புத்தரும், அவரது சமகால அரசியல் நிகழ்வுகளும்

வரலாற்றில் புத்தரின் வாழ்க்கை என்பது பண்டைய பௌத்த இலக்கியத்தின் சில பக்கங்களில் இருந்து தோன்றியது. தொடக்க காலம் என்பது ஏதோ ஒரு நூலில் மட்டும் இருக்காது, ஆனால் பாலி சூத்திரம் (சமஸ். சூத்ரா) மற்றும் தேரவாத பாரம்பரியத்தின் வினயா இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களில் துணுக்குகளாக மட்டுமே உள்ளன. அதன் பின்னர் மகாசங்கிகா, சர்வஸ்திவாதா மற்றும் மஹாயனா பாரம்பரிய நூல்கள் பல்வேறு, சில நேரங்களில் அசாத்திய மனித பண்புகளை குறிப்பிடும் இந்த தொடக்க கால நூல்களில் இருந்து வெளிப்பட்ட ஒரு மேலோட்டமான தோற்றத்தை அழகுபடுத்துகின்றன.

பாலி இலக்கியத்தில் வெளிப்படும் உண்மையான தோற்றமானது, மனிதன் சொந்தமாகவும் தான் இருக்கும் துறவற சமூகத்திலும் மிகவும் கஷ்டத்துடன், பாதுகாப்பற்ற காலகட்டத்தில், எண்ணிலடங்கா துயரங்கள் மற்றும் சவால்களை சந்தித்தான் என்கிறது. நாம் இங்கே புத்தருடைய வாழ்வின் தொடக்க காலத்தை ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் பேச்லர் தன்னுடைய ஆராய்ச்சியில் வழங்கியுள்ள பௌத்த நாத்திகரின் வாக்குமூலம் என்பதன் அடிப்படையில் வரையறுக்கலாம். அனைத்து பெயர்களும் பாலி பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

புத்தர் பொது ஊழிக்காலம் 566ல் லம்பினி பார்க்கில் பிறந்தார், தற்போது அது தெற்கு நேபாளம் ஆகும். இந்த இடம் சக்யாவின் தலைநகர் ஆகும் (Sha-kya, சமஸ். ஷக்யா) கபிலவத்துவிற்கு மிக அருகில் உள்ளது (Ser-skya’i gnas, சமஸ். கபிலவஸ்து). அவருடைய இயற்பெயர் சித்தார்த்தர் (Don-grub, சமஸ். சித்தார்த்தா) என்பது பாலி பதிப்பில் காணப்படவில்லை; இருப்பினும், சௌகரியத்திற்காக நாம் இங்கே அந்தப் பெயரை பயன்படுத்தலாம். புத்தரை குறிப்பிட்டு நாம் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு பெயர் கௌதமா என்பது உண்மையில் அவருடைய குலத்தின் பெயர் ஆகும். 

சித்தார்த்தரின் தந்தை, சுத்தோதனா, பௌத்த இலக்கியத்தில் விவரிக்கப்படுவது போல மன்னர் அல்ல. இருப்பினும் அவர் கௌதம குலத்தில் இருந்து வந்த ஒரு நேர்மையான மனிதர், ஒருவேளை அவர் சக்யாவின் மண்டல ஆளுநராக இருந்திருக்கலாம். பாலி இலக்கியம் அவருடைய தாயாரின் பெயரைப் பதிவு செய்யவில்லை; ஆனால் பின்னர் வந்த சமஸ்கிருத ஆதாரங்கள் அவர் மாயா தேவி என்று அடையாளம் காட்டுகின்றன. சித்தார்த்தர் பிறந்த குறுகிய காலத்திலேயே அவரது தாயார் இறந்துவிட்டதால் அவரது தந்தை, மனைவியின் தங்கை பஜாபதியை திருமணம் செய்துகொண்டர். அவரால் சித்தார்த்தர் வளர்க்கப்பட்டார்.

சக்யா பண்டைய குடியரசு நாடு, ஆனால் சித்தார்த்தர் பிறந்த காலத்தில், அது கோசலாவின் சக்திவாய்ந்த ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது  (Ko-sa-la, சமஸ். கோசலா). கோசலா இன்றைய பீகாரில் கங்கை நதியின் வடக்கு கரையில் இமயமலை அடிவாரம் வரை நீண்டிருந்தது. அதன் தலைநகர் சவ்வாத்தி ஆகும்  (gNyan-yod, சமஸ். ஷ்ரவஸ்தி).

புத்தருடைய வாழ்வில் இடம்பெற்றிருக்கும் முக்கிய புவியியல் இடங்கள் பற்றிய சுருக்கமான விளக்கம் அவரது வாழ்க்கை வரலாற்றைப் பின்பற்றுவதை எளிதாக்கும் என்பதால், அதை இங்கே கோடிட்டுப் பார்ப்போம். சக்யா கோசலாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது, அதன் தென்கிழக்கில் மல்லா மாகாணம் அமைந்திருந்தது.

மல்லாவின் கிழக்கில் வஜ்ஜி குடியரசு இருந்தது (சமஸ். வ்ரஜ்ஜி), அதன் தலைநகரம் வெசாலி ஆகும் (Yangs-pa-can, சமஸ். வைஷாலி). வஜ்ஜி குடியரசானது குலங்களின் கூட்டமைப்பால் ஆட்சி செய்யப்பட்டது; அவற்றில் லிச்சாவி (லி-ச்சா-பி, சமஸ். லிச்சாவி) குலம் மிகவும் பிரபலமானதாகும். வஜ்ஜி மற்றும் கோசலாவின் தெற்கே, கங்கை நதியின் குறுக்கே, மகதத்தின் வலிமைமிக்க ராஜ்ஜியம் (யுல் ம-கா-தா, சமஸ். மகதா), அதன் தலைநகரான ராஜகஹாவில் (rGyal-po'i khab, சமஸ். ராஜக்ரஹா) அமைந்திருந்தது. கோசலாவின் மேற்கில், தற்போதைய பாகிஸ்தானிய பஞ்சாப், கந்தாராவாக இருந்தது, அது பாரசீக அகாமனிசியப் பேரரசின் சத்ரபி பிரதேசமாக இருந்தது. அதன் தலைநகரம், தக்கசிலாவில் (rDo-‘jog, சமஸ். தக்ஷசிலா), அந்த காலத்தில் மிகப் பிரபலமான பல்கலைக்கழகம் இருந்தது. அங்கு, கிரேக்க மற்றும் பாரசீக சிந்தனைகள் மற்றும் கலாச்சாரங்கள் அவற்றின் சமகால இந்தியப் பழக்கங்களுடன் கலந்தன. 

