
சமூக ஈடுபாடு கொண்ட பெளத்தம் என்பது ஒரு சமகால இயக்கம், இது சமூகம், அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு பெளத்த போதனைகளை பின்பற்றுகிறது. இரக்கம், ஞானம் மற்றும் அஹிம்சா அல்லது அகிம்சையின் மதிப்புகளில் வேரூன்றியதுடன், சமூக ஈடுபாடு கொண்ட பெளத்தம் ஒரு தனிப்பட்ட மட்டத்தில் மட்டுமல்ல, சமூகங்கள் மற்றும் உலகளாவிய அமைப்புகள் என எல்லா மட்டங்களிலும் துன்பங்களிலிருந்து விடுதலை அடைய உதவிசெய்கிறது.
பெளத்தம் சமூகத்திலிருந்து ஒருவரை பிரித்துவிடும் என நெடுங்காலமாகவே தவறாக கருதப்படுகிறது அல்லது அதிகப்படியாக புனையப்படுகிறது. புத்தர் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீதான இரக்கத்தால்-மக்களும் விலங்குகளும் அனுபவிக்கும் துன்பத்திலிருந்து வெளியேற ஒரு வழியைத் தேட அது அவரைத் தூண்டியது. சமூக அக்கரையுடனான பெளத்தம் என்பது தனிப்பட்ட மாற்றத்துடனான சமூக மாற்றத்திற்கான உண்மையான நல்வாழ்வை அமைக்க உதவுகிறது. மேலும், இது நலம் சூழ வாழவும், ஞானமடைதலையும் வலியுறுத்துவதுடன், சுயம் அறிதல் என்பது உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கி, தனித்து நிற்பது இல்லை என்பதையும் உணர்த்துகிறது.
சமூக ஈடுபாடு கொண்ட பெளத்தத்தின் தொடக்கம்
"சமூக ஈடுபாடு கொண்ட பெளத்தம்" என்ற சொல்லாடல் 20ஆம் நூற்றாண்டில் குறிப்பாக வியட்னாம் நாட்டைச் சேர்ந்த
ஷென் குரு திக் நியாட்ஹன் என்பவரால் பிரபலம் ஆனது. நாடுகளுக்கிடையே ஆன போர், சுற்றுச்சூழல் சீர்கேடு, சமூக அநீதி என சமகால விவகாரங்களை விளக்கி அவர் பெளத்தத்தை போதித்தார். போரால் வியட்நாம் உருக்குலைந்த தருணத்தில் நியாட் ஹன் களப்பணியாற்றினார். போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது மடத்தை விட்டு அவர் சென்றாலும், அவரது செயல்பாடுகளின் வேர் பெளத்தத்தை அடிபற்றியே இருந்தது.
பெளத்த போதனை என்பது நான்கு மேன்மையான உண்மைகளையும், எட்டு அடிப்படை பாதைகளையும் போன்றது, இரக்கம் மற்றும் ஒருங்கிணைந்து இருத்தலின் முக்கியத்துவத்தை அது வலியுறுத்துகிறது. பாரம்பரியமான இந்த போதனைகள், தனிப்பட்ட மனிதர்கள் படும் துன்பத்தை மட்டும் போக்குவதல்ல, அனைத்து உயிர்களுக்கும், எல்லா சூழலுக்கும் உகந்தவை என்பதே உண்மை. வரலாற்றை முழுவதுமாக ஆராய்ந்தால், பெளத்த சமூகம் பெரும்பாலும் தொண்டு செய்வது, சமூக சேவை, வன்முறைக்கு எதிரான முன்னெடுப்பு ஆகியவற்றை மேற்கொண்டதை பார்க்கலாம், ஆனால், இந்த முன்னெடுப்புகளை சமூக ஈடுபாடு கொண்ட பெளத்தம் இன்னும் பாரம்பரியத்தின்
நெருக்கமாக இணைக்கிறது. இந்த முன்னெடுப்பு சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் கட்டமைப்புகளுடன் இணைந்து இயங்க வைக்கிறது, அதன் மூலம் அனைவரின் துன்பத்தையும் போக்குகிறது.
