அர்த்தமுள்ள வாழ்க்கையை முன்னெடுத்தல்

உலகில் உள்ள அனைத்தும் புலன் உணர்வு கொண்டவை, குறிப்பாக மனிதர்களுக்குத்தான் மகிழ்ச்சி மற்றும் சோகத்திற்கு இடையேயான வேற்றுமையை பிரித்தறியும் சக்தி இருக்கிறது. நல்லது எது? தீயது எது? அவற்றின் பலன் என்ன? என அறிய முடியும். பல்வேறு விதமான உணர்வுகளை வேறுபடுத்தி அடையாளம் காணும் திறன் காரணமாக, நாம் அனைவரும் மகிழ்ச்சியை விரும்புருகிறோம், துன்பத்தை ஒருபோதும் விரும்புவதில்லை.

வெவ்வேறு விதமான உணர்வுகள் உருவாகுவதற்கான பிறப்பிடம் எது என்பதைப் பற்றியெல்லாம் நான் இப்போது ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை, எனினும் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது, நாம் மகிழ்ச்சியை போற்றுகிறோம், வலி மற்றும் துன்பத்தை தூற்றுகிறோம். எனவே, தொல்லை, கலக்கமற்ற நிலைக்கு, நல்லிணக்கம் மற்றும் அமைதியுடன் வாழ்க்கையை முன்னெடுத்தல் என்பது மிக முக்கியமானது.

அமைதி மற்றும் மகிழ்ச்சி எங்கிருந்து கிடைக்கிறது? என்ற கேள்வி எழுந்தால், உயர்ரகமான வெளிப் பொருட்களின் மூலம் அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும் என நினைப்பது தவறு. பொருட்களைச் சார்ந்து கிடைக்கும் வசதிகள் மூலம் உடல் ரீதியிலான மகிழ்ச்சியும், பிரியமும் கிடைக்கும், அதனால் நம் உடல் அளவில் ஏற்படும் சிரமங்களை மட்டுமே போக்க முடியும். பொருட்கள் மூலம் கிடைக்கும் வசதிகளுக்கு நமது சரீரம் வரையே அதன் எல்லை.

மற்ற விலங்குகளைப்போல் இல்லாமல், மனிதர்களுக்கு சிந்திக்கவும், கணக்கிடவும், மதிப்பிடவும், நீண்ட காலத் திட்டமிடுவதற்கும் திறன் இருக்கிறது. எனவே, மனிதர்களாகி நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் மகிழ்ச்சியும் வலிமையாகவும் மேலும் மேலும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது. இதனால், மனிதர்களின் சிந்திக்கும் திறனுக்கு ஏற்ப கூடுதல் வேதனையை அனுபவிக்க வேண்டியுள்ளது.

உதாரணத்திற்கு, மனிதர்களை எடுத்துக்கொண்டால், விலங்குகளைப் போல இல்லாமல், நிகழ்காலத்தின் சோகத்தை மாற்ற முடிந்தாலும், தற்காலிகமாக கிடைக்கும் மகிழ்ச்சியால் திருப்தியடைவதில்லை. அதற்குக் காரணம், மனிதர்களாகிய நமக்கு நீண்ட கால திட்டமிடல் மற்றும் கணக்கிடும் திறன் இருக்கிறது, எனவே நமக்கும் பிறருக்கும் இடையே நாம் பல பிரிவுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். இந்தப் பிரிவுகளின் அடிப்படையில்தான், வெவ்வேறு தேசங்கள், பலவித இனங்கள் மற்றும் பல்வேறு மதங்கள் எனப் பேசுகிறோம். நாம் எண்ணிலடங்கா பிரிவுகளை ஏற்படுத்தி இருக்கிறோம், அதன் அடிப்படையில் நாம் பல வித மேலோட்டமான சிந்தனைகள் மற்றும் தவறான புரிதல்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். இதன் விளைவாகவே நாம் பல நேரங்களில் அதீத நம்பிக்கை மற்றும் அதீத சந்தேகமடைகிறோம். எனவே மனித அறிவாற்றல் மற்றும் புரிதலின் அடிப்படையினாலேயே நாம் பல விதமான துன்பங்களை அனுபவிக்கிறோம். மிகவும் பிரபலமான, ஆர்யவேதாவின் நானூறு செய்யுள் ஆய்வுக்கட்டுரை இது பற்றி தெளிவாக அடிக்கோடிட்டி காட்டப்பட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது (II.8): “வசதிபடைத்தவர்கள் மனதளவில் சோகம் அடைகிறார்கள், அதுவே சாமானியர்களுக்கு உடல் ரீதியிலான சோர்வு எழுகிறது.” இதன் அர்த்தம் என்னவென்றால், அதிக பலம், கணம் வைத்திருப்பவர்களுக்கு உடலில் எந்த அசார்வும் இருக்காது ஆனால் மனதளவில் அதிக சோகத்தை அனுபவிப்பார்கள். அதே சாமானியர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவை கிடைக்காததால் உடல் சோர்வு இருக்கலாம்.  எனவே இதில் இருந்து தெளிவாவது என்னவென்றால், மனிதர்கள் தாங்கள் எந்த விதத்தில் சிந்திக்கிறார்களோ அந்த வகையில் கூடுதல் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