சித்தார்த்தா வளர்ந்த கபிலவத்துவின் வடக்கு வீதி, அக்காலத்தின் முக்கிய வணிகப்பகுதியாக இருந்தது. வடக்கு வீதியின் பாதை கோசலையை மேற்கில் காந்தாரத்தையும், சக்யா, மல்லா மற்றும் வஜ்ஜி குடியரசு வழியாக தெற்கே மகதாவையும் இணைத்தது. எனவே, பாலி நூல் சித்தாத்தா கௌதமாவைப் பற்றி சிறிதளவே சொன்னாலும் இருபத்தொன்பது வயதிற்கு முன்பே, அவர் பல கலாச்சாரங்களை வெளிப்படுத்தியிருக்கலாம். நிறுவப்படுவதற்கு முன்னரே அவர் தக்கசிலாவை கற்றும் கூட இருக்கலாம். 

சித்தார்த்தர் பத்தகாகன்னாவை மணமுடித்துக்கொண்டார், இவர் சமஸ்கிருத இலக்கியத்தில் யசோதராக (Grags ‘dzin-ma) அறியப்படுகிறார். அவர் சித்தார்த்தரின் அத்தை மகள் மற்றும் தேவதத்தாவின் தங்கையாவார். பின்னர் இதே தேவதத்தனே புத்தரின் முக்கிய எதிரியானார். அவர்களுக்கு ஒரு மகன், அவருடைய பெயர் ராகுலா. அவருடைய மகன் பிறந்த பிறகு, புத்தர் தன்னுடைய 29 வயதில் கபிலவத்துவை விட்டு வெளியேறி மகதாவை நோக்கி தன்னுடைய ஆன்மீக நிதர்சனத்தை நாடிச் சென்றார். வடக்கு சாலையில் பயணித்து கங்கை நதியைக் கடந்து, அவர் ராஜகஹாவை அடைந்தார். அந்த சமயத்தில் மகதாவை பிம்பிசாரா மன்னர் ஆட்சி செய்து வந்தார், கோசலம் மன்னர் பசேனதியால் ஆளப்பட்டது.   கோசலம் மற்றும் மகதா இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரண்டு மன்னர்களும் தன் உடன்பிறந்தவர்களை மாறி மாறி திருமணம் செய்து கொண்டனர். மன்னர் பசேனதியின் தங்கை பெயர் தேவி ஆகும்.  

மகதாவில் இருந்த இரண்டு ஆசிரியர்களான அலாரா கலமா (சமஸ். அரடா கலாமா) மற்றும் உட்டகா ரமபுத்தாவிடம் (சமஸ். உத்ரகா ரமபுத்ரா) ஆகியோரிடம் சித்தார்த்தர் படித்தார். பிராமணப் பாரம்பரியத்தில் இருந்து வந்த அவர்கள், நிலையற்ற தன்மை குறித்தும், எதையும் வேறுபடுத்திப் பார்க்காவோ எதையும் விவரிக்கவோ இல்லாமல், ஆழ்ந்து ஒருநிலைப்படுத்துதலை அடையவும் கற்றுக் கொடுத்தார்கள். இந்த நிலை அடைதல்களில் அதிருப்தி அடைந்த சித்தார்த்தர் இந்த ஆசிரியர்களை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தீவிர கட்டுப்பாட்டை மேற்கொண்டார், கிட்டத்தட்ட எதையும் சாப்பிடவில்லை, முழுமையாக விரதமர் இருந்தார். இத்தகைய நடைமுறை விடுதலைக்கு வழிவகுக்காது என்று மீண்டும் அவர் உணர்ந்தார். பின்னர் அவர் தனது விரதத்தை கைவிட்டு, அருகிலுள்ள உருவேலாவுக்கு (lDeng-rgyas, சமஸ். உருபில்வா), தற்போதைய புத்தகயாவுக்குச் சென்றார், அங்கு அவர் தனது முப்பத்தைந்தாவது வயதில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். அவர் மகதத்திற்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது.

ஞானம் அடைந்த பின்னர், அவர் மேற்கே, வாரணாசிக்கு வெளியே, தற்போதைய சாரநாத்தின், இசபதானாவிற்குச் சென்றார் (Ri-dvags-kyi gnas, சமஸ். ம்ரகதவா). கங்கை நதிக்கு வடக்கே இருந்த போதிலும், மன்னன் பசேனதி தனது சகோதரி தேவியை பிம்பிசார மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்தபோது வரதட்சணையின் ஒரு அங்கமாக இந்தப் பகுதியை மகதத்திற்கு விட்டுக்கொடுத்தார். புத்தர் தனது ஐந்து தோழர்களுடன் மான் பூங்காவில் மழைக்காலத்தை கழித்தார், சிறிது காலத்திலேயே ஒரு சிறிய எண்ணிக்கையிலான பின்பற்றுபவர்களை ஈர்த்தார், அவர்கள் அவர் வளர்த்தெடுக்க வேண்டிய பிரம்மச்சரிய சமூகத்தை உருவாக்கினர்.

வெசாலியைச் சேர்ந்த லிச்சாவி பிரபு மஹாலி புத்தரைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை மகதவிற்கு அழைக்குமாறு மன்னர் பிம்பிசாராவிடம் பரிந்துரைத்தார். எனவே பருவமழைக்குப் பிறகு, புத்தரும் அவருடன் வளர்ந்து வந்த சமூகமும் கிழக்கே மகதத் தலைநகர் ராஜகஹாவுக்குத் திரும்பினர். மன்னர் பிம்பிசாரா புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டார், மேலும் மழைக்காலத்தில் புத்தர் தனது சமூகத்தினரை தங்கவைப்பதற்காக "மூங்கில் தோப்பு" என்று அழைக்கப்படும் "வேலுவனா" (‘Od-ma’i tshal, சமஸ். வேணுவனா) எனும் பயன்படுத்தப்படாத பூங்காவை வழங்கினார்.

