ஒரு சிறந்த ஆசிரியராக இருப்பதற்கான செர்காங் ரின்போச்சின் அணுகுமுறை

ஒரு ஆன்மீக ஆசிரியரிடம் நம்பிக்கை மற்றும் முழு மன அர்ப்பணிப்பு ஆகியவற்றை வளர்த்தல்

ஆன்மீக ஆசிரியருக்கான முழு மன அர்ப்பணிப்புடன் இருப்பது என்பது மிகவும் கடினமான மற்றும் நுட்பமான பௌத்த நடைமுறைகளில் ஒன்றாகும். அது சரியாக நிறுவப்பட்டு பராமரிக்கப்படுவதற்கு மிகுந்த பராமரிப்பு தேவை. செர்காங் ரின்போச்சே எனக்கும் அவருக்கும் இடையிலான உறவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்தார். ஒரு மாலையில், முண்ட்கோடில் நடந்த பெரிய மோன்லம் திருவிழாவின் முடிவில், ரின்போச் அவருக்கு அங்கே இருக்கும் தனது சொத்துக்களின் நிதியில் இருக்கும் சிக்கல் பற்றிய கதையை என்னிடம் சொன்னார். அவரது மற்ற உதவியாளர்கள் இது தேவையற்றது என்று உணர்ந்தாலும், அதனை நான் தெரிந்து கொள்வது முக்கியம் என்று ரின்போச் கூறினார். பின்னர் பொறாமை கொண்டவர்களிடமிருந்து இந்தப் பிரச்சினையைப் பற்றி நான் பொய்யான வதந்திகளைக் கேட்டாலும், அவருடைய நேர்மையைப் பற்றியோ அல்லது எனது முழு மன அர்ப்பணிப்புப் பற்றியோ எனக்கு ஒரு கணம் கூட சந்தேகம் வரக்கூடாது என்று அவர் விரும்பினார். 

ஒரு ஆன்மீக ஆசிரியருக்கான முழு மன அர்ப்பணிப்புக்கு வருங்கால சீடர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஒரு முழுமையான மற்றும் நீண்ட பரஸ்பர ஆய்வு தேவைப்படுகிறது. கவனமாக ஆய்வு செய்த பிறகு, சீடர்கள் தங்கள் லாமாக்களை புத்தராக பார்க்க வேண்டும் என்றாலும், ஆன்மீக குருமார்கள் தவறில்லாதவர்கள் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை சீடர்கள் எப்போதும் சரிபார்த்து, தேவைப்பட்டால், மேலும் ஆலோசனைகளை பணிவுடன் கேட்க வேண்டும். எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும், அவர்கள் தங்கள் லாமாக்கள் சொல்லும் அல்லது செய்யும் விசித்திரமான எதையும் மரியாதையுடன் திருத்த வேண்டும்.

ஒருமுறை, பிரான்சில் உள்ள நாலந்தா மடாலயத்தில் உள்ள மேற்கத்திய துறவிகளுக்கு இந்த விஷயத்தை நிரூபிக்க ரின்போச் முயன்றார். ஒரு சொற்பொழிவின் போது, அவர் வேண்டுமென்றே முற்றிலும் தவறாக ஒன்றை விளக்கினார். அவர் கூறியது அபத்தமானது என்றாலும், துறவிகள் அனைவரும் மரியாதையுடன் அவரது வார்த்தைகளை தங்கள் குறிப்பேடுகளில் நகலெடுத்தனர். அடுத்த அமர்வில், ரின்போச் துறவிகளைக் கடிந்துகொண்டார், கடந்த முறை நான் முற்றிலும் அபத்தமான, தவறான முறையில் விளக்கினேன். ஏன் என்னை ஒருவர் கூட கேள்வி எழுப்பவில்லை?  என்றார். ஒரு ஆசிரியர் சொல்வதை ஒருபோதும் கண்மூடித்தனமாகவும் விமர்சனமின்றியும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று புத்தரே அறிவுறுத்தி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பெரிய குருமார்கள் கூட எப்போதாவது வாய் தவறுவதுண்டு; மொழிபெயர்ப்பாளர்கள் அடிக்கடி தவறு செய்கிறார்கள்; மற்றும் மாணவர்கள் எப்போதும் துல்லியமற்ற மற்றும் குழப்பமான குறிப்புகளை எடுக்கிறார்கள். ஏதேனும் விசித்திரமாகத் தோன்றினால், பெரிய நூல்களுக்கு எதிராக ஒவ்வொரு கருத்தையும் அவர்கள் எப்போதும் கட்டாயம் கேள்வி கேட்க வேண்டும்.

Top