நவீன உலகில் தலாய் லாமாவின் முக்கியத்துவம்

நவீன உலகில் தலாய் லாமாவின் இணக்கத்தைப் பற்றிப் பார்ப்போம். அவர் ஏற்பதற்கு ஏதாவது பாத்திரம் இருந்தால், அது அர்த்தமுள்ளதாகவும் முடிந்தவரை பலருக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும், வெறும் பொழுதுபோக்குபவராகவோ அல்லது ஆர்வத்தின் காரணமாக அவர் ஒரு சூப்பர் ஸ்டாரைப் போன்றோ இருப்பது பொருந்தாது. தலாய் லாமா அப்படியானவர் அல்ல. மற்றவர்களுக்கு நன்மை செய்வதே அவருடைய வாழ்க்கையின் ஒரே நோக்கமாகும்.

பிறருக்கு சேவையாற்றுதல்

உலகில் மற்றவர்களின் நலனுக்காக முற்றிலும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் கூறும் மற்றவர்கள் இருந்தாலும், எங்களால் புனிதர் என்று அழைக்கப்படும் அவரிடம் இருக்கும் ஒரு அற்புதமான விஷயம் - அவர் முற்றிலும், உண்மையான நேர்மையானவர். மற்றவர்கள் அவர் முன்னிலையில் இருக்கும்போது, அவர் சொல்வதைக் கேட்கும்போது, அவர் உண்மையில் என்ன செய்கிறார் என்பதை உணரும்போது இது நிச்சயமாக அவர்களுக்குப் புலனாகும்.

அவர் எப்போதும் தனது வாழ்க்கையில் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டிருப்பதாகப் பேசுகிறார். முதலாவது மதச்சார்பற்ற நெறிமுறைகள், இரண்டாவது மத நல்லிணக்கம், மூன்றாவது திபெத் மற்றும் திபெத்திய மக்களின் நலனைக் கவனிப்பது, அதுவே அவர் மீது வைக்கப்பட்டுள்ள பங்கு ஆகும்.

நன்னெறிகள்

மதச்சார்பற்ற நெறிமுறைகள் மற்றும் மத நல்லிணக்கத்தின் கருப்பொருள் குறித்து புனிதர் அடிக்கடி பேசுகிறார், இதற்குக் காரணம் உலகிற்கு நன்னெறிகள் தேவை. இவ்வளவு ஊழல், இவ்வளவு நேர்மையின்மை, மக்களிடையே இணக்கமின்மை, எல்லாவற்றுக்கும் காரணம் நன்னெறிகள் இல்லாததே ஆகும்.

தலாய் லாமா மிகவும் உலகளாவிய, திறந்த மனதைக் கொண்டவர், மேலும் இந்த கிரகத்தில் உள்ள 7 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு என்ன நன்மை பயக்கும் என்பதைப் பற்றி எப்போதும் பேசுகிறார் மற்றும் சிந்திக்கிறார். இந்த மக்கள் தொகையில், சில வகையான ஆத்திகர்களும், நாத்திகர்களும் உள்ளனர். தேவைப்படுவது என்னவெனில் ஒருவித நன்னெறி அமைப்பு - ஒரு நெறிமுறை அடிப்படை - அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருக்க வேண்டும்.

இதனை புனிதர் தலாய் லாமா "மதச்சார்பற்ற நெறிமுறைகள்" என்று அழைக்கிறார், இது எந்த மதத்திற்கும் அல்லது அமைப்புக்கும் எதிரானது என்று அர்த்தமல்ல, ஆனால் அது அனைத்து நம்பிக்கை அமைப்புகளையும், அதே போல் நம்பிக்கையற்றவர்களின் தேவைகளையும் மதிக்கிறது. அவர் இதை "அடிப்படை மனித மதிப்பீடுகள்” என்று அழைக்கிறார், எனவே சில நேரங்களில் அவரது நோக்கமானது மதச்சார்பற்ற நெறிமுறைகள் என்று சொல்வதை விட, உயிரியலை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை மனித மதிப்புகளை மேம்படுத்துவதற்கான நேரம் இது என்று அவர் கூறுகிறார். புதிதாகப் பிறந்த குழந்தையின் மீது தாயின் பாசம் மற்றும் கவனிப்பு மிகவும் அடிப்படை மற்றும் முதன்மையானது, மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் அப்படித்தான்: மற்றவர்களை பராமரித்தல். தலாய் லாமாவின் வாழ்க்கையிலேயே இதைப் பார்க்கிறோம், அதனால்தான் அவருடைய கருத்துகள் மிகவும் வேகமாக பரவுகிறது.