சுலாக் சிவரக்ஷாவின் தாக்கம்
சமூக அக்கறையுடனான பெளத்தம் என்பதை நடைமுறைப்படுத்தியவர்களில் மிகவும் முக்கியமானவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞர், சமூக செயல்பாட்டாளர் மற்றும் சமூக விமர்சகரான சுலாக் சிவரக்ஷா. [அவர் நமக்கு அளித்த பேட்டியை இங்கு உள்ள லிங் மூலம் படிக்கலாம்] உள்ளூர் அளவில் பெளத்த கோட்பாடுகளை சமூக நீதி, பொருளாதார சமநிலை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் அரசியல் புத்தாக்கம் ஆகியவற்றுடன் இணைத்து செயலாக்கம் செய்தவர் சுலாக், பல முறை கைது செய்யப்பட்ட போதும், நாடு கடத்தபட்ட போதும் அவர் இச்சேவையை கைவிடாமல் தொடர்ந்து செய்தார். அரசின் சர்வாதிகாரத்திற்கு சவால் விடுதல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என தாய்லாந்திலும் உலக அளவிலும் நிலவிய அடிப்படை கட்டமைப்பில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்ற அவர் பாடுபட்டார்.

பௌத்தப் போதனைகள் சமூகத்தின் துன்பத்திற்கான அடிப்படை காரணங்களை நிவர்த்தி செய்ய பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் சுலாக் சிவரக்ஷனின் செயல்பாடுகள் வேரூன்றி இருந்தன. நன்னெறி சார்ந்த அரசு நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலும் பொருளாதார நேர்மை ஆகியவைகளுக்காக அவர் தொடர்ந்து குரல்கொடுத்தார். பௌத்த மதத்தை தனிப்பட்ட விடுதலைக்கான ஒரு பாதையாக மட்டுமல்லாமல், சமூக மாற்றத்திற்கான சக்தியாக பார்க்க உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பயிற்றுனர்களை ஊக்குவிப்பதற்காக 1989 ஆம் ஆண்டு பெளத்த மதத்தினருக்கான சர்வதேச வலைப்பின்னலை அவர் நிறுவினார்.
சமூக ஈடுபாடு கொண்ட பெளத்தத்தின் முக்கிய கொள்கைகள்
சமூக ஈடுபாடு கொண்ட பெளத்தம் நவீன சவால்களுக்கு புத்தரின் காலத்தால் அழியாத போதனைகளைப் பயன்படுத்த விரும்புகிறது. இந்த இயக்கம் பல்வேறு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது:
ஒன்றோடு ஒன்று இணைந்திருத்தல்
உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும், நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை என புத்தர் கற்பித்தார். யாரும் தனித்துவிடப்பட்டவர்கள் அல்ல என்பதுதான் பிரத்தியசமுத்பாடா ( pratītyasamutpāda) கோட்பாடு அல்லது சார்ந்திருத்தலின் அடிப்படை. எல்லைகளால் ஏற்படும் மோதல், பிரிவினை ஆகியவற்றால் நிகழும் சமூகம், பொருளாதாரம், சூழியல் காரணிகளால் துன்பம் அனுபவிப்பதை உணருவதை சமூக ஈடுபாடு கொண்ட பெளத்தம் ஊக்குவிக்கிறது. எனவே, துன்பத்தின் ஆணிவேரை போக்குவதற்கு தனிநபர் மற்றும் அமைப்புரீதியான நிலைகளில் நடவடிக்கை தேவைப்படுகிறது.
உதாரணமாக, சுற்றுச்சூழல் சீரழிவு, வறுமை, வன்முறை ஆகியவை ஒரு தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, உலகளாவிய கொள்கைகள், நமது தனிப்பட்ட நுகர்வோர் நடத்தை, சமூக சமத்துவமின்மை ஆகியவற்றோடு ஆழமான தொடர்பு கொண்டவை. இந்த இணைப்பை அங்கீகரிப்பதன் மூலம், இந்தப் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காண்பதை நாம் நோக்கமாகக் கொள்ள முடியும்.