நான் ஏற்கனவே கூறியது போல, உடல் சோர்வை பொருட்களைக் கொண்டு குறைத்துக் கொள்ளலாம். ஆனால், மனதால் ஏற்படும் சோர்வானது சவுகரியம் தரும் பொருட்களைக் கொண்டு குறைக்கமுடியாதது. ஒரு சிறந்த உதாரணம் என்னவென்றால், வசதியானவர்கள் தங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் வைத்திருந்தாலும் பல விதமான மனச் சோர்வில் இருப்பதை கண்டிருப்போம். எனவே இதில் இருந்து தெளிவாவது என்னவென்றால் சங்கடம், பிரச்னை மற்றும் சோர்வு எல்லாமே மனதின் அணுகுமுறையைப் பொருத்தது, இதை குறைக்கவோ தூக்கி எறியவோ மனதில் மாற்றம் வந்தால் தான் நடக்கும் வெளியில் இருக்கும் பொருட்களையும் வசதிகளையும் கொண்டு அதனை நிறைவேற்ற முடியாது. 

இதனை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மகிழ்ச்சி மற்றும் சோகத்தை அனுபவிப்பதைப் பற்றி நாம் பேசும் போது, அவற்றை இரண்டு வழிகளில் அனுபவிக்க முடியும். ஒன்று புலன் சார்ந்த அனுபவங்களோடு நெருங்கிய தொடர்புடையது – அதாவது ஐம்புலன்கள் மூலம் நமக்கு கிடைக்கும் சந்தோஷம் மற்றும் வலிகளின் அனுபவத்தைச் சொல்கிறேன் – மகிழ்ச்சி மற்றம் சோகத்தை அனுபவிப்பதற்கான மற்றொன்று நமது மனநிலை அல்லது மனதின் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டில், புலன்கள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி மற்றும் சோர்வு அனுபவத்தைவிட மனதின் மூலம் கிடைப்பது மிகவும் வலிமையானது மற்றும் சக்திவாய்ந்தது.