அட்டவணை

முற்றிலும் நம்பவேமுடியாத ஒரு அட்டவணை போட்டு புனிதர் தலாய் லாமா உலகம் முழுவதும் பயணம் செய்கிறார், குறிப்பாக இப்போது, 2013ல், அவருக்கு 78 வயதாகிறது என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர் மிக நீண்ட உலக சுற்றுப்பயணங்களை மேற்கொள்கிறார், பெரும்பாலும் ஒரு நாள் மட்டுமே ஒரு இடத்தில் தங்குவார். அவரது அட்டவணைகள் கொடூரமானவை. நான் அவருடன் தொடர்பாளராவும், மொழிபெயர்ப்பாளராகவும் மற்றும் பலவாகவும் பயணித்துள்ளேன், எனவே அந்த அட்டவணை எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு நாளும் பல விரிவுரைகள் இருக்கும், பின்னர் செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளும் இருக்கும். சாப்பிடுவதற்குக்கு கூட அவரிடம் அரிதாகவே இருக்கும். நேர மண்டல மாற்றங்கள் அல்லது அது போன்ற எதையும் பொருட்படுத்தாமல் அவர் தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து சுமார் நான்கு மணிநேரம் ஆழ்ந்த தியானப் பயிற்சியை மேற்கொள்வார். அவரது ஆற்றல் மிகவும் வலுவானது மற்றும் அவர் எப்போதும் நகைச்சுவையுடனும், அவர் சந்திக்கும் அனைவரின் மீதும் அக்கறையுடனும் இருப்பவர். அவர் யாரைச் சந்தித்தாலும், அந்த நபரைச் சந்திப்பதில் முற்றிலும் மகிழ்ச்சியடைகிறவர்: "இதோ இன்னொரு மனிதர், எவ்வளவு அற்புதமானவர்!" என்று மகிழ்கிறவர். 

அன்பு

பௌத்தத்தில், இந்த இதயத்தைத் தூண்டும் அன்பைப் பற்றி நாம் பேசுகிறோம், நீங்கள் ஒருவரைச் சந்தித்தால், அது உங்கள் இதயத்தை அரவணைப்பால் நிரப்புகிறது, அவர்களைச் சந்திப்பதில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறீர்கள், மேலும் அவர்களின் நலனில் நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொள்கிறீர்கள். தலாய் லாமா யாருடனாவது உரையாடும் போது நீங்கள் இதைப் பார்க்க முடியும், அவர் ஒரு கூட்டத்தினூடாக நடப்பது அல்லது எதுவாக இருந்தாலும், அவர் மக்களைப் பார்க்கும் விதம் மற்றும் அவர் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும் அவர் தனது முழு கவனத்தையும் செலுத்தும் விதத்தைக் காணலாம். அவர் உண்மையிலேயே மற்றவர்களின் நலனிலும் நம் அனைவரின் நலனிலும் அக்கறை கொண்டுள்ளார் என்பதை இது உண்மையில் தெரிவிக்கிறது.

அவர் ஒரு குறுகிய வட்டத்தில் "பௌத்தம் மட்டுமே" என்கிற வழியில் சிந்திக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள கல்வி முறைகளில் மதச்சார்பற்ற நிலையில் சில வகையான போதனைகளை எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்பது பற்றி அவர் மிகவும் அக்கறை கொண்டுள்ளார், இது குழந்தைகளுக்கு நேர்மையாகவும், கனிவாகவும் இருப்பதன் பலன்களைக் கற்பிக்கும், மேலும் மற்ற அனைத்து அடிப்படை மனித மதிப்புகளுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும், உலக நன்மை குறித்தும் அவர் சிந்திப்பார்.

மத நல்லிணக்கம்

மதக் குழுக்களுக்கு இடையேயான சச்சரவுகளால் உலகில் இவ்வளவு சிரமங்கள் எழுகின்றன. அவநம்பிக்கை இருக்கிறது, பயம் இருக்கிறது, இவை அனைத்தும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. மத நல்லிணக்கத்தைப் பொறுத்தவரை, நமக்கு உண்மையில் தேவைப்படுவது மதச்சார்பற்ற நெறிமுறைகளில் மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் பற்றிய கல்விதான் என்று அவரது புனிதர் கூறுகிறார். நாம் உண்மையில் பயப்படுவது தெரியாதது, இந்த அறியப்படாத குழுக்கள் மற்றும் மதங்கள் மீது, நாங்கள் ஒருவித கற்பனையை முன்வைக்கிறோம். அவர் பங்கேற்கும் பல மதங்களுக்கு இடையேயான உரையாடல்களில், மக்கள் ஒன்றாகக் கூடி, புன்னகைத்து, ஒருவருக்கொருவர் மிகவும் நன்றாக இருப்பார்கள்,மேலும் அங்கே சில பிரார்த்தனைகள் அல்லது அமைதியான தியானம் இருக்கும் என்று அவர் கூறுகிறார். இது எல்லாம் நன்றாக இருக்கிறது, ஆனால் மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இல்லை. "சரி, நாம் அனைவரும் ஒரே விஷயத்தைப் பற்றி பேசுகிறோம், நாம் அனைவரும் சமம்" என்று சொல்வது மற்றும் எப்போதும் ஒற்றுமைகளை சுட்டிக்காட்டுவது உண்மையில் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள உதவாது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், சில சூஃபி மாஸ்டர்களுடன் புனிதர் தலாய் லாமா ஒரு சந்திப்பை நடத்தினார், அவர்களிடம் தான் ஒற்றுமைகள் மட்டும் இல்லாமல் வேறுபாடுகளைப் பற்றியும் அறிய விரும்புவதாகக் கூறினார். நம்முடைய வேறுபாடுகளை எண்ணி நாம் வெட்கப்படக் கூடாது, மாறாக நம்மை மேம்படுத்துவதற்கான நமது சொந்த முயற்சிகளில் நன்மை பயக்கும் வழிகளில் அவைகளில் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறினார். அனைத்து மதங்களும் ஒரே நோக்கத்தையே கொண்டிருக்கின்றன, அதனைப் பின்பற்றுபவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்துவதே அந்த நோக்கம் என்று புனிதர் கூறுகிறார். இதனை அடைய, பல்வேறு முறைகள் உள்ளன, இது அவசியம், ஏனென்றால் பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.