அந்த வேகத்திலேயே சரிபுட்டா (Sha-ri’i bu, சமஸ். ஷரிபுத்ரா) மற்றும் மொக்கல்லனா (Mo’u dgal-gyi bu, சமஸ். மௌட்கல்யாயனா), எனும் உள்ளூர் குருவின் பிரதான சீடர்கள் புத்தரின் சமூகத்தில் சேர்ந்தனர். பிற்காலத்தில் அவர்கள் புத்தரின் நெருங்கிய சீடர்களானார்கள். 

வளர்ந்து வரும் துறவற சமூகத்திற்காக உறுதிமொழிகளை உருவாக்குமாறு சரிபுட்டா புத்தரைக் கேட்டுக்கொண்டார், மேலும் ஜெயினம் போன்ற பிற ஆன்மீகக் குழுக்களின் சில பழக்கவழக்கங்களை சமூகம் தழுவ வேண்டும் என்று மன்னர் பிம்பிசாரா பரிந்துரைத்தார். குறிப்பாக, போதனைகளைப் பற்றி விவாதிக்க அவர்கள் மாதாந்திர காலாண்டு கூட்டங்களை (gso-sbyong, Skt. uposhadha) நடத்துமாறு மன்னர் வேண்டினார். புத்தரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஒரு நாள், கோசலத்தின் தலைநகரான சவத்தியைச் சேர்ந்த ஒரு பணக்கார வங்கியாளரான அனதபிண்டிகா (dGon-med zas-sbyin, சமஸ். அனதபிண்டாடா), வணிக நிமித்தமாக ராஜகஹாவுக்கு வந்தார். புத்தரால் ஈர்க்கப்பட்ட அவர், மன்னன் பசேனதியின் தலைநகரான சவத்தியில் மழைக்காலங்களைக் கழிக்க அவருக்கு இடம் அளித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, புத்தரும் அவரது துறவிகளின் சமூகமும் கோசலைக்குச் சென்றனர்; ஆனால் அவர்கள் தங்குவதற்கு பொருத்தமான இடத்தை அனதபிண்டிகா வழங்குவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவர்கள் சென்றுவிட்டனர்.

இந்த இடைப்பட்ட காலத்தில், புத்தர் தன்னுடைய குடும்பத்தினரை பார்ப்பதற்காக கபிலவத்து சென்றார். அவருடைய தந்தை, சுத்தோதனா, அவருடைய பின்பற்றாளர்களின் ஒருவராக இணைந்தார் மேலும் அவருடைய எட்டு வயது மகன் ராகுலாவும் புதிய துறவி வரிசையில் சேர்ந்தார். தொடர்ந்து வந்த வருடங்களில் சில சகியர்களும் இணைந்தனர், அவர்களில் புத்தரின் உறவினர்கள் அனந்தா, அனுருத்தா, தேவதத்தா, நந்தா, “அழகான நந்தா” என்று அறியப்படும் சுந்தரநந்தாவும் (mDzes-dga’, சமஸ். சுந்தரிநந்தா) அடங்குவர். 

புத்தரின் மாற்றாந்தாய் மற்றும் சித்தியான பஜாபதி, வளர்ந்து வந்த துறவற சமுகத்தில் இணைவதற்காக கேட்டார், ஆனால் முதலில் புத்தர் அதை மறுத்தார். இருப்பினும் மனம் தளராமல், பஜாபதி தலையை மொட்டையடித்து, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, ஒரு பெரிய பெண்கள் குழுவுடன், புத்தரை பின்பற்றத் தொடங்கினார். பஜாபதி தொடர்ந்து புத்தரிடம் நியமனம் கோரினார், ஆனால் புத்தர் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையும் கூட மறுத்துவிட்டார். இறுதியாக, புத்தர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, அனந்தா அவர் சார்பாக மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, இறுதியாக புத்தர் பெண்களை நியமிக்க ஒப்புக்கொண்டார். பௌத்தத்தில் கன்னியாஸ்திரிகள் நியமன தொடக்கமானது வஜ்ஜி குடியரசின், வெசாலியில் இடம்பெற்றது. 

அனதபிண்டிகா தாராள மனப்பான்மைக்கு குறிப்பிடும்படியானவர், சில ஆண்டுகள் கழித்து புத்தர் கோசலைக்குத் திரும்பிய பிறகு, சவத்தியில் "ஜெதவன", “ஜெதா தோப்பு” என்று அழைக்கப்படும் ஒரு பூங்காவை வாங்குவதற்கு அவர்  அதிக அளவிலான தங்கம் கொடுத்தார். அங்கு அவர் புத்தருக்கும் அவரது துறவிகளுக்கும் மிகவும் ஆடம்பரமான மழைக்கால குடியிருப்பைக் கட்டினார். இறுதியில், அவர் ஞானமடைந்து சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தர் தனது துறவற சமூகத்திற்காக முறையான மழைக்கால பின்வாங்கல் வழக்கத்தை (dbyar-gnas, சமஸ். வர்ஷகா) ஏற்படுத்தினார், ஆண்டின் பருவமழைக்காலமான மூன்று மாதங்கள் துறவிகள் மற்ற மாதங்களைப் போல ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அலைந்து திரியாமல் மூன்று மாதங்களும் ஒரே இடத்தில் இருப்பதற்கான முறையை ஏற்படுத்தினார். மொத்தமாக, புத்தர் 19 மழைக்கால கூட்டங்களுக்காக ஜெதா தோப்பில் நேரத்தை செலவிட்டிருக்கிறார், அந்த சமயத்தில் அவர் தனது 844 சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார்.  அனதபிண்டிகா புத்தரின் துறவற சமூகத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளராகத் தொடர்ந்தார், இருப்பினும் அவரது வாழ்க்கையின் இறுதிகாலத்தில் அனதபிண்டிகா திவாலானார். 

