க்கையை நேரடியாக தொடக் கூடியது. கருணை என்பது உடலின் தசை போன்றது, எனவே நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு கருணை மிக்க செயலும், நேரத்தை கணக்கிடாமல் அது நம்முடைய இரக்க குணத்தை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் நாம் அக்கறையுடன், அனுதாபத்துடன் செயல்படுவதை எளிதாக்குகிறது. 

பிளவுபட்டிருப்பதாக உணரும் இந்த உலகில், இது போன்ற சிறு சிறு கருணை மிக்கச் செயல்கள் நம்மை மற்றவர்களுடன் நெருக்கமாக்கி இந்த உலகம் அவ்வளவு மோசமானதல்ல என்னும் நம்பிக்கைக்கான ஒளிக் கீற்று இருக்கிறது என்பதை உணர வைக்க முடியும்.

பொதுநல அன்பை பயிற்சித்தல்

பொதுநல அன்பு என்பது, மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது உண்மையான விருப்பம். அது இரக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. பொதுநல அன்பு என்பது ஒரு சக்திமிக்க பயிற்சி அங்கே நம்முடைய கவனமானது நமது சுய மையப்படுத்துதலில் இருந்து அனைத்து உயிர்களையும் உள்ளடக்கிய பரந்துபட்ட அன்பை மையமாக கொண்டது. அப்படி செய்வதன் மூலம், நாம் அமைதி மற்றும் நிறைவுக்கான ஆதாரமாகிறோம், அது முற்றிலும் நமக்குள்ளேயே இருக்கும். 

"உலகின் மகிழ்ச்சியான மனிதர்" என்று அடிக்கடி குறிப்பிடப்படும் பௌத்த துறவியான மாத்தியூ ரிக்கார்ட் கூறுவது போல், "பொதுநல அன்பை வளர்ப்பது மட்டுமே நமக்கும் மற்றவர்களுக்கும் மிகப்பெரிய நன்மைகளை  வளர்ப்பதற்கான சிறந்த மனநிலையாகும்." நாம் தினசரி அடிப்படையில் நற்பண்புள்ள அன்பைப் பயிற்சி செய்ய முயற்சிக்கும்போது, இயல்பாகவே நாம் மிகவும் இரக்கமுள்ள மற்றும் வெளிப்படையான மனதை வளர்த்துக் கொள்கிறோம்.

இந்த நடைமுறைக்கு பெரிய மெனக்கெடல்கள் தேவையில்லை; நாள் முழுவதும் நாம் சந்திக்கும் நபர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியை விரும்புவது போன்ற எளிமையானவற்றில் இருந்தே தொடங்கலாம். அது அறிமுகம் இல்லாதவருக்கு மௌனமாக நல்வாழ்த்துக்களை வழங்குவதாகவோ, நண்பர் ஒருவர் அமைதி அடைவார் என்றோ, அல்லது உலகம் முழுவதும் துன்பத்தில் உள்ளவர்களுக்கு அன்பை பகிர்வதாகவோ இருக்கலாம். இது போன்ற சின்னஞ்சிறு கருணை மிக்க செயல்கள் அன்பு மற்றும் இரக்கத்திற்கான நமது திறனை விரிவுபடுத்த உதவுகின்றன.

சில சமயங்களில், துன்பத்தில் இருப்பவராகத் தோன்றும் வெளி நபர் ஒருவருக்காக பொதுநல அன்பை பகிர்வது எளிமையானதாகத் தோன்றலாம். தெருக்களில் யாசகம் கேட்பவரை பார்க்கும் போது, “அவர் போராட்டங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடையட்டும்” என்று நாம் உடனடியாக நினைக்கலாம். உடனடியாக பணம் படைத்த ஒரு செல்வந்தரைப் பார்க்கும் போது, “ஏற்கனவே அசரிடம் அனைத்தும் இருக்கிறது, அவர் மகிழ்ச்சியாக இருக்க நான் ஏன் விரும்ப வேண்டும்?” என்று நினைக்கிறோம். பொதுநல அன்பு என்பது பாதுபாடுகளைக் கடந்து அன்பு செலுத்தும் அனுபவமாகும். ஒருவர் போராட்ட வாழ்வில் இருக்கிறாரோ இல்லையோ, ஒவ்வொருவரும் மகிழ்ச்சிக்கு தகுதியானவர் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

இதற்காகவே, புத்தர் அன்பு, கருணை கலந்த தியானத்தை போதித்தார். இந்த பயிற்சியில், நாம் நமக்குள்ளாக அன்பு மற்றும் கருணை காட்டுவதில் இருந்து தொடங்கி, அதனை மற்றவர்களுக்கு பகிர்வோம்: முதலில் நமக்கு பிடித்தவர்களுடன் பகிர்ந்து, அதன் பின்னர் பிடிக்காதவர்களுக்கும் பகிர்ந்து, இறுதியில் அணுக முடியாதவர்கள் சவாலானவர்களுக்கும் அந்த உணர்வை பகிர்வோம். இதன் நோக்கமானது நம்முடைய அன்பையும் இரக்கத்தையும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் எல்லா உயிர்களையும் உள்ளடக்கியதாக பகிர்ந்து கொள்வதாகும். ஒரு கட்டத்தில், இயல்பாகவே நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று விரும்புபவராக மாறுவோம். 

