உள்ளார்ந்த அமைதி மற்றும் நிறைவைத் தேடுதல்

Study buddhism universal values 02

யதார்த்த சூழ்நிலையின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்தல்

உள்ளார்ந்த அமைதி என்பது மன அமைதியோடு தொடர்புடையது. வெளித்தோற்றம் கட்டாயமாக நமது மன அமைதியை தீர்மானிக்காது. நம்மிடம் மன அமைதி இருந்தால், வெளித்தோற்றம் ஒரு பொருட்டே இல்லை.

இப்போது நாம் பிரார்த்தனைகள் மூலம் உள்ளார்ந்த அமைதியை மேம்படுத்துகிறோமா? உண்மையில் இல்லை.  உடற்பயிற்சி மூலம் அமைதி பெறுகிறோமா? இல்லை. அறிவைப் பெறுவதன் மூலமா? இல்லை. நமது உணர்ச்சிகளைக் கொல்வதன் மூலம் கிடைக்குமா? என்றால் அதுவும் இல்லை. ஆனால் ஒரு கடினமான சூழலை அதன் நன்மை, தீமைகளை அறிந்து, பின்விளைவுகளைத் தெரிந்து முழு விழிப்புணர்வுடன் அணுகினால் அந்த சூழலை நம்மால் எதிர்கொள்ள முடியும். நமது அறிவும் கலக்கமடையாது, அதுவே உண்மையான உள்ளார்ந்த அமைதி.

கருணையும், நேர்மையான அணுகுமுறையுமே மிக முக்கியமானவை. திடீரென, எதிர்பாராத விளைவுகளால், உங்களுக்கு பயம் ஏற்பட்டால், அது எதார்த்தத்தை  உணராததின் விளைவே. சில தருணங்களில், அனைத்து விதமான விளைவுகளையும் நாம் உற்றுநோக்குவதில்லை. அதனால், விழிப்புணர்வையும், புரிதலையும் இழக்க நேரிடுகிறது. ஒரு விசயத்தில் நமக்கு பயம் உண்டாவதற்கு முக்கிய காரணம், அதுபற்றி முறையான ஆய்வு செய்யாததே, எனவே அதன் நான்கு பக்கங்களையும், மேலும், கீழும் ஆய்வு செய்து, அது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். எதார்த்தத்திற்கும் தோற்றத்திற்கும் எப்போதுமே ஒரு இடைவெளி இருக்கிறது, எனவே நாலாபுறமும், ஆராய்தல் அவசியம்.

எதையும் மேலோட்டமாக பார்த்தால், அது நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்பதைக் கண்டுவிட முடியாது. ஆனால் ஒன்றைப்பற்றி, நாம் (அதை முழுமையாக விசாரித்து) உண்மைத் தன்மைமையை உணர்ந்தால், அதன் பின், அது நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்பதை மதிப்பிடமுடியும். எனவே, நாம் சூழ்நிலைகளை பகுத்தறிவுடன் மதிப்பீடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட தேடலின், முடிவு “இதுவாக இருக்க வேண்டும், அதுவாக இருக்க வேண்டும்” என்ற ஆசையோடு ஆராயத் தொடங்கினால், நம்முடைய ஆய்வு ஒரு சார்புடையது. இறை நம்பிக்கையின்றி, பாகுபாடற்ற முறையில் மதம் உள்ளிட்ட எல்லாவற்றையும், ஆய்வுக்குட்படுத்தவேண்டும் என்கிறது இந்தியாவின் நலந்தா கலாச்சாரம்.