கோசல மன்னர் பசனேதி கௌதம புத்தரை முதன்முதலில் ஜெதா தோப்பில் சந்தித்தார், அப்போது அவருக்கு நாற்பது வயது இருக்கும். புத்தர் மன்னரை வெகுவாகக் கவர்ந்தார், அதன்பின் பசேனதியும் அவரைப் பின்தொடர்பவர்களில் ஒருவரானார். இருப்பினும், பசேனதி மன்னருடன் புத்தரின் உறவு எப்போதும் மிகவும் பலமற்றதாக இருந்தது. அறிவுசார் கற்றலில் ஆர்வமுள்ளவராக மன்னர் இருந்தபோதிலும்; அவர் ஒரு சிற்றின்பவாதி, மிகவும் கொடூரமானவர். உதாரணமாக, சித்தப்பிரமை காரணமாக, மல்லாவைச் சேர்ந்த அவரது நண்பனும் படைத் தளபதியுமான பந்துலாவை மன்னரே கொன்றார்; இருப்பினும், மனம் வருந்திய அவர், பின்னர் பந்துலாவின் மருமகனான கராயனைத் தனது படைத் தலைவராக நியமித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தளபதி கராயனா தனது மாமாவின் மரணத்திற்கு பழிவாங்கும் வகையில் பசேனதியை பதவி நீக்கம் செய்தார். எப்படி இருந்தாலும், புத்தர், மன்னரின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளையும் துரதிஷ்டங்களையும் பொருத்துக்கொண்டார். சந்தேகத்திற்கு இடமின்றி அவர் தனது துறவற சமூகத்தினர் கொள்ளையர்கள் மற்றும் காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கப்பட மன்னரின் பாதுகாப்பு தேவை, அத்துடன் இவர்களுக்கு ஆதரவளிக்கும் பணக்காரர்களின் அணுக வேண்டிய தேவை இருந்ததாலும் அப்படி சகித்துக் கொண்டார்.

அவரது ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாக்க, மன்னன் பசேனதிக்கு ஒரு வாரிசு தேவைப்பட்டது. அவரது முதல் மனைவி, மகத மன்னர் பிம்பிசாரரின் சகோதரிக்கும், பசேனதிக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன்னர், புத்தரைப் பின்பற்றி வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அழகிய பெண்ணான மல்லிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அரசவையில் இருந்த பிராமண குருமார்கள் அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்று வீண் பழி சுமத்தினார்கள். மல்லிகா மன்னன் பசேனதிக்கு வஜிரி (rDo-rje-ma, சமஸ். வஜ்ரி) என்ற மகளைப் பெற்றுக் கொடுத்தார்.

தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று விரும்பிய மன்னர் மூன்றாவது திருமணம் செய்ய முடிவெடுத்தார். எனவே அவர் வசபாவை மணமுடித்தார். வசபா, புத்தரின் தந்தையின் மரணத்திற்குப் பிறகு சக்யாவின் ஆளுநராக இருந்த அவருடைய உறவினர் மஹாநாமாவின் (மிங்-சென், சமஸ். மஹாநாமா) மகள் ஆவார். மகாநாமா புத்தரின் நெருங்கிய சீடர்களான அனந்தா மற்றும் அனுருத்தரின் சகோதரர்.

மஹாநாமா வசபாவை ஒரு உன்னதப் பெண்ணாக வளர்த்தாலும், அவள் உண்மையில் அடிமை குலத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு முறையற்ற உறவில் பிறந்தவர். வசபா மன்னன் பசேனதிக்கு விடதபா என்ற மகனைப் பெற்றெடுத்தாலும், கோசல சிம்மாசனத்தின் வாரிசாக முடியாத ஆபத்து, அவனது தாயின் பிறப்பு தொடர்பான மர்மத்தால் ஏமாற்றத்தைத் தந்தது. வசபாவுடன் தொடர்புடையவர் என்பதால், இந்த ஏமாற்றம் புத்தரை கடினமான நிலைக்கு தள்ளியது.

தன்னுடைய தாயின் பிறப்பு பற்றி அறியாத விடதாபா தனது பதினாறு வயதில் முதன்முறையாக சக்யாவையும் அவனது தாத்தா மகாநாமாவையும் சந்தித்தார். அங்கு இருந்தபோது, பசேனதியின் படைத் தளபதியான கராயனா, விடதாபாவின் தாயாரின் உண்மைப் பின்னணியை அறிந்துகொண்டார். தனது மகன் முறையற்ற உறவில் இருந்த அடிமைப் பெண்ணின் பேரன் என்று படைத் தலைவர் பசேனதியிடம் தெரிவித்தபோது, மன்னர் சாக்யர்களுக்கு எதிராகக் கோபமடைந்தார். அவர் தனது மனைவி மற்றும் மகனின் அரச பதவிகளை பறித்து, அவர்களை அடிமைகளாக்கினார். அன்று புத்தர் அவர்கள் சார்பாக பரிந்து பேசியதைத் தொடர்ந்து, இறுதியாக மன்னர் அவர்களை மீண்டும் பதவியில் அமர்த்தினார்.

அதன் பின்னர், கோசலத்தில் புத்தருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது, இதனால் அவருடைய 70வது வயதில் புத்தர் முதல் முறையாக மகதாவின் தலைநகர் ராஜகஹாவிற்குத் திரும்பினார். அங்கே அவர், மன்னரின் மூங்கில் தோப்பில் தங்குவதற்குப் பதிலாக ராஜ வைத்தியர் ஜிவகாவிற்கு சொந்தமான மாந்தோப்பில் தங்கினார். அந்த நேரத்தில் புத்தர் ஏற்கனவே உடல்நலம் குன்றி இருந்தார் என்பதை இது குறிக்கிறது. 

