புத்தரின் போதனைகளை பயிற்சிக்கு கொண்டு வர விரும்பினால் நிச்சயமாக தியானம் ஒரு முக்கியமான தலைப்பு ஆகும். தியானம் என்பது பௌத்ததிற்கும் மட்டுமான ஒன்று இல்லை, தியானத்தை நாம் அனைத்து இந்திய பாரம்பரியங்களிலும், இந்தியாவிற்கு வெளியே பௌத்தம் சாராத அமைப்புகளிலும் கூட நாம் காணலாம்.
சமஸ்கிருதத்தில் தியானத்திற்கான சொல் "பாவானா". பாவனா என்பது “bhu" என்ற வினைச்சொல்லில் இருந்து வருகிறது, அதாவது "எதுவாகிறோம்" அல்லது "ஏதாவது ஒன்றை உருவாக்குவது". பாவனா, அப்படியானால், சில ஆக்கபூர்வமான மனநிலையை எவ்வாறு வளர்ப்பது என்பது பற்றிய ஒரு போதனையை நாம் எடுத்துக்கொள்கிறோம், மேலும் அடையாளப்பூர்வமாக, நாம் அந்த நிலையாக நாம் "ஆகிறோம்". வேறு விதமாகச் சொன்னால், தியானத்தின் மூலம், நம் மனதை ஒரு குறிப்பிட்ட நன்மையான நிலையில் வரச் செய்கிறோம்.
பாவனா என்பது சமஸ்கிருத மூலமான “bhu" என்பதில் இருந்து வந்ததால், "என்னவாகிறோம்" என்ற வார்த்தையில் இருந்து பாவனா என்பது ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. உதாரணமாக, நாம் அன்பைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தால், உண்மையில் நம் இதயங்களில் அன்பைக் கொண்ட ஒருவராக நம்மை மாற்றிக் கொள்கிறோம். சமஸ்கிருதத்திலிருந்து திபெத்திய மொழியில் இந்த வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டபோது, அது "ஒரு பழக்கத்தை உருவாக்குதல்" என்பதைக் குறிக்கும் வார்த்தையுடன் மொழிபெயர்க்கப்பட்டது. இது திபெத்திய வார்த்தையான "கோம்". கோம் என்பதன் பொருள் எதிர்மறையான அல்லது நடுநிலையான ஏதோ ஒன்றிற்காக அல்லாமல் நேர்மறையான ஏதோ ஒன்றிற்கு நம்மை நாமே பழக்கப்படுத்துதலாகும் - இதனால் நேர்மறையான, ஆக்கப்பூர்வமான பழக்கத்தை கட்டமைக்கலாம்.
அப்படியானால், திபெத்திய வார்த்தையானது, சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தத்தில் அல்லது உட்பொருளில் மிகவும் ஒத்திருக்கிறது. இரண்டு சொற்களின் உட்குறிப்பு என்னவென்றால், நம் இலக்கைப் போல நம்மை மாற்றிக் கொள்ள - நம் இதயங்களில் அன்பைக் கொண்ட ஒருவர், எடுத்துக்காட்டாக - அன்பை ஒரு நன்மை பயக்கும் பழக்கமாக உருவாக்க வேண்டும். இந்த நன்மை பயக்கும் பழக்கத்தை உருவாக்க நாம் பயன்படுத்தும் முறை தியானம்.
போதனைகளைக் கேட்டல்
புத்தரின் காலத்திற்கு முந்தைய முக்கிய இந்திய தத்துவ நூல்கள் அனைத்தும் உபநிஷதங்கள், இந்த நூல்கள் ஏற்கனவே தியானம் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தன. உபநிஷதங்களில், கேட்டல், சிந்தித்தல் மற்றும் தியானித்தல் என்ற மூன்று-நிலை செயல்முறையின் பின்னணியில் தியானமானது விவாதிக்கப்படுகிறது. இந்த மூன்று-நிலை செயல்முறையை புத்தர் கண்டுபிடிக்கவில்லை; அது அவருடைய காலத்தில் ஏற்கனவே இருந்தது. எனவே நாம் எதையாவது ஒரு நேர்மறையான பழக்கமாக மாற்ற விரும்பினால், வெளிப்படையாக நாம் அதைப் பற்றி முதலில் கேட்க வேண்டும்; பிறகு நாம் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டும்; இறுதியாக, நாம் அதை நமக்குள் ஒருங்கிணைக்க வேண்டும்.
தர்மத்தைப் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லையெனில், முதலில் நாம் பௌத்தம் பற்றிய அடிப்படை தகவலைப் பெற வேண்டும் மேலும் இந்தத் தகவல் சரியானது என்று நாம் உறுதியாக இருக்க வேண்டும். சரியான அடிப்படை தகவல்கள் மட்டுமே உண்மையான தர்ம போதனைகளில் ஆர்வம் காட்ட நம்பகமான அடித்தளமாக இருக்கும். இருப்பினும், புத்தரின் காலத்தில், தத்துவ போதனைகள் எழுதப்படவில்லை. அவற்றை எழுதப்பட்ட நூல்களாகத் தொகுப்பது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது. அதனால்தான் மூன்று-நிலை செயல்முறையானது போதனையை "கேட்டல்" அவசியம் என்பதில் இருந்து தொடங்குகிறது – வேறுவிதமாகச் சொன்னால், சத்தமாக வழங்கப்படும் போதனையைக் கேட்பதன் அவசியத்துடன் தொடங்குகிறது.
இன்று, நீங்கள் உருவாக்க விரும்பும் சில வகையான நடைமுறைகள் அல்லது மனநிலைகளைப் பற்றி புத்தகங்கள் அல்லது இணையத்தில் படிப்பவற்றை முதல் நிலையில் நீங்கள் சேர்க்கலாம். இருப்பினும், இந்தக் கருத்து விவாதத்திற்குரியது, ஏனென்றால் ஒரு ஆசிரியரிடமிருந்து நேரடியாக ஒரு போதனையைக் கேட்கும்போது, ஆசிரியர் உண்மையில் நம் முன் இருப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு சூழ்நிலை உள்ளது. ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது ஈர்க்கப்படாத நாம் ஒரு போதனையை நேரடியாகக் கேட்கும்போது, ஆசிரியரால் ஈர்க்கப்படலாம். வெளிப்படையாக, யாராவது புத்தகத்தை எழுத வேண்டியிருந்தாலும் இதுதான் வழக்கம். நம் அன்றாட வாழ்க்கையிலும் இது உண்மை என்பதை நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு கச்சேரிக்கு நேரடியாகச் செல்லும்போது, அந்த அனுபவம் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கும், அதுவே வீட்டில் சிடியில் கேட்கும்போது அந்த உணர்வு இருக்காது. இது முற்றிலும் வித்தியாசமான அனுபவம்.
நாம் போதனைகளைக் கேட்கும்போது, "களிமண் குவளை போன்ற மூன்று குறைபாடுகளை" அகற்றுவது மிகவும் பயனுள்ள அறிவுறுத்தல்களில் ஒன்றாகும்.
- முதலில், எதுவுமே உள்ளே செல்ல முடியாத வகையில் தலைகீழான குவளை போல இருக்கும் தவறை நாம் தவிர்க்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம் மனம் மூடப்பட்டிருந்தால், நாம் கேட்பதிலிருந்து மட்டுமே நம்மால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.
- அடுத்ததாக, அடியில் ஓட்டை போட்டு வைக்கப்பட்டிருக்கும் குவளை போல இருக்கும் தவறை நாம் தவிர்க்க வேண்டும். அப்படியான குவளையில் என்ன ஊற்றினாலும், அது உடனடியாக வெளியேறிவிடும். ஆங்கிலத்தில், இந்த வெளிப்பாடானது "ஒரு காதில் வாங்கி மற்றொரு காது வழியாக வெளியே விட்டுவிடுவது". அதை நாம் தவிர்க்க வேண்டும்.
- இறுதியாக, அழுக்கான குவளை போல் இருக்கும் தவறை நாமும் தவிர்க்க வேண்டும். ஒரு அழுக்கு குவளையில் சுத்தமான தண்ணீரை ஊற்றினால், தண்ணீரும் அழுக்காகிவிடும். வேறு விதமாகச் சொல்வதனால், நமக்கு பல முன்முடிவுகள் இருக்கும்போது, இந்த முன்முடிவுகள் புதிய பொருளைப் பற்றிய நமது புரிதலை மாசுபடுத்துகின்றன. ஒருவர் சொல்வதைக் கேட்பதற்குப் பதிலாக, எப்போதும் புதிய விஷயங்களை நமது சொந்த யோசனைகளின் திட்டங்களுடன் கலக்கிறோம்.