“நாம் அனைவரும் நம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அன்பு, இரக்கம் மற்றும் பலவற்றை வளர்க்க கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறோம் என்றால், நீங்கள் என்ன முறையைப் பயன்படுத்துவீர்கள்? நாம் என்ன முறையைப் பயன்படுத்துகிறோம்? வித்தியாசங்களைப் பார்த்து, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளாக அவற்றை மதிக்க, உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று இது. ஒவ்வொரு மதத்தின் தீவிரமான பயிற்சியாளர்களை ஒன்று கூட்டி அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் கூட்டங்களை நடத்துவது நல்லது, ஒரு திரளான மக்களுக்காக இல்லாவிட்டாலும்,  ஒருவருக்கொருவர் மிகவும் தீவிரமான பயிற்சியைப் பற்றி பேசுகிறோம். இது மிகவும் பலனளிக்கக் கூடாயதாகும்.

அறிவியல்

திபெத்திய மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொறுப்பு மற்றும் புத்தமதத்தின் திபெத்திய மரபுகளுக்குள் ஒரு குறிப்பிட்ட பொறுப்புடன் அனைவருக்கும் நன்மை செய்வதே புனிதரின் முதன்மையான அர்ப்பணிப்பு என்றாலும், இவை அவருடைய தனிப்பட்ட அக்கறை அல்ல. சிறு வயதில் இருந்தே, அறிவியல், இயக்கவியல் மற்றும் பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் புனிதர் உறுதியான ஆர்வத்தைக் காட்டியுள்ளார். 1980களின் தொடக்க காலத்தில்  இருந்தே அவர் விஞ்ஞானிகளுடன் சந்திப்புகளை நடத்தி வருகிறார், மேலும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் உண்மையில் விரும்புகிறவர்.

பௌத்த போதனைகளில் நாம் காணும் கருத்துக்களுக்கு முரணான ஒன்றை விஞ்ஞானிகளால் சரியாக நிரூபிக்க முடிந்தால், உதாரணமாக பிரபஞ்சத்தின் விளக்கம், பிரபஞ்சம் எவ்வாறு தொடங்கியது, மற்றும் பலவற்றை நிரூபிக்க முடிந்தால் பௌத்த போதனைகளில் இருந்து அதனை கைவிடுவது முற்றிலும் சரி என்று அவர் கூறினார். மூளை எவ்வாறு செயல்படுகிறது, பல்வேறு இரசாயன பொருட்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய மேற்கத்திய அறிவியலின் புரிதல் புத்த மத புரிதலுக்கு ஒரு சிறந்த துணையாக இருக்கும்.

அதேபோல், பௌத்த விஞ்ஞானம், பௌத்த அறிவு மற்றும் பௌத்த தத்துவம் ஆகிய பிரிவுகளில் இருந்து வரும் விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு பெரிய ஞானத்தை பௌத்தம் கொண்டுள்ளது. உதாரணமாக, பௌத்தம் உணர்ச்சிகளின் மிக விரிவான வரைபடத்தை வழங்குகிறது - உணர்ச்சிகளின் முழு உள் உலகமும் எவ்வாறு செயல்படுகிறது, இந்த உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் பல. பௌத்த பகுப்பாய்வு மிகவும் விஞ்ஞான ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கண்ணோட்டத்தை வழங்குகிறது. மேற்கத்திய விஞ்ஞானிகளுக்கும் கூட இது பெரிதும் பயன்படும். மடாலயங்களில் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கான பாடத்திட்டத்தில் அறிவியல் படிப்பை  புனிதர் நிறுவியுள்ளார். அறிவியல் பற்றிய பல்வேறு பாடப்புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்து திபெத்திய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த விதங்களில், ஒரு பெரிய உலக மதத்தின் தலைவராக இருக்கும் ஒருவராக அவர் நம்பமுடியாத அளவிற்கு திறந்த மனதுடன் இருக்கிறார்.

மற்ற பாரம்பரியங்களை அடைதல்

புனிதர் இஸ்லாமிய உலகத்தை அடைய விரும்புகிறார், எனவே அடிப்படை பௌத்த போதனைகள் மற்றும் அடிப்படை மனித மதிப்புகள், நெறிமுறைகள் மற்றும் பலவற்றின் பொதுவான செய்திகளை அரபு மற்றும் பிற முக்கிய இஸ்லாமிய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எனது சொந்த பௌத்த ஆவணங்களை அவர் ஊக்குவித்து வருகிறார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களாக, இஸ்லாம் மதமானது கொடூரமானதாக சித்தரிக்கப்பட்டு வருகிறது, இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களை அச்சுறுத்தலாக ஒதுக்கிவிடாமல், அவர்களையும் இந்த உலகிற்குள் அடக்குவது மிகவும் முக்கியம் ஆகும்.

பௌத்த நம்பிக்கைகளைப் பற்றிய தெளிவான விளக்கங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும், அவர்களை மதம் மாற்றவோ அல்லது அதுபோன்ற எதையும் செய்வதற்காகவோ அல்ல,மாறாக அவர்கள் நம்முடன் செய்யக்கூடிய அடிப்படை தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மீண்டும், கல்வி என்பது புரிதலையும் நட்பையும் வளர்ப்பதற்கான வழியாகும்.

