மனதின் நன்மை பயக்கும் நிலைகளை மேம்படுத்தும் ஒரு வழிமுறையே தியானமாகும். மனதின் சில நிலைகளை உருவாக்க அதுவே பழக்கமாகும் வரை திரும்பத் திரும்ப செய்கிறோம். உடல் அளவில் தியானம் என்பது புதிய நரம்பியல் பாதைகளை கட்டமைப்பதாகக் காட்டுகிறது.
தியானத்தின் பலன்கள்
தியானத்தின் மூலம் நாம் மேம்படுத்தக் கூடிய பல்வேறு விதமான பலன் தரும் மனநிலைகள் இருக்கின்றன:
- மன அழுத்தம் குறைவாக, அதிக நிதானத்தோடு இருத்தல்
- குறுகிய மனமின்றி, குறிக்கோளோடு இருத்தல்
- நிலையான கவலைகள் இல்லாது, அமைதியாக இருத்தல்
- நம்முடைய மற்றும் பிறரின் வாழ்க்கைப் பற்றி நல்ல புரிதலை கொண்டிருத்தல்
- நேர்மறை உணர்வுகளான அன்பு, இரக்கம் அதிகம் கொண்டிருத்தல்
நம்மில் பெரும்பாலானவர்கள் அமைதியான, தெளிவான, மகிழ்ச்சியான மனதையே விரும்புகின்றனர். நாம் மன அழுத்தத்துடனோ அல்லது எதிர்மறை நிலையிலோ இருந்தால் அது நமக்கு சோகத்தைத் தரும். அது நம் ஆரோக்கியத்தைக் கெடுத்து, நம் பணி, குடும்ப வாழ்க்கை மற்றும் நட்பை பாதிக்கும்.
மன அழுத்தத்தாலோ, முன்கோபத்தாலோ நாம் துவண்டு போனால், நாம் நமக்கு உதவும் வகையில் தியானம் போன்ற வழிகளை நாடுவோம். தியானம் உணர்வுகளின் குறைபாடுகளைக் கடந்து வர உதவுகிறது, இதில் எதிர்மறை பக்கவிளைவுகள் எதுவுமில்லை.
தியானத்தை நாம் யதார்த்தமான அணுகுமுறையோடு அணுகவேண்டும். இது எல்லாவற்றிற்குமான உடனடித் தீர்வல்ல, எனினும் தியானத்தை நேர்மறை முடிவுகளைப் பெறுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தலாம். ஒரு சிறிய காரணத்தால் எப்போதுமே ஒரு முடிவை அடைந்து விட முடியாது, ஆனால் பல்வேறு காரணங்கள் மற்றும் நிபந்தனைகளால் இது சாத்தியம். உதாரணத்திற்கு, நமக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதனை சரிசெய்ய தியானம் உதவுகிறது, ஆனால் நமது உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் வரும் முடிவுகளைப்போல இருக்காது.
பௌத்த தியான வகைகள்
பல்வேறு வகைகளில் தியானம் செய்யலாம். அனைத்துமே நம்மை அமைதிப்படுத்த உதவுகிறது, இறுதியான இலக்கு இதுவல்ல. நேர்மறை நிலைகளைக் கட்டமைப்பதற்கான உண்மையான திட்டத்தை உருவாக்குவதற்கு முன்னர், நம்முடைய மனஅழுத்தத்தை போக்குவதும் அவசியமே, ஆகவே இரண்டு விதமான தியானங்களான விவேகம் மற்றும் உறுதிப்படுத்தலுக்கு இடையில் மாறிச்செல்வதற்கு முன் நம் மனதை அமைதிப்படுத்தி சுவாசத்தில் கவனம் கொள்கிறோம்.
பெரும்பாலும் “பகுப்பாய்வு” என்று சொல்லப்படும், விவேகத்துடன் கூடிய தியானத்துடன், அன்பு உள்ளிட்ட நேர்மறை மன நிலையை படிப்படியாக அடைய நம்மை நாமே சீர்தூக்க சில காரணங்களை செயல்படுத்துகிறோம். அல்லது ஒரு சூழ்நிலையைப் பகுப்பாய காரணங்களை பயன்படுத்துகிறோம், இதன் மூலம் நிலையாமை போன்றவற்றில் இருந்து சரியான புரிதலுக்கு வருகிறோம். அல்லது நாம் நம் மனநிலையை புத்தர் போன்ற நிலையில் நேர்மறைத் தகுதிகளுடன் எளிமையாக கட்டமைக்கிறோம், அதனை தெளிவாக விவேகத்துடன் செய்யவும் முயல்கிறோம்.