ஒரு தெளிவான உதாரணம் என்னவென்றால், சகல பொருள் வசதியும் தேவைக்கு ஏற்ப இருக்கிறது, உடலளவிலும் எந்த பிரச்னையோ சோர்வோ இல்லை, எனினும் உங்களது மனது அமைதியாக இல்லை, மனது சோர்வாக இருந்தால், உடலுக்கு சுகம் தரும் சவுகரியங்களால் மனதளவில் அனுபவித்துக் கொண்டிருக்கும் சோர்வை போக்க முடியாது. மற்றொரு புறம், உடலளவில் சோர்வாகவும், அசாதாரணமாகவும் இருந்தாலும், மனதளவில் அந்தச் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால், அதன் பின்னர் உங்களால் அந்த உடல் சோர்வை பொருத்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக,ஒருவர் மத நடைமுறைகளை முற்றிலும் பின்பற்ற உறுதியெடுத்துக் கொள்கிறார். இருப்பினும் அந்த மத நடைமுறைகளைப் பின்பற்ற அவர் பல்வேறு உடல் ரீதியான கஷ்டங்களை சந்திக்க வேண்டும்; ஆயினும் திருப்தி மற்றும் மனநிறைவு காரணமாகவும் தன்னுடைய இலக்கில் தெளிவான பார்வை இருப்பதாலும், அந்த நபர் கஷ்டங்களை சிரமமாகப் பார்க்காமல் தான் விரும்பி அணிந்து கொள்ளும் ஆபரணமாகக் கருதுகிறார்.  எனவே உடல் ரீதியிலான சோர்வுகளை மிகப்பெரிய நோக்கத்திற்காக சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தின் மூலம் வெல்ல முடியும்.  மிக முக்கியமான நோக்கம் மற்றும் இலக்கிற்காக செயல்படும் போது உடலளவில் ஏற்படும் சோர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் நமக்கு ஏராளமான உடல் பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை சந்தோஷம், மகிழ்ச்சியோடு அணுகி ஆபரணம் போல அணிந்து கொள்ள வேண்டும்.

இதை தொகுத்துச்சொல்வது என்றால், புலன்கள் மூலம் அணுகுதல், மனதின் மூலம் அணுகுதல் என்ற இந்த இரண்டு அனுபவங்களில், மனதின் மூலம் நீங்கள் அனுபவிப்பவையே மிகவும் முக்கியமானது. 

நான் கூறியது போலவே, மனதளவிலான பிரச்னைகளை கையாலும், அவை உங்களது மனதின் அணுகுமுறை மற்றும் மனத்தோற்றத்தைப் பொருத்தது. பிரச்னைகளை குறைக்கவோ அல்லது நீக்க வேண்டுமானால், உங்களது அணுகுமுறையில் மாற்றம் தேவை. எனவே, உங்களது மனக் கஷ்டங்களை அகற்ற ஒரு வழி, அர்த்தம், வழிமுறை இருக்கிறது. அதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம், அதன் மூலமாக நமது மனக்கஷ்டங்களை குறைப்பதோடு அகற்றவும் முடியும். மேலும் நாம் இவை பற்றி பேசுவதனாலும், மனக்கஷ்டங்களை அகற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதாலும், பிறவிநலக் குணங்களை கண்டறிந்து,  அங்கீகரிப்பது முக்கியம்.

உதாரணமாக, நான் இதை இப்படி உணர்கிறேன்: மனித சமூகத்தை நீங்கள் உற்று கவனித்தால், நாமெல்லாம் சமூக விலங்குகள் என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். அதன் அர்த்தம் நாம் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம், நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்திருக்கிறோம்.

நாம் பிறந்ததில் இருந்து பதின் பருவம் எய்தி நம்மை நாமே பார்த்துக் கொள்ளும் வரை, ஏன் நம் உடல் நலனுக்குக் கூட மற்றவர்களின் கருணை நமக்குத் தேவைப்படுகிறது. நம்முடைய உயிரியல் மற்றும் உடலமைப்பே இதற்குக் காரணமாகும். நாம் அதிக நெருக்கம் காட்டினால், நாம் அதிக இரக்கம் மற்றும் பராமரிப்பை பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வளர்த்துக் கொள்ளலாம், இதன் மூலம் கூடுதலான அமைதி மற்றும் மகிழ்ச்சியை அடைய முடியும். இந்த அடிப்படை மனித மதிப்புகளின் பலன் காரணமாகவே, அடிப்படை மனித மதிப்புகள் முக்கியம் என்று நான் சொல்கிறேன், அவை முக்கியம், தேவையான தகுதிகளும் கூட.