புத்தருக்கு எழுபத்தி இரண்டு வயதாக இருந்தபோது, அவரது முதல் ஆதரவாளரான, மகதத்தின் மன்னர் பிம்பிசாரர், அவரது மகன் அஜாதசத்துக்காக (மா-ஸ்கைஸ் டிக்ரா, சமஸ். அஜாதசத்ரு) பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அஜாதசத்து தன் தந்தையை சிறையில் அடைத்து பட்டினி போட்டே கொன்றான். பிம்பிசாரரின் விதவை மனைவி, மன்னர் பசேனதியின் சகோதரி தேவி துக்கத்தால் இறந்தாள். அவளது மரணத்திற்குப் பழிவாங்க, பசேனதி தனது மருமகன் அஜாதசத்துக்கு எதிராகப் போரைத் தொடங்கினார், அவர் தேவிக்கு வரதட்சணையின் ஒரு பகுதியாக பிம்பிசாரருக்கு வழங்கிய கங்கைக்கு வடக்கே வாரணாசியைச் சுற்றியுள்ள கிராமங்களை மீண்டும் பெற முயற்சித்தார். போர் முடிவில்லாமல் முடிந்ததால் அமைதியை நிலைநாட்ட, பசேனதி தனது மகள் வஜிரியை அஜாதசத்துக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதே காலகட்டத்தில், அஜாதசத்தின் ஆசிரியரான புத்தரின் உறவினரான தேவதத்தா, புத்தரின் துறவற மையத்தை கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றார்.  துறவிகள் காடுகளில் வாழ வேண்டும், மரத்தடியில் மட்டுமே உறங்க வேண்டும், சாமானியர்களின் வீடுகளுக்குள் நுழையக்கூடாது, கந்தல் துணிகளை மட்டுமே அணிய வேண்டும், அந்நியர்களிடம் இருந்து துணிகளைப் பரிசாகப் பெறக்கூடாது, கட்டாயமாக சைவ உணவை மட்டுமே உண்ண வேண்டும் என பல கூடுதல் ஒழுக்க விதிகளை சேர்க்குமாறு தேவதத்தா புத்தரை கட்டாயப்படுத்த முயன்றார்.  ஆனால் புத்தர் அவற்றை மறுத்துவிட்டார், ஏனெனில் அந்தக் கட்டளைகள் அவர்களை கடும் துறவியாக மாற்றுவதோடு சமூகத்துடனான அவர்களுடைய உறவைத் துண்டித்துவிடும் என்று அவர் உணர்ந்தார்.

புத்தரின் அதிகாரத்திற்கு சவால் விட்ட தேவதத்தா, புத்தரின் இளம் துறவிகள் பலரை தனது கருத்துக்களுக்கு ஈர்த்து, தனது சொந்த போட்டித் துறவற சமூகத்தை உருவாக்கி அதன் மூலம் ஒரு பிளவை உருவாக்கினார். உண்மையில், புத்தரைக் கொல்ல தேவதத்தா பலமுறை முயற்சித்தும், தோல்வியுற்றார். இறுதியில், சரிபுட்டாவும் மொக்கல்லானாவும் புத்தரின் சமூகத்தை விட்டு வெளியேறிய துறவிகளை திரும்பி வரும்படி வலியுறுத்தினர்.

இதைப் பார்க்கும் போது தேவதத்தா தன்னுடைய செயல்களுக்காக வருந்தியதாகத் தெரிகிறது, ஆனால் புத்தரிடம் மன்னிப்பு கேட்பதற்கு முன்னரே அவர் இறந்துவிட்டார். ஆனால் எந்த விதத்திலும் புத்தர் தேவதத்தருக்கு எதிரான வன்மத்தையோ தீய எண்ணத்தையோ பாராட்டவில்லை. மன்னர் அஜாதசத்தும் தன்னுடைய தந்தையைக் கொன்றதற்காக வருத்தப்பட்டு, அரச வைத்தியர் ஜிவகாவின் அறிவுரையின் பேரில் புத்தரிடம் தன்னுடைய தவறை வெளிப்படையாக ஒப்புகொண்டு வருத்தம் தெரிவித்தார்.

ஓராண்டு கழித்து, புத்தர் மீண்டும் ஒருமுறை தன்னுடைய தாய்தேசமான சக்யாவிற்கு பயணம் மேற்கொண்டார். மரியாதை செலுத்துவதற்காக மன்னர் பசேனதி புத்தரை சந்திக்கச் சென்ற போது, தளபதி கராயனா ஒரு படையை திரட்டி இளவரசர் விடதாபாவை கோசல அரியணையில் ஏற்றினார். தோற்கடிக்கப்பட்ட மன்னர் பசேனதி, திரும்பிச் செல்ல இடமின்றி, மகதாவிற்கு பாதுகாப்பு கோரி தன்னுடைய மருமகனான மன்னன் அஜாதசத்துவின் ராஜகஹாவில் தஞ்சமடைந்தார். ஆனாலும் நகருக்குள் வர பசேனதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது அடுத்த நாள் அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 

இடைப்பட்ட காலத்தில், புதிய கோசல மன்னர் விடதாபா தன் ரத்த சம்பந்தத்தை காட்டி ஏமாற்றிய தாத்தா மகாநாமாவை பழிவாங்கும் விதமாக சக்யாவை எதிர்த்து போர் தொடுத்தார். நீங்கள் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கலாம், மகாநாமா புத்தரின் உறவினர் மற்றும் சக்யாவின் அப்போதைய ஆளுநரும் கூட. போரைக் கைவிடுமாறு மூன்று முறை புத்தர் விடதாபாவை மனமாற்றம் செய்ய முயற்சித்தும், அது பலனளிக்கவில்லை. சக்யா தலைநகர் கபிலவத்துவில் உள்ள அனைத்து உயிர்களையும் கொல்லுமாறு கோசலப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தப் படுகொலையைத் தடுக்க முடியாத புத்தர், பசேனதிக்கு அடைக்கலம் தராத மன்னர் அஜாதசத்துவிடம் பாதுகாப்பு கோரி மகதாவில் உள்ள ராஜகஹாவிற்கு இடம்பெயர்ந்தார். 

