நேர்மை, நம்பிக்கை மற்றும் நட்பு

Study buddhism dalai lama oa

மகிழ்ச்சி என்பது என்ன?

மகிழ்ச்சியாக வாழவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள், மகிழ்ச்சி என்றால் என்ன என்பதே இப்போது எழும் கேள்வி? நீடித்துநிலைத்திருக்கக் கூடிய நம்பகத்தன்மையான மகிழ்ச்சி என்றால் என்ன? இந்த கேள்வியை நாம் ஆழமாக உற்று நோக்க வேண்டும். புலன்களைச் சார்ந்தே மகிழ்ச்சி அல்லது இன்பம் வருகிறது. எதையோ பார்க்கும் போதோ, கேட்கும் போதோ, நுகரும் போதோ அல்லது நல்ல சுவையை உணரும் அனுபவங்கள் ஒரு நிறைவைத் தரலாம்.  ஆனால் புலன்களைச் சார்ந்துகிடைக்கும் அனுபவங்களால் கிடைக்கும் மகிழ்ச்சியென்பது மேம்போக்கானது.

புலன்கள் தரும் இன்பம் அல்லது மகிழ்ச்சி அல்லது சந்தோஷத்தை உடனுக்குடன் உணர முடியும், ஆனால் இதே வேகத்தில் சில இடையூறுகளும் கேட்காமலே நம்மை வந்தடையும், அந்த சமயத்தில் கிடைத்த சந்தோஷம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். தொலைக்காட்சி பார்ப்பதில் மகிழ்ச்சி காணும் மக்களை பார்த்திருப்பீர்கள், டிவி பார்க்கவில்லை என்றால் 1 மணி நேரத்திலேயே அவர்களுக்கு சளிப்பு ஏற்பட்டுவிடும்.  சிலர் எப்போதும் கேளிக்கைகளுக்கு அடிமையாகி இருப்பார்கள், உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு பயணிப்பது, புதிய இடங்களில் கலாச்சாரம், இசை மற்றும் சுவை என புதிய அனுபவங்களை தேடிக்கொண்டே இருப்பார்கள். மனப்பயிற்சியின் மூலம் உள்ளார்ந்த அமைதியை உருவாக்க முடியும் என்ற திறன் இல்லாமையில் இருந்தே இந்த அறியாமை வருகிறது என நான் நினைக்கிறேன்.

ஆண்டாண்டு காலமாக துறவற வாழ்க்கை வாழும் மக்கள் உண்மையான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஒரு முறை பார்சிலோனாவில் ஒரு கத்தோலிக்க துறவியை நான் சந்தித்தேன். அவருடைய ஆங்கிலமும் நான் பேசுவது போலவே தான் இருக்கும் என்பதால் நான் தைரியமாக அவருடன் பேசினேன்! அந்தத் துறவி 5 ஆண்டுகள் மலையில் துறவற வாழ்க்கை வாழ்ந்தவர் என்று விழா ஏற்பாட்டாளர் என்னிடம் கூறினார். அவர் மலையில் அப்படி என்ன செய்தார் என்று நான் கேட்டேன், அதற்கு ஏற்பாட்டாளர் துறவி அன்பைப் பற்றி சிந்தித்தார் அல்லது தியானித்தார் என்று தெரிவித்தார். அவர் இதனை குறிப்பிட்டு சொல்லும் போதே துறவியின் கண்களில் உண்மையாகவே ஒரு சிறப்பான வெளிப்பாடு இருந்தது, அந்த முகபாவம் அவர் மன அமைதியை மகிழ்ந்திருக்கிறார் என்பதை உணர்த்தியது. புலன் சார்ந்த அனுபவங்களால் மகிழ்ச்சி காணாமல் சில ஆழமான மதிப்புகளை விதைப்பதன் மூலம் மன அமைதியை அறுவடை செய்யலாம் என்பதற்கான சிறந்த உதாரணம் இவர். அன்பைப் பற்றியே சிந்திப்பதன் மூலம் உண்மையான நேர்மையான அமைதியை உருவாக்க முடியும்.

நான் எப்போது ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பேன், சொகுசான வாழ்க்கைக்கு பொருட்கள் தேவை, ஆனால் அதே பொருட்களின் மூலம் மனதிற்கு சுகம் கிடைக்காது. மக்களுக்கு வசதி வந்துவிட்டால் அவர்கள் பேராசைக்காரர்களாகி மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். முடிவில் பணமிருந்தும் நிம்மதி இல்லை. எனவே, மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைய நினைப்பவர்கள் சொத்துக்கள் மீதான மதிப்பை நம்பி இருக்காதீர்கள். நம்மிடம் இருக்கும் பொருட்களின் மதிப்பு அவசியம் தான், ஆனால் அதையும் தாண்டி நம்முடைய உள்ளார்ந்த மதிப்புகள் என்னென்ன என்பதையும் நாம் மிகத் தீவிரமாக உற்று நோக்க வேண்டும். நாம் நாத்திகவாதியா, ஆத்திகவாதியா என்பது ஆராயத்தேவையில்லை, மனிதர்களாகிய நமக்கு உள்ளார்ந்த அமைதி அவசியம்.

