COP26க்கு புனிதர் தலாய் லாமாவின் கருத்து

Uv hhdl cop message

இன்றைய காலகட்டத்தில் நாம் எதிர்கொள்ளும் பருவநிலை அவசரம் குறித்து விவாதிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு COP26 ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறுவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 

புவி வெப்பமடைதல் என்பது யதார்த்தத்தின் அவசரம். நம் யாராலும் கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால் சிறந்த எதிர்காலத்திற்கு பங்களிப்பாற்றக் கூடிய நிலையில் நாம் அனைவரும் இருக்கிறோம். உண்மையில், நாம் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதை உறுதிசெய்யும் பொறுப்பு நமக்கும், இன்று வாழும் எழு நூறு கோடிக்கும் அதிகமான மனிதர்களுக்கும் இருக்கிறது. நம்பிக்கை மற்றும் தீர்மானத்துடன், நாம் நம்மையும் நம் சுற்றத்தாரின் வாழ்வையும் முறையாக பராமரிக்க வேண்டும். 

பூமி வளமானது, தாராளமானது என்று நம் மூதாதையர்கள் கண்டார்கள், அது அப்படித் தான் இருந்தது, ஆனால் அதைவிட அதிகமானது என்னவென்றால் அதுவே நம்முடையே ஒரே ஒரு வீடு. அதனை நமக்காக மட்டுமின்றி நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்காகவும் நம்முடன் இந்தக் கோளை பகிர்ந்து கொண்டிருக்கும் எண்ணிலடங்கா உயிரினங்களுக்காகவும் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். 

“மூன்றாவது துருவம்” என அழைக்கப்படும் திபெத்திய பீடபூமியானது வட மற்றும் தென் துருவங்களுக்கு வெளியே பனி மற்றும் உறை பனியினால் ஆன மிகப்பெரிய நீர்த்தேக்கம். உலகின் மிகப்பெரிய நதிகளான பிரம்மபுத்திரா, கங்கை, இந்து, மேகாங், சல்வீன், மஞ்சள் ஆறு மற்றும் யங்ட்சே உள்ளிட்டவகைகளின் ஆதாரம் திபெத் ஆகும். வாழ்வாற்கான ஆதாரம் இந்த நதிகள் ஏனெனில் அவை ஆசியா முழுமையிலும் ஏறத்தாழ இருநூறு கோடி மக்களுக்கு குடிநீர், விவசாயத்திற்கு பாசனம் மற்றும் புனல் மின்சாரம் தருகின்றன. திபெத்தில் ஏராளமான பனிப்பாறைகள் உருகுதல், தடுப்பணைகள் அமைத்தல், நதிகளை திசைமாற்றுதல், பரவலாகும் காடுகள் அழிப்பு போன்று ஒரு பகுதியில் செய்யப்படும் சுற்றுச்சூழல் புறக்கணிப்பானது மற்ற எல்லா இடங்களிலும் அதன் விளைவுகளை எப்படி கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இன்று, நாம் எதிர்காலத்தை பயத்துடன் கூடிய பிரார்த்தனையால் அணுக வேண்டியதில்லை, மாறாக விஞ்ஞான புரிதலை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தமான செயல்முறையே நாம் முன்னெடுக்க வேண்டியவை. நமது கோளில் இருப்பவர்கள் முன்பு எப்போதும் இல்லாததை விட தற்போது ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றனர். நாம் செய்யும் அனைத்துமே நம்முடைய மனித இனம், எண்ணற்ற விலங்கு மற்றும் தாவர இனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மனிதர்களாகிய நாம் மட்டுமே இந்த பூமியை அழிக்கும் சக்தி கொண்ட படைப்புகள், அதே சமயம் அதனை காப்பதற்கான மிகப்பெரிய திறன் படைத்த இனமும் நாம் தான்.  அனைவரின் நலனுக்காகவும் உலகளாவிய அளவில் காலநிலை மாற்றத்தின் பிரச்சினைகளை நாம் ஒத்துழைப்புடன் எதிர்கொள்ள வேண்டும். அதே சமயம் தனிப்பட்ட அளவில் நம்மால் கட்டாயமாக என்ன செய்ய முடியுமோ அதையும் செய்ய வேண்டும். அன்றாட சிறு சிறு செயல்களான, நாம் நீரை எப்படி பயன்படுத்துகிறோம் நமக்குத் தேவையில்லாததை எவ்வாறு அப்புறப்படுத்துகிறோம் என்பவையும் விளைவுகளைக் கொண்டு இருக்கின்றன. நாம் நமது இயற்கையான சூழலை கவனித்துக்கொள்வதை நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்ள வேண்டும், மேலும் அறிவியல் நமக்கு என்ன கற்பிக்கிறது என்பதைப் பயில வேண்டும். 

காலநிலை மாற்றத்திற்கு உறுதியான செயல் தேவை என்று நமது இளைய சமுதாயம் கோருவதைப் பார்ப்பது எனக்கு ஊக்கமளிக்கிறது. எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். அறிவியல் சொல்வதைக் கேட்டு இக்கட்டான சூழலில் அதற்கேற்ப செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் செயற்பாட்டாளரான கிரெட்டா தன்பர் போன்றவர்களின் முயற்சி பாராட்டிற்குரியது. அவர்களுடைய நிலைப்பாடு யதார்த்தமானது என்பதால், நாம் அவர்களை கட்டாயம் ஊக்கப்படுத்த வேண்டும். 

மனிதநேயத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதன் முக்கியத்துவத்தை நான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன், ஒவ்வொரு மனிதனும் நம்மில் ஒரு பகுதி என்ற எண்ணம். புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல் தேசிய எல்லைகளால் வரையறுக்கப்படவில்லை; அது நம் அனைவரையும் பாதிக்கிறது.

நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த நெருக்கடியை எதிர்கொண்டால், அதன் விளைவுகளை மட்டுப்படுத்த நாம் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் உணர்வோடு செயல்பட வேண்டியது அவசியம்.நம்முடைய தலைவர்கள் ஒன்றாகச் சேர்ந்து இந்த அவசர நிலையை அணுக உறுதியான ஒருமித்த முடிவை எடுப்பதோடு மாற்றத்திற்கான கால அட்டவணையை நிர்ணயம் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன் பிரார்த்திக்கிறேன். பாதுகாப்பான, பசுமையான, மகிழ்ச்சியான உலகை உருவாக்குவதற்காக நாம் செயல்பட வேண்டும். 

என்னுடைய பிரார்த்தனைகள் மற்றும் நல்வாழ்த்துகளுடன்,

தலாய் லாமா

31 அக்டோபர் 2021

Top