இந்த தவறுகளைத் தவிர்க்க, சில போதனைகளைக் கேட்டவுடன், அவற்றை எழுதுவது அல்லது அவற்றை எப்படியாவது பதிவு செய்வது மிகவும் உதவியாக இருக்கும், இதனால் குறிப்பிடப்பட்ட புள்ளிகளை நாம் சரியாக நினைவில் வைத்திருக்க முடியும். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லாதது போல - நம்மிடம் சரியான நினைவுகள் இல்லையென்றால் இது மிகவும் உதவியாக இருக்கும். நாம் கேட்டதை எழுத எவ்வளவு நேரம் காத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு நமது முன்முடிவுகள் நம் நினைவுகளை மாசுபடுத்தும்.
சக்யா குரு சோனம் செமோ தர்மத்தின் நடைமுறையில் நுழைய வேண்டும் என்று கூறினார்:
- நமக்குப் பிரச்சினைகள் இருப்பதையும், துன்பப்படுகிறோம் என்பதையும் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்.
- அப்படியானால், நம்முடைய துன்பமான சூழ்நிலையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற விருப்பம் நமக்கு இருக்க வேண்டும்.
- இறுதியாக, துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியாக தர்மத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்.
நாம் புதியவர்களாக இருக்கும்போது, நாம் நிச்சயமாக திறந்த மனதுடன் இருக்க வேண்டும் மற்றும் நாம் கற்றுக்கொண்டதைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்; ஆனால் மிக முக்கியமாக, நாம் கேட்பதை மதிப்பிடும் ஆர்வத்துடனும் நோக்கத்துடனும் ஒரு தர்ம போதனையைக் கேட்க வேண்டும். நாம் கேட்கும் போதனையானது, அதை நடைமுறைக்குக் கொண்டுவந்தால், தனிப்பட்ட முறையில் பிரச்சினைகளைச் சமாளிக்க நமக்கு உதவக்கூடிய ஒன்றா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, அதை மதிப்பீடு செய்ய விரும்புகிறோம். பள்ளியில் பரீட்சையில் வெற்றி பெருவதற்கோ அல்லது எங்களுடைய அறிவாற்றலால் மற்றவர்களைக் கவருவதற்காகவோ பௌத்த போதனைகளைப் பற்றி நாம் கற்கவில்லை. நம் வாழ்வில் தனிப்பட்ட முறையில் பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் ஏதாவது ஒன்றை அவற்றில் கண்டுபிடிக்க முடியுமா என்பதைப் பார்க்க நாம் போதனைகளைக் கேட்கிறோம்.
போதனைகளை கேட்கும் போது, நம்மையும் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. "மூன்று அங்கீகாரங்கள்" என்று அழைக்கப்படும் முறையில், நாம் நம்மை ஒரு நோய்வாய்ப்பட்ட நபராகவும், ஆசிரியரை ஒரு மருத்துவராகவும், பல்வேறு நோய்கள் அல்லது பிரச்சனைகளை சமாளிக்க உதவும் மருந்தாக போதனைகளைக் கருதுகிறோம் - நமது குழப்பமான உணர்ச்சிகள் தாம் நோய்கள்.
நாம் மேலும் முன்னேறும்போது, ஆசிரியரிடம் நமக்குத் தேவையான அணுகுமுறைகள், ஆசிரியரை புத்தராகப் பார்ப்பது மற்றும் பலவற்றைப் பற்றிய மேலும் பல அறிவுறுத்தல்கள் உள்ளன; ஆனால் அந்த அறிவுறுத்தல்கள் ஆரம்பநிலைக்கானது அல்ல.
நாம் என்ன கேட்டறிந்தோமோ அதைப் பற்றி சிந்தித்தல்
இதில் இரண்டாவது நிலையானது, நாம் கேட்டவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு போதனையைப் புரிந்து கொள்வதற்காக அதைப் பற்றி சிந்திக்கிறோம். கற்பித்தல் என்றால் என்ன என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ளும்போது இந்தச் சிந்தனை செயல்முறையின் இறுதிப் புள்ளியை அடைகிறோம். ஒரு போதனையைச் சரியாகப் புரிந்துகொள்வது அதனை சரியாக பயிற்சிப்பதோடு மட்டுமின்றி, போதனை சரியானது என்பதையும், அது நமக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று என்பதையும் நாம் நம்ப வேண்டும், ஏனெனில் அது சில பிரச்னைகளைக் கடக்க உதவும். கற்பித்தல் எதைப் பற்றி விவாதிக்கிறதோ அதை நாம் உண்மையில் அடைய முடியும் என்பதையும் நாம் உறுதியாக நம்ப வேண்டும். இது சாத்தியமில்லாதது என்று நாம் நினைத்தால் - நம் கோபத்தை நம்மால் வெல்ல முடியாது என்று நினைத்தால், உதாரணமாக - கோபத்தை வெல்லும் நோக்கத்தில் ஒரு பயிற்சியைப் பின்பற்றுவது மையப்புள்ளி என்ன? நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய பயிற்சி வேலை செய்யும் என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்.
ஒரு போதனையைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, அதைப் பற்றி நாம் பல கோணங்களில் சிந்திக்கிறோம். உதாரணமாக, அனைவரிடமும் சமமாக அன்பை வளர்க்க தியானத்தைப் பற்றி பேசுகிறோம் என்றால், அந்த வகையான அன்பை வளர்ப்பதற்கு நாம் தாண்ட வேண்டிய பல்வேறு படிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, அனைவருக்கும் சமமான அன்பு எதைச் சார்ந்தது?அது எல்லோரையும் சமமாகப் பார்ப்பது, எல்லோரும் நம்மிடம் கருணை காட்டுவது போன்றவற்றைப் பொறுத்தது. எனவே, உலகளாவிய அன்பு நம் மனதில் உருவாக, அன்பு எதைச் சார்ந்தது என்பதையும், அன்பு நம்மில் வளர என்ன நுண்ணறிவு மற்றும் மனநிலையை முன்கூட்டியே உருவாக்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, அன்பிற்கு எதிரான காரணிகள் என்ன, அன்பு செய்யப்போகும் தீர்வு என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, எதிரான காரணிகள் கோபம் மற்றும் வெறுப்பு என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்; அன்பு உண்மையில் அந்தக் காரணிகளை முறியடித்து அவற்றிலிருந்து நம்மை விடுவிக்கும் என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும். அன்பு அவற்றில் இருந்து எப்படி வெளியேற்றும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், அன்பை வளர்ப்பதன் நோக்கம் என்ன என்பதையும், இந்த அன்பை வளர்த்தவுடன் அதை என்ன செய்யப் போகிறோம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும், இது அன்பை வளர்ப்பதன் நன்மைகளை அறிவதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு போதிசிட்டா இலக்கை வளர்ப்பதற்கான வழிமுறைகளை வழங்கும் பல நூல்களைப் பார்க்கும்போது - வரம்புக்குட்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பயனளிக்கும் வகையில் நமது சொந்த, தனிப்பட்ட எதிர்கால ஞானங்களை அடைவதற்கான நோக்கம் - அவை பொதுவாக போதிசிட்டா நோக்கத்தின் நன்மைகளை விவரிப்பதில் தொடங்குகின்றன. இப்படித் தொடங்கும் நூல்களின் நோக்கம், வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு குறிக்கோளைக் கொண்டிருப்பது நாம் வளர்த்துக் கொள்ள விரும்பும் ஒன்று என்பதை நாம் உறுதியாக நம்புவதுதான்.
இறுதியாக, போதனைகளின் தர்க்கத்தை நாம் நம்ப வேண்டும். அவை தர்க்கரீதியாக இருக்க வேண்டும், அவை நியாயமானதாக இருக்க வேண்டும், மேலும் அவை நிலைகள் மற்றும் போதனைகளின் உண்மையான விவரங்களின் அடிப்படையில் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.
எனவே நாம் சிந்திக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நாம் முதலில் எதை வளர்த்துக் கொள்ள வேண்டும், சிக்கலான மனநிலையிலிருந்து அது நம்மை எவ்வாறு விடுவிக்கப் போகிறது, என்ன எதிர் காரணிகளை நாம் கவனிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு தியானப் பயிற்சியில் குதிப்பது விவேகமற்றதாக இருக்கும். அதற்கு ஒப்பானது: “கேட்டல் என்பது உணவை வாயில் வைப்பது போன்றது; அதைப் பற்றி நினைப்பது அதை மெல்லுவது போன்றது. மெல்லாமல் விழுங்க முயன்றால் மூச்சு திணறத்தான் போகிறது. அதேபோல், போதனைகளைப் பற்றி சிந்திக்காமல் தியானம் செய்ய முயற்சித்தால், நமக்கு சிரமங்கள் ஏற்படப் போகிறது.