பிறரிடம் மனம் திறத்தலின் அவசியம்

கடும் சுயநல நோக்கிலிருந்தே, மனஅமைதியின்மை மற்றும் அதிருப்தி உண்டாகிறது. துன்பத்திலிருந்து வெளியேறி, இன்பத்தை அடைய ஒவ்வொரு தனிமனிதனுக்கு உரிமை இருக்கிறது. சுயநலத்துடன், நம்மை பற்றி மட்டும் யோசித்தால் மனது முழுவதும் எதிர்மறை எண்ணங்கள் நிரம்பும். பின்னர் ஒரு சிறு பிரச்னை கூட பெரிதாகத் தெரியும், சமநிலைத்தன்மையை இழப்போம். அதே மற்றவர்களைப் பற்றி யோசித்து அவர்களும் நாமும் ஒன்று தான் என சிந்தித்தால், மனக்கண் திறந்து, மனதின் பாதை அகலமாக விரியும். இதனால், மிகத் தீவிரமான பிரச்னை கூட தூசு போல இருந்த இடம் தெரியாமல் போகும். எனவே ஒரு விஷயத்தை நம்முடைய கண்ணோட்டத்தில் பார்க்கிறோமா, அல்லது பிறரது கண்ணோட்டத்தில் பார்க்கிறோமா என்பதைப் பொறுத்து உணர்வு ரீதியில் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மன அமைதிக்கு இரண்டு முக்கியமான காரணிகள் இருக்கின்றன. முதலாவது யதார்த்தம் பற்றிய விழிப்புணர்வு. யதார்த்தத்தோடு ஒரு விஷயத்தை அணுகினால், எதிர்பாராத பின்விளைவுகள் இருக்காது. இரண்டாவது கருணை, நம் “மனக் கதவை” திறக்கிறது. பயமும், சந்தேகமும் நம்மை பிறரிடமிருந்து பிரிக்கிறது.

வெளிப்புறத் தோற்றம் குறித்து அக்கறையற்றவராக இருத்தல்

[வெளிப்புறத் தோற்றம் குறித்து கவலைப்படுவதும் மன அமைதியை இழப்பதற்கான மற்றொரு காரணம்] முதன் முறையாக நான் பெய்ஜிங் சென்ற போது அங்கு நடந்ததை இங்கு உதாரணமாக சொல்கிறேன். எனக்கு எந்த அனுபவமும் இல்லை. சிறிது படபடப்பு மற்றும் ஒரு வித பதட்டமும் இருந்தது. ஆனால் அதன் பிறகு நான் கண்ட சில மனிதர்களில், யாரெல்லாம் தனது தோற்றத்தில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்களோ அவர்களுக்கு ஏதேனும் சிறிய தவறு நடந்தாலே முகம் சிவந்து போனது. ஆனால் அதுவே அவர்கள் திறந்த மனதோடு இருந்தால், தவறாகவே நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படவில்லை என்றால் எந்தப் பிரச்னையுமே இல்லை.

உதாரணத்திற்கு, 1954ல் நான் பெய்ஜிங்கில் தங்கியிருந்த அறையில், என்னைச் சந்திக்க இந்திய துணை தூதர் வந்திருத்தார். பழங்கள், பூக்கள் மற்றும் இன்னும் சிலவற்றைக் கொண்டு சீனர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மேலும் ஒரு சீன மொழிபெயர்ப்பாளர் இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். எனவே நாங்கள் பேசுவது திபெத்திய மொழியில் இருந்து சீன மொழிக்கும், அதிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. என்னுடன் இருந்த சில அதிகாரிகளுக்கும் ஆங்கிலம் தெரியும். ஒரு கட்டத்தில், அறையில் இருந்த பழக்குவியல் சீன அதிகாரிகளின் மீது சரிந்ததால், அவர்களது கைகள், முழங்கால்கள் தரையில் வலம் வரத்தொடங்கியது. அதுவே, அப்பழங்களைப்பற்றி அவர்கள் கவலைப்படாமல் இருந்திருந்தால், அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், அந்த சம்பவம் அவர்களை தர்மசாங்கடமாக நிலைக்குத்தள்ளியது.