இரக்கத்தின் செயலாக்கம்
இரக்கம் என்பது பௌத்தத்தின் முக்கிய அம்சமாகும், சமூக ஈடுபாடு கொண்ட பௌத்த சமயமானது இரக்கத்தைப் தெளிவான வழிகளில் வலியுறுத்துகிறது. கருணை என்பது வெறும் அனுதாபம் அல்லது கருணை எண்ணங்களுடன் மட்டும் நின்றுவிடாது – மற்றவர்களின் துன்பங்களைப் போக்க தீவிரமாகப் பாடுபடுவதும் இதில் அடங்கும். நடைமுறையில் இது சமூக நீதியை அமல்படுத்தும் பணியில் ஈடுபடுவது, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பது, பருவநிலை மாற்றத்தை சமாளிப்பது அல்லது மனித உரிமைகளுக்காக வாதிடுவது ஆகியவற்றை இது அர்த்தப்படுத்தும். இரக்கமுள்ள நடவடிக்கையின் மூலம், தனிப்பட்ட ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவதற்கும் சமூக துன்பத்தை நீக்குவதற்கும் எந்த முரண்பாடும் இல்லை என்பதை நாம் காண்கிறோம். உண்மையில், அவை பரஸ்பரம் வலுவூட்டும் பாதைகளாக இருக்கின்றன.
அகிம்சை
அகிம்சை என்பது சமூக ஈடுபாடு கொண்ட பௌத்தத்தின் மற்றொரு அடிப்படை கொள்கையாகும், இது மற்ற மனிதர்களை காயப்படுத்தவோ அல்லது கொல்லவோ கூடாது என்ற முதல் ஐந்து கட்டளைகளின் அடிப்படையில் உள்ளது. வன்முறை என்பது வெறுப்பு மற்றும் பிரிவினை சுழற்சிகளை மட்டுமே உருவாக்கி, அதனை வலுப்படுத்துகிறது. எனவே நாம் அனைவரும் கருணையுடனும், மரியாதையுடனும் செயல்பட வேண்டும். போர், ஒடுக்குதல் மற்றும் எல்லா வகையான அநீதிகளுக்குமான எதிர்ப்பையும் இது உட்படுத்துகிறது. எனவே, பௌத்தர்கள் பெரும்பாலும் அமைதியான செயல்பாடு, மத்தியஸ்தம் மற்றும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
மன நிறைவு மற்றும் விழிப்புணர்வு
துன்பத்தின் யதார்த்தத்தை புரிந்துகொள்ள மனநிறைவை, விழிப்புக்கான ஒரு கருவியாக பயன்படுத்த சமூக ஈடுபாடு கொண்ட பௌத்தம் ஊக்குவிக்கிறது. விழிப்புணர்வுடன் இருக்கவும், துன்பங்களுக்கு நம்முடைய சொந்த செயல்களே காரணம் என உணர்தல், மற்றவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய உதவுதல் போன்றவற்றிற்கு மனநிறைவு உதவுகிறது. மேலும் இது நமது வாழ்க்கைமுறை தேர்வுகள், நுகர்வு முறைகள் மற்றும் சமூக அமைப்புகளில் பங்கேற்பதன் மூலம் எவ்வாறு துன்பங்கள் அல்லது நல்வாழ்விற்கு பங்களிக்க முடியும் என்பதை கண்டறிய உதவுகிறது. மனநிறைவை அடைவதன் மூலம் நாம் மற்றவர்களோடு எப்படி பழகுகிறோம் என்பதையும், பொறுப்புள்ள, இரக்கமுள்ள தேர்வுகளை எப்படி மேற்கொள்கிறோம் என்பதையும் உணர்ந்துகொள்ளமுடியும்.