சிந்தனை செயல்முறையை நாம் எவ்வாறு சரியாகச் செய்வது? சிந்தனை நிலை என்பது நான் குறிப்பிட்டுள்ள பல்வேறு புள்ளிகளைப் பற்றிய சிந்தனையின் சில இலவச-பாணி வடிவமாக இருக்கலாம் அல்லது அதைச் செய்தவுடன், அது மிகவும் முறையான செயல்முறையாக இருக்கலாம்.
முறையான சிந்தனை செயல்முறை
முறையான சிந்தனை செயல்முறை என்பது பகுத்தறிவின் வரிசையைப் பின்பற்றுவதாகும். நாம் ஒரு குறிப்பிட்ட மனநிலையை வளர்க்க விரும்பினால், அதை நாம் கட்டமைக்க வேண்டும். நிலைகள் வழியாகச் செல்வதன் மூலம் நாம் அந்த மனநிலையை உருவாக்க வேண்டும், மேலும் பெரும்பாலும் அந்த நிலைகளில் பகுத்தறிவுடன் செயல்படுவதும் அடங்கும். எடுத்துக்காட்டாக, போதனையானது நிலையற்ற தன்மையைப் பற்றிய புரிதலை உருவாக்கும் பகுத்தறிவின் வரிசையை உள்ளடக்கியிருக்கலாம் (காரணங்கள் மற்றும் நிலைமைகளால் பாதிக்கப்படும் விஷயங்கள் கணத்திற்குக் கணம் மாறி ஒரு முடிவுக்கு வரும்); அல்லது வெற்றிடத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கும் பகுத்தறிவு வரிசையை உள்ளடக்கியிருக்கலாம் (அசாத்தியமான வழிகளில் எல்லாமே இல்லாமல் இருக்கிறது). பகுத்தறிவு வரிசையில் தர்க்கத்தைப் பற்றி சிந்தித்து செயல்படுவதன் மூலம், நிலையற்ற தன்மையும் வெற்றிடமும் செல்லுபடியாகும் என்பதை மட்டுமல்ல, நிலையற்ற தன்மையும் வெற்றிடமும் உண்மை என்பதை பகுத்தறிவால் செல்லுபடியாக நிரூபிக்கின்றன என்பதையும் நாம் உறுதியாக நம்புகிறோம். அதுமட்டுமின்றி, பகுத்தறிவுக் கோடுகளின் தர்க்கத்தின் மூலம், நிலையற்ற தன்மை மற்றும் வெற்றிடத்தைப் பற்றிய சரியான மற்றும் தீர்க்கமான புரிதலை உருவாக்க முடியும் என்பதையும் நாம் நம்புகிறோம். நினைவில் கொள்ளுங்கள்: நம்பிக்கை கொள்வது சிந்தனை செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
மாற்றாக, பகுத்தறிவின் மூலமாக இல்லாமல், நிலைகள் மூலமாக நாம் ஒரு குறிப்பிட்ட மனநிலையை உருவாக்க முடியும். உதாரணமாக, நாம் ஒரு போதிசிட்டா இலக்கை உருவாக்க விரும்பினால், நாம் சமநிலையை வளர்த்துக் கொள்வது போன்ற நிலைகளைக் கடந்து செல்வோம், பின்னர் அனைவரையும் முந்தைய ஜென்மங்களில் நம் தாயாக இருந்தவர்களாகப் பார்ப்பது, தாய் அன்பின் கருணையை நினைவில் கொள்வது, அதற்கு நன்றியை வளர்ப்பது என்று தொடரும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், போதிசிட்டா இலக்கை வளர்ப்பதற்கான இலக்கை அடைய முடியும் என்பதை நாம் உறுதியாக நம்புவதற்கு, நாம் நிலைகளில் செயலாற்றுகிறோம். இது இன்னும் சிந்தனை செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
இந்த சிந்தனை செயல்பாட்டில், உண்மையில் நாம் வளர்க்க முயற்சிக்கும் மனநிலை என்ன என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். சில தியானங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது கவனம் செலுத்த உதவும் நோக்கத்தில் உள்ளன, உதாரணமாக, ஒரு காட்சிப்படுத்தப்பட்ட புத்தர். காட்சிப்படுத்தப்பட்ட புத்தரைப் பற்றி தியானிக்க, இது கவனம் செலுத்தும் வகையிலான தியானம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அதன் நோக்கம் ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது கவனம் செலுத்துவதாகும், அதாவது ஒரு சிறிய, முப்பரிமாண, நம்முன்னே கண் பார்வை மட்டத்தில் ஒளியால் ஆன புத்தரை நேரடியாகப் பார்ப்பதைத் போன்ற கற்பனை.
மற்றொரு புறம், ஒரு குறிப்பிட்ட மனநிலையை வளர்ப்பதற்கு தூண்டும் வெவ்வேறு விதமான தியானங்கள் உள்ளன, உதாரணமாக, அன்பு. அன்பு என்பது ஒரு பொருளல்ல நாம் அதன் மீது கவனம் செலுத்த; மாறாக அது ஒரு மனநிலை, நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு வகை மன அணுகுமுறை. எனவே நாம் எந்த வகையான தியானத்துடன் செயலாற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிய வேண்டும்: நாம் ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது கவனம் செலுத்த முயற்சிக்கிறோமா அல்லது ஒரு குறிப்பிட்ட மனநிலையை வளர்க்க முயற்சிக்கிறோமா?நாம் அடைய முயற்சிப்பது என்ன?
இரண்டு விஷயங்களிலுமே, இரண்டு அம்சங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்எ ன்று சொங்கப்பா உறுதியாக வலியுறுத்துகிறார்:
- முதலில், நம் மனதில் தோன்ற வேண்டிய பொருள் எது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். காட்சிப்படுத்தப்பட்ட புத்தரைப் பற்றிய தியானத்தைப் பற்றியோ அல்லது அன்பைப் பற்றிய தியானத்தைப் பற்றியோ நாம் பேசினாலும், நம் தியானத்தில் தோன்றும் பொருள் என்ன?
- இரண்டாவதாக, மனம் எப்படி அந்தப் பொருளைப் பிடித்துக் கொள்கிறது, அதை எப்படி அறிகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு விஷயங்களைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றால், நாம் எப்படி வளர்த்துக் கொள்ள விரும்பும் மனநிலையை உருவாக்க முடியும்?
எடுத்துக்காட்டாக, இரக்கம்: இரக்கத்தின் நோக்கம் என்ன? அதில் தோன்றும் பொருள் என்ன? இரக்கத்தை தியானிக்கும் போது நம் மனதில் தோன்றும் பொருள் உணர்வுள்ள உயிர்கள், துன்பத்துடன் இருக்கும் பல்வேறு வரையறுக்கப்பட்ட உயிரினங்கள். நம் மனம் அவை மீது கவனம் செலுத்துகிறது மற்றும் அவற்றைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட அம்சத்தை வேறுபடுத்துகிறது, அதாவது அவற்றின் துன்பம் மற்றும் துன்பத்திற்கான காரணங்கள். அவற்றில் மனம் எப்படிப் பிடிமானம் கொள்கிறது? இந்த உயிரினங்கள் தங்கள் துன்பங்களிலிருந்தும் அதன் காரணங்களிலிருந்தும் பிரிந்து செல்ல வேண்டும் என்ற வலுவான விருப்பத்துடனும், இதை நாமே கொண்டு வர முயற்சிக்கும் நோக்கத்துடனும் மனம் இந்தப் பொருட்களைப் பற்றிக் கொள்கிறது. இந்த வழியில், நாம் கேட்ட அல்லது படித்த வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பதன் மூலம், நாம் உருவாக்க விரும்பும் மனநிலையை மிகத் தெளிவாகக் குறிப்பிடவும் புரிந்துகொள்ளவும் முடியும்.
நாம் போதிசிட்டாவை தியானிக்க திட்டமிட்டால், அத்தகைய தியானத்தில் நம் மனம் என்ன செய்கிறது என்பதைப் பற்றி சிந்தித்து மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் போதிச்சிட்டாவை இரக்கத்துடன் குழப்பிக் கொள்கிறார்கள்; இருப்பினும், போதிச்சிட்டா மற்றும் இரக்கம் ஒன்றல்ல. போதிசிட்டா என்பது இரக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு மனநிலை; ஆனால் போதிசிட்டா, பிறர் எல்லா துன்பங்களில் இருந்தும் அதன் காரணங்களில் இருந்தும் விடுபட வேண்டும் என்று விரும்புவதை விட கூடுதலான இலக்கை இது கடந்து செல்கிறது. அனைத்து வரையறுக்கப்பட்ட உயிரினங்களும் ஞானம் அடைய வேண்டும் என்று விரும்புவதையும், இதைச் செய்வதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதையும் கடந்தது. ஆனால் இந்த நல்ல விருப்பங்களும் உணர்வுகளும் போதிச்சிட்டா சார்ந்து வளரும் நேர்மறையான உணர்ச்சிகள். முதலில் நாம் அன்பு மற்றும் இரக்கத்தின் அடித்தளத்தை கொண்டிருக்க வேண்டும்.