ஒரு முறை மெக்சிகோ நகரத்தில் நடந்த மதநல்லிணக்கக் கூட்டத்தில், ஜப்பானிய மதகுரு ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய கையில் ஒரு ஜெப மாலை வைத்திருந்தார் அதன் நாணல் அறுந்து மணிகள் தரையில் சிதறிவிட்டன. எனினும் அவர் தன்னுடைய கட்டைவிரலை வைத்து ஜெபமாலையை ஜெபித்துக் கொண்டே இருந்தார். சிதறிய மணிகளை எடுப்பதற்கு அவருக்கு தர்மசங்கடமாக இருந்தது. தன்னுடைய தோற்றத்தில் மிகுந்த அக்கறையோடு இருந்ததால் அவர் மிகவும் அசவுகரியமாக இருந்தார்.

எது எப்படியாக இருந்தாலும் கருணை, நற்பண்பு, உண்மைத்தன்மை, நேர்மை இவை யாவும் வெளிப்புறத் தோற்றத்தில் அக்கறை காட்டாமல் உள்ளார்ந்த அமைதியை கொண்டுவருவதற்கு மிக முக்கியமானவை.  நான் தனித்துவமான் என்று எப்போதுமே சொல்ல மாட்டேன், ஆனால் என்னுடைய சொந்த அனுபவத்தால், ஆயிரம் பேர் முன்பு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கவலைப்படும் உணர்வு எனக்கு ஏற்பட்டதே இல்லை. இன்று உங்கள் மத்தியில் பேசுவது போல நான் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரசங்கம் செய்திருக்கிறேன், என்னைப் பொருத்தவரையில் சிலருடன் பேசுவது போலத் தான் அதுவும். ஏதேனும் தவறு நடந்தால் நான் அதை மறந்துவிடுவேன், அது பெரிய பிரச்னையே இல்லை. மற்றவர்கள் தவறு செய்தால் கூட, நான் புன்னகையுடன் கடந்துவிடுவேன்.

உள்ளார்ந்த மாற்றம்

தற்போது வரை உள்மாற்றங்களைப் பொறுத்தவரையில், உள்ளார்ந்த மாற்றம் என்றால், உணர்வு ரீதியில் பேசுவதே. வயது காரணமாக இயற்கையாகவே ஒரு உள் மாற்றம் ஏற்படும் அது ஒரு வகை, மற்றொன்று வெளிப்புற சூழல்களால் ஏற்படும். இந்த வகை மாற்றங்கள் தானாகவே நிகழக்கூடியவை. மற்றவை முயற்சியால் வரக்கூடியவை, இதைத் தான் நாம் முக்கியமான ஒன்றாக வெளிக்கொண்டு வர வேண்டும்: நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப உள்ளார்ந்த மாற்றம். இது தான் முக்கியமான அர்த்தம்.

நாம் இப்போது நம்முடைய மறுஜென்மம், மோட்சம் அல்லது சொர்க்கம் பற்றியெல்லாம் பேசவில்லை, ஆனால் துன்பங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு மத்தியில் இந்த வாழ்க்கையை  மகிழ்ச்சியானதாகவும், அமைதியானதாக அமைத்துக்கொள்வது எப்படி என்பதை பார்க்கப் போகிறோம். இதற்கு, கோபம், வெறுப்பு, பயம், பொறாமை, சந்தேகம், தனிமை, மன அழுத்தம் உள்ளிட்ட இன்னும் சில முக்கியமான காரணிகளை நாம் கையாள வேண்டும். இவை அனைத்துமே நம் மனநிலையோடு அடிப்படையில் தொடர்புடையவை. இவையனைத்தும் சுயநலத்தோடு இருப்பதால் தோன்றுபவை. நம்மை பொறுத்தவரையில் நாம் இவற்றை அனுபவித்தால், சுயம் என்பதை பிரதானமாகக் கருதினால், அது பொறாமையை உண்டாக்கும். நம் சந்தோஷத்திற்கு பின்னர் சிறிது எரிச்சல் வரும், அது கோபமாக மாறும், அந்தக் கோபமே பயத்தையும் ஏற்படுத்தும். நாம் பிறரைப் பற்றி கவலைப்படுவதில்லை; நாம் நம்மைப் பற்றி மட்டுமே அக்கறை செலுத்துகிறோம். பிறரும் அவர்கள் நலனில் மட்டுமே அக்கறையாக இருக்கிறார்கள், நமக்கான நன்மையைப் பற்றி சிந்திப்பதில்லை என்று நாம் நினைக்கிறோம். அதனால் நாம் தனிமையை உணர்கிறோம். “என்னால் மற்றவர்களை நம்ப முடியாது” என்று நாம் நினைக்கிறோம், இதனால் நம் முன்னால், பின்னால், பக்கத்தில் இருப்பவர்கள் என அனைவரையும் சந்தேகப்படுகிறோம்.