இது குறித்த மேலும் சில உதாரணமாக, பட்டாம் பூச்சிகளின் சந்ததி அல்லது ஆமைகளின் சந்ததிகளை எடுத்துக் கொள்வோம். ஆமை மற்றும் பட்டாம் பூச்சிகளின் சந்ததிகள் தாயை பெரிதும் சார்ந்திருப்பதில்லை. உதாரணத்திற்கு முட்டையிட்டதும், பட்டாம் பூச்சிகள் பறந்துவிடுகின்றன, அதன் சந்ததிகள் பெற்றோரைப் பார்ப்பதில்லை. இதே போல ஆமைகளும், முட்டையிட்டதும் கடலுக்குள் சென்றுவிடும். அந்த சந்ததிகளின் அருகில் அதன் தாயைக் கொண்டு சென்றாலும் அவை தனது பெற்றோரிடம் அன்பு, பாசம், பரிவு காட்டுமா என்பது சந்தேகம் என்று தான் நான் நினைக்கிறேன். ஏனெனில் பிறந்தது முதலே அவை சுதந்திரமாக வாழ்கின்றன. தாய் தன்னுடைய சந்ததிக்கு நீந்தக் கற்றுக்கொடுப்பதில்லை; அது போன்ற விஷயங்களே அவற்றின் வாழ்வில் இல்லை. எனவே சந்ததிகள் சுதந்திரமான வாழ்க்கை நடத்துகின்றன, எனவே பெற்றோருக்கும் சந்ததிகளுக்கு இடையே எந்த பாசத்தையும் நம்மால் பார்க்க முடியாது.

ஆனால் மனிதர்களை எடுத்துக் கொண்டால், நம் உடல் அமைப்பால், பிறந்தது முதலே நாம் உறுதியான அன்பு மற்றும் பாசத்தை நம்முடைய பெற்றோரிடத்தில் குறிப்பாக தாயிடம் காட்ட முடிகிறது. கடந்த காலம் மற்றும் எதிர்கால வாழ்க்கையை பார்த்தோ அல்லது மத ரீதியாகவோ நான் இந்த விஷங்யகளை குறிப்பிட்டுச் சொல்லவில்லை, ஆனால் நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள், மனித இனம் எப்படி வளர்ச்சியடைந்தது, உயிர் வாழ்வதற்காக நாம் மனித மதிப்புகள், அன்பு மற்றும் இரக்கத்தை எப்படி முற்றிலும் சார்ந்திருக்கிறோம் என்பதை உங்களால் கண்டறிய முடியும். குழந்தைகளை எடுத்துக் கொண்டால் பிறந்தது முதல் தாய்ப்பாலை சார்ந்து இருக்கிறார்கள், அதன் பிறகு படிப்படியாக தன்னைத் தானே பார்த்துக்கொள்ளும் அளவிற்கு வளர்கிறார்கள், அவர்கள் முற்றிலும் பெற்றோரின் கருணையை நம்பி இருக்கிறார்கள். வளர்ந்த பின்னரும் கூட, அவர்கள் பிறரின் கருணையை சார்ந்தே இருக்கின்றனர்.

உங்களுக்கு துணையாக ஒருவர் இருக்கும் வரை, உங்களை யாரேனும் கவனித்துக்கொள்ளும் வரை, மிகவும் அமைதியாகவும், நிம்மதியாகவும், அதிக நேரம் வீட்டில் இருக்கவும் விரும்புவீர்கள். எனவே, மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தாமல் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யும் வாழ்க்கை நடத்துவது முக்கியமாகும். உங்களுக்கு இந்த அன்புணர்வு இருந்தால், மற்ற புலன் உணர்வு கொண்டவைகளிடம் இந்த பாச உணர்வு இருந்தால், பதிலுக்கு நீங்கள் அனைவராலும் விரும்பப்படும், நேசிக்கப்படும் நபராக இருப்பீர்கள், இறக்கும் நேரத்தில் கூட பயமோ, கவலையோ எந்த மனக் குழப்பங்களோ இருக்காது. 