நாம் உண்மையில் நமது மெத்தைகளில் அமர்ந்து போதிசிட்டாவை தியானிக்கும்போது நாம் எதில் கவனம் செலுத்துகிறோம்? நாம் நமது சொந்த ஞானமடைதலில் கவனம் செலுத்துகிறோம், அது இன்னும் நடக்கவில்லை, ஆனால் இது நமது புத்தர்-இயல்பு காரணிகளின் அடிப்படையிலும், அந்த ஞானமடைய நாம் செய்ய வேண்டிய அனைத்து கடின உழைப்பின் அடிப்படையிலும் நடக்கலாம். நமது புத்தர்-இயல்பு காரணிகள், நம் அனைவரிடமும் உள்ள அடிப்படை குணங்கள் மற்றும் அம்சங்கள், அவை நம் மனதின் தூய்மையான தன்மை போன்ற புத்தராக மாற உதவும். சக்ய முனி புத்தரின் ஞானம் குறித்து நாம் கவனம் செலுத்தவில்லை. நாம் பொதுவாக அருவ ஞானத்தில் கவனம் செலுத்தவில்லை; மாறாக நாம் நமது சொந்த ஞானத்தில் கவனம் செலுத்துகிறோம்.
இன்னும் நிகழாத ஞானமடைதலில் எவ்வாறு நாம் கவனம் செலுத்துவது? இது மிகவும் எளிதானது அல்ல. முதலாவதாக, அது என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அது என்ன வகையான நிகழ்வு - இன்னும் நடக்காத நிகழ்வு அல்லது விஷயம். உதாரணமாக, நாம் கருத்தில் கொள்ள வேண்டியது: இன்னும் வளர்ந்திடாத துளிர் ஏற்கனவே விதையில் இருந்து வெளிவரக் காத்திருக்கிறதா? அல்லது இன்னும் முளையே விடாத பயிர் விதையில் முற்றிலும் இல்லாமல் இருக்கிறதா?
வெளிப்படையாக, இன்னும் நிகழாத நமது ஞானமடைதலில் மனதை ஓரிடத்தில் குவிக்கும்போது, நாம் எதில் கவனம் செலுத்துகிறோம் என்பதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற, வெற்றிடத்தைப் பற்றிய புரிதல் இங்கே அவசியம். இன்னும் நிகழாத ஞானமடைதல் என்பது நாம் செல்லும் பந்தயத்தின் இறுதிக் கோட்டைப் போல எங்கோ வெளியே இல்லை. அது எங்கோ நம் மனதில் அல்லது நமது புத்தர் இயல்புகளில் அமர்ந்து கொண்டு, வெளியே வருவதற்காகக் காத்திருக்கவில்லை. அது போல புதிதாக கண்டுபிடிக்கக்கூடிய பொருளும் அல்ல. மறுபுறம், இல்லாத ஒன்றின் மீது நாம் கவனம் செலுத்துவதில்லை; நாங்கள் எதிலும் கவனம் செலுத்துவதில்லை. மாறாக, நமது புத்தர்-இயல்பு காரணிகளின் அடிப்படையில் நமது மனத் தொடர்ச்சியில் செல்லுபடியாகக் கூறக்கூடிய ஒன்று, இன்னும் நிகழாத நமது ஞானமடைதல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சரியான அடிப்படையில் சரியான முறையில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு என்ன அர்த்தம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இருப்பினும், இன்னும் நிகழாத அந்த ஞானமடைதலில் கவனம் செலுத்துவதற்கு, நம் மனதில் தோன்றும் ஞானத்தின் ஒருவித மன பிரதிநிதித்துவத்தின் மூலம் நாம் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, "ஞானம்" என்ற வார்த்தையின் ஒலியை நாம் கற்பனை செய்யலாம் அல்லது ஒரு புத்தரை நம் முன் கற்பனை செய்யலாம். தந்திரத்தில், புத்தர் உருவத்தில் நம்மைக் காட்சிப்படுத்தலாம். இந்த எடுத்துக்காட்டுகள் ஒவ்வொன்றிலும், நம் மனதில் தோன்றும் மன ஒலி அல்லது மனப் படம் இன்னும் நிகழாத நமது ஞானத்தின் பிரதிநிதித்துவமாக கருதப்பட வேண்டும்.
அடுத்து, தோன்றும் இந்த மனப் பொருளில் நம் மனம் எவ்வாறு கவனம் செலுத்துகிறது? இரண்டு நோக்கங்களுடன், நம் மனதில் தோன்றும் மனப் பொருளால் குறிப்பிடப்படும், இன்னும் நிகழாத நமது ஞானமடைதலில் கவனம் செலுத்துகிறோம். முதல் எண்ணம்: "நான் ஞானம் அடையப் போகிறேன்." இப்போது, ஞானத்தை அடைவதற்கான அந்த எண்ணம் நாம் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களைப் பொறுத்தது. ஞானத்தை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யதார்த்தமாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஞானத்தை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யதார்த்தமாக அறிந்து கொள்ள வேண்டும். நமது அணுகுமுறை சாதாரணமாக இருக்க முடியாது: "ஓ, நான் இதை அடையப் போகிறேன்." நாம் அதை எப்படி அடையப் போகிறோம் என்பதை அறிந்து, அதை அடைய முடியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஞான நிலையை அடைய சரியான எண்ணம் நமக்கு இருக்க வேண்டும்; இல்லையெனில், அதை அடைவது ஒரு நல்ல கனவாக மட்டுமே இருக்கும். நிச்சயமாக, ஞானம் என்றால் என்ன என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும், இதைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது அல்ல. இவை அனைத்தையும் இரண்டாம் நிலை செயல்பாடான சிந்தனையின் மூலம் நாம் பெறுகிறோம்.
இந்த மனப் பிரதிநிதித்துவத்தில் கவனம் செலுத்தும் போது நாம் கொண்டிருக்கும் இரண்டாவது எண்ணம் என்னவென்றால், அந்த ஞானம் மூலம் நாம் முடிந்தவரை மற்றவர்களுக்கு நன்மை செய்யப் போகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஞானம் என்பது ஒரு சர்வ வல்லமையுள்ள கடவுளாக மாறுவது அல்ல. மேலும் அனைவருக்கும் பயனளிக்கும் திறன், நிச்சயமாக, போதிசிட்டா சார்ந்து இருக்கும் அடித்தளத்தை அமைப்பதற்கு முன்பே எடுத்த நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது, அதாவது அன்பு மற்றும் இரக்கம். பிறர் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, முழு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதால், அவர்கள் ஞானம் அடைவதற்கு நாம் பொறுப்பேற்கிறோம்.
இந்த சிந்தனையின் நிலையானது உண்மையில் மிக நீண்டதாகும், மேலும் அதிக வேலை தேவைப்படுகிறது. ஆனால் இந்தப் படியின் முடிவில், நாம் அடைய முயற்சிக்கும் மனநிலை என்ன என்பதையும், அந்த மனநிலையை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் துல்லியமாகவும், முழு உறுதியுடனும் புரிந்துகொண்டு அறிவோம். அந்த மனநிலையை உருவாக்குவதற்கு எங்களால் முடியும் என்பதையும், அதை உருவாக்குவது மிகவும் நன்மை பயக்கும் என்பதையும் நாம் முழுமையாகவும் சரியானதாகவும் நம்புகிறோம்.
இந்தச் சிந்தனை செயல்முறை தியானம் போல் தோன்றினாலும், பாரம்பரிய வரையறையின்படி இது தியானம் அல்ல. சொற்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தாத மேற்கத்திய மக்கள் இந்த சிந்தனை செயல்முறையை "தியானம்" என்று அழைக்கலாம், ஆனால் அது சரியானதல்ல. சிந்தனைக்கும் தியானத்துக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த சிந்தனை செயல்முறை மிகவும் பயனுள்ள செயலாகும், மேலும் போதனைகளைப் பற்றி சிந்திப்பது எந்த நேரத்திலும் நாம் செய்யக்கூடிய ஒன்று. உண்மையில், நம் அன்றாட வாழ்வில் மற்ற செயல்களில் ஈடுபடும்போது இது மிகவும் பயனுள்ள விஷயம். உதாரணமாக, நாம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும்போது, ஒரு குறிப்பிட்ட மனநிலை, எடுத்துக்காட்டாக, அன்பு, இந்தச் சூழ்நிலைக்கு எவ்வாறு பொருந்தும் என்பதைப் பற்றி சிந்திக்கலாம். அது எப்படி பொருத்தமானதாக இருக்கும்? அதன் பலன்கள் என்னவாக இருக்கும்? என்பவை. இவை நம் நாளில் நாம் சிந்திக்கக்கூடிய விஷயங்கள் ஆகும்.