அடிப்படையில் நாம் ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்த்தால், நட்பு பாராட்டுவதே மனிதனின் இயற்கையான பண்பு. நட்புக்கரம் நீட்டினால் பெரும்பாலான மக்கள் நேர்மறையோடு நம்மை அணுகுவார்கள். ஆனால், பதட்டத்தை ஏற்படுத்தும், எதிர்மறை எண்ணங்களை கொண்டுள்ளவர்களை எதிர்கொள்ள வேறுசில தடுப்பு அம்சங்கள் தேவை. உதாரணத்திற்கு, மிகவும் வெப்பமாக உணர்ந்தால் உஷ்ணத்தைத் தணிக்கிறோம், அல்லது இருளை அகற்ற நினைத்தால் விளக்கேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. வெளிப்புறத்திலும் இதுவே உண்மை. ஒரு முரண்பாடான சக்தியை பயன்படுத்துவதன் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் – அதுவும் இயற்கையின் வழியில். ஆனால் இது வெளிப்புறத்தில் மட்டுமல்ல, மனதளவிலும் சாத்தியமே. எனவே நம்முடைய கண்ணோட்டத்தை அல்லது தோற்றத்தை எதிர் கருத்துடன் மோத வேண்டும். [அதாவது சுயநலத்தை எதிர்த்தல் மற்றும் மற்றவர்களின் அக்கறை, நட்பை சந்தேகித்தல் உள்ளிட்டவைகளுக்கு எதிராக]

ஒரு மஞ்சள் நிற மலரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நான் இதன் நிறம் “வெள்ளை” என்று ஒரு சில காரணங்களுக்காக சொல்கிறேன். அதன் பிறகு அது மஞ்சள் நிறம் என்று கருதுகிறேன், இவை இரண்டும் முரண்பாடான கண்ணோட்டம். இரண்டையும் ஒரே நேரத்தில் சொல்லமுடியாது. அந்த மலரின் நிறம் மஞ்சள் என்ற கண்ணோட்டம் வந்தவுடன் வெள்ளை நிறம் என்ற கண்ணோட்டம் மறைந்துவிடுகிறது. இவை ஒன்றிற்கு ஒன்று எதிர்மறையானவை. இது மனதில் எதிர்க்கண்ணோட்டட்தை உண்டாக்கும் ஒரு முறை.

துன்பத்திற்கான மற்றொரு காரணம் சாதாரண அறியாமை. அறிந்துகொள்ளுதல், பகுத்தாய்தல், ஆய்வு செய்வதன்  மூலம் அறிமையாமையை எதிர்கொள்ள முடியும். எதார்த்தத்தை உணராமல் புறக்கணிப்பதே அறியாமைக்காக அடிப்படைக்காரணம். அதேபோல், சுயநலத்திற்கு எதிராக செயல்படுவதும், அதற்காக மனதை பயிற்சிவிப்பதும் அவசியமாகிறது (அல்லது நமது மனப்பாங்கை தூய்மைப்படுத்த வேண்டும்)

 மதச்சார்பற்ற நெறிமுறைகள்

நமது மனதை எப்படி பயிற்றுவிப்பது [அல்லது நமது மனபாங்கை தூய்மைபடுத்துதல்] என்பதில், மதம் அல்லது ஆன்மீகத்துடன் தொடர்புபடுத்த வேண்டுமா என்ற கேள்வி எழலாம். என்னைப் பொறுத்தவரையில் அடிப்படையில் இதற்கும் மதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன்.