பௌத்தத்திற்குள்ளேயே, திபெத், சீனா, ஜப்பான் மற்றும் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் மகாயான பாரம்பரியமும், தென்கிழக்கு ஆசியாவில் நடைமுறையில் உள்ள தேரவாத பாரம்பரியங்களும் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, மற்றும் பலருக்கு ஆச்சரியமாக, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மிகவும் சிறிய ஞானத்தைக் கொண்டுள்ளனர். ஒரு அமெரிக்க பௌத்த கன்னியாஸ்திரியை மிக விரிவான ஒப்பீடு செய்வதற்காக அவர் நியமித்து நிதியுதவி செய்துள்ளார். மகாயான பதிப்பு என்றால் என்ன, தேரவாத பதிப்பு என்ன? என ஒவ்வொரு பயிற்சிகளுக்குமான விரிவான ஒப்பீட்டை அவர் செய்வார். இந்த முக்கியமான அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக பின்னர் இது தென்கிழக்கு ஆசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.

பெண்களுக்கான பதவி அளிப்பு

திபெத்தில் நிச்சயமாக முழுமையாக நியமிக்கப்பட்ட துறவிகள் இருந்தாலும், கன்னியாஸ்திரிகளுக்கான நியமன முறையானது இந்தியாவில் இருந்து இமயமலையை கடக்க முடியவில்லை. இது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டது, முக்கியமாக புவியியல் ரீதியிலான காரணம்; பண்டைய காலங்களில், இந்திய கன்னியாஸ்திரிகளின் மொத்தக் குழுவும் திபெத்துக்கு கால்நடையாகப் பயணம் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. இப்படியாக அந்த நியமன முறையானது உடைந்தது, ஏனென்றால் பத்து முழுமையாக நியமிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் குழுவை அனுப்ப வேண்டியிருந்தது.

இந்த கன்னியாஸ்திரிகள் நியமனத்தை எவ்வாறு மறுதொடக்கம் செய்வது என்பது பற்றிய ஆய்வுகள் மற்றும் திட்டங்களுக்கு தலாய் லாமா மீண்டும் நிதியுதவி அளித்து வருகிறார், இதனால் திபெத்திய பாரம்பரியத்தில் முழுமையாக நியமிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளாக மாற விரும்பும் பெண்கள் அவ்வாறு செய்யலாம்.

“நான் வெறும் ஒரு எளிமையான துறவி”

எந்த பாசாங்கும் அல்லது ஆணவமும் இல்லாமல், அவர் எவ்வளவு தாழ்மையுடன் மற்றும் எளிமையாக இருக்கிறார் என்பது புனிதருடைய மிகவும் அன்பான குணங்களில் ஒன்றாகும். தான் ஒரு எளிய துறவி, எல்லோரையும் போல ஒரு வழக்கமான மனிதர் என்று எப்போதும் அவர் கூறுகிறார். “நான் யாரையாவது சந்திக்கும்போதெல்லாம், நான் அவர்களை இன்னொரு மனிதனாகவே கருதுகிறேன். எங்கள் தொடர்பு மனிதனுக்கும் மனிதனுக்கும் ஆனதாக இருக்கும்,தலாய் லாமாவிற்கும் சில வழக்கமான நபருக்கு இடையேயான சந்திப்பாக அல்ல. சில வெளிநாட்டவருக்கு திபெத்தியருக்குமான சந்திப்பு அல்ல. இந்த இரண்டாம் வேறுபாடுகளின்றி, முதன்மையான மட்டத்தில் இந்த இரண்டாம் வேறுபாடுகளின்றி, முதன்மையான மட்டத்தில்: நாம் அனைவரும் மனிதர்கள்” என்கிற விதத்தில் இருக்கும் என்று கூறுகிறார். 

அவர் ஒருவிதமான கடவுள், ராஜா, அல்லது விசேஷ சக்திகளைக் கொண்டவர் என்று மக்கள் கொண்டிருக்கும் கற்பனையை உடனடியாக குறைக்க விரும்புகிறார். அந்த மாபெரும் பார்வையாளர்கள், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னால் வரும்போது, அவர் முற்றிலும் நிம்மதியாக இருக்கிறார், முற்றிலும் வீட்டில் இருப்பதைப் போல உணர்கிறார். அவர் அரித்தால், மற்ற எந்த சாதாரண மனிதனைப் போலவே தன்னைச் சொரிந்து கொள்கிறார். அவர் சுய-போற்றுதல் இல்லாதவர் மற்றும் யாருக்காகவும் ஒரு நிகழ்ச்சியை நடத்த முயற்சிக்கவில்லை. அவர் ஏதாவது ஒரு நாட்டின் அதிபரை சந்திக்கச் சென்றால், அவர் ரப்பர் செருப்பு அணிந்திருந்தால், அதையே தான் அணிந்து செல்வார். அவர் யாரையும் ஈர்க்க விரும்பவில்லை மற்றும் யாரையும் ஈர்க்க முயற்சிக்கவில்லை.