தியானம்
நம்முடைய மூன்றாம் நிலையான முன்றாவது-படி செயல்முறைக்கு வருவோம்: தியானம் தான் அது. தியானம் என்பது நாம் உணவை உண்ட பின் ஜீரணத்திற்காக அதை அசைபோடுவதைப் போன்றது. தியானத்தின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட நேர்மறையான மனநிலையை ஒரு பழக்கமாக மாற்றுவது, நாம் அந்த நிலையைப் பற்றி சிந்தித்துப் புரிந்துகொண்டு, அதை உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்பியவுடன் உண்மையில் அந்த மனநிலையாக மாற வேண்டும்.
முதலில் தியானம் என்பது இரண்டு வகையான செயல்முறை ஆகும். ஒரு நிலை என்பதை "விழிப்புணர்வு தியானம்" என்று நான் மொழிபெயர்க்கிறேன். இது பொதுவாக "பகுப்பாய்வு தியானம்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது, ஆனால் அதை "பகுப்பாய்வு" என்று அழைப்பது சிந்தனை நிலையுடன் குழப்பமடைய வைக்கிறது. "பகுத்தறிவு" என்ற வார்த்தையின் மிகவும் துல்லியமான மொழிபெயர்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்தச் சூழலில், “பகுத்தறிவது” என்பது ஒரு விஷயத்தை மிகக் கவனமாக ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட வழியில் புரிந்துகொள்வதைக் குறிக்கிறது. தியானத்தின் இரண்டாவது அம்சம் தியானத்தை நிலைநிறுத்துவதாகும், இதில் நாம் உண்மையில் அந்த மனநிலையை சரிசெய்து அதில் கவனம் செலுத்துகிறோம். இந்த இரண்டாம் கட்டத்தை நாம் "நிலைப்படுத்தும் தியானம்" என்று அழைக்கலாம்.
முதல் படியான, விவேகமான தியானத்தை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது? சிந்தனை செயல்பாட்டின் போது நாம் ஒரு பகுத்தறிவின் வழியாக சென்றோம் அல்லது ஒரு குறிப்பிட்ட மனநிலையை உருவாக்குவதற்கான நிலைகள் மற்றும் படிகள் வழியாக சென்றோம். நாம் உருவாக்க விரும்பும் மன நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்காகவும், அதை எவ்வாறு வளர்க்கலாம் என்பதைப் பற்றிய புரிதலைப் பெறுவதற்காகவும் இதைச் செய்தோம். இப்போது, விவேகமான தியானத்துடன், நாம் மீண்டும் ஒரு முறை பகுத்தறிவு அல்லது ஒரு குறிப்பிட்ட மனநிலையை உருவாக்குவதற்கான படிகள் வழியாக செல்கிறோம். ஆனால் இப்போது அந்த மனநிலையை உண்மையில் உருவாக்குவதற்கும், அதை நமக்குள் புதிதாக வைத்திருப்பதற்கும் இந்த செயல்முறையை நாம் கடந்து வருகிறோம். எடுத்துக்காட்டாக, ஒவ்வொருவரிடமும் இரக்கத்தை உருவாக்க, நாம் பகுத்தறிவின் வரிசையைப் பின்பற்றுகிறோம்: “எல்லோரும் என் தாயாக இருந்திருக்கிறார்கள், எல்லோரும் என்னிடம் அன்பாக இருந்திருக்கிறார்கள்…” மற்றும் பல, நாம் உண்மையில் உத்தேசித்த மனநிலைக்கு நம்மைச் செயல்படுத்துகிறோம். உண்மையில் நாம் அதனை உணர்கிறோம்.
இந்த படிப்படியான செயல்பாட்டில், நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ள விரும்பும் மனநிலைக்கு நாமே செயலாற்றியவுடன், அந்த வழியில் கவனம் செலுத்தும் பொருளை நாம் தீவிரமாகப் பகுத்தறிவோம் அல்லது புரிந்துகொள்வோம். உதாரணமாக, நாம் இரக்கத்தைப் பற்றி தியானிக்கிறோம் என்றால், அனைத்து வரையறுக்கப்பட்ட உயிரினங்கள் மீதும், குறிப்பாக, அவற்றைப் பற்றி நாம் வேறுபடுத்தும் பிரச்சினைகள் மற்றும் துன்பங்கள் போன்ற விவரங்களின் மீது கவனம் செலுத்துகிறோம். அவை கஷ்டப்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்கிறோம், மேலும் அவை அந்த துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற விருப்பமும், அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு உதவும் எண்ணமும் நமக்கு உள்ளது. நாம் உண்மையில் நம் மனதில் உணர்வுள்ள மனிதர்களைப் பார்க்கிறோம், அவற்றை நம் மனதில் இந்த வழியில் பார்க்கிறோம்; அல்லது நாம் உண்மையில் மக்களைப் பார்க்கும்போது அது நிஜ வாழ்க்கையில் இருக்கலாம். இரக்கம் மற்றவர்களின் மீதும் அவர்களின் துன்பங்கள் மீதும் கவனம் செலுத்துகிறது, மேலும் அவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற விருப்பத்துடன் உள்ளது.
நாம் அந்த பகுத்தறிவுடனான செயல்பாட்டில் சிறிது நேரம் இருக்கிறோம். அதைத் தொடர்ந்து, தியானத்தை நிலைப்படுத்துவது என்பது, இந்த தலைப்பில் அல்லது மன நிலையில் முழு கவனம் செலுத்துவதன் மூலம், நாம் உணர்ந்ததை மூழ்கடிப்பதுதான். வெளிப்படையாக, நாம் விவேகமான தியான கட்டத்தையும் செய்யும்போது, நம்மிடம் ஒருநிலைப்படுத்துதல் இருக்க வேண்டும்; ஆனால் இந்த நிலைப்படுத்தும் கட்டத்தில் நாம் உணர்வை நம் இதயத்தில் ஆழமாக மூழ்க விடுகிறோம்: நாம் இரக்கத்தை வலுவாக உணர்கிறோம்.
பகுத்தறிவு மற்றும் நிலைப்படுத்துதல், இந்த இரண்டு நிலைகளையும், நாம் முன்னும் பின்னுமாக மாற்றுகிறோம், இறுதியில் அவற்றை இணைக்க முடியும். தியானத்தின் பகுத்தறிவு மற்றும் நிலைப்படுத்தல் நிலைகளை இணைப்பது மிகவும் கடினம். நாம் அவற்றை இணைக்கும் நிலைகளின் விவாதம் மிகவும் சிக்கலானது. நீங்கள் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினால், அதைப் பற்றி மேலும் எனது இணையதளத்தில் படிக்கலாம்.
மேலும், நாம் மிகவும் முன்னேறும்போது, "திறன்வாய்ந்த தியானம்" என்று அழைக்கப்படுவதை நாம் செய்ய வேண்டியதில்லை. திறன்வாய்ந்த தியானம் என்பது, பகுத்தறியும் தியான செயல்முறையானது, நிலைகளைக் கடந்து ஒரு மனநிலையை உருவாக்குவதை குறிக்கிறது. ஒரு மேம்பட்ட நிலையில், நாம் மிகவும் சிரமப்படாமல், இலகுவாக அல்லது விவேகமான தியானத்தை செய்ய முடியும். படிகள் அல்லது பகுத்தறிவு மூலம் அதை உருவாக்காமல் உடனடியாக விரும்பிய மனநிலையை உருவாக்க முடியும்.
தியான வகைகள்
பெரும்பாலும் நாம் இரண்டு வகையான தியானங்கள் பற்றி கேட்டிருப்போம். சமஸ்கிருதத்தில் “ஷமதா” மற்றும் “விபஷ்யானா” என்றும் திபெத்தியத்தில் “ஷினே” மற்றும் “ஹக்டாங்க்” என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டும் உண்மையில் தியான முறையின் மூலம் நாம் அயை நினைக்கும் இரண்டு மனநிலைகைளைக் குறிக்கிறது. ஷமதா என்பது நிதானமான அமைதியான மனநிலையாகும். அது உணர்வுகளை நிதானப்படுத்துகிறது, இதனால் நாம் அனைத்து மட்டங்களிலான மனச் சோர்வு மற்றும் மனம் அலைபாய்தல் அல்லது மனப் போராட்டம் (ஏதாவது ஒரு ஈர்ப்பான விஷயத்தை நோக்கி மனம் அலைபாய்வது) அனைத்தையும் சாந்தப்படுத்த முடியும். ஷமதாவும் ஒரு பொருளின் மீது அதன் கவனம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்ற பொருளில் நிலைபெற்றுள்ளது. அப்படியானால், தியானத்தை நிலைப்படுத்துவதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சுவாசித்தல், காட்சிப்படுத்தப்பட்ட புத்தர் மற்றும் பலவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த அமைதியான மற்றும் நிலையான மனநிலையை நாம் உருவாக்க முடியும். இப்படியான சாத்தியக்கூறுகளின் நீண்ட பட்டியல் உள்ளது.