மகதாவிற்கு செல்வதற்கு வஜ்ஜி குடியரசைக் கடந்து தான் செல்ல வேண்டும், அங்கு புத்தரின் நெருங்கிய சீடரான சரிபுட்டா தலைநகர் வெசாலியில் அவருக்காக காத்திருந்தார்.  அங்கே புத்தரின் முன்னாள் பின்பற்றாளரான சுனகட்டா (Legs-pa’i rgyu-skar, சமஸ். சுனக்ஷத்ரா) இருந்தார். வெசாலியைச் சேர்ந்த இவர் புத்த சமூகத்தை விட்டு வெளியேறியவர், வஜ்ஜி பாராளுமன்றத்தில் புத்தரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியவர்.  புத்தருக்கு எந்த அசாத்திய சக்திகளும் இல்லை ஆசையை எப்படி நிறுத்துவது என்பதை தர்க்கத்தின் அடிப்படையில் மட்டுமே போதிக்கிறார், ஆனால் ஆழ்நிலையை எப்படி அடைவது என்பதை கற்றுத்தரவில்லை என்று அவர்களிடம் சுனகட்டா கூறினார். புத்தர் இதை ஒரு பாராட்டாக எடுத்துக் கொண்டார். ஆயினும்கூட, இந்த கண்டனம் மற்றும் அந்த நேரத்தில் அவர் கன்னியாஸ்திரியின் ஆணையை நிறுவியதால், புத்தர் வஜ்ஜியில் தனது ஆதரவையும் நல்ல நிலையையும் இழக்க நேரிட்டது. இதன் விளைவாக, புத்தர் கங்கையைக் கடந்து ராஜகஹாவுக்குச் சென்றார், அங்கு அவர் அருகில் இருந்த கிஜ்ஜாகுடா (Bya-rgod-kyi phung-po, சமஸ். க்ரத்ரகுடா), கழுகு மலையில் இருந்த குகைகளில் தங்கினார்.

மன்னர் அஜாதசத்துவின் பிரதம மந்திரியான வஸ்ஸக்கரா, புத்தரை சந்திக்க வந்தார். அப்போது பேரரசை விரிவாக்கும் விதத்தில் வஜ்ஜி குடியரசை விரைவில் படையெடுக்கப் போகும் அஜாதசத்துவின் திட்டம் குறித்த தகவலைத் தெரிவித்தார். வஜ்ஜியர்களை வலுக்கட்டாயமாக வென்றெடுக்க முடியாது, ஆனால் அவர்களின் பாரம்பரிய மரியாதைக்குரிய வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று புத்தர் அறிவுறுத்தினாலும், சக்யாவில் கோசலா படையெடுப்பைப் போலவே, எதிர் வரஇருந்த போரையும் அவரால் தடுக்க முடியவில்லை. இதனுடன் கூடுதல் இழப்பாக அந்த சமயத்தில் புத்தரின் நெருங்கிய சீடர்களான சரிபுட்டா மற்றும் மொக்கல்லனாவும் இறந்துபோயினர். வயதில் மூத்தவரான சரிபுட்டா உடல்நடல்குறைவால் இறந்தார், மொக்கல்லனா தனிமையில் இருந்தபோது கொள்ளைக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

மகதாவில் எந்த ஆதரவும் கிடைக்காததால், மீண்டும் ஒரு முறை வடக்கிற்கே திரும்பி விட புத்தர் முடிவெடுத்து, தன்னுடைய தாய்தேசமான சக்யாவில், கோசலா தாக்குதலுக்குப் பிறகு விட்டுச் சென்றிருப்பது என்ன என்பதை பார்க்கச் சென்றார்.  புறப்படுவதற்கு முன்னர், புத்தர் அனந்தாவிடம் அனைத்து துறவிகளையும் கழுகு மலையில் ஒன்று கூடுமாறு சொல்லச் சொன்னார், அங்கே அவர் தனது கடைசி அறிவுரையை அவர்களுக்கு வழங்கினார். வஜ்ஜியன் பாராளுமன்றத்தின் ஜனநாயக முறைப்படி துறவற சமூகத்தை முன்மாதிரியாக பின்பற்ற அவர்களுக்கு அறிவுறுத்தினார். வழக்கமான கூட்டங்களை நடத்த வேண்டும், நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும், தங்கள் யாசகங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், பெரியவர்களை மதிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

அதன் பின்னர் கழுகு மலையையும் மகதாவையும் விட்டு வெளியேறிய புத்தர், வஜ்ஜி குடியரசின் வெசாலியை அடையும் போது, மழைக்கால கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிறுத்தப்பட்டார். போரின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் அங்கு சமூகம் சீரழிந்து வருவதை அவர் கண்டார். வஜ்ஜி பாராளுமன்றத்தின் ஆதரவை இழந்த புத்தர், பருவமழையை தனியாகக் கழித்தார், மேலும் தனது துறவிகளை அவர்களுக்குத் தெரிந்த நண்பர்கள் அல்லது ஆதரவாளர்களுடன் தங்குவதற்கான இடம் தேடுமாறு கூறினார்.

பருவ மழையின் போது 80 வயதை அடைந்திருந்த புத்தர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை நெருங்கினார். துறவிகளுக்கு ஒரு இறுதி ஆலோசனையை வழங்குமாறு அனந்தா புத்தரிடம் கேட்டார். தனக்குத் தெரிந்த அனைத்தையும் அவர்களுக்குக் கற்பித்ததாகவும், எதிர்காலத்தில், போதனைகளே அவர்களின் முதன்மை அடைக்கலமாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்க வேண்டும் என்றும் புத்தர் கூறினார். துன்பங்களில் இருந்து விடுதலை பெற, அவர்கள் போதனைகளை தங்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும், அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள தலைவர்களையோ அல்லது சமூகத்தையோ சார்ந்து இருக்கக்கூடாது என்று தெரிவித்தார். அதன் பின்னர் தான் மிக விரைவில் மரணிக்கப் போவதாக புத்தர் அறிவித்தார். 

