உலகம் முழுவதிலும் வெசாக் தினம் (புத்தபூர்ணிமா) கொண்டாடும் பௌத்த சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை கூறுவது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
சக்யமுனி புத்தா, லும்பினியில் பிறந்து, புத்தகயாவில் ஞானமடைந்து, 2600 ஆண்டுகளுக்கு முன்னர் குஷிநகரில் உயிர் நீத்தார். இருப்பினும் அவருடைய போதனைகள் உலக மக்கள் யாவருக்குமானது, அவை இன்றளவும் பொருந்திப்போகின்றன. பிறருக்கு உதவுதல் என்ற ஆழ்ந்த உணர்வு கலந்த அக்கறையோடு வாழ்ந்து, ஞானமடைதலுக்குப் பிறகு துறவறம் ஏற்று, விரும்பி கேட்பவர்களுக்கு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்தார் புத்தர். சார்ந்து வாழ்தல், பிறருக்கு தீங்கு ஏற்படுத்தாமை என்பதே அவரின் இரண்டு அறிவுரைகள், யாருக்கேனும் உதவ நினைத்தால் அகிம்சையை கடைபிடிக்க வேண்டும் என்பதும் அவரது மந்திரமாகும். இன்று உலக நன்மைக்கான சிறந்த படைபலமாக இருப்பது இவை ஒன்றே, இரக்கம் இருந்தால் அகிம்சை துளிர்க்கும், மனிதர்களுக்க நாம் செய்யும் சேவை இதுவேயாகும்.
உலகில் ஒருவருக்கொருவர் சார்ந்திருத்தல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, நமது நலம் மற்றும் மகிழ்ச்சி என்பது மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறது. நாம் இன்று சந்திக்கும் சவால்கள் நம்மை மனிதாபிமானத்தை ஏற்கச் செய்கிறது. நம்மிடையே வேறுபாடுகள் இருந்த போது, மக்கள் அடிப்படையில் மகிழ்ச்சி மற்றும் அமைதிக்காக விருப்பப்படுவதில் சமமானவர்களாகவே இருக்கின்றனர். பௌத்த பழக்கத்தின் ஒரு பகுதி தியானம் மூலம் மனதை பயிற்சி படுத்துவதையும் உள்ளடக்கியது. நமது மனதை அமைதிப்படுத்தும் பயிற்சியானது, அன்பு, இரக்கம், பொறுமை, பெருந்தன்மை உள்ளிட்ட தகுதிகளை வளர்க்கிறது, இதன் செயல் விளைவுக்காக நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இவற்றை பழக்கப்படுத்த வேண்டியது கட்டாயம்.
ஒரு திபெத்திய பௌத்த துறவியாக, நான் என்னை நாலந்தா பாரம்பரியத்தின் வாரிசாகவே கருதுகிறேன். நாலந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்தத்தை கற்றுக்கொண்ட விதம், காரணம் மற்றும் தர்க்கத்தின் ஆணிவேர்கள் அனைத்தும் இந்தியாவின் வான் உயர்ந்த வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. நாம் 21 ஆம் நூற்றாண்டின் பௌத்தர்களாக இருந்தால், வெறுமனே நம்பிக்கை கொண்டிருப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், பலர் செய்தது போல புத்தரின் போதனைகள் பற்றி ஆய்வு செய்தல் மற்றும் படிப்பதில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
புத்தர் காலம் முதலே உலகம் கணிசமான மாற்றங்களை கண்டு வருகிறது. மனித உடலுக்கு பகுமானம் தருபவை எவை என்பதை, நவீன அறிவியல் வளர்ச்சி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது. மற்றொரு புறம் பௌத்த அறிவியல், மனம் மற்றும் உணர்வுகளின் செயல்பாடுகளை புரிந்தும், நுணுக்கங்களை தெரிந்தும் வைத்திருக்கிறது, இவை நவீன அறிவியலுக்கு புதிய பகுதிகள். ஒவ்வொன்றும் மற்றவற்றை புகழ்ந்துரைக்கும் வகையில் அறிவாற்றல் மிக்கவை. இரண்டு அணுகுமுறைகளையும் இணைப்பதால் நமது உடல், உணர்வு மற்றும் சமூக நலனுக்கான சிறந்த திறனை முன்னெடுக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
பௌத்தர்களாகிய நாம் தான் புத்தரின் போதனைகள் தூக்கிப் பிடிக்கிறோம், ஆனால் அவரது கருத்துகள் பரந்து விரிந்த மனிதகுலத்திடம் கொண்டுசொல்ல ஏற்றது. எல்லா மதங்களாலும் மக்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும் என்ற மறைந்து கிடக்கும் உண்மையை நாம் மதநல்லிணக்கம் மூலம் புரிதலை ஏற்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும். உலகம் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், நமது ஆரோக்கியத்தில் மிரட்டலை எதிர்கொண்டிருக்கிறோம், நமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் இழப்பால் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம், இத்தகைய சூழலில் நாம் மனிதக் குடும்பத்தின் உறுப்பினர் என்ற ஒற்றுமையை ஏற்படுத்த எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இலக்காக இருத்தல் வேண்டும். நாம் மற்றவர்களை இரக்கத்தோடு அணுக வேண்டும், அதற்கு நாம் ஒற்றுமையோடு ஒன்றிணைந்து செயல்பட்டு உலகளாவிய முயற்சி செய்தால் மட்டுமே எதிர்பாராத சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும்.
தலாய் லாமா, மே 7, 2020