செர்காங் ரின்போச்: லாமா என்கிற ஒரு உண்மையான விஷயம்

ஜெர்மனி செல்வதற்கு முன்னர் புனிதர் தலாய் லாமாவுடன் இருந்த பார்வையாளர்கள்

1998 ஏப்ரலில் மங்கோலியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஆற்றிய நீண்ட விரிவுரைச் சுற்றுப்பயணம் மற்றும் தீவிர எழுத்துப் பயணத்திற்குப் பிறகு நான் இந்தியாவிலுள்ள தர்மசாலா வீட்டிற்குத் திரும்பினேன். நான் 1969ம் ஆண்டு முதல் இமயமலை அடிவாரத்தில் வசித்து வந்தேன், புனிதர் தலாய் லாமாவைச் சுற்றி இருந்த திபெத்திய அகதிகள் சமூகத்தினருடன் படித்துக் கொண்டு செயலாற்றிக் கொண்டிருந்தேன். இப்போது நான் ஜெர்மனியில் உள்ள முனிச் நகருக்கு எனது பொருட்களை எடுப்பதற்காக வந்தேன், அங்கு என்னால் எனது புத்தகங்களை மிகவும் திறமையாக எழுதவும், மேலும் பௌத்தத்தை மிக அதிக அளவில் அன்றாடம் கற்பிக்கவும் முடியும் என்றும் நினைத்தேன். என்னுடைய இந்த முடிவை புனிதருக்குத் தெரிவித்து, அவருடைய ஆலோசனையைப் பெறவும் விரும்பினேன். எனது ஆன்மீக ஆசிரியராக, மற்றவர்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்காக எனது நேரத்தை எவ்வாறு, எங்கு மிகவும் திறம்படச் செலவிடுவது என்பதை நானே தீர்மானிக்கும்படி புனிதர் முன்னர் ஒரு முறை எனக்கு அறிவுறுத்தியிருந்தார். அனுபவம் எனக்கு மிகவும் நம்பகமான வழிகாட்டியாக இருக்கிறது.

ஏறத்தாழ 29 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது, எனது Ph.D எழுதுவதற்காக ஃபுல்பிரைட் அறிஞராக இந்தியா வந்தேன். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கிழக்கத்திய மொழிகள், சமஸ்கிருதம் மற்றும் இந்திய ஆய்வுகள் துறைகளுக்கான ஆய்வுக் கட்டுரையாகும் அது. அந்த நாட்களில், திபெத்திய பௌத்தம் கல்வியில் ஒரு உயிரற்ற பாடமாகக் கற்பிக்கப்பட்டது, இது எகிப்தியலைப் போன்றது. இந்த முன்மாதிரியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, பௌத்தனாக வாழ்வதும் சிந்திப்பதும் எப்படி இருக்கும் என்று பல வருடங்கள் ஊகித்துக்கொண்டிருந்தேன். புனிதரைச் சந்தித்தபோது, இந்தப் பழங்கால பாரம்பரியம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதையும், அதை முழுமையாகப் புரிந்துகொண்டு, உள்ளடக்கிய ஒரு குரு இங்கே இருக்கிறார் என்பதையும் உணர்ந்து மகிழ்ந்தேன்.

சில மாதங்களுக்குப் பிறகு, உண்மையான போதனைகளைக் கற்கவும் பயிற்சி பெறவும் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நான் புனிதரிடம் என்னை அர்ப்பணித்தேன். நான் அவருக்குச் சேவை செய்ய விரும்பினேன், எனக்குள் இருக்கும் மகத்தான உழைப்பு மட்டுமே இதைச் செய்ய என்னைத் தூண்டுகிறது என்பதை அறிந்தேன். புனிதர் தயவுடன் என்னை ஏற்றுக்கொண்டார். இறுதியில், அவ்வப்போது மொழிபெயர்ப்பாளர்களாக செயல்படுபவர்களில் ஒருவராக பணியாற்றுவதற்கும், உலகெங்கிலும் உள்ள ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் அவருக்கான உறவை ஏற்படுத்துவதற்குமான பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

அடுத்ததாக ஐரோப்பாவில் இருந்து எனது சேவையைத் தொடரலாம் என்ற என்னுடைய முடிவைக் கேட்டு புனிதர் மகிழ்ச்சியடைந்து, நான் எழுதப்போகும் அடுத்த புத்தகத்தைப் பற்றி கேட்டார். ஆன்மீக ஆசிரியருடனான உறவைப் பற்றி எழுத வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். புனிதர் தலாய் லாமாவுடன் தர்மசாலாவில் நடைபெற்ற மேற்கத்திய பௌத்த ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மூன்று கூட்டங்களில் நான் பங்கேற்றதால், மேற்கத்தியர்கள் இந்த விஷயத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்த  புனிதரின் பார்வையை நன்கு அறிந்திருந்தேன். புனிதர் இப்போது சேர்த்துள்ள ஒற்றைக் கருத்து என்னவென்றால், சிரமத்தின் முக்கிய ஆதாரமானது உண்மையில் மிகக் குறைவான அளவிலேயே தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இருப்பது தான். 