தன்னுடைய சீடர்களான அனந்தா மற்றும் அனுருத்தாவுடன், புத்தர் மழைக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை வெளியே சென்றார். சக்யாவிற்கு செல்லும் வழியில் அவர்கள் மல்லாவின் முதன்மையான நகரங்களில் ஒன்றான பவாவில், நிறுத்தப்பட்டனர். அங்கே அவருக்கு சந்தா (Tsu-nda, சமஸ். சண்டா) என்னும் பொற்கொல்லர் விஷம் கலந்த மாமிசத்தை வழங்கினார். அதில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்த புத்தர் தன்னுடைய சீடர்களிடம் அந்த உணவை உண்ண வேண்டாம் என்று கூறிவிட்டு, தான் மட்டும் சாப்பிட்டுவிட்டு மற்றவற்றை புதைத்து விடுமாறு கூறினார். மல்லா தளபதி கரயனாவின் தாய்தேசமாகும், அவரே சக்யாவின் படுகொலையை வழிநடத்தியவர், அந்த விஷமானது அனந்தாவை கொல்லும் நோக்கத்துடன் கொடுக்கப்பட்டிருக்கலாம், ஏனெனில் புத்தரின் போதனைகள் அனைத்தையும் நினைவில் வைத்திருந்தவர் அவரே ஆவார். அனந்தா கொல்லப்பட்டால், புத்தரின் போதனைகளும் சமூகமும் ஒருபோதும் இருக்காது. 

கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட புத்தர், அனந்தாவை அழைத்து அருகில் உள்ள குசினாராவிற்கு அழைத்து செல்லும்படி கூறினார் (Ku-sha’i grong-khyer, gNas-rtsva-mchog, சமஸ். குஷிநகரா). அங்கே இரண்டு மரங்களுக்கு நடுவே போடப்பட்ட படுக்கையில், புத்தர் தன்னுடன் இருந்த சில துறவிகளிடம் இன்னும் ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருக்கிறதா என்று கேட்டார். துக்கத்தில் மூழ்கிய அனந்தாவும் மற்றவர்களும் அமைதியாக இருந்தனர். பின்னர் புத்தர் பொதுஊழிக்காலம் 485ல் அவருடைய எண்பதாவது வயதில் காலமானார்.

புத்தரின் அஸ்தி தகனம் செய்யப்படுவதற்கு சற்று முன்பு, பாவாவிலிருந்து ஒரு துறவிகள் குழு வந்தனர். அவர்கள் மஹாகஸ்ஸபா (‘Od-srung chen-po, சமஸ். மஹாகாஷ்யபா) தலைமையில் வந்திருந்தனர், அவர்கள் இறுதி மரியாதை செலுத்தும் வரை தகனம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மகாகஸ்ஸபா மகதத்தைச் சேர்ந்த ஒரு பிராமணர் ஆவார், அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது முதுமையில் துறவறம் மேற்கொண்டவர். புத்தர் முதன்முதலில் அவரைச் சந்தித்தபோது, பிராமணரின் புதிய ஆடைக்குப் பதிலாக மகாகஸ்ஸபாவுக்கு தனது பழைய தேய்ந்துபோன அங்கியைக் கொடுத்தார். பின்னர், புத்தர் வழங்கிய அந்த அங்கியே, அதிகாரத்தை நிலைநாட்டவும், பௌத்த பற்றாளர்களின் வரிசையைத் தொடங்கும் கருவியாகவும் பயன்படுத்தப்பட்டது.

இருப்பினும், புத்தர் பல சந்தர்ப்பங்களில் தனது சீடர்களிடம், தான் மறைந்த பிறகு, தர்மமே அவர்களின் ஆசிரியராக இருக்கும் என்று  கூறி இருந்தார். வஜ்ஜியின் பாராளுமன்ற முறையைத் தன் சமூகம் தொடர வாழ்த்தினார். கோசலம், மகதம் போன்ற ராஜ்ஜியத்தை தங்களது முன்மாதிரியாகக் கொண்ட பின்னர், ஒரே ஒரு தலைமைத் துறவியைத் தலைவராகக் கொள்ள அவர் விரும்பவில்லை.

இருந்தாலும் புத்தர் மறைந்த பிறகு, மகாகஸ்ஸபா மற்றும் அனந்தா இடையில் அதிகாரப் போட்டி இருந்ததாகத் தெரிகிறது, வேறு விதமாகச் சொன்னால், குருவிற்கு அடுத்து சீடருக்கே அதிகாரம் அளிக்கும் பாரம்பரிய இந்திய முறைக்கும், சிறிய சமூகங்களில் வாழும் பொதுவான நடைமுறைகள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்றும் துறவிகளின் மிகவும் ஜனநாயக சமத்துவ அமைப்புக்கும் இடையிலான போராட்டம். இதில் மகாகஸ்ஸப்பா வெற்றி பெற்றார்.

புத்தர் தகனம் செய்யப்பட்டு, அவர் நினைவான பொருட்கள் விநியோகிக்கப்பட்டதும், புத்தர் போதித்ததை விவரிப்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும், குறியிடுவதற்கும் அடுத்த மழைக்காலத்தில் ராஜகஹாவில் ஒரு சபையை நடத்துவதற்கு மகாகஸ்ஸபாவின் முன்மொழிவை துறவிகள் ஒப்புக்கொண்டனர். இதில் பங்கேற்கக்கூடிய  மூத்தவர்களை மகாகஸ்ஸபா தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் முக்தி அடைந்த 499 அர்ஹதர்களை மட்டுமே தேர்ந்தெடுத்தார். முதலில், அர்ஹத்தை அடையவில்லை என்ற அடிப்படையில் அனந்தாவை மகாகஸ்ஸபா சேர்க்கவில்லை. புத்தரின் சொற்பொழிவுகள் பற்றி அனந்தாவிற்கு சிறந்த நினைவாற்றல் இருந்ததால் மஹாகஸ்ஸபா அவரை விலக்கினார். மேலும், அனந்தா ஒரு வலுவான ஆதரவாளராகவும், ஒரு தனித்தலைவர் இருக்கக்கூடாது என்ற புத்தரின் விருப்பத்தை ஆதரித்து குரல் கொடுப்பவராகவும் இருந்தார். மஹாகஸ்ஸபா அனந்தாவை விரும்பாததற்கு மற்றொரு காரணியாக இருந்தது, பெண்களை நியமிக்கும்படி  புத்தரை அனந்தா வலியுறுத்தியவர் என்பதுதான். இது மகாகஸ்ஸபாவின் பழமைவாத பிராமணப் பின்னணியைப் புண்படுத்தியிருந்தது. இருப்பினும், இறுதியில், மூத்த துறவிகள் அனந்தாவை விலக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் இதனால் தன் விருப்பத்தை விட்டுக்கொடுத்த மகாகஸ்ஸபா அனந்தாவையும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தார். தேரவாதத்தின்படி, கூட்டத்திற்கு முந்தைய நாள் இரவு அனந்தா அர்ஹத்தை அடைந்தார்.