நகைச்சுவை

மற்றவர்கள் தப்பித்துக் கொள்ளாத வகையில், நகைச்சுவையாக விஷயங்களை அவர் சொல்லும் விதம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு முறை அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார், அவர் அமர்ந்திருந்த இருக்கை மிகவும் அசவுகரியமான நாற்காலியாக இருந்தது. சொற்பொழிவின் முடிவில், அவர் ஏற்பாட்டுக் குழுவினரிடமும், பார்வையாளர்களிடமும், அனைத்து ஏற்பாடுகளும் அருமையாக இருந்தன, அடுத்த முறை இருக்கையை மட்டும் சிறந்ததாக அமைத்தால் போது, இது மிகவும் சங்கடமாக இருந்தது! என்று சொன்னார். அவர் அதை இலகுவாகவும், அன்பாகவும் கூறினார், யாரும் அதனை புண்படுத்தலாக எடுத்துக் கொள்ளவில்லை, உண்மையில் எல்லோரும் சிரித்தனர். அவர் நினைத்திருந்தால் அதே விதத்தில் மக்களை திட்டி இருக்க முடியும். 

வேக்லேவ் ஹேவலுடன் ஒரு சந்திப்பு

செக்கோஸ்லோவாக்கியாவாக இருந்தபோது, செக் குடியரசின் முதல் ஜனாதிபதியான வேக்லேவ் ஹேவல் அவர்களால் அழைக்கப்பட்டபோது, நான் புனிதருடன் இருந்தேன். அழைக்கப்பட்டவர்களில் முதல் நபர் ராக் ஸ்டார் ஃபிராங்க் ஜாப்பா, இரண்டாவது நபர் புனிதர் தலாய் லாமா ஆவார். அவருக்கும் அமைச்சரவைக்கும் தியானம் செய்வது எப்படி என்று தலாய் லாமா கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஹேவல் விரும்பினார், “எங்களுக்கு எந்த அனுபவமும் இல்லை, ஒரு அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அனைவரும் மனஅழுத்தத்தில் இருக்கிறோம் மேலும் எங்களால் உறங்க முடியவில்லை. எப்படி அமைதி அடைவது என்று எங்களுக்கு பயிற்றுவிக்க முடியுமா? என்று அவர் கேட்டார் இல்லாவிட்டால் எங்களால் புதிய நாட்டின் அரசாங்கத்தை ஒரு போதும் நிர்வக்க முடியாது என்றும் ஹேவர் தெரிவித்தார். 

வேக்லேவ் ஹேவல் மிகவும் பணிவானவர், மேலும் அவர் புனிதர் தலாய் லாமாவையும் அனைத்து அமைச்சர்களையும் ப்ராக் (Prague) நகருக்கு வெளியே உள்ள ஒரு பெரிய கோட்டையான கோடைகால அரண்மனைக்கு செல்ல அழைத்தார். அவர் உண்மையில் அங்கு வசிக்கவில்லை; அது பெரியதாக இருந்தது மற்றும் அரங்கில் நடந்த அனைவரும் ஆளுக்கொரு திசையில் பிரிந்துவிட்டனர். அவர் தலாய் லாமாவிடம், "இது கம்யூனிஸ்ட் தலைவர்களின் பரத்தையர் இல்லம்" என்று சாதாரணமாக குறிப்பிட்டார். தலாய் லாமாவிடம் பேசுவதற்கு பயன்படுத்தும் சாதாரண மொழி இதுவல்ல, ஆனால் அவர் அப்படித்தான் இருந்தார். பின்னர், தலாய் லாமா உட்பட அனைவரும் பெரிய அறை ஒன்றின் தரையில் அமர்ந்தனர். ஹேவல் மற்றும் அவரது அமைச்சர்கள் அனைவரும் ஸ்வெட் சூட் அணிந்திருந்தனர், மேலும் புனிதர் அவர்களுக்கு அடிப்படை சுவாசித்தல் மற்றும் அமைதிப்படுத்துவதற்கான ஆற்றல் தியானங்களை கற்றுக் கொடுத்தார்.

தன்னுடைய துறவற சபதங்களை சற்றே கடுமையாக பின்பற்றும் புனிதர் தலாய் லாமா பொதுவாக இரவு நேரங்களில் சாப்பிடுவதில்லை. ஆனால் சில நேரங்களில் மாறுதலுக்கு வளைந்துகொடுப்பார், அதிபர் ஹேவர் தன்னுடைய அரண்மனையில் இரவு உணவை தயார் செய்தார். அப்போது உரையாடலானது ஆங்கிலத்தில் இருந்தது அதில் குறிப்பிடும்படியானது என்னவெனில், தொடர் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டிருந்த ஹேவலை தலாய் லாமா திட்டிய விதம். புனிதருக்கு அடுத்ததாக வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ஹேவல் புகைபிடித்துக் கொண்டிருந்தார்; அங்கு ஒரு ஆட்சேபணை தேவைப்பட்டது. அவர் அந்த நாட்டின் அதிபராகவே இருந்தாலும், புனிதர் தனக்குத் தோன்றியதை மிகவும் சிறந்த முறையில் வெளிப்படுத்தினார், “நீங்கள் மிகவும் அதிகமாக புகைபிடிக்கிறீர்கள். அது உங்களது உடல்நலனை பாதிப்பதோடு, உங்களுக்கு புற்றுநோயை உருவாக்கும், எனவே உண்மையில் நீங்கள் அதனை விட்டொழிக்க வேண்டும்!” என்று கூறினார். இது உண்மையில் புனிதரின் மிகுந்த கனிவான குணமாகும். இருப்பினும் பின்னர் ஹேவல் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மற்றவர்கள்  அவரைப் பற்றி என்ன நினைக்கப் போகிறார்கள் என்று கருதாமல், மற்றவர்களுக்கு என்ன நன்மை பயக்கும் என்பதுதான்  புனிதரின் முக்கிய அக்கறை, என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