ஆன்மிகத்தை பொறுத்தவரை அவை இரண்டு வகைப்படும்: ஒன்று மதம் மற்றும் அதன் நம்பிக்கை சார்ந்தது, மற்றொன்று அவை இல்லாதது. மதம்சாராததைத் தான் நான் “மதச்சார்பற்ற நன்னெறி” என அழைக்கிறேன். “மதச்சார்பின்மை” என்பது மதத்தை புறக்கணித்தல் என்ற அர்த்தமல்ல, ஆனால் எல்லா மதத்தினரிடமும் சமமான அணுகுமுறை மற்றும் மரியாதை செலுத்துதல் என்று அர்த்தம். உதாரணத்திற்கு, இந்திய அரசியலமைப்பு எல்லா மதத்திற்கும் உரிய மரியாதை செலுத்துகிறது. அது ஒரு மதச்சார்பற்ற அரசியலமைப்பு. எனவே கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் வசித்துவரும் பார்சி அல்லது ஜோரோஸ்ட்ரியன் சமூக மக்களுக்கும் உரிய மரியாதை தரப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கை சில நூறு ஆயிரம் என்றாலும் அவர்களுக்கு ராணுவம், அரசியலில் சம உரிமை இருக்கிறது.  

மதச்சார்பற்ற நன்னெறிகள் பற்றி நாம் பேசும்போது, அதன் நெறிமுறைகள் மதநம்பிக்கையில்லாதவர்களுக்கும் பொருந்தும். நமது நெறிமுறைகள் மற்றும் மரியாதையை மதச்சார்பின்மை நன்னெறிகள் அடிப்படையில் விலங்குகளுக்கும் விரிவாக்கம் செய்ய முடியும். சூழலை அக்கறையுடன் பாதுகாப்பதும், மதச்சார்பற்ற ஆன்மிகம் அல்லது நெறிமுறையின் இன்னோரு பகுதியாகும். எனவே, மதச்சார்பற்ற நிலைக்கு ஏற்ப நம் மனதை நாம் பண்படுத்த வேண்டும்; மதச்சார்பற்ற நெறிமுறைகளை நாம் பண்படுத்துவது அவசியத்தேவை. இப்புவியில் உள்ள 6 கோடி மக்களும் இதைச் செய்ய வேண்டும். மதச்சார்பற்ற நன்னெறிகள் ஊன்றி உறுதியாக வளர, உலக அளவில் பண்படுத்தப்பட மத அமைப்புகளும் உதவலாம். நிச்சயமாக, அந்த நன்னெறிகளின் வளர்ச்சியை அவர்கள் குறைக்க விரும்பமாட்டர்கள். இதே போன்று, மதச்சார்பற்ற நன்னெறிகள் பற்றி நாம் பேசும் போது, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துடனும் தொடர்பற்ற மனபாங்கு இருக்கிறது. எவர் ஒருவர் உண்மையான மதபோதகர் என்றால், ஒரு மதத்தை பின்பற்றும் அவர் மதச்சார்பற்ற நெறிமுறைக்காக பணியாற்றும்போதுதான். அப்படி செய்யாதவர், தேவாலயம் அல்லது மசூதி அல்லது ஜெப ஆலயத்திற்கு சென்றாலும் கூட, அவர்கள் உண்மையான மத போதகராக என்ற சந்தேகம் எனக்கு வரும். [இதையும் படிக்க: நன்னெறிகள் என்றால் என்ன? ]

Top