ஷமதா தியானத்துடன் கூட, நாம் வழிமுறைகளைக் கேட்க வேண்டும், பின்னர் தியானத்தின் நிலைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். உதாரணமாக, நாம் புத்தரைக் காட்சிப்படுத்தினால், படிப்படியாக காட்சிப்படுத்தலை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான வழிமுறைகளைக் கேட்போம். பிறகு முதலில் எதைச் செய்வது, இரண்டாவது, என்ன செய்வது என்று யோசிப்போம்.
"விபஷ்யனா" என்பது ஒரு விதிவிலக்கான புலனுணர்வுள்ள மனநிலை. இது மிகவும் விதிவிலக்கான முறையில் விஷயங்களை உணரக்கூடிய ஒரு மனநிலையாகும். விபாஷ்யனா தியானம், விவேகமான தியானத்தை வலியுறுத்துகிறது. விபாஷ்யனா நிலையை அடைவது பற்றி நாம் பேசும்போது, அது நிலையற்ற தன்மை அல்லது வெற்றிடத்தை அறியும் ஒரு விதிவிலக்கான புலனுணர்வு மனநிலையாக அடைய முடியும், ஆனால் அது அந்த இரண்டில் குறிப்பிடும்படியான ஒன்றல்ல.
அனுத்தரயோக தந்திரத்தில், தந்திரத்தின் மிக உயர்ந்த வகுப்பு, விபஷ்யனாவை வளர்ப்பதற்கான ஒரு முறை, இந்த விதிவிலக்காக உணரும் மனநிலை, மூக்கின் நுனியில் ஒரு சிறிய புள்ளி அல்லது துளியைக் காட்சிப்படுத்துவது. பின்னர், அந்த ஒரு புள்ளியின் காட்சிப்படுத்திப் பார்க்கும் போது, அடுத்த வரிசையில் இரண்டு புள்ளிகளைக் காட்சிப்படுத்துகிறீர்கள், பின்னர் நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு, என்று கூடிக்கொண்டே போகிறது. நீங்கள் அனைத்தையும் சரியான வரிசையில் வைத்திருக்க வேண்டும், பின்னர் காட்சிப்படுத்தலை நிலைகளில் மூழ்கடிக்கவும்.
இந்த வகையான காட்சிப்படுத்தலைச் செய்வதன் மூலம், நீங்கள் மிகவும் கூர்மையான, விதிவிலக்கான புலனுணர்வு நிலையை உருவாக்குகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே இந்த மனநிலையை மிக உயர்ந்த நிலைக்கு வளர்க்க விரும்பினால், ஒவ்வொரு துளியிலும், நீங்கள் கடைப்பிடிக்கும் தெய்வீக அமைப்பின் முழு மண்டலத்தையும், அனைத்து தெய்வங்கள் மற்றும் அவற்றின் அனைத்து விவரங்களுடன் நீங்கள் காட்சிப்படுத்தும் பிற நடைமுறைகள் உள்ளன. நீங்கள் இதை நிறைவேற்றினால், நீங்கள் உண்மையிலேயே ஒரு விதிவிலக்கான புலனுணர்வு மனநிலையைப் பெறுவீர்கள்!
இந்த இரண்டு வகையான தியானம், ஷமதா மற்றும் விபஷ்யனா, அனைத்து பௌத்த மரபுகளிலும், அதே போல் பல இந்திய பௌத்தம் அல்லாத அமைப்புகளிலும் உள்ளன. தேரவாத பௌத்த பாரம்பரியங்களில், அவை பாலி வார்த்தைகளான "சமதா" மற்றும் "விபாசனா" என்று அழைக்கப்படுகின்றன. ஜென் தத்துவார்த்ததிலும் இந்த இரண்டையும் காண்கிறோம்.
உதாரணமாக, ஜென்னின் கொரிய வடிவமான சன் புத்தமதத்தில், ஒரு Koan உள்ளது: "அது என்ன?" நாம் கவனம் செலுத்தும்போது "அது என்ன?" ஒரு பதில் இருக்கிறது என்பதல்ல, உதாரணமாக: "இது மேஜை; இது கண்ணாடி,” போன்றவை. இதற்குப் பதிலாக, நாம் நம்முடைய மனதை "ஆழ்ந்த சந்தேகம்" நிலையில் இருக்க வளர்த்துக் கொள்கிறோம் - எப்போதும் "அது என்ன?" என்ற யதார்த்தத்தை கேள்விக்குள்ளாக்குகிறோம். அப்போது நமது மனநிலை விதிவிலக்காக புலனுணர்வு பெறுகிறது.
பெரும்பாலான திபெத்தியர்கள் ஜென் பாரம்பரியத்தைப் படிக்கவில்லை என்பதைக் காட்டும் ஒரு வேடிக்கையான கதை உள்ளது; அவர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை. ஒரு ஜென் மாஸ்டர் மற்றும் கலு ரின்போச்சே இடையே ஒரு பிரபலமான சந்திப்பு நடந்தது. ஜென் மாஸ்டர் ஒரு ஆரஞ்சுப் பழத்தை உயர்த்தி, "இது என்ன?" என்று கலு ரின்போச்சிடம் கேட்டார். கலு ரின்போச் தனது மொழிபெயர்ப்பாளரை விநோதமாகப் பார்த்து, “என்ன விஷயம், அவருடைய நாட்டில் ஆரஞ்சு பழங்கள் இல்லையா?” என்று கேட்டார்.
எனவே நமக்கு ஷமதா மற்றும் விபஷ்யனா உள்ளது. ஷமதா என்பது சரியான ஒருநிலைப்படுத்துதல் மட்டுமல்ல, இது பல்வேறு வகையான கவனத்தைப் பயன்படுத்தி ஒன்பது நிலைகளில் உருவாக்கப்படுகிறது. ஆனால் ஷாமதா, முழுமையான ஒருநிலைப்படுத்துதலுடன், "உற்சாகமான மனநிலை" என்பதையும் சேர்க்கிறது. "உடற்தகுதி உணர்வு" என்பது உண்மையில் நன்கு பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர் என்பதற்கு ஒப்பானது.
ஷமதாவின் மனநிலை ஒரு ஜம்போ ஜெட் விமானத்தைப் போன்றது என்று என் ஆசிரியர் சென்சாப் செர்காங் ரின்போச்e விளக்கி இருக்கிறார்: நீங்கள் அதை தரையில் வைத்தால் அது அப்படியே இருக்கும், நீங்கள் அதை காற்றில் பறக்க விட்டால் அது பறந்து போகும். எந்த நேரத்திலும் எதிலும் கவனம் செலுத்தலாம் என்ற உணர்வு இருக்கிறது. உடல் சோர்வடையாது; மனம் சோர்வடையாது; நீங்கள் முற்றிலும் ஆரோக்கியமாக உணர்வீர்கள்; மேலும் அது உற்சாகமாக இருக்க வைக்கிறது. ஷமதா என்பது மிகவும் உற்சாகமான, உயர்த்தும், மகிழ்ச்சியான மனநிலை. ஆனால் ஒரு திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல தெருவில் உற்சாகமாக பாடிக்கொண்டு நடனமாடுவது போல் மகிழ்ச்சியாக இருக்காது - அது அப்படி இல்லை. ஷமதாவுடன், மிகவும் நன்கு பயிற்சி பெற்ற விளையாட்டு வீரரைப் போல மனம் முழுவதுமாக மெருகேற்றப்படுகிறது.
விபஷ்யனாவின் மன நிலை என்பது ஷமதா நிலைக்கு கூடுதலாக இருப்பதை தெளிவுபடுத்துவது முக்கியம். ஷமதாவின் சரியான ஒருநிலைப்படுத்துதல் மற்றும் உடற்தகுதியுடன் கூடுதலாக, விபஷ்யானா அதற்கு மேல் இரண்டாவது உடற்தகுதியான உணர்வையும் சேர்க்கிறது. இது எதையும் புரிந்து கொள்ளவும், பகுத்தறியவும் மனதிற்கு ஏற்றதாக இருக்கிறது.