அறிவாற்றல் மற்றும் நினைவுத்திறன்

நான் சந்தித்தவர்களிலேயே நிச்சயமாக புனிதர் மிகவும் அறிவாற்றல் மிக்க நபர். அவருடைய நினைவாற்றல் என்பது புகைப்படத்தில் இருக்கும் நினைவுகளைப் போன்றது. அவர் கற்பிக்கும்போது, பல்வேறு பாரம்பரியங்களைச் சேர்ந்த எவருடைய பௌத்த போதனைகளைப் பற்றியும் முழுமையாக அறிந்து வைத்திருந்த மிகப்பெரிய குரு ஆவார். அவரால் எந்த நூலில் இருந்தும் மேற்கோள் காட்ட முடியும். பயிற்சியில் திபெத்தியர்கள் தாங்கள் படிக்கும் பல்வேறு முக்கிய நூல்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்வார்கள், ஒருவேளை 1000 பக்கங்கள் அல்லது அது போன்ற ஏதாவதாக இருக்கலாம், ஆனால் தலாய் லாமா, அனைத்து வர்ணனைகளையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தது நம்பமுடியாதது. அவர் கற்பிக்கும்போது, அவர் இந்த உரையிலிருந்து ஒரு சிறிய பத்தியையும், அந்த உரையிலிருந்து ஒரு பகுதியையும் வரைவார்; அப்படிச் செய்வது மிகவும் கடினம். அவருடைய நினைவாற்றல் இப்படித்தான் செயல்படுகிறது, மேலும் இது சிறந்த புத்திசாலித்தனத்தின் அடையாளமாகும்: உங்களால் விஷயங்களை ஒருங்கிணைத்து, அது எவ்வாறு பொருந்துகிறது என்பதைப் பார்க்கவும், வடிவங்களைப் பார்க்கவும் முடியும். ஐன்ஸ்டீன் போன்றவர்கள் e=mc2 ஐ எப்படி கண்டுபிடித்தார்கள்? எல்லாவிதமான விஷயங்களையும் ஒன்றாக இணைத்து, வடிவத்தைக் கண்டுபிடிப்பதில் இருந்து தான். திபெத்திய பற்றிய முழுமையான இலக்கியத் தொகுப்பு குறித்த பரந்த அறிவைக் கொண்டிருந்ததால் புனிதரால் இதைச் செய்ய முடிகிறது.

அவருடைய புகைப்படம் போன்ற நினைவாற்றலானது நூல்கள் மட்டத்தில் மட்டுமல்ல, மாறாக மக்களையும் அப்படியே நினைவில் கொள்வார், அதனை என் முன்னால் பல முறை விளக்கிக் காட்டியுள்ளார். திபெத்திலிருந்து மிகவும் வயதான துறவி ஒருவர் தர்மசாலாவுக்குச் சென்ற போது நான் அங்கு இருந்தேன், புனிதர் அவரைப் பார்த்தபோது, “ஓ! எனக்கு உங்களை நியாபகம் இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இந்தியாவுக்குச் செல்லும் வழியில் உங்கள் மடத்தில் தங்கி இருந்தோம், அப்போது ஒருவித விழா நடந்தது. நீங்கள் பிரசாதத்துடன் ஒரு கனமான தட்டை அந்தச் சடங்கு முடியும் வரைப் பிடித்திருக்க வேண்டியிருந்தது, அது உங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கு நினைவிருக்கிறதா?" என்று கேட்டார். இது மிகவும் நம்பமுடியாததாக இருந்தது. எனது முக்கிய ஆசிரியர், செர்காங் ரின்போச், புனிதரின் முதன்மை ஆசிரியர்களில் ஒருவர், மேலும் அவர் குழந்தையாக இருந்தபோது, ஒரு முறை மட்டுமே கற்பிக்கப்பட்டது. அதை உடனே புரிந்து நினைவில் வைத்துக் கொள்வார் என்று கூறினார். 

சாதனைகள்

இந்த நபர் நம்முடைய காலகட்டத்தில் மிகவும் உன்னதமானவர், அதற்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அது இது தான்: மனிதராக அவர் என்ன அடைந்திருக்கிறார் என்பதைப் பாருங்கள். நிச்சயமாக தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ள அவர் மிகப்பெரும் கடின உழைப்பை செய்திருப்பதாகச் சொல்கிறார், ஆனால் நம்மாலும் அப்படியே செய்ய முடியுமா. பிரச்னைகளை அவர் கையாளும் விதங்களைப் பாருங்கள். கிரகத்தில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களால் நம்பர் ஒன் பொது எதிரியாகக் கருதப்படுவதை கற்பனை செய்து பாருங்கள். ஆனால், அது உண்மையல்ல, தனக்குத் தலையில் கொம்புகள் இல்லை என்று அவருக்குத் தெரிந்ததால், அவற்றை புனிதர் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு சிரிக்கிறார். ஆனால் துறவிகளின் உடையில் பேய் என்று முத்திரை குத்தப்படுவதை எப்படிச் சமாளிப்பது?