பின்னர், நிலையாக தியானம் மூலம், நாம் உருவாக்கி வைத்திருக்கும் நேர்மறை நிலைகளான மனநிறைவு, கவனம் மற்றும் ஒருமுகப்படுத்துதலை முடிந்தவரை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க பயன்படுத்துவோம். அல்லது இந்த முறைகளை தேவையில்லாமல் மனதில் கட்டமைக்கப்பட்டிருப்பவை மீது கவனம் செலுத்துவதில் இருந்து தவிர்க்க செயல்படுத்தலாம்.
இரண்டு முறையிலான தியானத்தையும் நாம் மாற்றி மாற்றி முயற்சிக்கலாம். நாம் அதனை கட்டமைத்து, நாம் இடைய நினைக்கும் நேர்மறை மனநிலையை காண முடிந்தால், நாம் அதில் நிலைத்திருக்கிறோம். மேலும் நமது ஒருமுகப்படுத்துதல் இந்த நிலையில் வலுவிழந்தாலோ அல்லது தவறிவிட்டாலோ, மீண்டும் அதனை ஒருவாக்க முயற்சிப்பதோடு, அதிக விவேகத்துடன் செயல்பட வேண்டும்.
அன்றாட வாழ்க்கைக்கான தியானம்
தியானத்தின் முழு மையப்புள்ளியே நம்முடைய வீட்டில் மெத்தை மீது அமர்ந்து கொண்டு அமைதி, கவனம் மற்றும் அன்பை உணர்தல் அல்ல, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் தினசரி தியானித்தால், அவை நேர்மறை உணர்வுகளை ஒரு பழக்கமாக்கும், அதனை நாம் இரவு அல்லது பகல் என நமக்குத் தேவைப்படும் சமயத்தில் செயல்படுத்தலாம். கடைசியில், அது நம்மில் ஒரு பாகமாகி விடும் –இயற்கையான ஒன்று நம்முடன் எப்போதும் இருக்கும் எளிமையான அதே சமயம் அதிக அன்பு, கவனம் மற்றும் அமைதி நிலவும்.
நாம் சில நேரங்களில் உண்மையில் கோபமோ அல்லது விரக்தியோ அடைந்த நிமிடங்கள் இருக்கும், ஆனால் நமக்கு நினைவில் வைத்திருக்க வேண்டும் : “அதிக அன்பானவராக இருங்கள்” ஏனெனில் இந்த மனநிலையோடு தேவையான தியான பயிற்சியும் சேர்ந்தால் நாம் பழக்கப்படுவோம், நம்மால் உடனுக்குடன் அதனை உருவாக்க முடியும்.
யாருமே நிறைவானவர் அல்ல, நாம் அனைவருமே ஏதோ ஒரு தீய பழக்கத்தை கண்டறிந்து அதில் இருந்து வெளியேற நினைக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இந்த பழக்கங்கள் மாற்ற முடியாத கற்களில் செதுக்கியதாக இல்லாமல், மாற்றிக்கொள்ளும் வகையில் உள்ளன.
இந்த மாற்றம் தேவை தான் ஆனால் அதற்கு நம்முடைய சொந்த முயற்சியும் முக்கியம். நம்மில் பலர் பல மணி நேரத்தை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறோம், ஆனால் நம்முடைய பெரிய சொத்தான நமது மனதிற்கான பயிற்சியை செய்ய மறந்து விடுகிறோம். தொடக்கத்தில் இது கடினம் தான், ஆனால் ஒரு முறை தியானம் நம் வாழ்வில் கொண்டு வந்திருக்கும் பலன்களைப் பார்த்துவிட்டால், நமது மனதிற்காக நேரத்தை முதலீடு செய்து செயலாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைவோம்.