நாம் வளர்ந்த பின்னர், சிலசமயங்களில் மனித அறிவாற்றல் ஒரு உறுதியான பிம்பத்தைக் கொடுக்கும், சில சமயங்களில் அந்த மனித அறிவாற்றலானது வெற்று நம்பிக்கையை கொடுக்கும். நாம் புதிய பாடங்களை கற்று, புதிய அறிவை நமது மனித அறிவாற்றல் மூலம் பெறுவோம். இந்த அறிவின் மூலம், சில சமயங்களில் நாம் நினைப்போம் குறிப்பாக வெற்றி பெற்ற பின்னர் நீங்கள் இவ்வாறு நினைக்க கூடும்: “நாம் மற்றவர்களை கொடுமைப்படுத்தலாம், பிறரை பயன்படுத்திக் கொள்ளலாம், ஏனெனில் எனக்கு சிறந்த அறிவாற்றலும் அறிவும் இருக்கிறது, அப்படி இருக்கையில் எனக்கு அடிப்படை மனித மதிப்புகள் முக்கியமல்ல.” இது போன்ற வெற்று நம்பிக்கை மற்றும் இதே மாதிரி பலவிதமதான அணுகுமுறைகளை மனதில் வளர்த்துக்கொண்டு, மற்றவர்களை கொடுமைப்படுத்த தயங்க மாட்டீர்கள், அந்த வழியில் நீங்கள் சில பலன்களை அடைய முடியும்.  

ஆனால் யதார்த்தத்தில், நீங்கள் மற்றவர்களின் சந்தோஷத்தைப் பற்றி கவலைப்படாத ஒரு வாழ்க்கை நடத்தினால், படிப்படியாக ஒவ்வொருவரும் உங்களது எதிரியாக மாறுவதை உங்களால் காண முடியும். உங்களைச் சுற்றி நாலாபுறத்திலும் நிற்பவர்களில் உங்களை விரும்புபவர்கள் மிக சொர்ப்பமானவர்களாகவே இருப்பார்கள். இது போன்ற எதிர்மறை வாழ்க்கை வாழ்வதால், நீங்கள் மரணப் படுக்கையில் எல்லோரும் நீங்கள் இறக்கப்போவதை நினைத்து மகிழக்கூடும். ஏன் நீங்களே கூட என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பார்ப்பீர்கள். ஆனால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும், அதற்குப் பிறகு உங்கள் மீது யாரும் அக்கறை காட்டத் தயாராக இருக்க மாட்டார்கள், எனவே, அடிப்படை மனித மதிப்புகளை நீங்கள் நிராகரித்தால், உண்மையான அன்பு மற்றும் நீடித்த அமைதியை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.  நீங்கள் இறந்த பின்னர், உங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவோ, உங்கள் அன்பை எண்ணிப் பார்க்கவோ யாரும் இருக்க மாட்டார்கள், வெறுமை மற்றும் விரக்தியோடு இந்த உலகை விட்டு வெறுங்கையோடு தான் செல்ல வேண்டும். எனவே மற்ற புலன் உணர்வு கொண்டவை பற்றி அக்கறையின்றி வாழ்வது, உண்மையிலேயே முட்டாள்தனமாக வாழ்க்கையை நடத்துவதாகும்.

மற்றொருபுறம், மனித அறிவாற்றல் மற்றும் ஞானத்தின் மூலம் உங்களால் அடிப்படை மனித மதிப்புகளை விதைத்து நேசிக்கச்செய்தால், உங்களால் மனித இரக்கத்தை எல்லையில்லா முடிவு வரைகொண்டு செல்ல முடியும். உங்களது வாழ்க்கையை இந்த வழியில், நடத்துவதே சாலச் சிறந்தது; இதுவே உங்களது வாழ்க்கையை அர்த்தமாக்கும் வழி. 

ஆஸ்ட்ரியாவின் க்ரேசில், உலக அமைதிக்கான காலச்சக்கத்திற்காக, அக்டோபர் 2002ல் தலாய் லாமா நிகழ்த்திய உரை, முனைவர், அலெக்சாண்டர் பெர்சினால் லேசான மாறுதல்கள் செய்யப்பட்டவை. தமிழில் மொழிபெயர்ப்பாளர்: கஜலெட்சுமி மகாலிங்கம்

Top