அவர் ஒருபோதும் மனச்சோர்வடைய மாட்டார். அவர் அதை ஒருபோதும் அனுபவித்ததில்லை என்றும், அதைப் புரிந்துகொள்வது தனக்கு மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார். குறைந்த சுயமரியாதை அல்லது சுய வெறுப்பு கொண்டவர்களின் கருத்தை அவர் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை அல்லது சிந்திக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அவர் அதை ஒருபோதும் சந்தித்ததில்லை அல்லது அனுபவித்ததில்லை.

அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பவர், ஆனால் அதே நேரத்தில் சூழ்நிலைகளின் யதார்த்தத்தைக் கையாள்கிறார். நாம் இப்போது இருக்கும் சூழ்நிலைகளைப் பற்றிக் கூறும் அவர், "உலகின் பிரச்சனைகள் மனிதகுலத்தால் உருவாக்கப்பட்டவை, அதனை மனிதகுலத்தாலேயே அகற்ற முடியும்" என்கிறார். அடிப்படை மனித மதிப்புகளை ஊக்குவித்தல், குழந்தைகளின் கல்வியில் நன்னெறிகளைக் கொண்டுவருதல் மற்றும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதன் மூலம் அவற்றை ஒழிப்பதற்கான பங்களிப்பாற்ற அவர் முயற்சிக்கிறார். முழு மனத்தாழ்மை மற்றும் முற்றிலும் கீழ்நிலை மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், அவர் முழு உலகின் நலனுக்காகவும் தீவிரமாக செயலாற்றுகிறார். இதுவே மிகவும் பிரியமானது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது நகைச்சுவை மற்றும் நம்பமுடியாத ஆற்றலைச் சேர்த்துக் கொள்ளவும், அது நம்பவேமுடியாதது.

அவருடைய செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் அதிகம் பயணம் செய்ய வேண்டாம் என்று எப்போதும் கூறுவார்கள். அவருடைய பயணத்தின் போது, நாளின் ஒவ்வொரு நொடியும் டஜன் கணக்கிலான சந்திப்புகளால் நிறைந்திருக்கும், பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் ஒரு விமானப் பயணம் இருக்கும். ஆனால் அவரோ, “இல்லை, பயணிப்பதற்கான சக்தி என்னிடம் இருக்கிறது, இது போன்று பயணிப்பது எனக்கு பிடித்திருக்கிறது, ஏனெனில் இதனால் மற்றவர்கள் பலனடைவார்கள் என்று அவர் எப்போதும் சொல்கிறார். 

இது தொடர்புடைய விஷயம் என்னவெனில் அவர் நமக்கு நம்பிக்கை கொடுக்கிறார். அவர் மிகவும் நேர்மையானவர் மிகக் கடினமாக உழைக்கிறார். மனிதகுல மேம்பாடு பற்றி அவர் பேசுகிறார் என்றால், அவர் பேசும் விதமானது கல்வி, பரஸ்பர புரிதல் மற்றும் நன்னெறிகள் போன்று முற்றிலும் யதார்த்தமானது மற்றும் அடையக்கூடியது. இவை ஒன்றும் மாயமந்திர முறைகள் அல்ல; உண்மையில் நாம் செய்யக்கூடிய விஷயங்களே அவை. அவர் நம்முடைய நாட்டிற்கோ, அல்லது நம்முடைய நகரத்திற்கோ வருகிறார் எனில், உண்மையில் புனிதர் தலாய் லாமாவை தனிப்பட்ட முறையில் அனுபவிக்கும் மிகவும் அற்புதமான மற்றும் பயனுள்ள வாய்ப்பாகும்.  

கேள்வி பதில்கள்

தன்னுடைய அனைத்து ஆன்மீகக் கடமைகளையும், சரணாகதிதேடுபவர்களின் வாழ்க்கையை ஒழுங்கமைப்பது போன்ற நடைமுறை விஷயங்களையும் புனிதர் தலாய் லாமாவால் எவ்வாறு ஒருங்கிணைத்து நிர்வகிக்க முடிகிறது?

அவர் நிறைய ஆய்வுகள் மற்றும் நிறைய தியானப் பயிற்சிகளில் மட்டும் ஈடுபடவில்லை, மாறாக நாடுகடத்தப்பட்ட திபெத்திய சமூகத்திற்கான மத்திய திபெத்திய நிர்வாகத்தின் தலைவராகவும் இருந்தார். தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும், மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன், அவர் அந்த பதவியை கைவிட்டு, சிக்யோங் என்று அழைக்கப்பட்ட ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரானார். ஆனால் அதற்கு முன் பல வருடங்களாக, அகதிகளை குடியமர்த்துவது, நாடுகடத்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை மறுதொடக்கம் செய்வது போன்ற அனைத்து முயற்சிகளையும் ஒழுங்கமைத்து மேற்பார்வையிட்டார். அவரது முக்கிய உத்தி மிகவும் யதார்த்தமாக இருப்பது, "ஓ, இது மிகவும் அதிகமாக உள்ளது, என்னால் அதை செய்ய முடியாது, இது சாத்தியமற்றது" என்று நினைக்காமல், மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வழியில் அதைப் பெறுவது. அவரது நம்பமுடியாத புத்திசாலித்தனம் மற்றும் நினைவாற்றல் மூலம், அவர் தனது கீழ் உள்ள பல்வேறு திட்டங்களையும் கண்காணிக்க முடிகிறது, மேலும் விஷயங்களை எவ்வாறு வழங்குவது என்றும் அவருக்குத் தெரியும். எது தேவையோ அதைத்தான் செய்கிறார்; அது அவருக்கு பெரிய விஷயமில்லை.