பொதுவாக "பார்வை தியானம்" என்று அழைக்கப்படும் மற்றொரு வகை தியானமும் உள்ளது. நாம் ஒரு குறிப்பிட்ட தியான பயிற்சியில் பயிற்சிக்கும் போது, ஒவ்வொரு முறையும் நாம் முழுமையான பௌத்த வழியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நமது குறிப்பிட்ட தியானத் தலைப்பு எங்கு பொருந்துகிறது என்பதை நினைவூட்டுவதே இதன் நோக்கம், ஒரு தலைப்பை நாம் மிகைப்படுத்தி மற்றொன்றைத் தவிர்க்கவோ அல்லது புறக்கணிக்கவோ கூடாது. எனவே பார்வை மத்தியஸ்தம் என்பது முழு பாதையையும் மதிப்பாய்வு செய்வதாகும்; இது ஒரு வகை விமர்சனம் ஆகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் மாஸ்கோவிற்கு தலாய் லாமாவின் தனிப்பட்ட மருத்துவராக இருந்த டாக்டர் டென்சின் சோட்ராக் உடன் வந்தேன். செர்னோபில் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ திபெத்திய மருந்தைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தோம். நாங்கள் மிகவும் நல்ல ஹோட்டல்களில் தங்கியிருந்தோம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகளால் முறையாக அழைத்துச் செல்லப்பட்டோம். அவ்வபோது நாங்கள் பிரபலமான ரஷ்ய seven course விருந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
டாக்டர் டென்சின் சோட்ராக் திபெத்தை விட்டு இந்தியாவுக்கு வருவதற்கு முன் இருபது வருடங்கள் சீனாவின் வதை முகாமில் இருந்தார். அதனால் seven course விருந்தில் முதல் உணவை அளவாக சாப்பிட வேண்டும் என முன் கூட்டியே எச்சரித்தும், முதல் உணவை வயிறு முட்ட சாப்பிட்டார். முதல் உணவால் அவர் முழுவதும் வயிறு நிரம்பி இருந்ததால், அதைத் தொடர்ந்து மற்ற ஆறு உணவுகளில் எதையும் அவரால் சாப்பிட முடியவில்லை.
பார்வை தியானம் செய்வதன் மூலம் நாம் தவிர்க்க விரும்பும் சூழ்நிலையின் ஒப்புமை இது. ஏழு விதமான உணவுகளின் முழு மெனுவையும் மதிப்பாய்வு செய்து மனதில் வைக்க விரும்புகிறோம், இதனால் நாம் "அதிகமாக" சாப்பிடாமல் ஒரே விஷயத்தில் அதிக தியானம் செய்கிறோம். அது முதல் உணவை அதிகம் உண்பது போலவும், மீதமுள்ள உணவைத் தவறவிடுவது போலவும் இருக்கும்.
இப்போது, நான் ஒரு குறிப்பிட்ட மனநிலையை உருவாக்கும் தியானத்தின் வகையை விவரிக்கிறேன், ஆனால் அது பௌத்தத்தில் செய்யப்படும் ஒரே வகை தியானம் அல்ல. சில தியானப் பயிற்சிகளில், எடுத்துக்காட்டாக, மனதின் இயல்பு குறித்த சில கெக்யூ தியானங்களில் அல்லது சில ஜென் நடைமுறைகளில் வேறுபட்ட அணுகுமுறை உள்ளது.
ஒரு மனநிலையை உருவாக்குவதற்குப் பதிலாக, நம் மனதில் அன்பு அல்லது மனத் தெளிவு போன்ற சில உள்ளார்ந்த குணங்கள் இருப்பதைக் கண்டறியவும், அவற்றை அணுகவும் ஒரு மனநிலையில் அமைதியாக இருக்கிறோம். ஆனால் இந்த வகையான தியானத்தை நாம் செய்யும்போது கூட, நாம் முதலில் அறிவுறுத்தல்களைக் கேட்டிருக்க வேண்டும், பின்னர் அவற்றைப் புரிந்துகொள்ளும் வரை அவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
நாம் அமைதியாக இருக்கும் மனநிலை என்ன, எதைச் சாதிக்கப் போகிறோம், முதலில் எதைச் செய்ய வேண்டும், இரண்டாவதாக, என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். "அமைதியாக்கும்" வகை தியானத்துடன் கூடிய அமைப்பு "கட்டி எழுப்புதல்" வகை தியானத்தைப் போலவே உள்ளது.
தியானத்திற்கு மிகவும் உகந்த சூழல்
ஒரு தியான அமர்வை எவ்வாறு அமைப்பது, தியானம் செய்யும் இடத்தை எவ்வாறு ஏற்பாடு செய்வது, தரையைத் துடைத்து அறையைச் சுத்தம் செய்வது மற்றும் சாஷ்டாங்கம் செய்வது, பிரசாதம் வழங்குவது மற்றும் பலவற்றைப் பற்றிய விரிவான வழிமுறைகள் உள்ளன - இவை அனைத்தும் மிகவும் முக்கியமானவை. தியானத்திற்கு உகந்த சூழல். தியானம் செய்வதற்கு உகந்த சூழ்நிலைகள் மற்றும் பொருத்தமான சூழல், குறிப்பாக சரியான இருக்கை மற்றும் அமைதியான, சுத்தமான சூழல் ஆகியவற்றைக் கொண்டிருப்பது முக்கியம் என்றாலும்; ஆயினும்கூட, நம்மைச் சுற்றி ஒரு விரிவான காட்சி நடக்க வேண்டிய அவசியமில்லை. விலை உயர்ந்த தூபத்தையும், பின்னணியில் புதிய யுக இசையையும், இந்த வகையான பொருட்களை வாங்குவதற்கு நாம் அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை.
மிலரேபாவிடம் நிச்சயமாக இவை அனைத்தும் இல்லை, ஆனால் அவர் தனது தியானப் பயிற்சியில் மிகவும் வெற்றிகரமாக இருந்தார்! நம்முடைய தியான இடத்தை முடிந்தவரை அழகாக மாற்ற முயற்சிக்கிறோம், ஆனால் மிகையாகச் செல்லாமல், காட்சிக்காக விஷயங்களை விரிவாகச் செய்யாமல் இருக்கிறோம்.
அதே போல, நாம் எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்ய வேண்டும். நீண்ட ரயில் பயணத்தில் சென்றால், “என்னிடம் தண்ணீர்க் கிண்ணங்கள் இல்லாததாலும், தூபம் போட முடியாததாலும், என்னால் ரயிலில் தியானம் செய்ய முடியாது, சாஷ்டாங்கமாக வணங்க முடியாது” என்று சொல்ல மாட்டோம். நாம் உண்மையில் எங்கும் தியானம் செய்யலாம், அதில் சிறிது தேர்ச்சி பெற்றவுடன் - ரயிலோ, அல்லது வரிசையில் நின்று கொண்டிருந்தாலோ, எங்கு வேண்டுமானாலும் தியானிக்கலாம். நம் அன்றாட வாழ்வில் கூட, முறையான தியான அமர்வுகளுக்கு இடையில் மற்றவர்களை அன்புடனும் இரக்கத்துடனும் நடத்துவதை நினைவில் வைக்க முயற்சி செய்யலாம் - அதுதான் தியானம் அல்லவா?
தியானத்தின் முழுப் புள்ளியும் போதனைகளை ஒருங்கிணைத்து - அவற்றை நம்மில் ஒரு பகுதியாக ஆக்குவதன் மூலம் அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் தியானம் நமது அன்றாட வாழ்விலிருந்து முற்றிலும் பிரிந்துவிட்டால், அது ஒரு பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். குறிப்பாக நமது தியானம் கவர்ச்சியான தாந்த்ரீக காட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் போது, அது டிஸ்னிலேண்டிற்கு, நமது அன்றாட வாழ்க்கையுடன் எந்த தொடர்பும் இல்லாத சில கற்பனயான இடங்களுக்கு ஒரு பயணம் செல்வதைப் போல எளிதாக மாறும். நாம் அந்த வழியில் சென்றால், நாம் மனரீதியாக நிலையற்றவர்களாகி விடுகிறோம், மேலும் தியானம் நமது அன்றாட வாழ்க்கையில் மிகக் குறைவான விளைவையே ஏற்படுத்துகிறது. நினைவில் கொள்ளுங்கள், தியானத்தின் முழுப் புள்ளியும் அதை வாழ்க்கையில் பயன்படுத்துவதாகும்.