மன அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியம்

அதீத மனஅழுத்தம் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கூறுகிறார்கள். பயம், கோபம் மற்றும் வெறுப்பு நம்முடைய எதிர்ப்பு சக்தியை தின்றுவிடுகிறது என்கின்றனர் சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். எனவே நல்ல உடல் ஆரோக்கியத்திற்கான மிக முக்கியமான காரணிகளில் ஒன்று மன அமைதி. ஏனெனில், ஆரோக்கியமான தேகமும், மனமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. என்னுடைய அனுபவத்தில் நடந்ததை உங்களுக்குச் சொல்கிறேன், 2 ஆண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில், பத்திரிக்கையாளர் ஒருவர் மறுபிறவி என்றால் என்ன என கேள்வி எழுப்பினார். நான் கேலியாக அவரைப் பார்த்து, என்னுடைய கண்கண்ணாடியை உயர்த்தி கேட்டேன், “என்னுடைய முகத்தை வைத்து தீர்மானியுங்கள், என்னுடைய மறுபிறவி அவசரமா இல்லையா?!” எந்த அவசரமும் இல்லை என்று அவர் பதிலளித்தார்.

அண்மையில் நான் ஐரோப்பா சென்றிருந்த போது எனது நீண்ட கால நண்பர்கள் சிலர் என்னுடைய இருபது, முப்பது, ஏன் 40 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்து, என்னுடைய முகம் எப்போதுமே இளமையாக இருப்பதாகச் சொன்னார்கள். என் வாழ்விலும் கடினமான காலங்கள், பிரச்னைகள் சூழ்ந்த தருணங்களை நான் கடந்து வந்திருக்கிறேன். தனிமை, அழுத்தம் மற்றும் கவலைகளை உருவாக்க எனக்கும் பல போதுமான காரணிகள் இருந்தது. ஆனால் என்னுடைய மனம் அமைதியாகவே இருந்தது. எப்போதாவது நானும் கோபப்படுவேன், ஆனால் அடிப்படையில் என்னுடைய மனநலை எப்போதுமே அமைதியாகவே இருக்கும்.

அழகு சாதனப் பொருட்களுக்காக ஏராளமான பணத்தை செலவு செய்யும் இளம்பெண்களை நான் கேலி செய்ய நினைப்பேன். அழகு சாதனப் பொருட்கள் மிகவும் விலைஉயர்ந்தவை என்பதே உங்களது கணவன்மார்கள் கூறும் முதல் புகார்! வெளிப்புற அழகு முக்கியம் தான், ஆனால் உள்ளார்ந்த அழகும் மிக முக்கியம். உங்களுக்கு அழகான முகம் இருக்கலாம், ஆனால் எந்த முகஒப்பனையும் செய்யாமல் நேர்மையான சிரிப்பு மற்றும் அன்புடன் இருக்கும் அழகில்லாத முகங்களும் நயமானவையே. இதுவே உண்மையான அழகு; உண்மையான மதிப்பு என்பது நமக்குள் இருக்கிறது. வெளிப்புற அழகுக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது – எப்போதுமே பெரிய கடைகள் மற்றும் பெரிய சூப்பர்மார்க்கெட் தேவைப்படுகிறது. ஆனால் உள்ளார்ந்த அழகிற்கு எந்த செலவும் இல்லை! இந்த உள்ளார்ந்த மதிப்புகள் பற்றி சிந்தியுங்கள், உங்களுக்குள் இந்த எண்ணங்கள் மேலெழுந்தால், அழிக்கும் எண்ணங்கள் தானாகவே குறைந்துவிடும். இவையே உள்ளார்ந்த அமைதியை உருவாக்கும்.

கருணை மனம் அல்லது பிறரின் நலனில் அக்கறை காட்டுவது தன் நம்பிக்கையை உருவாக்கும். உங்களுக்கு தன் நம்பிக்கை இருந்தால், உங்களது எல்லா செயல்களையும் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையோடு செய்யலாம். இந்த மனப்பாங்கு பிறரிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும், நட்புக்கு அடிப்படையே நம்பிக்கை தான். மனிதர்களாகிய நாம் சமூக விலங்குகள், நமக்கு நண்பர்கள் தேவை.  பணம், கல்வி,அறிவு அல்லது அதிகார பலத்தை வைத்து நண்பர்களை சம்பாதிக்க முடியாது, நட்புக்குத் தேவையான முக்கிய தகுதி நம்பிக்கை. எனவே பிறர் நலனில் அக்கறை மற்றும் மனித வாழ்வின் முதான மரியாதை மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை.

Top