பௌத்த ஆசிரியராவதற்கான ஆலோசனைகளாக செர்காங் ரின்போச்சின் பிரதிபலிப்புகள்

நான் பார்வையாளர் அறையை விட்டு வெளியேறியதும், என்னுடைய முதல் பொறுப்பானது நான் பௌத்த ஆசிரியராக இருப்பதற்கான எனது சொந்த நற்சான்றிதழ்களை எனக்கு நானே கேள்வி எழுப்புவதாகும். பல ஆண்டுகளாக, இந்தியாவில் நாடுகடத்தப்பட்ட சில சிறந்த திபெத்திய குருக்களிடம் பயிற்சி பெறும் அசாதாரண வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதில் புனிதர் தலாய் லாமா மட்டுமல்ல, அவரது மூன்று மறைந்த ஆசிரியர்களும் மற்றும் பல திபெத்திய மரபுகளின் தலைவர்களும் அடங்குவர். அவர்களுடன் ஒப்பிடுகையில், எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. இருப்பினும், புனிதரின் முக்கிய சக விவாதிப்பவரான எனது முக்கிய ஆசிரியரான ட்சென்சாப் செர்காங் ரின்போச், 1983ல் எனக்கு வழங்கிய அறிவுரையை நினைவு கூர்ந்தேன்.

நான் ரின்போச்சின் இரண்டாவது உலகச் சுற்றுப்பயணத்தில் அவரது மொழிபெயர்ப்பாளராகவும் செயலாளராகவும் அவருடன் பயணித்துக்கொண்டிருந்தேன், வெனிசுலாவின் கராகஸின் ஒரு பாதி பயணத்தை முடித்துவிட்டு திரும்பி வந்தேன். அப்போது ரின்போச் அளித்த ஊக்கத்தின் பேரில், அங்கு புதிதாக உருவாக்கப்பட்ட புத்தமதக் குழுவிற்குக் கற்பிப்பதற்கான அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன் - என்னுடைய முதல் பங்கேற்பு. நியூ ஜெர்சியில் உள்ள கெஷ் வாங்யாலின் மடத்தில் சில நாட்கள் ரின்போச் தங்கியிருந்தார். ரஷ்யாவைச் சேர்ந்த கல்மிக் மங்கோலியரான கெஷ் வாங்யால், திபெத்திய பாரம்பரியத்தின் முதல் குரு, நான் அவரை 1967ல் சந்தித்தேன், இருப்பினும் அவருடன் இணைந்து ஆழமாகப் படிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

நான் திரும்பி வந்ததும் எப்படி இருந்தது என்னுடைய முதல் பேச்சு என்று ரின்போச் என்னிடம் எந்தக் கேள்விகளையும் கேட்கவில்லை. அது தான் அவருடைய வழக்கமான பாணி மேலும் அதனால் நான் ஆச்சரியம் அடையவில்லை. இருந்தாலும், ஒரு வாரத்திற்குப் பிறகு, லண்டனில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு சாப்பாட்டு மேஜையை சுற்றி அமர்ந்திருந்த போது, “எதிர்காலத்தில், நீங்கள் ஒரு மிகச் சிறந்த ஆசிரியரானால் மாணவர்கள் உங்களை புத்தராக பார்த்தால் நீங்கள் ஞானமடையவில்லை என்று உங்களுக்கு முழுவதும் தெரிந்தால், உங்களுடைய சொந்த ஆசிரியர்களும் புத்தர்கள் தான் என்ற நம்பிக்கையை அசைத்துப் பார்க்க விடாதீர்கள்” என்று ரின்போச் கூறினார். அவர் அப்படி சொன்ன பிறகு நாங்கள் இருவருமே அமைதியாக இருந்தோம். அவருடைய வார்த்தைகளின் ஆழத்தை புரிந்து கொள்ள பல ஆண்டுகள் எடுக்கும்.

"உண்மையான பொருள்"ஆக ரின்போச் இருப்பதற்கான லாமா ஜோபாவின் சாட்சியம்

ஒருமுறை மேற்கில் பிரபலமான திபெத்திய பௌத்த குரு லாமா ஜோபா ரின்போச், நீங்கள் ஒரு உண்மையான லாமாவை சந்திக்க விரும்பினால், சிறந்த உதாரணம் ட்சென்சாப் செர்காங் ரின்போச்சே என்று குறிப்பிட்டார். லாமா ஜோபா திபெத்திய வார்த்தையான லாமாவை அதன் தளர்வான அர்த்தங்களில் ஒரு துறவி என்றோ அல்லது மூன்று வருட தீவிர தியானப் பயிற்சியை முடித்த சடங்குகளைச் செய்பவராகவோ பயன்படுத்தவில்லை. அவர் அதை "மறுபிறவி லாமா" என்ற பொருளிலும் பயன்படுத்தவில்லை – தன்னுடைய மறுபிறப்பை இயக்கக்கூடியவராக இருப்பவர், "விலைமதிப்பற்றவர்" என்ற ரின்போச் பட்டத்தை ஏற்ற ஒருவர். லாமா என்ற வார்த்தையை அதன் அசல் அர்த்தத்தில் ஒரு முழுத் தகுதி வாய்ந்த ஆன்மீக ஆசிரியர் என்கிற அர்த்தத்தில் ஒரு லாமாவை அவர் குறிக்கிறார். எனவே, அத்தகைய ஆசிரியராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையும், ஒரு மாணவராக ஒருவருடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதையும் விளக்கத் தொடங்குவதற்கு ஒரு பயனுள்ள வழி, செர்காங் ரின்போச்சின் வாய்மொழி படைப்பை அவருடனான எனது உறவையும் தீட்டுவதாகும். நினைவுகள் மற்றும் படத்தொகுப்பு மூலம் இதைச் செய்ய நான் விரும்புகிறேன்.

Top