சபை கூடும் வரை காத்திருந்தபோது, அஜாதசத்து மன்னரின் பிரதம மந்திரியான வஸ்ஸாகராவை (dByar-gyi rnam-pa, சமஸ். வர்ஷக்கரா) அனந்தா சந்தித்தார். மகதப் படைகள் வஜ்ஜி மீதான தாக்குதலோடு, மகதத்தின் மேற்கே உள்ள ராஜ்ஜியமான அவந்தியின் (A-banti'i yul, சமஸ். அவந்தி) மன்னர் பஜ்ஜோதாவிடமிருந்து (ரப்-க்சல், சமஸ். பிரத்யோதா) எதிர்பாராமல் வரவிருக்கும் தாக்குதலுக்கும் தயாராகி வருவதை அனந்தா அவனிடமிருந்து அறிந்துகொண்டார். எனவே, புத்தர் தனது சமூகத்திற்கு தலைமை தாங்கும் பற்றாளர்களின் வரிசையை உருவாக்க விரும்பவில்லை என்றாலும், மஹாகஸ்ஸபாவின் தலைமைத்துவம் இந்த ஆபத்தான மற்றும் நிச்சயமற்ற காலங்களில் புத்தரின் போதனைகள் மற்றும் துறவற சமூகம் உயிர்வாழ்வதற்கு சந்தேகத்திற்கு இடமின்றி பங்களித்தது.

ராஜகஹாவிற்கு அருகில் இருந்த ஏழு இலைக் குகையான சத்திபன்னிகுஹாவில் (Lo-ma bdun-pa’i phug, சமஸ். சப்தபர்னகுஹா) நடைபெற்ற முதல் புத்தமத மாநாட்டில் ஐந்நூறு அர்ஹத்கள் கலந்து கொண்டனர். மஹாகஸ்ஸபா தலைமை வகித்தார், தன்னுடைய நினைவில் இருந்த பெரும்பாலான சூக்தங்களையும் உபாலியையும் (Nye-bar ‘khor, சமஸ். உபாலி) துறவற ஒழுக்கத்தின் வினய விதிகளையும் அனந்தா பாராயணம் செய்தார். இந்த சபையின் தேரவாத பதிப்பின்படி, அறிவின் சிறப்பு தலைப்புகளில் அபிதம்மா (chos mngon-pa, சமஸ். அபிதர்மா) போதனைகள் அந்த நேரத்தில் வாசிக்கப்படவில்லை. இருப்பினும், சர்வஸ்திவாத பாரம்பரியத்தில், வைபாஷிகா பதிப்பு மஹாகஸ்ஸபா சிலவற்றை பாராயணம் செய்ததாகக் கூறுகிறது, ஆனால் அபிதம்ம போதனைகள் அனைத்தும்  அப்படிச் சொல்லவில்லை. சௌத்ராந்திகா கூற்றுகளின்படி, இந்த அபிதம்ம போதனைகள் உண்மையில் புத்தரின் வார்த்தைகள் அல்ல, ஆனால் அவை ஏழு அர்ஹத்களால் இயற்றப்பட்டவையாகும்.

திபெத்திய மரபுகளின்படி, மகாகஸ்ஸபா ஏழு பற்றாளர்களின் (bstan-pa'i gtad-rabs bdun) வரிசையைத் தொடங்கினார். சீனாவின் சான் மரபுகள், அதனைத் தொடர்ந்து கொரியாவின் சான் மற்றும் ஜப்பானிய ஜென் மரபுகள், இந்தியாவில் இருபத்தெட்டு முற்பிதாக்களின் வரிசையைக் கண்டறிந்துள்ளார், அவர்களில் போதிதர்மா இருபத்தி எட்டாவது நபராவார். சான் போதனைகளை சீனாவிற்கு கொண்டு வந்தவர் இந்திய குரு போதிதர்மர் ஆவார். கிழக்கு ஆசியாவில், முதல் சான் பற்றாளராக அவர் கருதப்படுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால், தேரவாதிகளின் பாலி இலக்கியம் புத்தரை ஒரு கவர்ந்திழுக்கும், கிட்டத்தட்ட சோகமான ஆன்மீகத் தலைவராக வெளிப்படுத்துகிறது, அவர் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வளர்ந்து கொண்டிருந்த தன்னுடைய சீடர்கள் மற்றும் பின்பற்றுபவர்களின் சமூகத்தை நிறுவவும் ஆதரிக்கவும் போராடியதாகச் சொல்கிறது. அவர் அரசியல் சூழ்ச்சிகள், பல போர்கள், அவரது தாய்நாட்டு மக்களின் படுகொலைகள், ஒரு அரசாங்கத்தின் முன் தனிப்பட்ட கண்டனம், அவரது சீடர்களிடம் இருந்து தலைமைக்கு வந்த சவால், அவரது நெருங்கிய சீடர் ஒருவரின் கொலை ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, கடைசியில் அவரும் விஷம் வைத்து கொல்லப்பட்டார். இருந்தாலும் கூட, இந்த அனைத்து சோதனைகளிலும், புத்தர் மன அமைதியைப் பேணினார் மற்றும் சோர்வடையவில்லை. ஞானம் பெற்ற பிறகு அவர் கற்பித்த நாற்பத்தாறு ஆண்டுகள் முழுவதும், விடுதலை மற்றும் ஞானம் பெறுவதற்கான வழியை உலகுக்குக் காட்டுவதில் அவர் உறுதியாக இருந்தார்.

Top