நாம் எங்கிருந்தாலும், நாம் தியானம் செய்யும்போது, முதலில் உந்துதலை அமைக்க வேண்டும், ஊக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும், மேலும் ஒருமுகத்துடன் தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். நம் மனம் அலைபாய்ந்தால், அதை மீண்டும் கொண்டு வரப் போகிறோம். தூக்கம் வந்தால் நாமே விழித்துக் கொள்ளப் போகிறோம். இறுதியில், நேர்மறையான சக்தியின் அர்ப்பணிப்பு நம்மிடம் உள்ளது. தியானம் செய்வதன் மூலம் நாம் உருவாக்கிய நேர்மறை ஆற்றலை அர்ப்பணிக்கவில்லை என்றால், தியானத்தில் நமது முயற்சிகள் நமது சம்சாரிய சூழ்நிலைகளை மேம்படுத்தும். அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில், நேர்மறை ஆற்றலை ஞானமடைய அர்ப்பணிக்க விரும்புகிறோம்.
தனிநபர் மற்றும் குழு தியானம்
சிலர் தனித்து தியானம் செய்வார்கள். சொல்லப்போனால், பெரும்பாலான திபெத்தியர்கள் தனித்து தியானித்தலையே விரும்புவர்; அவர்கள் குழுவாக தியானம் செய்ய மாட்டார்கள், இருப்பினும் மடாலயங்களில் துறவிகளும் கன்னியாஸ்திரிகளும் மந்திரங்களை ஜெபித்தல் சடங்கு நூல்களை வாசித்தலை குழுவாகச் செய்வார்கள். எப்படி இருந்தாலும், மேற்கில் நாங்கள் குழு தியான முறையை மேம்படுத்தி இருக்கிறோம். குழு தியானத்தில் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பலன் என்பது ஒழுக்கம். நான் தனித்து தியானிக்கும் போது வெறுமனே அமர்ந்து தியானிக்க வேண்டும் என்கிற ஒழுக்கம் இருக்காது. நம்முடைய அமர்வு முடிவதற்கு முன்னரே தியானத்தில் இருந்து எழுந்து விடுவோம்; நம்மைச் சுற்றி மக்கள் இருந்தால், நாம் இன்னும் அதிக ஒழுக்கத்துடன் இருப்போம். நாம் மிகவும் குறைவாகவே படபடக்க முனைகிறோம், ஏனென்றால் மற்றவர்கள் முன் அவ்வாறு செய்ய நாம் வெட்கப்படுகிறோம்.
சிலர் குழு தியானத்தை முற்றிலும் கொடூரமானதாகக் காண்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் மற்றவர்களால் திசைதிருப்பப்படுகிறார்கள். குறிப்பாக யாரேனும் இருமினாலோ அல்லது படபடப்பு ஏற்படும் போதோ, தாங்கள் தியானம் செய்யும் போது அது இடையூறாக இருக்கும், என்பதால் அவர்கள் தனிப்பட்ட முறையில் தனியாக தியானம் செய்ய விரும்புகிறார்கள்.
அதிலும் குறிப்பாக குழுவினர் சத்தமாக எதையாவது ஓதினாலோ, சிலர் நாம் வழக்கத்தை விட மிக மெதுவாக ஓதினால், நமக்கு அலுப்பும் கோபமும் வந்துவிடும். மேலும், அது மிக வேகமாக சென்றால் நமக்கும் கோபம் வரும்.
தனிநபர் அல்லது குழு தியானம் எது நமக்கு சிறந்தது என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். இருப்பினும், சிறிய குழு தியானத்தில் பங்கேற்கும் போது ஒரு சுவாரஸ்யமான அம்சத்தை நான் கவனித்தேன், அதாவது ஒன்று அல்லது இரண்டு நபர்களுடன் தியானம் செய்வது. நீங்கள் மற்றவர்களுடன் மிகவும் நெருக்கமான பிணைப்பு மற்றும் தொடர்பைக் கொண்டிருக்கும்போது தியானம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும், இதனால் நீங்கள் அவர்களுடன் மிகவும் இணக்கமாக உணர்கிறீர்கள். உங்கள் ஆற்றல்கள் ஒன்றையொன்று வலுப்படுத்துவது போல் உள்ளது. அவர்களுடன் தியானம் செய்யும் சூழ்நிலை உங்களுக்கு அதிக ஆற்றலையும், அதிக தெளிவையும் தருகிறது. ஆனால் ஒரு சிறிய குழுவில் தியானம் செய்யும் தனிப்பட்ட நபர்களின் ஆற்றல்கள் ஒருவருக்கொருவர் மோதும்போது, விளைவு எதிர்மாறாக இருக்கும்: அது எரிச்சலைக் கொண்டுவருகிறது மற்றும் உங்கள் மனதை மிகவும் மந்தமாக்குகிறது. எனவே மற்றவர்களுடன் தியானம் செய்யப் போகிறீர்கள் என்றால் நீங்கள் யாருடன் தியானம் செய்கிறீர்கள், என்பதை சரிபார்க்க வேண்டும்.
விடாமுயற்சியின் முக்கியத்துவம்
கடைசியாகச் சொன்ன அறிவுரை மிக முக்கியமான ஒன்று, அது சம்சாரியத்தின் இயல்பு, அது ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். எனவே நமது தியானமும் இயற்கையாகவே மேலும் கீழும் செல்லும். ஒவ்வொரு நாளும் சிறப்பாக போய்க் கொண்டே இருக்கும் ஒரு நேரியல் செயல்முறையாக இது இருக்கப் போவதில்லை. சில நாட்களில் நம்முடைய தியானம் நன்றாகப் போகிறது, மற்ற நாட்களில் அது சரியாகப் போவதில்லை. சில நாட்களில் நாம் தியானம் செய்ய விரும்புகிறோம், மற்ற நாட்களில் தியானம் செய்யவே விரும்புவதில்லை.
இது முற்றிலும் இயல்பானது மற்றும் இயற்கையானது - இது சம்சாரியத்தின் இயல்பு. விஷயம் என்னவென்றால், நீங்கள் எதை உணர்ந்தாலும், நீங்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து செல்ல வேண்டும். "நான் தியானம் செய்ய விரும்பவில்லை" என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் - அதனால் என்ன? ஏதாவது ஒரு விதத்தில் தியானம் செய்யுங்கள். தொடர்ச்சியை கடைபிடியுங்கள்; இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் மட்டுமே இருந்தாலும், ஒவ்வொரு நாளும் அதைச் செய்யுங்கள். பாதையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் அந்த தொடர்ச்சி மிகவும் முக்கியமானது.
மேலும், தியான அமர்வுகளை மிக நீண்டதாக ஆக்காதீர்கள், குறிப்பாக தொடக்கத்தில் அதிக நேர தியானம் வேண்டாம். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் போதும். இல்லையெனில், "அது முடியும் வரை என்னால் காத்திருக்க முடியாது" என்று நீங்கள் நினைக்கிறீர்கள், பின்னர் நீங்கள் உங்கள் தியானத்திற்கு திரும்ப விரும்பவில்லை. நீங்கள் இன்னும் தொடர விரும்பும்போது தியானத்தை முடித்துக் கொண்டால், நீங்கள் திரும்பிச் செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறீர்கள். நீங்கள் ஒருவருடன் இருந்தால், அந்த நபருடன் அதிக நேரம் செலவிட விரும்பும் போது நீங்கள் பிரிந்தால், விரைவில் அவர்களை மீண்டும் பார்க்க விரும்புவீர்கள். ஆனால் நீங்கள் உண்மையில் அவர்களால் சோர்வடையும் அளவிற்கு அவர்கள் உங்களுடன் இருந்தால், அவர்கள் வெளியேற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவர்களை மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் உங்களுக்கு ஏற்படாது, அதனால் நீங்கள் அவர்களைத் திரும்ப பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைய மாட்டீர்கள்.
இறுதியாக, நீங்கள் தியானம் செய்யும் நேரத்தை படிப்படியாக நீட்டிப்பது முக்கியம். நெகிழ்வாக இருங்கள் - நெகிழ்வாக இருப்பது மிகவும் முக்கியம். நான் சொன்னது போல்: ஒரு நாள் கூட தியானத்தை தவற விடாதீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் தியானம் செய்தால், நீங்கள் ஸ்திரத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கையைப் பெறுவீர்கள். ஆனால் நெகிழ்வாக இருங்கள்: சில சமயங்களில் நீங்கள் செய்ய விரும்பும் முழு தியானத்தையும் செய்யலாம், மற்ற நேரங்களில் உங்களுக்கு நேரம் இல்லாதபோது, சுருக்கப்பட்ட பதிப்பைச் செய்யலாம். ஆனால் குறைந்தபட்சம் ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்யுங்கள். வெறித்தனமாக இல்லாமல்; கஷ்டப்பட்டு உங்களை மிகவும் கடினமாக தள்ள வேண்டாம். எனக்கு மிகப் புடித்தமான ஜென் கவிதை: மரணம் எந்த நேரத்திலும் வரலாம். ரிலாக்ஸ்!