நேர்மை
சமூக கட்டமைப்புகளில் நேர்மையான சம உரிமை மற்றும் நீதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சமூக ஈடுபாடு கொண்ட பௌத்தம் வலியுறுத்துகிறது. துன்பத்திலிருந்து விடுதலையடைய வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான விருப்பம் உள்ளது. மக்களாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும், அனைவருக்குமான பொருளாதார நீதி, பாலின சமத்துவம், இன நீதி மற்றும் பாதுப்புக்காக நாம் பணியாற்ற வேண்டும். துன்பத்தின் ஊற்றுக்கண்ணாக இருப்பது அநீதி என்பதை உணர்வதன் மூலமாக சமத்துவமின்மையை ஒழிப்பதற்கும், அனைத்து மட்டங்களிலும் நியாயம் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வெளிப்படை தன்மையை மேம்படுத்துவதற்கும் நாம் செயல்பட முடியும்.

சமூக ஈடுபாடு கொண்ட பெளத்தத்தின் நன்மைகள்
ஆழ்மன அமைதி
இரக்கம் உள்ளவர்களைக் கொண்ட உலகில் வாழ்வது எப்படியிருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். இது இயற்கையாகவே தனிப்பட்ட முறையில் திருப்தியளிக்கும் வகையிலும், உள்மன அமைதியையும் அளிப்பதுடன், நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அறியமுடியும், அது நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நன்மையே தரும். குறிப்பாக துன்பத்தில் சிக்கி உழல்பவர்கள் மத்தியில் நேர்மையான நல்ல மாற்றங்களை கொண்டுவரும் பட்சத்தில் அது வாழ்வுக்கான காரணத்தை அவர்களுக்கு உணர்த்துவதுடன், அறிவியல் பூர்வமாக நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.
வலுவான சமுதாயம்
நாம் அனைவரும் மகிழ்ச்சியான, இணக்கமான சமூகமாக வாழ விரும்புகிறோம். அனைவருக்குமான இரக்க குணத்துடன் – சமுதாயத்தில் எந்த நிலையில் அவர்கள் இருந்தாலும்- நாம் வலுவான, மகிழ்ச்சியான அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை கட்டமைப்போம். எப்போது இரக்கம், பரஸ்பர மரியாதை ஆகியவை சமுதாயம் முழுமையும் பரவுகிறதோ அப்போதுதான் அனைவரும் பயனடைவார்கள்.
ஆன்மீகத்தின் வளர்ச்சி
தியானம் கடந்த இரக்கத்தைப் பேணி வளர்த்தல் மூலம் சமூக ஈடுபாடு நம்முடைய ஆன்மீக நடைமுறையை இன்னும் ஆழமாக்குகிறது, மேலும் நாம் உருவாக்க விரும்பும் பல விஷயங்களை நடைமுறையில் செயல்படுத்த அது நமக்கு உதவுகிறது. தாராளமாய் தானமளித்தல், துன்பத்தில் இருப்பவர்களுக்காக நேரம் ஒதுக்கி அன்பு காட்டல், எதிர் கருத்துகளை சகித்துக்கொள்ளுதல் ஆகியவற்றை பயிற்சிக்க சமூக ஈடுபாடு கொண்ட பெளத்தம் உதவுகிறது. இந்த வழியில் வேலை செய்வது, நேர்மறையான ஆற்றலை உருவாக்குவதற்கும், அறிவொளியை நோக்கிய பாதையை உருவாக்குவதற்கும் நம்பமுடியாத சக்திவாய்ந்த வழியாகும்.
முடிவுரை
சமூக ஈடுபாடு கொண்ட பௌத்த மதத்தின் பாதை என்பது ஆன்மீகத்தின் முழு ஒருமைப்பாட்டுடன் கூடிய சமூக நடவடிக்கையை வலியுறுத்துகிறது. தியானத்தை கடந்து உலகளவில் நிலவும் துன்பங்களிலிருந்து விலக உதவுகிறது. தனிநபர்கள் மற்றும் சமுதாயம் என்ற வகையில் நாம் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளோம். ஒவ்வொரு நபரின் நலனும் அனைவரின் நலனும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. கவனத்துடன் செயலாற்றுதல், பெருந்தன்மை, அகிம்சை, நீதிக்கான அர்ப்பணிப்பு, மேலும் இரக்கமுள்ள, நியாயமான, அமைதியான உலகை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.