பலதரப்பட்ட விஷயங்களைச் செய்வதற்கான பயிற்சிக்கு காலசக்ரா அமைப்பு எவ்வாறு மிகவும் உதவியாக இருக்கிறது என்பதை நான் அடிக்கடி நகைச்சுவையாகக் கூறுவேன். காலசக்கர மண்டலத்தில் நீங்கள் 722 உருவங்களைக் காட்சிப்படுத்த வேண்டும், ஒருவேளை அவர் அதைச் செய்யக்கூடிய மிகச் சிலரில் ஒருவராக இருக்கலாம். இந்த நடைமுறையின் மூலம் ஒரு பெரிய சிக்கலான வழியில் தன்னைப் பற்றி யோசித்து, ஒரு புதிய பணி அல்லது சிக்கல் வரும்போது, அது மற்றொரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். நீங்கள் எதற்கும் பயப்பட மாட்டீர்கள், எதையும் பெரிதுபடுத்த மாட்டீர்கள்.

வாழ்க்கை சிக்கலானது மேலும் சிலரின் வாழ்க்கை மற்றவர்களை விட அதிக சிக்கலானது. ஆனால் அதைப் பற்றி பயப்படுவதை விட, அதை ஏன் கட்டித் தழுவக்கூடாது? எவ்வளவு அதிகமோ அவ்வளவு நன்று! எனது இணையதளத்தைப் போலவே, 21 மொழிகளில் செயல்படுகிறது - பெரிய விஷயமில்லை, எங்களால் அதைச் செய்ய முடியும். தேவைப்பட்டால் மேலும் சில மொழிகளையும் சேர்க்கலாம், ஏன் கூடாது? தலாய் லாமா கையாளும் விஷயங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறிய விஷயம். ஆனால் இது சாத்தியங்களைக் காட்டுகிறது. புகார் கூறுவதில்லை, "பாவம் நான்" என்பதும் இல்லை. என் அம்மா சொல்வது போல், "நேராக மேலும் கீழும்." அதை மட்டும் செய்!

தலாய் லாமா ஒரு எளிய மனிதர் என்பதை அவரே வலியுறுத்தினாலும், தலாய் லாமாவை புனிதர் என்று அழைப்பது ஏன் என்பதை விளக்க முடியுமா?

தலாய் லாமா தன்னைத் தானே புனிதர் என்று அழைக்கவில்லை. அவர் அவ்வாறு அழைப்பது எப்படி ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியவில்லை; ஒருவேளை இது ஒருவித கிறிஸ்தவ தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம், அது ஆங்கிலத்தில் சேர்ந்திருக்கலாம். ஒரு ராஜாவை "மாமன்னரே" என அழைப்பதைப் போன்ற மரியாதையின் வெளிப்பாடாக மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். திபெத்திய மொழியில் உங்கள் ஆன்மீக ஆசிரியரைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பல மரியாதைகள் உள்ளன, மேலும் தலாய் லாமாவுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்புகளும் உள்ளன, ஆனால் உண்மையில் "அவர் புனிதர்" என்று எதுவும் மொழிபெயர்க்கப்படவில்லை. இது மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு எளிய வழக்கமாகிவிட்டது, மேலும் அப்படி அழைப்பதை அவரால் நிறுத்த முடியாது. ஆனால் மக்கள் தன்னை ஒருவித கடவுளைப் போல வணங்குவதை அவர் நிச்சயமாக விரும்பமாட்டார்.

உங்களுக்கு திபெத்தியம் தெரியும், ஒருவேளை நீங்கள் ஆங்கிலத்தில் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று எதையேனும் பரிந்துரைக்க முடியுமா?

அவருக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய தலைப்பு "குன்டன்", அதாவது "உச்ச பிரசன்னம்". மற்ற மொழிகளில் இதனை மொழிபெயர்ப்பது கடினம், ஆனால் மிகவும் வளர்ச்சியடைந்த உயிரினங்களின் அனைத்து நல்ல குணங்களையும் அவர் அவதாரம் செய்து பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று அர்த்தம். நீங்கள் உண்மையில் மிகவும் உணரப்பட்ட ஒருவரின் முன்னிலையில் இருக்கிறீர்கள். நான் உண்மையில் இதை அறிமுகப்படுத்த முயற்சித்தேன், ஆனால் யாரும் ஆர்வம் காட்டவில்லை!

சுருக்கம்

சிலர் அவரை ஆன்மீகத் தலைவராகக் கருதுகிறார்கள், மற்றவர்கள் அவரை ஒரு சூப்பர் ஸ்டாராகப் பார்க்கிறார்கள். அவரை "ஆட்டின் போர்வையில் இருக்கும் ஓநாய்" என்று நினைப்பவர்கள் கூட இருக்கிறார்கள். மதச்சார்பற்ற நன்னெறிகள் மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் தலாய் லாமா மற்றவர்களின் நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் அயராது உழைக்கிறார் என்பதே உண்மை. அன்பு, இரக்கம் மற்றும் ஞானத்தின் உருவகமாக, அவர் நம்மை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறார், மனிதர்களாகிய நாம் எதை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறார்.

Top