மனநிறைவு மற்றும் தியானம்

மனநிறைவு என்பது நம்முடைய சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் நம்மை சுற்றி இருக்கும் சூழலை எந்த முடிவுக்கும் வராமல் அப்படி ஏற்றுக் கொள்வது. நம்மால் செய்யக் கூடிய இந்தத் திறனை நாம் வளர்த்துக் கொண்டால், நம்மால் சுய மற்றும் பிறரின் துன்பத்தை புரிந்து கொள்ள முடியும். நம்முடைய விழிப்புணர்வு அதிகரிக்கும் போது, இயல்பாகவே நம்முடைய இரக்க உணர்வு அதிகரிக்கும், அந்த துன்பத்தை அறிவதன் அடிப்படை என்னவெனில் மனித வாழ்வில் துன்பம் என்கிற ஒன்று அடிப்படையானது அது நாம் அனைவரும் அனுபவிக்கும் ஒன்று என்பதை புரிந்து கொள்ளத் தொடங்குவோம். 

சிறந்த பௌத்தத் துறவியும் ஆசிரியருமான திச் நாட் ஹன் சொன்னது போல், "மனநிறைவு இரக்கத்தை ஜனனிக்கிறது." நாம் அதிக கவனத்துடன் இருக்கும்போது, தெளிவான வழிகளை மட்டுமல்ல, நாமும் மற்றவர்களும் வலி, பயம் மற்றும் விரக்தியை அனுபவிக்கும் நுட்பமான வழிகளையும் கவனிக்கத் தொடங்குகிறோம். இந்த புரிதல் நம் மனங்களை மென்மையாக்குகிறது, இதனால் எரிச்சல் அல்லது விரக்தியுடன் செயல்படுவதற்குப் பதிலாக, இரக்கத்துடனும் கருணையுடனும் நாம் எதையும் எதிர்கொள்ள முடியும்.

நினைவாற்றல் மற்றும் தியானத்தின் மூலம், ஒவ்வொருவரும், அவரவர் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அவரவர் சொந்தப் போராட்டங்களையும் சவால்களையும் எதிர்கொள்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். நாம் மிக எளிதாக ஒரு முடிவுக்கு வரக்கூடிய நிலைக்கு அப்பால் செல்ல இது உதவுகிறது. எல்லா உயிரினங்களுக்கும் இரக்கத்தை மெதுவாக விரிவுபடுத்துவதைப் பயிற்சி செய்யும்போது, பிரிவினை எனும் தடுப்புச் சுவரையும், மேன்மையையும் உடைக்கத் தொடங்குகிறோம், இது பெரும்பாலும் மற்றவர்களுடன் ஆழமாக இணைப்பதைத் தடுக்கிறது. இதன் மூலம், சமூக மனிதர்களாகிய நமது சொந்த மகிழ்ச்சிக்கும், நம்மைச் சுற்றியுள்ள அனைவரின் மகிழ்ச்சிக்கும் பங்களிக்கிறோம்.

முடிவுரை: உண்மையான இரக்கத்திற்கான பாதை

"இரக்கம் என்பது ஒரு வினைச்சொல்" என்கிறார் திச் நாட் ஹன். கண்ணுக்குத் தெரியாமல் போராடுபவர்களுக்கு மட்டுமல்ல, நாம் சந்திக்கும் அனைவரிடத்திலும் நாம் இந்த குணத்தை தீவிரமாக வளர்க்க வேண்டும். சிறிய கருணை செயல்கள் மூலமாகவோ, மற்றவர்களின் துன்பங்களைப் பற்றி சிந்திப்பதன் மூலமாகவோ அல்லது அன்பான கருணை தியானத்தின் மூலமாகவோ, நமக்குள் இருக்கும் கருணை விதையானது அனைத்து உயிரினங்களின் மீதும் உண்மையான அக்கறை என்ற மொட்டில் இருந்து மலராகலாம். 

மனிதர்களாகிய, நம்முடைய தனிப்பட்ட தேவைகள் மற்றும் கவலைகளால் நுகரப்படுவது மிகவும் எளிதானது, ஆனால் எல்லோரும், அவர்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்தவர்களாக இருந்தாலும், எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், மகிழ்ச்சியையும் துன்பத்திலிருந்து விடுபடவும் விரும்புகிறார்கள். இங்கே நாம் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். நாம் அற்பமானவர்கள் என்று நாம் நினைக்கலாம், ஆனால் புத்தர் எல்லாமும் எல்லாரும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைக் கற்பித்தார். அதாவது, நாம் அந்நியர்களுக்கு வழங்கும் ஒவ்வொரு புன்னகையும், அன்பான கருணை தியானத்தில் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது.

Top